Tag Archives: weight loss

உடல் இளைக்க கவிஞர் தரும் டிப்ஸ்!

28 பிப்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று கவிஞர் கடிவேலு முந்தைய இடுகைகளில்  சொல்லி வந்தாரல்லவா? பிறகு இன்னொரு நாள் வருகிறேன் என்று புறப்பட்டுப் போய் விட்டார். அதன் பிறகுதான் கவிஞரிடம் நாம் கேட்க நினைத்த சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டது ஞாபகம் வந்தது. அடுத்த முறை கட்டாயம் அவற்றைக் கேட்டுவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.

நமது முந்தைய இடுகையான ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்? – பகுதி 2’ வெளியானதும் அதைப் படித்து விட்டு உடனே நமக்குப் போன் பண்ணினார் கவிஞர். நமக்கு ஈமெயிலில் கவிதை ஒன்று அனுப்பி இருப்பதாகவும் சொன்னார். உடனே மெயிலைத் திறந்து அந்தக் கவிதையை வாசித்தோம். இதோ அந்தக் கவிதை!

ஆரோக்கியத்தில் கவனம் வைப்போம்

ஓரறிவுள்ள உயிரினம் முதல் – ஆறில்
ஓரறிவு குறைந்த விலங்கினம் வரை
ஓராயிரம் வகையான உணவுகளை
ஒருபோதும் புசிப்பதில்லை – உடலளவும்
ஒன்றுபோலே இன்னொன்று; மாற்றமில்லை
ஆறறிவுள்ள நாம்மட்டும் ஆயிரத்தெட்டு
கூறுகளென உணவுகளை வகைசெய்து – அதில்
யார்வருவார் சமையலறைத் தாரகையென
பார்புகழ பலவகை போட்டிகள் நடத்தி
பார்ப்பவர் மனத்தில் ஆசையைப் புகுத்தி
புதுப்புது உணவுகளை ருசிபார்த்து – அதனால்
ஒருவரை யொருவர் மிஞ்சவே உடல்பெருத்து
பலவகை நோய்களை வரவழைத்து நாம்பெற்ற
அழகான உருவத்தை அவலட்சணமாகவே
ஆக்கிடவோ ஆற்றல்மிக்க ஆறறிவை நாம்பெற்றோம்
ஆக்கபூர்வ நிகழ்ச்சிகளை நாம்ரசிப்போம் – அத்துடன்
ஆரோக்கியத்தில் மிக்கவே கவனம் வைப்போம்

படித்து முடித்ததும் கவிஞரை போனில் அழைத்து கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினோம். அதற்கு அடுத்து நம்மிடம் ஒரு கேள்வி கேட்டார் கவிஞர்.

“தகுதியுள்ள ஒரு போட்டியாளர் திடீரென போட்டியிலிருந்து விலக நேர்ந்தது தானே உம்மை ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற முதல் இடுகையை எழுதத் தூண்டியது?”

“ஆமாம்! உண்மைதான். அப்படியானால் நீர் நமது முந்தைய இடுகையை வாசித்தீரா? ஆனால் அதைப்பற்றி கருத்து எதுவும் நீர் ஏன் சொல்லவில்லை? நாம் அதை ரொம்பவும் எதிர்பார்த்தோம்”

“அந்த இடுகை வந்த உடனே நான் அதைப் படித்து விட்டேன். ஆனால் உடல் இளைக்கும் முயற்சியில் இருந்த எனக்கு, அந்த நிகழ்ச்சியைப் பற்றியோ, உமது இடுகையைப் பற்றியோ எதுவும் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது” என்றார்.

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றோம் புரியாமல்.

“நீர் ஒன்று கவனித்தீரா? அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம், ஏன் நடுவர்கள் உட்பட கொஞ்சம் ஓவர் வெயிட் உள்ளவர்களாகவே இருந்தார்கள்”

“ஆமாம், அதனால் என்ன?”

“உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களையே அடிக்கடி பார்க்க வேண்டும். அவர்களைப் பற்றியே நினைக்க வேண்டும். அவர்களைப் பற்றியே பேச வேண்டும். இது ஒரு வகையில் அவர்ளுடைய முயற்சிக்கு உதவும். அதாவது எடை குறைந்த பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று மனக்காட்சியில் காண அது உதவும். அதாவது உடல் எடை குறைப்பில் உங்கள் எண்ண ஒருங்கிணைப்பிற்கு உதவியாக இருக்கும்”

“நீர் சொல்வது சரியாகவே இருந்தாலும், நமது தினசரி வாழ்க்கையில் அதிக எடை உள்ளவர்களைப் பார்க்காமலே இருக்க முடியுமா? அது சாத்தியமான காரியமில்லையே!”

“உண்மைதான். நாம் ஏற்கெனவே அறிந்தவர்களை, நம்முடனே இருப்பவர்களை நாம் பார்க்கும்போது அவர்களுடைய உடல் எடை நம்முடைய கவனத்தைக் கவராது. அவர்களுடைய குணாதிசயம்தான் நம்முடைய கவனத்தில் இருக்கும். அதை வைத்துத்தான் அவர்களுடன் பழகுவோம். ஆனால் புதிய மனிதர்களின் விஷயத்தில் அப்படியல்ல. முதலில் அவர்களுடைய உருவமும், எடையும்தான் நமது கவனத்தில் பதியும்”

“ஓஹோ! இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?”

“அதனால்தான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அப்படி சொல்ல வேண்டுமென்றால் அந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதில் பங்கேற்பவர்களை உன்னிப்பாக கவனித்து ரசிக்க வேண்டும்”

“அப்படியென்றால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறீரா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை. நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஆனால் நம்முடைய ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதைத்தான் அந்தக் கவிதையில் சொல்லியிருக்கிறேன்” என்றார் கவிஞர்.

Advertisements

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்? – பகுதி 2

8 பிப்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை ஏற்படுத்திக் கொண்டு உணவில் கவனம் செலுத்தி, நேர்மறை மனோபாவத்தோடு, எளிதான உடற்பயிற்சியையும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறையும் என்றும் அதுதான் ஆரோக்கியமான முயற்சி என்றும் சொன்னார். அதை இடுகையை மறுபடியும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தொடர்ந்து கவிஞரிடம் நம்முடைய கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.

“கவிஞரே, ஒரு குறிப்பிட்ட கால அளவை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னீர். அந்த கால அளவு எவ்வளவு?”

“நாம் ஏற்கெனவே சொன்னபடி நம்முடைய BMI யைத் தெரிந்து கொண்டபிறகு, எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்று நமக்குத் தெரிந்து விடும். ஆனால் அந்த எடையை ஒரேயடியாக குறைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கக் கூடாது”

“நீர் சொல்வது புரியவில்லையே!”

“அதாவது உமது இப்போதைய எடையிலிருந்து முப்பது கிலோ குறைக்க வேண்டும் என்றால், அந்த முப்பது கிலோவையும் ஒரே மூச்சில் குறைத்து விடலாம் என்று நினைத்து முயற்சிக்கக்கூடாது”

“அதாவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டுமாக்கும்”

“ஆமாம், முதலில் ஐந்திலிருந்து எட்டு அல்லது பத்து கிலோ வரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கே மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு சுமார் ஒரு மாதம் இடைவெளி விட வேண்டும்”

“என்ன, ஒரு மாதம் இடைவெளி விட வேண்டுமா? சரிவிகித உணவு முறையைப் பின்பற்றவோ, உடற்பயிற்சி செய்யவோ தேவையில்லையா?”

“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. உடற்பயிற்சியை கண்டிப்பாகத் தொடர வேண்டும். ஆனால் உணவு வகைகளில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை சிறிது கவனத்துடன் அளவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் கலோரி பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும்”

“அப்படியானால் அந்த மூன்று மாதத்தில் வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாதா? வேறு எவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர் சொல்வதைப் பார்த்தால் பத்தியம் இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே?”

“இல்லை, பத்தியமெல்லாம் தேவை இல்லை. கலோரி குறைந்த சரிவிகித உணவு பாக்கெட்டில் விலைக்கு கிடைக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது நான் சொல்ல வருவது குறிப்பிட்ட அந்த மூன்று மாத காலத்தில் கலோரி குறைந்த சரிவிகித உணவை ஒரு வேளையும் மீதி இரண்டு வேளை வழக்கமான உணவையும் எடுத்துக் கொள்ளலாம்”

“அதற்குப் பிறகு ஒரு மாத காலம் இடைவெளி விட வேண்டுமாக்கும்”

“ஆமாம், இந்த ஒரு மாத கால இடைவெளியில் நமது எடையில் கவனம் வைப்பது அவசியம். அனேகமாக எடை கூடாது. ஆனாலும் ஒரு கிலோ அல்லது ஒண்ணரை கிலோ கூடியிருப்பதாகத் தோன்றினாலும் கவலைப் பட வேண்டியதில்லை”

“இப்போது புரிகிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு கலோரி என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்கிறீர், இல்லையா?”

“ஆமாம், ஆனால் ஒரு சில நாட்கள் கவனித்தாலே, பிறகு அது நமக்கு மனப்பாடமாகி விடும்”

“சரி, எளிதான உடற்பயிற்சி என்று சொன்னீரே, என்ன மாதிரியான உடற்பயிற்சி? அதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?”

ஒன்பது அல்லது பத்து வகை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் இரண்டு நிமிடங்கள் செய்தால் போதும். அதாவது, கழுத்துக்கு, தோள்களுக்கு, மார்புக்கு, வயிற்றுக்கு, இடுப்புக்கு, கைகளுக்கு, கால்களுக்கு என்று அதில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கிடைப்பது போல் இருத்தல் வேண்டும். இதயம் நன்றாக துடித்து சீரான வேகத்தில் இரத்தத்தை உடல் முழுக்க பம்ப் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும். வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது மூச்சைக் கவனிப்பதும் அவசியம்”

“மூச்சைக் கவனிப்பதா? யோகப்பயிற்சியின் போதுதானே மூச்சைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வார்கள்?”

“மிகச் சரியாகச் சொன்னீர். ஆனால் யோகாவில் செய்வது போன்று அல்லாமல் எப்போது மூச்சு வெளியேறுகிறது, எப்போது உள்ளே இழுக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். மூச்சைக் கவனிக்கும் போது மனம் நம் கட்டுப் பாட்டுக்குள் வரும். அது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். உமக்கு இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டார் கவிஞர்.

“ரகசியமா? சொல்லும், சொல்லும்! கேட்பதற்கு ஆவலாக இருக்கிறோம்”

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் கவனித்து, மெதுவாக, மிகவும் ரசித்து சாப்பிட்டோம் என்றால் நாம் அதிகமான அளவு உண்ணமாட்டோம்

“அது எப்படி? சுவையான உணவு என்றால் அதிகமாகத்தானே சாப்பிடுவோம். அதுதானே இயற்கை”

தவறு, எந்த ஒரு செயலையும் மிகவும் ரசித்து, உணர்ந்து செய்யும் போது நமக்கு மனதில் திருப்தி ஏற்படுவது இயற்கை. அது சாப்பிடுவதற்கும் பொருந்தும். அப்படி திருப்தி ஏற்பட்டு விட்டால் நாம் அதிகமாக உண்ண மாட்டோம். அப்படியில்லாமல் டிவி பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ அல்லது கவனமில்லாமலோ சாப்பிடும்போது நம்மை அறியாமலே அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது

“மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது! ஆனால் நீர் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இனிமேல் நானும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவது என்று முடிவெடுத்து விட்டேன்”

இதுபற்றி மேலும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்?

5 பிப்

உடல் இளைத்து சின்னப் பையன் போல் வந்த கவிஞர் கடிவேலுவைப் பார்த்து நாம் பிரமித்து நின்றோம் அல்லவா? காரணம் கேட்டதற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டி உடல் எடையைக் குறைத்ததாகச் சொன்னார். சரியான உடல் எடையைக் கணிப்பதற்கு ஒரு ஃபார்முலாவையும் சொன்னார். எப்படி அவருடைய உடல் எடையைக் குறைத்தார்? என்று ஆவலோடு கேட்டோம். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீர் முடிவெடுத்து விட்டால், அதன் பிறகு நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில இருக்கிறன. அவற்றைத் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

“என்னென்ன நடைமுறைகள்?”

“சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நேர்மறை மனோபாவம், சரியான தூக்கம் ஆகியவை. சீரான ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இவைதான் தேவை”

“சரிவிகித உணவுப் பழக்கம் என்றால் என்ன?”

“நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்துக்களும், புரதச்சத்துக்களும், விட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களும், மற்றும் நார்ச்சத்தும், கொழுப்புச் சத்தும் தேவையான விகித்த்தில் இருக்க வேண்டும். உடல் இளைக்க முயற்சி மேற்கொள்ளும் சமயங்களில் இந்த விகிதத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

“கலோரிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால் எப்படி?”

“அதாவது ஒருநாளைக்கு நாம் உண்ணும் உணவில் சராசரியாக 2500 இலிருந்து 3000 கலோரி வரை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் 2000 இலிருந்து 2500 கலோரி அளவே நமது தினசரி செயல்பாட்டுக்குப் போதுமானது. சிலருக்கு 1800 கலோரி அளவே போதுமானது. அந்த அளவு மட்டும் எடுத்து கொள்ளும் போது நமது எடை கூடவோ, குறையவோ செய்யாது அப்படியே இருக்கும்”

“அப்படியானால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 2000 கலோரியை விடவும் மிகக்குறைவாக உள்ள உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். சரிதானே?”

“மிகவும் சரி. அப்படி குறைவான கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, தினசரி செயல்பாட்டுக்குத் தேவையான கலோரிகளை, நமது உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப் பட்டுள்ள கொழுப்பிலிருந்து உடல் எடுத்துக் கொள்ளும்”

“அப்படி எடுத்துக் கொள்வதால் உடலில் பாதிப்பு ஏற்படாதா?”

“சரிவிகித உணவு முறையைப் பின்பற்றும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப் படுமே ஒழிய பாதிப்பு எதுவும் ஏற்படாது”

“சரி, நீர் சொல்வது போல கலோரி குறைவான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமா? வேறு எதுவும் செய்ய வேண்டாமா?”

“அப்படியில்லை. தவறாமல் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்”

“அப்படி உடற்பயிற்சியும் வேண்டும் என்றால், அதை அதிக நேரம் செய்யும் போது இன்னும் அதிக கலோரிகள் செலவாகி உடல் எடை அதிகம் குறையும் அல்லவா?”

“நீர் நினைப்பது போல்தான் நிறையப் பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறைய வேண்டுமானால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் எடையைக் குறைக்கிறேன் என்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எடை குறையாது”

“தீவிர உடற்பயிற்சி செய்யும் போது அதிக கலோரி செலவாகும் அல்லவா? அப்படி அதிக கலோரி செலவானால் எடை குறையாதா?”

தீவிர உடற்பயிற்சியின் போது அதிக கலோரி செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் அதிகப்படியான மாவுச்சத்துதானே கொழுப்பாக நம் உடலில் சேர்த்து வைக்கப் படுகிறது. அப்படி ஏற்கெனவே சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்துதான் தீவிர உடற்பயிற்சியின் போது தேவைப்படும் கலோரியை உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்காக நாம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நாம்தான் உடற்பயிற்சி செய்கிறோமே அதனால் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் சாப்பிடுவோம். அப்போது உடற்பயிற்சியினால் செலவான கலோரி மறுபடி உடலில் சேர்ந்து விடும். இப்போது அது ஈடுகட்டப்பட்டு விடுவதால் எடை குறையும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தீவிர உடற்பயிற்சியை விட எளிமையான உடற்பயிற்சியே சிறந்தது. ஆனால் அதை தவறாமல் செய்ய வேண்டும்

“இது மிகவும் உபயோகமான தகவல்தான்” என்றோம்.

“அதுமட்டுமல்ல. நேர்மறை மனோபாவமும் அவசியம். அதாவது நம்மால் எடை குறைக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும்”

“நம்பிக்கை இல்லாமலா, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள்?”

“நம்பிக்கையுடன்தான் ஆரம்பிக்கிறார்கள். சிறிது காலம் முயற்சிப்பார்கள். ஆவலோடு, எடை குறைகிறதா என்று எடை மெஷினில் ஏறிப் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நினைத்தது போல் எடையில் வித்தியாசம் இல்லையென்றால் நம்பிக்கை குறைந்து விடும். உடனே வேறு வழியில் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்”

“அவர்களுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது வேறு என்ன செய்ய முடியும்?”

“அதற்குத்தான் நேர்மறை மனோபாவம் அவசியம். எடை குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டு அது வரை பொறுத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது”

“சரிதான்! ‘நானும் எவ்வளவோ முறைகளை முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால் உடல் எடை குறையவில்லை’ என்று சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்”

ஆமாம், உடல் எடையைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கெடுவை குறிக்கோளாக வைத்துக் கொண்டு, அதற்காக முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், குறைவான கலோரி உள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்

உடல் எடையைக் குறைக்கும் முறைகளைப் பற்றியும், சரி விகித உணவைப் பற்றியும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்.

கவிஞர் கடிவேலுவின் புதிய தோற்றம்!

2 பிப்

இன்று காலையில் கண்விழித்தவுடன் நமக்கு ஒரு இன்ப அதிச்சி காத்திருந்தது. கவிஞர் கடிவேலுவிடமிருந்து ஒரு SMS வந்திருந்தது. அதில் அவர், நம்மை ஆபீஸில் வந்து சந்திக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் சீக்கிரமே ரெடியாகி ஆபீசுக்குக் கிளம்பினோம். நாம் ஆபீசுக்கு சென்று அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் கவிஞர் அங்கே ஆஜரானார்.

கவிஞரை நேரில் பார்த்தவுடன் நாம் கொஞ்ச நேரம் அசைவற்று அப்படியே பிரமை பிடித்தாற்போல் நின்றுவிட்டோம். காரணம் கவிஞரின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம்தான். கவியரசு கண்ணதாசன் போல் இரட்டை நாடி சரீரத்துடன் கம்பீரமாக இருந்த நம் கவிஞர் கடிவேலு இப்போது மிகவும் உடல் இளைத்து முகமெல்லாம் சப்பையாகி ஒரு சின்னப் பையனைப் போல் காணப்பட்டார். நம்முடைய திகைப்பைக் கண்டு கவிஞர் புன்முறுவல் செய்தார்..

என்ன கவிஞரே, என்ன இது கோலம்? உமது உடம்புக்கு என்ன ஆயிற்று?” என்றோம் பதட்டமாக. அதைக் கேட்டு கவிஞர் சிரித்தார்.

என் உடம்புக்கு ஒன்றுமில்லை. நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்றார்.

பிறகு உமது உருவத்தில் ஏன் இத்தகைய மாற்றம்? மிகவும் இளைத்து விட்டீரே!” என்றோம் ஆச்சரியமாக.

ஆமாம். என்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் உடல் எடையைக் குறைத்திருக்கிறேன்” என்றார் கவிஞர்.

“உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடல் எடையைக் குறைத்தீரா? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம் ஆவலாக.

எந்த ஒரு மனிதனுக்கும் அவனுடைய ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கும், அதனால் நோய்கள் உருவாவதற்கும் அவனுடைய உடலின் அதிக எடை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது ஒருநாளைக்கு அவனுக்கு எவ்வளவு கலோரி தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் நாம் ருசிக்காகவோ, விழிப்புணர்வு இல்லாமலோ அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும்போது, அந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகிறது. அதனால் உடல் எடை அதிகமாகிறது” என்றார்.

நம்முடைய உடல் எடை சரியான் அளவில் இருக்கிறதா அல்லது அதிகப்படியாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டோம்.

அதற்கு ஒரு கணக்கியல் அளவீடு முறை இருக்கிறது. அதை BMI என்றூ சொல்வார்கள். அதாவது உங்கள் எடையை உங்கள் உயரத்தால் வகுக்கும் முறை” என்றார்.

அதை எப்படி கணக்கிடுவது? ஒரு உதாரணத்துடன் விளக்கவும்” என்றோம்.

உமது எடை எவ்வளவு?

85 கிலோ

“உமது உயரம் எவ்வளவு?”

ஐந்தடி ஐந்தங்குலம்

ஐந்தடி ஐந்தங்குலம் என்பது மீட்டரில் கணக்கிட்டால் 1.65 ஆகும்.

இதோ அந்த ஃபார்முலா

 BMI = உங்கள் எடை (கிலோ) / உங்கள் உயரம் x உயரம் (மீட்டர்)

இந்த ஃபார்முலாவின்படி

உம்முடைய BMI    =   8 5 / (1.65*1.65)    =        31.22

அதாவது நீர் மிக அதிகமான உடல் எடையுடன் இருக்கிறீர்” என்றார்.

நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. “எப்படி சொல்கிறீர்?” என்றோம்.

BMI என்பது 20 க்கு கீழே இருந்தால் உடல் எடை மிகவும் குறைவு

       20 இலிருந்து 25 வரை இருந்தால் சரியான அளவு

       25 இலிருந்து 30 வரை இருந்தால் அதிக எடை

       30 க்கு மேலிருந்தால் மிக அதிக எடை என்று சொல்லலாம்” என்றார்.

அப்படியானால் நான் எவ்வளவு எடை குறைக்க வேண்டும்?

குறைந்தபட்சம் உமது BMI எண் 25 ஆக இருக்க வேண்டும் என்றால் உமது எடை 68 கிலோவாக இருக்க வேண்டும். அதாவது இன்னும் 17 கிலோ நீர் எடை குறைய வேண்டும்” என்றார் கவிஞர்.

பதினேழு கிலோ குறைக்க வேண்டுமா? ஒரு வேளை சாப்பாட்டைக் குறைத்தால் அந்த எடை குறைந்து விடுமா?” என்று கேட்டோம்.

நீர் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைத்தால் அது உமது ஆரோக்கியத்துக்கே கேடாக முடியும். சாப்பாட்டைக் குறைத்தால் உமக்கு நிறையப் பிரச்சினைகள்தான் ஏற்படும்” என்றார்.

பிறகு எப்படித்தான் எடையைக் குறைப்பது? நீர் எப்படி உமது எடையைக் குறைத்தீர்?” என்றோம் ஆவலாக.

கவிஞர் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தாலும், மிகவும் நீளமாக இருப்பதால் அதனை அடுத்த இடுகையில் தொடர்கிறோம்.

ஆமாம்! நம்பிக்கைதான் வாழ்க்கை! – பகுதி 3

3 செப்

சென்ற இடுகையில் உடலில் எப்படி சக்தி கிடைக்கிறது என்பது பற்றியும், உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும்போது, ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்ற குறைபாடுள்ள அணுக்கள் உருவாவது பற்றியும், அவை ஆபத்தானவை என்றும், அவற்றை சரி செய்ய வைட்டமின் C யும், வைட்டமின் E யும் அவசியம் தேவை என்றும் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“ஃப்ரீ ராடிக்கல்ஸை சரி செய்ய வைட்டமின் C யும், வைட்டமின் E யும் அவசியம் தேவை என்று சொன்னீர். அதன் மூலமாகவே நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விட முடியுமா?” என்று கேட்டேன்.

“வைட்டமின் C யும், E யும் (Antioxidants என்று சொல்வார்கள்) மட்டுமல்ல, நோயின் காரணமாக நோயாளியின் பெரும்பாலான செல்கள் சிதைந்திருக்கும்; பாதிப்படைந்திருக்கும் அந்த செல்கள் சரியாவதற்கு புரதம் தேவை. புது செல்கள் உருவாவதற்கும் இன்னும் பல வகையான செயல்பாடுகளுக்கும் புரதம் அவசியம் தேவை. அத்தோடு இன்னும் சில B வகை வைட்டமின்களும், இரும்பு, மக்னீஷியம் போன்ற தாதுச் சத்துக்களும் தேவை. அதனால் புரதமும், பதிமூன்று வைட்டமின்களும், பதினோரு வகை தாதுச் சத்துக்களும் அடங்கிய துணை உணவும் சேர்த்துக் கொடுத்தேன்” என்றார் கவிஞர் கடிவேலு.

“உண்மையில் மிகவும் உபயோகமான தகவல்தான். இது நோயாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டுமா? அல்லது எல்லோரும் சாப்பிடலாமா?” என்று கேட்டேன்.

“நல்ல ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களும் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது பெரும்பான்மையான நோய்கள் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்” என்றார்.

அத்துடன் தொடர்ந்து, “புற்று நோயைத் தடுப்பதில் கிரீன் டீ (Green Tea) யும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

“அப்படியா? அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லும். தெரிந்து கொள்கிறோம்” என்றேன்.

“கிரீன் டீ பல வகைகளில் நன்மை புரிகிறது. ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாகாமல் தடுக்கிறது. வயதான தோற்றத்தைக் கொடுப்பதும் இந்த ஃப்ரீ ராடிக்கல்ஸ் தான். எனவே கிரீன் டீயை நாம் சேர்த்துக் கொள்ளும்போது இளமைத் தோற்றம் பாதுகாக்கப் படுகிறது. அத்துடன் கொலஸ்ட்ராலை குறைப்பதிலும், இரத்த அழுத்தத்தை சீர் செய்வதிலும் உடல் எடையைக் குறைப்பதிலும் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

“பரவாயில்லையே, அதிகமான உடல் எடைதானே பல நோய்களுக்குக் காரணம்” என்றோம்.

“ஆமாம். நான் சிபாரிசு செய்யும் நியூட்ரிலைட் கம்பெனியில் கிரீன் டீ கலந்த புரதமும் (Protein with Green Tea) ஒரு துணை உணவாகக் கிடைக்கிறது. இதனால் எற்படும் பயன்கள் மிக அதிகம்” என்றார்.

“இதெல்லாம் மருந்துக் கடையில் கிடைக்குமா? இல்லையென்றால் வேறு எங்கு கிடைக்கும்?” என்றோம்.

“மருந்துக் கடையில் பெரும்பாலும் இரசாயணங்களினால் ஆன மருந்துகள் மட்டுமே கிடைக்கும். ஒரு சில இடங்களில் துணை உணவுகளும் கிடைக்கலாம். ஆனால் அவை நல்ல தரமான துணை உணவுகள்தானா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான துணை உணவுகள்கூட செயற்கையான இரசாயணங்களினால் உற்பத்தி செய்யப் படுகிறது. ஆனால் நான் சிபாரிசு செய்வது நியூட்ரிலைட் (Nutrilite) எனப்படும் 75 வருடங்களுக்கு மேலான பாரம்பரியமும், நல்ல அனுபவமும், தரமும் உள்ள கம்பெனியின் தயாரிப்புக்கள்தான். இவை என்னைப் போன்ற வினியோகஸ்தர்களிடம் கிடைக்கும்” என்றார்.

“அப்படி என்ன அதில் தனித்தன்மை உள்ளது?” என்று கேட்டேன்.

“அந்தக் கம்பெனியின் அனுபவம் முக்கியமானது. நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு, பல கட்டங்களாக சோதனை செய்து, ஒவ்வொரு தயாரிப்பும் வெளி வருகிறது. அத்துடன் தங்கள் சொந்த நிலத்தில் தாவரங்களை விளைவித்து, அதிலிருந்து நவீன கருவிகளைக் கொண்டு சுகாதாரமான முறையில், தாவர உயிர்ச்சத்துக்களின் சேதாரமின்றி அறுவடை செய்து, தரமான முறையில் துணை உணவுகளை உற்பத்தி செய்கிறார்கள். பயிர் செய்வதிலிருந்து அறுவடை வரை எந்தவித செயற்கையான இரசாயண உரங்களோ, பூச்சிக் கொல்லிகளோ பயன்படுத்தப் படுவதில்லை. ஆகவே அவை மிகவும் தரமானவையாக இருக்கின்றன” என்றார். கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் அதெல்லாம் உண்மைதான் என்று எப்படி நம்புவது?” என்றோம். நாம் கேட்டது நியாயம்தானே? ஒவ்வொருவரும் தங்களுடைய தயாரிப்புகளைப் பற்றி பெருமையாகத்தானே சொல்வார்கள்.

“நீர் இப்படி கேட்பீர் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கைதான் வாழ்க்கை” என்றார்.

“அப்படிப் பார்த்தால் எல்லோரையும்தான் நம்ப வேண்டி வரும். நம்பினால்தான் வாழ்க்கை என்றால், எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? நல்லவர்களை நம்பினால் கெடுதல் இல்லை. ஆனால் கெட்டவர்களை நம்பினால் மோசமாக அல்லவா போய்விடும்?” என்றேன்.

“நல்லவர்கள் யார், நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் யார் என்று தரம் பிரித்து பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கெட்டவர்களை நம்பி மோசம் போகவும் வாய்ப்பிருக்கிறது. உண்மையாய் இருப்பவர்களுக்கும், உண்மை போல் நடிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் ஆண்டவன் நமக்கு சிந்திக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறான். அது பற்றி நான் எழுதிய இந்தக் கவிதையைப் படித்துப் பாரும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார் கவிஞர்.

“கவிஞரே, நேரத்தைப் பல மடங்காக பெருக்குவது எப்படி? என்பதைப் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே! அதற்குத்தானே இவ்வளவு நாட்களாகக் காத்திருக்கிறோம்” என்றேன்.

“மறக்கவில்லை. கட்டாயம் சொல்கிறேன். நாளை வரை பொறுத்திடுக” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நமக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், கவிஞர் விளக்கிய ஃப்ரீ ராடிக்கல்ஸ், புற்று நோய் மற்றும் உடல் எடை குறைப்பு பற்றிய விஷயங்களே இன்று நமக்கு போதுமானதாக இருந்ததால், நாளை வரை காத்திருப்பதை நாம் பெரிதாக நினைக்கவில்லை.

அத்தோடு கவிதை ஒன்றையும் கொடுத்திருக்கிறார் அல்லவா? அதையாவது படிக்கலாம் என்று பிரித்தேன். அதைப் படித்துப் பார்த்தபோது நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி சில விஷயங்களைச் சொல்லியிருந்தார் கவிஞர். அது நாம் கேட்ட கேள்விக்கான பதிலாக மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும், நட்புக்கும் ஏன் வியாபாரத்திற்கும் கூட மிகவும் அவசியமான ஒரு கருத்து என்பது புரிந்தது. கவிதையைப் படித்த பின் கவிஞர் மீதும் நமக்கு நம்பிக்கை வந்தது.

இந்த இடுகையும் நீளம் அதிகமானதால், அந்தக் கவிதை அடுத்த இடுகையில் இடம்பெறும்!

தங்களது கருத்துக்களை, இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் இருந்து மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் சரி, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றை கவனத்தில் கொண்டு சரியான கருத்துக்களை ஏற்று பதிவேற்றுவதில் மகிழ்ச்சியடைவோம்.

உங்கள் இதயத்தை ரசியுங்கள்

27 டிசம்பர்

உங்கள் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புக்களில் ஒன்று இதயம். இது உங்கள் உடலின் செயல்பாட்டுக்கு மிக மிக அவசியம். இது இரத்தத்தை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பி அந்த உறுப்புக்க்ளின் வளர்சிதை மாற்றத்திற்கும் உடலில் சக்தி உருவாக்குவதற்கும் உதவுகிறது.

நாம் பிறந்த்திலிருந்து கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் வேலை செய்வது இதயம். நாம் ஒரு பொருளை தூக்குகிறோம். அல்லது ஒரு உடற்பயிற்சி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு நேரம் அதை தொடர்ந்து செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொஞ்சமாவது ஒய்வு எடுத்தால்தான் அதை தொடர்ந்து செய்ய முடியும் அல்லவா?

ஆனால் தொடந்து வேலை செய்து கொண்டிருக்கும் நமது இதயம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின் வேலை செய்யலாம் என்று முடிவெடுத்தால், நம் கதி என்னவாகும்? அவ்வாறு ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் நமது இதயத்தை என்றாவது நன்றியுடன் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அல்லது அதன் மீது அன்பு காட்டியிருக்கிறோமா?

அதன் மீது அன்புதான் காட்டவில்லை, அல்லது நன்றியுடன் நினைத்தும் பார்க்கவில்லை. அதற்கு, மேலும் கடினமாக வேலை கொடுக்காமல், கஷ்டப் படுத்தாமலாவது இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. இப்படிப் பட்ட ஒரு அற்புதமான உறுப்புக்கு ஓவர் லோடு கொடுக்கிறோம். எப்படியென்றால் அதிகப் படியான கொழுப்பு சத்தை சாப்பிட்டு சாப்பிட்டு ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பதற்கு வழி பண்ணுகிறோம். உடல் பருமனை அதிகமாக்கி, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ரத்தத்தைச் செலுத்த வேண்டி இதயத்தை அதிகமாக வேலை செய்யத் தூண்டுகிறோம்.

அது வாய் பேச முடியாமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு தன்னால் முடிந்த வரை வேலை செய்கிறது. முடியாத பட்சத்தில் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. ஆம். கனவான்களே! அது இயக்கத்தை நிறுத்தி விட்டால் பிறகு நீங்களும் இருக்க முடியாது. அதனால் வாய் மூடி மௌனமாக தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் இதயத்தை ரசியுங்கள். நன்றி சொல்லுங்கள். அதை தொந்திரவு பண்ணாமல், அதிக பளுவுள்ள வேலையைக் கொடுக்காமல் உங்கள் இதயத்தை சந்தோஷப் படுத்துங்கள்.

உங்கள் உடல் எடையை சரியான BMI க்கு தகுந்தாற்போல் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் உதவி செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெறுங்கள். அது உங்கள் இதயத்தைக் குளிர்விக்கும். எனவே தினமும் உங்கள் இதயத்தை ரசியுங்கள். நன்றி சொல்லுங்கள்.

BMI பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள, palanis11(a)ymail.com இல் தொடர்பு கொள்ளுங்கள்.