Tag Archives: ரசிப்புத்தன்மை

‘ஒரு புளியமரத்தின் கதை’ புத்தகம் வாங்கிய கதை

23 ஜன

சென்னையில் புத்தகக் காட்சி ஆரம்பமாகப் போகிறது என்று 2014 ஜனவரி முதல் வாரத்தில் கேள்விப் பட்டவுடனேயே ஆவலுடன் அதற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். படிக்கும் பழக்கம் உள்ள எல்லோருக்கும் உண்டாகும் ஆவல்தான் அது. ஆனால் இப்போது யாவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பது திரு. சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தி விவாதிக்க வேண்டிய விஷயமாகி விட்டது. இது போன்ற புத்தகக் காட்சிகள் படிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்தும் என்பது நமது உறுதியான நம்பிக்கை.

என்னுடைய எண்ணம் பின்னோக்கிச் செல்கிறது. எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயமாக என்னுடைய தந்தைதான் காரணம். சிறு வயது முதல் நான் வளர்ந்த சூழ்நிலையில், வீட்டில் இறைந்து கிடந்த வார இதழ்களும், கதைப் புத்தகங்களும்தான் காரணம்.

நூல்நிலையம்கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தாலும் புத்தகங்களை வாசிப்பதில் என் தந்தைக்கு இருந்த ஆர்வம் காரணமாக பக்கத்து கிராமத்து நூல்நிலையத்தில் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் ஒரு பிஸியான வியாபாரியாக இருந்தாலும், புத்தகம் படிப்பதில் அவர் காட்டிய ஆர்வம் இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.

என்னைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால் எனக்கும் புத்தகங்களுக்கும் இடையேயான நட்பு இருந்ததை, பின்பு பள்ளியில் படிக்கும் நாட்களில் தெரிந்து கொண்டேன். தவழ்கின்ற வயதில் வீட்டில் உள்ள பல புத்தகங்களிலும் பேனாவை வைத்து நான் கிறுக்கி வைத்து இருந்ததைப் பார்த்தபோது தெரிந்தது .

பள்ளியில் படிக்கும் போது என்னுடைய புத்தக வேட்கைக்கு தடை செய்யாமல் நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்து படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் என்னுடைய தந்தை. அதுமுதல் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் எனக்கு தீவிரமாகி விட்டது. அதிகாலையே விழித்து விடுவேன் புத்தகம் படிப்பதற்காக. அடிக்கடி நூலகத்திற்கு செல்லும் வழக்கமும் ஏற்பட்டது.

ஆனால் நாளைடைவில் அந்த நூலகர் என்னைக் கண்டாலே ஒருவிதமான தர்ம சங்கடத்தில் நெளிய ஆரம்பித்து விட்டார். காரணம், தினமும் ஒரு புத்தகமாகப் படித்து விட்டு, மறுபடி வந்து புத்தகத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று எல்லா புத்தக அலமாரிகளையும் துவம்சம் செய்வதுதான். ஏதாவது ஒரு புத்தகத்தைக் கொடுத்து முதலில் என்னை அங்கிருந்து அனுப்பி வைக்க பெரும்பாடு படுவார்.

நாளாக ஆக எனக்கும் அது தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அதனால் பெரிய பெரிய சைசில் புத்தகங்களை எடுத்து சென்று படிக்க ஆரம்பித்தேன். குறைந்த பட்சம் ஒரு நான்கைந்து நாட்களுக்காவது நூலகரைப் பார்க்க வேண்டியதில்லை அல்லவா?

அப்படி எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்றுதான் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் என்ற நாவல். அதன் மையக் கருத்து என்பது அந்த வயதில் புரிந்து கொள்ள இயலாத விஷயம் என்றாலும், அவருடைய எழுத்துக்களின் வலிமை என்னை ஈர்த்தது உண்மை. பின்னாளில் அது திரைப்படமாக உருப்பெற்றபோது அந்தக் கதையை நிஜ வாழ்க்கையில் காணுவது போல ரசிக்க முடிந்தது.

பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் பலவும் அப்பொழுது படித்ததுதான். ஒருசில மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சிறு வயதில் காமிக்ஸ் புத்தகங்களில் ஆரம்பித்து, தமிழ்வாணன் புத்தகங்களுக்கு மாறி, பிறகு ஜெயகாந்தன், சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ரமணி சந்திரன் என்று எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புக்களை ரசித்திருக்கிறேன்.

அப்போது படித்ததுதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் என்ற சரித்திர நாவல். கதைக்கேற்ற படங்களுடன் வார இதழில் தொடராக வந்த அந்தக் கதை அழகாக பைண்டு பண்ணப்பட்ட புத்தகமாக எங்கள் வீட்டில் இருந்தது. அந்தப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை என் தந்தை கேட்டார் ‘இது எல்லாமே அரசியலாச்சே, உனக்கு என்ன புரியுதுன்னு இதைப் படிச்சுக்கிட்டு இருக்கே’ என்று. நான் எதுவும் பதில் சொல்லவில்லை.

ஆனால் அந்த எழுத்துக்களின் ஆளுமை என்னை படிக்கத் தூண்டியது. அந்த கதையை இரண்டு மூன்று முறை, இல்லை அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியில் நூலகர் அந்தப் புத்தகத்தை நூலகத்துக்கு இலவசமாக வழங்குமாறு கேட்டபோது, என் தந்தையின் அனுமதி கேட்டு அதை நூலகத்துக்கு கொடுத்து விட்டேன். அதுவரை அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று ஞாபகம் இல்லை. ஏன், நூலகத்துக்கு கொடுத்த பிறகு கூட ஒருமுறை அதை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த ரோமாபுரிப் பாண்டியன், கலைஞர் டி.வியில் தொடராக வரப் போவதாக வந்த விளம்பரம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் என் கண்ணில் பட்டு மறைந்து விட்டது. உடனே ஒரு ஆவல் ஏற்பட்டு கூகுளில் தேடினேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், தன்னுடைய தளத்தில், ‘தமிழ் நாவல்கள் விமரிசகனின் சிபாரிசு’ என்ற தலைப்பில் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று தரவரிசையில் இரண்டு பகுதிகளாக வரிசைப்படுத்தி இருந்தார். அதில் இரண்டாவது பட்டியலில் வரலாற்றுமிகு கற்பனைப் படைப்புகள் என்று வரிசைப் படுத்திய பகுதியில் ரோமாபுரிப் பாண்டியன் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தேன்.

அந்த இடுகையில் முதல் பத்து என்று வரிசைப் படுத்தியதில், சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை நான்காவதாக இடம் பெற்றிருந்தது. நான் ஏற்கெனவே அந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் என்ற வரிசையில் பார்த்தவுடன் உடனே அதை வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது.

சுந்தர ராமசாமி எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு ஏன் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்ற யோசனை எழுந்தது. பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் என்ன என்று தேடியபோது, அவர் மொழி பெயர்த்த செம்மீன் நாவல் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் சிறு வயதில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. ஆக நானும் அவருடைய புத்தகத்தை வாசித்திருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அதனால் இப்போது ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் சென்னை புத்தகக் காட்சிக்கு நான் சென்றபோது, ஒவ்வொரு ஸ்டாலாக தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் அது கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அங்கு அந்தப் புத்தகத்தை வாங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்? – பகுதி 2

25 பிப்

சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன்னால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற தலைப்பில் ஒரு இடுகையை எழுதியிருந்தோம். அதில் அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதில் பங்கேற்ற போட்டியாளர்களைப் பற்றியும், நடுவர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் மற்றும் நடிகர் சுரேஷ் ஆகியவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

நமது முந்தைய இடுகையில், பூஜா போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டது நமக்கு வருத்தமளிப்பதாகவும், ஆனாலும் நடுவர்களின் தீர்ப்பு பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடியே அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும். அப்போது வெளியேறிய பூஜா, ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் திரும்பவும்  போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்று, இறுதிப் போட்டி வரையிலும முன்னேறி கடைசியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். வாழ்த்துக்கள் பூஜா!

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்த வரை சில குறிப்பிடத்தக்க விஷயங்களும் இருக்கின்றன. அதாவது பதினோரு பேரை பங்கேற்பாளர்களாக வைத்து ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பூஜா போட்டியிலிருந்து வெளியேறிய போது பிரியா, பிரீத்தி, லலிதா, இளவரசன், சந்தியா என்று ஐந்து பேராக குறைந்து விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியிருந்தது. அந்த ஐந்து பேரில் லலிதா, இளவரசன் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இறுதிப் போட்டிக்கு பிரியா, பிரீத்தி மற்றும் சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஏற்கெனவே வெளியேற்றப் பட்டவர்களில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் இளவரசனும், பூஜாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஆக, டாப் 5 ஆக இருந்தவர்களில் லலிதாவைத் தவிர மீதி நான்கு பேரும் பூஜாவுடன் இறுதிப் போட்டியில் போட்டியிட்டனர். அதிலும் பிரீத்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற சிறப்பைப் பெற்றார். ஆனால் அவர் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். மீதியுள்ள நான்கு பேர்களுடன் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுக்கள் நடந்து முடிந்தன.

மூன்றாவது சுற்றில் இளவரசனும், பூஜாவும் ஒரு குரூப்பாகவும், பிரியாவும், சந்தியாவும் ஒரு குரூப்பாகவும் போட்டியிட்டனர். அதில் இளவரசனை வென்று பூஜாவும், சந்தியாவை வென்று பிரியாவும் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். கடைசி சுற்றில் பூஜா செய்த புதுமையான சமையலும் அவருடைய சமயோசித அறிவும்தான் அவருக்கு இறுதி வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பது நிசர்சனமாகத் தெரிந்தது.

போட்டியின் நடுவே, ‘இறுதிப் போட்டிக்குத் தகுந்த டிஷ்தானா இது?’ என்று பிரியாவிடம் செஃப் தாமு கேட்டாலும், ஓட்டுப் போடும் போது, அவர் மட்டும் பிரியாவுக்கே தனது ஓட்டைப் போட்டது பார்வையாளர்களைத் திருப்திப் படுத்தத்தானோ? என்ற கேள்வி ஏனோ மனதில் எழுந்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் கடைசியில் வெற்றி பெற்ற பூஜாவின் மனோபாவம். நமது முந்தைய இடுகையை எழுதிய சமயத்தில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டபோது தோல்வியை ஏற்றுக் கொண்ட விதமும், இப்போது வெற்றி பெற்ற பின் காட்டிய உணர்ச்சிகரமான சந்தோஷமும் அவருடைய பக்குவத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு வெறி அவரிடம் இருந்ததைக் காண முடிந்தது. வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரிடமும் இருக்க வேண்டிய குணாம்சம் அதுவே.

நடுவர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டது போல பூஜாவுடைய புத்திசாலித்தனம்தான் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற அவருக்கு உதவியது. எமோசனல் இன்டலிஜன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை அவரிடம் காண முடிந்தது. எது எப்படியோ, நம்மைக் கவர்ந்த ஒரு பங்கேற்பாளர் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிச் சென்றது நமக்கு உண்மையில் சந்தோஷத்தை தந்தது. ஒருவேளை யார் வெற்றி பெறுவார்கள் என்று முன் கூட்டியே கணிக்கும் திறமை நம்மிடம் இருக்கிறதோ என்னவோ! (சரி, சரி! புரிகிறது! இது கொஞ்சம் ஓவர்தான்!)

இது போன்ற ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுத்த விஜய் டிவிக்கு நமது பாராட்டுக்கள்.

யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?

7 ஜன

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட ரஜினிகாந்த் பெயரை உச்சரிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அது என்ன கிச்சன் சூப்பர் ஸ்டார்? நமது தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ரசிக்கும்படியாகவும், புதுமையாகவும் நிகழ்ச்சிகளைக் கொடுப்பதில் முதன்மையானது விஜய் டிவிதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கோபிநாத்தின் ‘நீயா நானா’ ஒரு நல்ல உதாரணம். அது போல், ‘சூப்பர் சிங்கர்’, ‘காமெடி கிங்’, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ போன்று தொடர் போட்டிகள் நடத்தி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது விஜய் டிவி. அதே வரிசையில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்று ஒரு சமையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமையலைப் பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத என் போன்றவர்களையும் ஒன்றரை மணி நேரம் கட்டிப் போட்டது போல் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வைக்க முடியும் என்று நிருபித்த விஜய் டிவிக்கு நமது பாராட்டுக்கள். மெட்ரோ பிரியா, லலிதா, பிரீத்தி, பூஜா, சந்தியா, இளவரசன் போன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் அறிமுகமான பதினோரு பங்கேற்பாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று (06-01-2013) வெறும் ஐந்து பங்கேற்பாளர்களாக குறைந்து விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியுள்ளது.

நடுவர்களாக சமையல் கலை நிபுணர்கள் தாமுவும், வெங்கடேஷ் பட்டும், நடிகர் சுரேஷும் பங்கேற்கிறார்கள். அவர்களின் விமரிசனமும், பாராட்டும் பங்கேற்பாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் அவர்கள் சொல்லும் விஷயங்கள் பெரும்பான்மையான பார்வையாளர் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பது ஒரு சிறப்பு. ஒருவேளை அதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையோ!

இதில் நாம் குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம், இதுவரை யாரையுமே இவர்தான் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒரு வாரத்தில் செஃப் ஆஃப் தி வீக் (Chef of the Week) ஆக வருபவர்கள் அடுத்த வாரம் மோசமான சமையல் அயிட்டத்தைக் கொடுத்து நீக்கம் (Elemination) என்ற அபாய கட்டத்துக்குப் போய் விடுகிறார்கள். மூன்று முறை அது போல செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய மெட்ரோ பிரியாவே இந்த முறை அபாய கட்டத்துக்கு வந்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அதாவது ஒரே வகையான பொருட்களை வைத்து இரண்டு போட்டியாளர்கள் ஏதாவது ஒரு புதுமையான உணவை தயார் செய்ய வேண்டும் என்றும் அதில் யார் மோசமாக தயார் செய்கிறார்களோ அவர்கள் நீக்கப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என்பதுதான் இந்த முறை தரப்பட்ட பரீட்சை. ‘இது போல் ஒரு பரீட்சையில் மிகவும் கைதேர்ந்த நீங்கள் சாதாரண ஒரு டிஷ்ஷை செய்து வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்ற நடுவர்களின் விமரிசனத்துக்கு ‘எனக்கு அந்த சமயத்தில் அதுதான் தோன்றியது, அதைத்தான் நான் செய்தேன்’ என்றார் பிரியா.

அதுதான் யதார்த்தம். அதாவது எல்லோருமே சமையலில் நிபுணர்களாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வித்தியாசமாக ஏதாவது உணவு சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும்போது அப்போது அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுதான் அவர்களுடைய வெற்றிக்கோ தோல்விக்கோ அடிப்படையாக அமைகிறது. அதனால் சமையல் கலையில் திறமை மட்டும் இல்லாமல் அவர்களுடைய முடிவெடுக்கும் திறனுக்கும் ஒரு பரீட்சையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

முடிவில் யாரோ ஒருவர்தான் கிச்சன் சூப்பர் ஸ்டாராக முடிசூடப் போகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அதனால் யாராவது ஒருவர் ஒவ்வொரு காலகட்டத்தில் வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ பிரியா, பூஜா, சந்தியா போன்றவர்கள் வெளியேறும் கட்டத்தில் வந்தது எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் முடிவில் பூஜா வெளியேறியது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

ஆனால் அவர் அதை ஏற்றுக் கொண்ட விதம் பாராட்டத் தகுந்தது. நடிகை என்பதாலோ என்னவோ அவர் விடை பெறும் நிகழ்வையே ஒரு சோலோ பெர்ஃபார்மென்ஸாக ஆக்கி வியக்க வைத்து விட்டார். தோல்வியை ஸ்போர்டிவாக ஏற்றுக் கொண்ட அவருடைய மனோபாவம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. மீதி இருக்கும் ஐந்து பேரில் நான்கு பேர் இது போல் ஒவ்வொரு கட்டத்தில் வெளியேற வேண்டியவர்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டாக தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பக்குவமாக உணர்த்திய விதம் அருமை. வெல்டன் பூஜா!

விதவிதமான சமையலை நடுவர்கள் ருசிக்கும்போது நமக்கும் அதை ருசித்துப் பார்க்க ஆசை வருவது உண்மைதான். அதிலும் ஒரு சில உணவு வகைகளை ஆஹா! ஓஹோ! என்று அவர்கள் பாராட்டும்போது நாக்கில் எச்சில் ஊறுவது உண்மைதான். ஆனால் தாமுவைப் போலவோ, வெங்கடேஷ் பட் போலவோ, நடிகர் சுரேஷ் போலவோ உடல் பருமன் ஆவதில் நமக்கு ஆசையில்லாத காரணத்தினால் ரசிப்பதோடு திருப்தி அடைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாம் நிகழ்ச்சியை மட்டும் சுவைக்கும் ரசிகர்கள். அவ்வளவுதான்!

கடிவேலு என்றால் அர்த்தம் என்ன?

7 செப்

கவிஞர் கடிவேலு கொடுத்த விளக்கத்தைக் கேட்டபின் நமக்கு ரொம்ப நாளாக உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு விடலாம் என்று தோன்றியது. அதாவது கடிவேலு என்று அழைப்பது அவரை அவமதிப்பது போல் இருக்கிறதே என்று கவிஞர் கடிவேலுவின் கவிதையில் சொல்நயம்! இடுகையில் சொல்லியிருந்தோமே அது ஞாபகம் வந்தது. அதனால், “கவிஞரே, உம்மை கடிவேலு என்று அழைப்பது நமக்கு சரியாகப் படவில்லை. வேலு என்றே அழைக்கலமா? அதுதானே உமது பெயர்” என்று கேட்டோம்.

ஆனால் அதற்கு நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு பதிலை கவிஞர் சொன்னார். கடிவேலு என்பதுதான் அவரது பெயராம். கடிவேலு என்றால் கூர்மையான, வேகமான வேல் என்று அர்த்தமாம். அதாவது முருக கடவுளைக் குறிக்கும் இன்னொரு சொல்லாம். அதிகமாக கேள்விப்படாத பெயராக இருந்தாலும் இந்தப் பெயரில் சில அறிஞர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னார். அத்தோடு தான் வடித்த கவிதை ஒன்றையும் சொன்னார் (இதற்குமா கவிதை?). அந்தக் கவிதையை கேட்ட நமக்கு கவிஞர் மீது சந்தேகம் வந்தது. இதோ அந்த கவிதை.

புதுமை யதுசிறப்பு மதுஇன்பம் அதிசய

மதுவாச னைபூசை தேற்றம் – கூர்மை

அளப்பரிய காலமது காவல்;கடி என்பதன்

விளக்கமிது கடிவேலு என்றால் மகிழ்ச்சியே!

என்ன இது? மது இன்பம், மது வாசனை என்றெல்லாம் ஒரே மது வாடையாக இருக்கிறதே! ஒருவேளை கவியரசு கண்ணதாசன் போல் இவரும் மதுவில் இன்பம் காணும் கவிஞர் தானோ? என்ற சந்தேகத்தோடு அவரைக் கேட்டால்,

தமிழமுது பருகிய துண்டு – மயக்கும்

மதுநமது பழக்க மில்லை

என்றார். பின் ஏன் அந்தக் கவிதையில் மது, மது என்றே வருகிறது என்று கேட்டேன். அதில் உள்ள வார்த்தைகளைப் பிரித்து மறுபடி படிக்கச் சொன்னார். அப்படி படிக்கும் போது

புதுமை அது சிறப்பும் அது இன்பம் அதிசயம்

அது வாசனை பூசை தேற்றம் – கூர்மை

அளப்பரிய காலம் அது காவல்; கடி என்பதன்

விளக்கம் இது கடிவேலு என்றால் மகிழ்ச்சியே!

என்று வந்தது. கடி என்ற சொல்லுக்கு இவ்வளவு அர்த்தம் உண்டாம் (எங்கே இருந்துதான் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறாரோ?)

புதுமை (Newness, modernness),

சிறப்பு (Beauty, excellence),

இன்பம் (Delight, gratification),

அதிசயம் (Wonder, astonishment),

வாசனை (Scent, fragrance),

பூசை (Worship),

தேற்றம் (Certainty, Assurance),

கூர்மை (Sharpness, keenness),

அளப்பரிய என்றால் மிகுதியாம் (Abundance,  plentifulness),

காலம் (Time),

காவல் (Protection),

விளக்கம் (Brightness; transparency),

என்றெல்லாம் அர்த்தமாம். அதனால் கடிவேலு என்று அழைத்தால் மகிழ்ச்சிதான் என்று கவிதையில் சொல்கிறார். அதற்காக சிறப்பு மது இன்பம், அதிசய மது வாசனை என்று சொல்லியா குழப்புவது? ரொம்பவும் குறும்புத்தனமான ஆளாக இருப்பார் போலிருக்கிறது.

சிறந்த மனோபாவத்தை பெறுவது எப்படி?

9 ஆக

மனிதனின் மனோபாவம் மிகவும் முக்கியமானது. அதுதான் வாழ்க்கையில் ஒருவன் வெற்றிபெறவும், நினைத்ததை சாதிக்கவும் உதவுகிறது. ஆனால் மக்களுக்கு தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் அதையெல்லாம் கவனிக்க நேரம் எங்கே இருக்கிறது? என்றுதானே நினைக்கிறீர்கள். ஒரு மனிதனுடைய சூழ்நிலைக்கேற்பவும், அவன் பழகும் மனிதர்களுக்கேற்பவுமே அவனுடைய மனோபாவம் உருவாகிறது.

நல்ல மனோபாவம் என்பது நம்முடைய மனத்தை நல்ல ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்வதுதான். சிலர் தாங்கள் பேசும் வார்த்தைகளின் மூலமாகவே தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். எதிர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, கேட்பது போன்ற செயல்களால் ஒரு விரும்பத்தகாத எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு துன்பத்தில் உழல்கிறார்கள்.

வெற்றி பெற வேண்டுமா? கடினமாக பயிற்சி செய்யுங்கள்!  என்ற தலைப்பில் கடந்த இடுகையில் சொன்னது போல சிறந்த மனோபாவத்தையும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கொண்டுவர முடியும்.

நமக்கு மனம் என்ற மாபெரும் சக்தியைப் பற்றிய அரிச்சுவடியைக் கற்றுக் கொள்ள ஆதாரமாக இருந்தவர் பதினாறு கவனகர் என்று அழைக்கப்படும் திரு இரா. கனகசுப்புரத்தினம் அய்யா அவர்கள். அவருடைய புத்தகங்களும், ஒலிநாடாக்களும், நேரடி சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நமக்கு மனதின் தன்மையைப் பற்றி பல விஷயங்களைப் புரிய வைத்தன. ஆன்மீகத்திலும் நமக்கு மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது அவருடைய கருத்துக்கள்தான்.

நமது மனோபாவம் எப்படி நமது வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்ட அவர் பல நிகழ்ச்சிகளைச் சொல்லுவார். ஒரு முறை பழம்பெரும் பாடகர் திரு T.M. சௌந்திரராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததாம். அப்போது திரு சௌந்திரராஜன் அவர்கள், தான் சினிமாவில் நிறையப் பாடல்களைப் பாடி பெரும்புகழ் சம்பாதித்திருந்தாலும், தற்போது தனக்கு மனதில் நிம்மதியில்லை என்றும், குடும்பத்திலும் சந்தோஷம் தொலைந்து போனதாகவும் சொல்லி வருத்தப்பட்டாராம்.

அதற்கு கவனகர் அய்யா அவர்கள், “நீங்கள் பாடிய பாடல்களிலேயே உங்களுக்குப் பிடித்த பாடல் எது?” என்று கேட்டாராம். ஒருதலை ராகம் படத்தில் வரும் `நானொரு ராசியில்லா ராஜா’ என்ற பாடலை தனக்குப் பிடித்த பாடலாக குறிப்பிட்டதோடு அதை உருக்கமாக அனுபவித்து பாடியும் காட்டியிருக்கிறார் திரு T.M. சௌந்திரராஜன் அவர்கள். அதைக் கேட்டு கவனகர் அய்யா அவர்கள் சிரித்து விட்டாராம். ஏன் சிரிக்கிறீர்கள் என்று TMS கேட்டாராம்.

“இதுதான் உங்களது பிரச்சினை. நீங்கள் தமிழக முதல்வராக இருந்த, புரட்சித்தலைவர் என்று போற்றப்படும் திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்காக சினிமாவில் எத்தனையோ எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி இருக்கிறீர்கள். அந்தப் பாட்டுக்கள் மூலம் அவர் புகழின் உச்சிக்கே சென்றார். அரசியலிலும் அசைக்க முடியாதவராக கோலோச்சினார். அந்தப் பாடல்களையெல்லாம் விட்டு விட்டு, ஒரு சோகப் பாடலை பிடிக்கும் என்று சொல்கிறீர்கள். அதை மிகவும் அனுபவித்து வேறு பாடுகிறீர்கள். உங்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும்?” என்றாராம் கவனகர்.

“எனக்கு எது மிகவும் பிடிக்கிறதோ, அதைத்தான் சொன்னேன்” என்றாராம் TMS அவர்கள்.

“உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் நினைக்கும் எண்ணங்கள், பேசும், கேட்கும் வார்த்தைகள், உங்கள் மனத்தில் பதிந்து, அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி உங்களுக்கு நல்லதையோ அல்லது கெட்டதையோ உண்டாக்குகிறது. ஆகவே நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டாக வேண்டுமென்றால், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளையே கேளுங்கள். நல்ல விஷயங்களையே பேசுங்கள், நினையுங்கள்” என்றாராம் கவனகர்.

அத்தோடு “இன்றிலிருந்து தினமும் இந்தப் பாடல்களை மட்டும் கேட்டு வாருங்கள்” என்று சில ஆடியோ கேசட்களைக் கொடுத்தாராம். அவை அத்தனையும் T.M. சௌந்திரராஜன் அவர்கள் பாடிய சினிமா பாடல்கள்தானாம். தன்னம்பிக்கையும் எழுச்சியும் ஊட்டும் பாடல்கள்.

அதற்கு கொஞ்ச நாள் கழித்து திரு T.M. சௌந்திரராஜன் அவர்கள் கவனகர் அய்யா அவர்களை தொடர்பு கொண்டாராம். “நீங்கள் சொன்னபடியே செய்தேன். இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். குடும்பத்திலும் சந்தோஷம் பொங்குகிறது. தமிழக அரசு என்னை இயல், இசை, நாடகத்துறைக்குத் தலைவராக நியமித்திருக்கிறது. நான் இப்போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாராம். இதுதான் மனத்தின் வலிமை.

சில நாட்களுக்கு முன், 22.07.2012 அன்று, விஜய் டி.வி.யில் கோபிநாத் அவர்களின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில்கூட முப்பது வருடங்களுக்கு முந்தைய சினிமாப் பாடல்களைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது. ஒவ்வொருவர் மனதிலும் எந்த எந்தப் பாடல் சந்தோஷத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகிறது என்பதை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.

சிலருக்கு தன்னை அறியாமலே ஒரு சில பாடல்கள் மனதில் பதிந்து ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் எந்த மாதிரியான பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. நல்ல வார்த்தைகளையே கேட்போம் என்று தீர்மானித்துக் கொள்ள முடியும். எனவே சிறந்த மனோபாவத்தை பெறும் சக்தி நம்மிடமே இருக்கிறது.

நேர்மறை சிந்தனையாளர்களுடன் பழகுதல், அதற்கான கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுதல், ஒலிநாடாக்களைக் கேட்டல், வீடியோவில் தன்னம்பிக்கை தரும் உரைகளைக் கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல் போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொண்டால் விரைவிலேயே சிறந்த மனோபாவம் கொண்டவர்களாக நாம் மாற முடியும்.

நம் ரசனை எங்கே போகிறது?

6 ஜன

இன்று செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறிவிடலாம். அந்தளவுக்கு செல்போனும் கையுமாகவே மக்கள் திரிகிறார்கள். பாத்ரூமில் செல்போன், சாப்பிடும்போது செல்போன், கோயிலில் செல்போன், தூங்கும் போதும் செல்போனை பக்கத்தில் வைத்துக் கொண்டேதான் தூங்குகிறார்கள்.

இதைக் கூட நாம் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ரிங் டோன் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறதே! அதுதான் கொடுமை. இந்த விஷயத்தில்தான் ஒவ்வொருவருக்கும் வித விதமான ரசனைகள். சிலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களை காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். சிலர் வித்தியாசமாக குழந்தையின் சிரிப்பையோ அல்லது அழுகையையோ காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை.

சிலர், `போனை எட்றா டேய்! போனை எட்றா! கஸ்மாலம் டேய்! போனை எட்றா!’ என்று கூட காலர் ட்யூன் வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, நாய் குரைப்பது போல காலர் ட்யூன் வைத்திருக்கிறார்கள். என்ன ரசனையோ! இதைத்தான் காமெடி நடிகர் விவேக், “ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் எருமை மாடு சாணி போடுவதைக் கூட ரிங் டோனாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே!” என்று ஒரு படத்தில் கிண்டலடித்திருப்பார்.

சற்றுப் பொறுங்கள். யாரோ வருவது போல் தெரிகிறது…

ஓ! நம்ம கவிஞர் கடிவேலுதான். உங்களுக்கு கவிஞர் கடிவேலுவைத் தெரியாதா?

அப்பு வணக்கம்ப்பு…..

கவனஈர்ப்பு ஏற்படுத்தவே காலர்-ட்யூன் – அதிலே

    கதறித் துடிக்கும் நாய்குட்டியின் பதிவுஏன்?

கவனக்குறைவு ஏற்பட்டாலே காலன்தான் – ரோட்டிலே

    அலறித் துடித்தும் பயனில்லை எச்சரித்தேன்!

நாம் எழுதும் கருத்தை ஒட்டியே அவரும் கவிதை சொன்னதால் என்னவென்று விசாரித்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து நன்றாகக் குணமாகி வீடு திரும்பி விட்டாராம். ஆஸ்பத்திரியில் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னார்களாம். அதனால் ஒரு நண்பர் அழைத்ததன் பேரில் இன்சூரன்ஸ் சம்பந்தமான ஒரு கூட்டத்துக்குப் போனாராம்.

அங்கு நல்ல கூட்டம். காரணம் அன்று அந்தக் கம்பெனி புதிதாக ஒரு பாலிசி அறிமுகப் படுத்தியிருந்தார்கள். எல்லோரும் மிக மிக ஆர்வமாக உரையைக் கவனித்துக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று கூட்டத்தில் ஒரு நாய்குட்டியை யாரோ மிதித்தது போல் நாய்குட்டியின் கதறல் சத்தம். இந்தக் கூட்டத்தில் நாய்க் குட்டி எப்படி வந்தது? என்று எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தால்…

அது யாரோ ஒருவருடைய காலர்-ட்யூனாம். எங்கும் சிரிப்பலை பரவியதாம். இந்த சத்தம் ரோட்டில் வாகனத்தில் செல்லும்போது யாருடைய போனிலிருந்தாவது கேட்டால், என்ன நடக்கும்? என்று சிந்தித்தாராம். அதன் பாதிப்பினால் நம் கவிஞர் கடிவேலுவுக்கு உதித்த கவிதையாம் அது.

மக்களின் ரசிப்புத்தன்மை சக்தி வாய்ந்தது

2 ஜன

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2012 அளவற்ற மகிழ்ச்சியையும், எல்லா வளத்தையும் தங்களுக்கு வழங்கும் ஆண்டாக அமையட்டும்.

கடந்த 2011ம் வருடம் மக்கள் ரசித்த விஷயங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று நடிகர் தனுஷ் எழுதி, பாடிய ‘கொலவெறி’ பாடல். இதுவரை கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்கள் எழுதி வெளிவந்த எந்தப் பாடலுக்கும் கிடைக்காத உலகப் புகழை, இந்தப் பாடல் மிகக் குறுகிய காலத்தில் பெற்று விட்டது.

S.P. பாலசுப்பிரமணியம், K.J. ஜேசுதாஸ் போன்ற திறமையான பாடகர்கள் பல பாடல்களைப் பாடி பெற்ற புகழைவிட அதிகமான புகழ், ஒரே பாடலில் தனுஷுக்குக் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுக்க பலரைக் கவர்ந்த இந்தப் பாடல், உலகம் முழுக்கவும் பல ரசிகர்களைப் கவர்ந்திருக்கிறது. YouTube இல் 10 மில்லியனுக்கும் அதிகமான ஹிட்டுக்கள் வாங்கி, அதற்காக YouTube இன் அவார்டும் பெற்றிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தோஷப் படுத்தியதாகச் சொல்லப்படும் இந்தப் பாடல், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. அவ்வளவு ஏன்? அமெரிக்க அதிபர் ஒபாமாவே இந்தப் பாடலை ரசித்து டுவிட்டரில் செய்தி அனுப்பி இருப்பதாக ஒரு செய்தி பரவி இருக்கிறது.

எனினும் இந்தப் பாடல் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. மிகவும் பிரபலமான கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவித் அக்தர் இந்தப் பாடலின் இசையையும், பாடிய விதத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தப் பாடலின் வரிகள் அவமதிப்பானவை என்றும் சாடியிருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால் வயது வித்தியாசமில்லாமல் அனைவருமே (பள்ளிச் சிறுவர்கள் உள்பட) இந்தப் பாடலை உற்சாகமாகப் பாடுகிறார்கள்.சாப்பிடாமல் அடம் பிடிக்கும் சிறு குழந்தைகள் கூட இந்தப் பாடலைக் கேட்கும்போது தங்களை மறந்து அம்மா ஊட்டும் சாப்பாட்டை விழுங்குவதாக ஒரு செய்தி சொல்கிறார்கள்.

மக்களின் ரசிப்புத்தன்மை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு இந்தப் பாடலின் வெற்றி ஒரு உதாரணம்.

உங்கள் இதயத்தை ரசியுங்கள்

27 டிசம்பர்

உங்கள் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புக்களில் ஒன்று இதயம். இது உங்கள் உடலின் செயல்பாட்டுக்கு மிக மிக அவசியம். இது இரத்தத்தை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பி அந்த உறுப்புக்க்ளின் வளர்சிதை மாற்றத்திற்கும் உடலில் சக்தி உருவாக்குவதற்கும் உதவுகிறது.

நாம் பிறந்த்திலிருந்து கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலை செய்வது இதயம். நாம் ஒரு பொருளை தூக்குகிறோம். அல்லது ஒரு உடற்பயிற்சி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு நேரம் அதை தொடர்ந்து செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொஞ்சமாவது ஒய்வு எடுத்தால்தான் அதை தொடர்ந்து செய்ய முடியும் அல்லவா?

ஆனால் தொடந்து வேலை செய்து கொண்டிருக்கும் நமது இதயம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின் வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தால், நம் கதி என்னவாகும்? அவ்வாறு ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் நமது இதயத்தை என்றாவது நன்றியுடன் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அல்லது அதன் மீது அன்பு காட்டியிருக்கிறோமா?

அதன் மீது அன்புதான் காட்டவில்லை, அல்லது நன்றியுடன் நினைத்தும் பார்க்கவில்லை. அதற்கு, மேலும் கடினமாக வேலை கொடுக்காமல், கஷ்டப் படுத்தாமலாவது இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. இப்படிப் பட்ட ஒரு அற்புதமான உறுப்புக்கு ஓவர் லோடு கொடுக்கிறோம். எப்படியென்றால் அதிகப் படியான கொழுப்பு சத்தை சாப்பிட்டு சாப்பிட்டு ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பதற்கு வழி பண்ணுகிறோம். உடல் பருமனை அதிகமாக்கி, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த வேண்டி இதயத்தை அதிகமாக வேலை செய்யத் தூண்டுகிறோம்.

அது வாய் பேச முடியாமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன்னால் முடிந்த வரை வேலை செய்கிறது. முடியாத பட்சத்தில் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. ஆம். கனவான்களே! அது இயக்கத்தை நிறுத்தி விட்டால் பிறகு நீங்களும் இருக்க முடியாது. அதனால் வாய் மூடி மௌனமாக தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் இதயத்தை ரசியுங்கள். நன்றி சொல்லுங்கள். அதை தொந்திரவு பண்ணாமல், அதிக பளுவுள்ள வேலையைக் கொடுக்காமல் உங்கள் இதயத்தை சந்தோஷப் படுத்துங்கள்.

உங்கள் உடல் எடையை சரியான BMI க்கு தகுந்தாற்போல் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் உதவி செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெறுங்கள். அது உங்கள் இதயத்தைக் குளிர்விக்கும். எனவே தினமும் உங்கள் இதயத்தை ரசியுங்கள். நன்றி சொல்லுங்கள்.

BMI பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, palanis11(a)ymail.com இல் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஸ்பத்திரியில் கவிஞர் கடிவேலு

20 டிசம்பர்

காலையில் நான் ஆபீஸுக்கு வந்தவுடன் கவிஞர் கடிவேலு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவருடைய வீட்டிலிருந்து தகவல் வர உடனே ஆஸ்பத்திரிக்கு கிளம்பினேன்.

அங்கு அவர் ஒரு பெட்டில் கண்மூடிப் படுத்திருந்தார். என்ன நடந்தது என்று அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். யாரிடமோ கவிதை சொன்னாராம். கோபத்தில் அடித்து விட்டார்களாம் என்றார்கள்.

கவிஞர் கடிவேலு லேசாகக் கண் விழித்தார். அருகில் சென்றேன்.

அப்பு… வணக்கம்ப்பு…

(என்ன ஆனாலும் இதை மட்டும் விட மாட்டேங்கிறாரே)

“என்ன நடந்தது?” என்று கேட்டேன்.

மடிசார் கட்டிய மாமியின் அருகே

சுடிதாரில் இருந்தாளொரு சூப்பர் யுவதி

வடித்தேன் கவிதை அவளை ரசித்து – என்னை

அடித்தாள் வந்தது அதனால் அவதி

அவரிடம் விசாரித்ததில் நமது முந்தைய இடுகை

சக மனிதர்களையும் ரசியுங்கள் படித்து விட்டு, அதே போல TATA Magic க்கில் பயணம் செய்திருக்கிறார். அதில் பயணம் செய்த ஒரு பெண்ணைப் பார்த்து ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் கவிதை சொல்லியிருக்கிறார். அவள் கோபத்தில் அறைய, உடன் இருந்தவர்கள் பின்னியெடுத்து விட்டார்கள்.

தெரியாத பெண்ணிடம் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று அறிவுறுத்தி விட்டு, ஆறுதல் சொல்லி, சீக்கிரம் குணமடைய வாழ்த்திவிட்டு வந்தேன்.

சக மனிதர்களையும் ரசியுங்கள்!

17 டிசம்பர்

TATA Magic என்றொரு வாகனம் சென்னையில் பிரபலமாக இருக்கிறது. மினிவேன் போன்று இருக்கும். ஷேர் ஆட்டோ போன்று தூரத்திற்கு ஏற்றபடி பணம் வாங்குகிறார்கள். பேருந்து நெரிசலில் இருந்து விடுபடவும், ஆட்டோவில் சென்றால் கொடுக்க வேண்டிய அதிகப் படியான மீட்டர் வாடகையை மிச்சப் படுத்தவும் பெரும்பான்மையான நடுத்தர மக்கள் உபயோகப் படுத்தும் வாகனமாக அது ஆகிவிட்டது.

நேற்று அதில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. டிரைவர் சீட் அருகே ஒரு சீட்டில் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். டிரைவருக்குப் பின்னால் உள்ள எதிரும் புதிருமான இரண்டு நீண்ட இருக்கைகளில் (மூன்று பேருக்கானது), ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பேராக எட்டு பேர் அமர்ந்திருக்க, அதற்கு நடுவிலுள்ள இடைவெளியில் ஒரு பெட்டி அதில் ஒரு யுவதி அமர்ந்திருந்தாள். அதற்கு எதிரே கதவை ஒட்டி எனக்கு இடம்.

கிட்டத்தட்ட எல்லோருக்குமே கொஞ்சம் இடைஞ்சலான பயணம்தான். இது போன்ற பயணம் எனக்கு ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. ஆனால் அதில் வழக்கமாகப் பயணம் செய்பவர்களுக்கு நெரிசலில் பயணம் செய்வது பழக்கமாகி விட்டது போலும். இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே பயணம் தொடர்ந்தது.

ஒவ்வொருவரையும் கவனித்தேன். எதிரேயுள்ள யுவதி தன்னுடைய செல்போனை ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஜன்னலோரமாக இருப்பவர்கள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் எதையோ யோசித்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்குள் ஒரு எண்ணம். இவர்களின் மனநிலை எப்படி இருக்கும். விலைவாசியைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ, குடும்பத்தில் தற்போதைய செலவுகளை பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்களா?

அல்லது ஆபீஸில் நடந்த விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருப்பார்களா? தெரியவில்லை.

“உங்க ஸ்டெயின்டு கிளாஸ் (கலர் பூச்சுள்ள கண்ணாடி) நன்றாக இருக்கிறது” என்று ஒரு குரல் கேட்டது. சட்டென என் எண்ணவொட்டம் கலைந்து குரல் வந்த திசையை நோக்கினேன். ஜன்னலோரமாக அமர்ந்திருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், வெளியே பைக்கில் வந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். வண்டி ட்ராபிக் நெரிசலில் நின்றிருந்தது. அந்த இளைஞன் புன்னகைத்து நன்றி சொன்னான். சிறிது நேரத்தில் வண்டி நகர்ந்தது.

“உங்களுக்குத் தெரிந்தவரா?” என்று கேட்டேன்.

“இல்லை. அவர் அணிந்திருந்த கண்ணாடி அவருக்குப் பொருத்தமாக இருந்தது. அதனால் ரசித்து பாராட்டினேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம்.” என்றார்.

எனக்கு ஒரே வியப்பு! இன்னும் ரசிப்புத்தன்மை மக்களிடம் இருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும், இந்த ரசிப்புத்தன்மை அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

அவருடைய பாராட்டுதலைக் கேட்டு அந்த இளைஞனும் சந்தோஷமடைந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் மிகவும் சந்தோஷமாக் இருந்தது. நண்பர்களே! உங்களை நீங்கள் ரசிப்பதோடு, சக மனிதர்களையும் ரசியுங்கள். மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை அளியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.