Tag Archives: யோகம்

சுயநலத்தால் பயனில்லை

2 ஜூன்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

இந்த வார வெண்பா – 16

பலனது பெற்றால் அதுமட்டும் போதும்

நலமாய்தாம் வாழயோகம் என்றே – உலகில்

வருந்துவோர் தம்கவலை தீர்க்காத பேரால்

மருந்துக்கும் இல்லை பயன்

பொருள்:

யோக சாதனையினால் கிடைக்கும் பலன் பற்றித் தெரிந்து கொள்ளும் யாருக்கும், அந்தப் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அது இயற்கைதான். ஆனால் அந்தப் பலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு யோகத்தைப் பயின்று தன்னலமாக தான் மட்டுமே நலமாய் இருந்தால் போதும் என்று நினைப்பவர்களாலும் அவர்கள் பெற்ற யோக சாதனையினாலும் கெடுதலே உண்டாகும்.

மாறாக யோக சாதனையினால் தான் பெற்ற பலனைக் கொண்டு இந்த உலகில் துன்பத்தாலும் நோயாலும் அவதிப்படும் மக்களுக்கு அதைப் போக்கும் வழிகாட்டி அவர்கள் விமோசனம் பெற உதவி புரிவதே ஒருவர் தான் கற்ற யோக சாதனையின் மூலம் செய்யக்கூடிய உயர்ந்த சேவையாகும்.

தன்னலம் கருதாது பிறருக்கு உதவும் எண்ணமுடையவர்களே யோக சாதனை பெற முயல வேண்டும். அப்படி இல்லாது சுயநலம் உள்ளவர்கள் பெறும் பலன் யாருக்கும் உதவாது.

யோகசூத்திரம் பதவுரை – ஒரு முயற்சி

26 மே

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

இந்த வார வெண்பா – 15

பதஞ்சலி மாமுனியின் பாதம் பணிந்து

பதவுரை தந்திட யானும் – இதந்தரும்

வார்த்தையில் வெண்பா வடித்தேன் அதைஉணர்ந்து

பார்த்தோர் தமக்குப் பலன்

 

பொருள்:

பதஞ்சலி மகரிஷி அருளிய யோக சூத்திரம் நான்கு பாதங்களைக் கொண்டது. அதில் உள்ள ஒவ்வொரு சூத்திரமும் யாவரும் அறிந்து பயன்பெறத் தக்கது. பதஞ்சலி மகரிஷியின் பாதங்களைப் பணிந்து அவரின் ஆசியை வேண்டுகிறேன். நானறிந்த வரையில் அந்த சூத்திரங்களில் சிலவற்றுக்கு தெளிவுரையை இங்கே வெண்பாக்களாக தர முயற்சிக்கிறேன். அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

பிறகு ஏன் இந்த முயற்சி என்று கேட்டால் எனக்கே நான் அறிந்தவற்றை நினைவு படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே இதைக் கருதுகிறேன். எனவே பல அறிஞர்கள் எழுதியவற்றைப் படித்து அறிந்து கொண்ட கருத்துக்கள் மற்றும் நான் புரிந்து கொண்டவை ஆகியவற்றையே இங்கு குறிப்பிடுகிறேன். ஆனால் அந்த சூத்திரங்களைப் படித்து ஆழமாக சிந்திப்பவர்களுக்கு மற்றொரு பொருளும் அறியக் கிடைக்கலாம் பதஞ்சலியின் யோக சூத்திரங்களை நன்றாக உண்ர்ந்து பார்ப்பவர்கள் பலன் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

இந்தக் கருத்துக்களில் ஏதாவது பிழை இருந்தால் அது என்னையெ சாரும். நிறைகள் எல்லாம் பதஞ்சலி மகரிஷியையும் மற்றும் கற்றறிந்த அறிஞர்களையும் சாரும்.