Tag Archives: போட்டி

அப்பாவின் பெண் – நாவல்

14 நவ்

ஒரு ஆண் முதன் முதலாக ஒரு பெண்ணை பார்க்கும்போது அவளுடைய அழகைத்தான் முதலில் ரசிக்கிறான். அவளுடன் பேசிப்பழக வாய்ப்புக் கிடைக்காதா என்று தவிக்கிறான். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுகிறான். அவளுடன் பேசி விட்டால் உலகமே தன் காலடியில் வந்து விட்டதுபோல நினைக்கிறான். ஆனால் அந்த ஈர்ப்பு தற்காலிகமானது தான்.

அவளிடம் ஏதோ ஒAppavinருவகையில் தனக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டால் அவளின் மீது உள்ள ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்க முடிந்தால் அந்தப்பெண் பேரழகியாக கருதப்படுகிறாள். அதற்கு கிளியோபாட்ரா சிறந்த உதாராணம்.

ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை முதலில் பார்க்கும் போது அவள் நிலைப்பாடே வேறு. அவன் அழகாய் இருப்பதை விடத் தனக்குப் பாதுகாப்பாக இருப்பானா, தன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வானா, தான் எது சொன்னாலும் செய்து முடிப்பானா, தன்னைக் கஷ்டப்படுத்தாமல் நடத்துவானா தன்னை ஒரு மகாராணியாக ஆக்குவானா அல்லது அதுபோல் நடத்தவாவது செய்வானா என்று பலவிதமாக ஆராய்கிறாள். அவனைப் பலவிதமாகச் சோதிக்கிறாள். அவன் சரியானவன் என்று தோன்றினால் அவனை எத்தனை முடியுமோ அந்தளவுக்கு உயர்த்துகிறாள், தன்னை மோசம் செய்கிறான் என்று உணர்ந்தாள் அவன் எழ முடியாத அளவுக்கு வீழ்த்துகிறாள்.
மாவீரன் ஜூலியஸ் சீசர் எகிப்தின் பேரழகி கிளியோபாட்ராவிடம் மயங்கியதற்கும், ஆனால் அவள் ஜூலியஸ் சீசரைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியில் அமர்ந்ததற்கும் இந்த மாறுபட்ட குணங்களே காரணம். ஜூலியஸ் சீசர் மறைந்த பின் மார்க் ஆண்டனியை தன் வலையில் கிளியோபாட்ரா சிக்க வைத்ததற்கும் அதுவே காரணம்.

ஒரு அழகான பெண் தன்னை கடற்கரையில் வந்து சந்திக்கவும் என்று அழைத்தால் ஒரு இளைஞனுக்கு மகிழ்ச்சியாக இருக்கத்தானே செய்யும். ஆனால் அங்கு அவன் சந்திக்கும் பெண் வேறாக, குடிப்பழக்கம் உள்ளவளாக இருக்கிறாள். அவளைத் திருத்தி நல்ல பெண்ணாக மாற்றும் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் அப்பாவே அந்த வாய்ப்பைத் தருகிறார். ஆனால் அவர் எதிபாராத விஷயம் அங்கு நடக்கிறது.
கடற்கரையில் ஒரு அழகான பெண்ணும் இளைஞனும் அடிக்கடி சந்தித்தால் காதல் வருவது இயற்கைதானே. அந்தக் காதலுக்கு அவளது அப்பாவிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

இது ஒரு மெல்லிய காதல் கதை. அப்பாவின் பெண் என்ற தலைப்பு கொஞ்சம் வித்தியாசமானது. அப்பாவிப் பெண் என்பதும் அதில் மறைந்திருக்கிறது. அப்பாவின் பெண்ணாக இருக்கும் ஒரு பெண்ணை அப்பாவிப் பெண் என்று நினைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. பெண் என்பவள் சக்தியின் வடிவம் அல்லவா?.

முன்பு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆண்களுக்கு முன்னால் வரக்கூடாது. கல்வி அறிவு பெறக்கூடாது என்றெல்லாம் நடைமுறை இருந்தது. மகாகவி பாரதியும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாடினான்.
ஆனால் இன்றுள்ள பெண்கள் நிறையவே மாறியிருக்கிறார்கள். ஆண்களுக்கு சமமாக நடைபோடுகிறார்கள். கல்வியிலும், அரசியலிலும், தொழில் வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் ஆணுக்கு நிகராக பங்காற்றுகிறார்கள்.

என்றாலும் இன்னும் நம் நாட்டில் ஒரு பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் புத்திசாலியாய் இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையைத்தானே சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம்.
பெற்றோர்களின் நிர்ப்பந்தம் மற்றும் அவர்கள் மீதுள்ள பாசம், சொந்தக்காலில் நிற்க முடியாமல் இருக்கும் பொருளாதார நிலைமை ஆகியவற்றால் தனது விருப்பத்தையும் ஆசைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்பின் தெரியாத யாரோ ஒருவனுக்கு வாழ்க்கைப் படுகிறாள்.
அப்படி ஒரு சூழ்நிலை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஒரு பெண் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள். பிறகு எப்படித் தன் வாழ்க்கையைத் தானே நிர்மாணிக்கிறாள் என்பதுதான் இந்தக் கதை சொல்லும் செய்தி. அப்பாவின் பெண்ணாக இருப்பதில் தவறில்லை ஆனால் அப்பாவிப் பெண்ணாக இருக்கக்கூடாது என்பதைத்தான் இந்தக் கதையின் நாயகி வந்தனாவின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.
பெண்ணின் சக்தி மகத்தானது. அதை ஆராதிக்கத் தவறினால் பாதிப்பு அந்தப் பெண்ணுக்கல்ல என்று வாழ்ந்து காட்டுகிறது வந்தனாவின் பாத்திரப்படைப்பு. எல்லாம் விதி, தன் தலையெழுத்துப்படி நடக்கட்டும் என்று முடங்கி விடாமல் தன்னுடைய ஆளுமையால் தன் சுதந்திரத்தைத் தானே கட்டமைத்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரம் வந்தனா.

இந்த நாவல் இப்போது அமேசானில் கிடைக்கிறது.

இங்கே சொடுக்கி வந்தனாவைச் சந்தியுங்கள்.

நகைச்சுவை நாடகம்

17 செப்

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் நாட்டில் அவ்வப்போது உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றைக் குணப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்களின் நோய் தீர்க்கும் புனிதமான பணியில் டாக்டர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் எனக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஒருவேளை மக்கள் எல்லோரும் கவலையின்றி, மகிழ்ச்சியாக, நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழும் ஒரு நிலை வந்தால் (அப்படி ஒரு நிலை வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும்) எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
அதன் விளைவாக உதித்ததே இந்த நகைச்சுவை நாடகம்.

Clinic - 4a

நோயாளிகளை எதிபார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் டாக்டரின் கிளினிக்கில் ஒரு நாள் திருடன் புகுந்து விடுகிறான். அவனைத் தேடி போலீஸ் வருகிறது. அப்போது என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக நடத்திச் செல்கிறது இந்த மேடை நாடகம்.
ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அமேசான் தளம் நடத்தும் pen to publish 2019 என்ற போட்டிக்காக எழுதியது.

புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களது ரிவ்யூவை அமேசான் தளத்தில் தெரிவியுங்கள்

வீணையும் பெண்ணும் – சிலேடை

5 ஆக
படக்கவிதைப் போட்டி - 24

படக்கவிதைப் போட்டி – 24

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-24 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்

வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்

வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்

நல்லதோர் வீணையாம் பெண்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

பறவைகள் காணும் அதிசயம்!

17 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 21

படக்கவிதைப் போட்டி – 21

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-21 க்கு நாம் அனுப்பிய கவிதை.

குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு

சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை

காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்

கூட்டமாய் வந்தது பார்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அரசனுக்கு இது முறைதானோ?

10 ஜூலை
படக்கவிதைப் போட்டி-20

படக்கவிதைப் போட்டி-20

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-20 க்கு நாம் அனுப்பிய கவிதை.

அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
       அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
       உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
       இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க 
சிறுமுயலை கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
       செயல்தான் முறையாமோ சொல்லேன்?

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி கவிதைக்குப் பாராட்டு

6 ஜூலை

சென்ற வாரம் வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டி – 19 க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அதில் நாம் அனுப்பி இருந்த அணியாத முகமூடி ஜாக்கிரதை என்ற தலைப்பிலான கவிதை, இரண்டாவது இடத்துக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப் பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நாம் அனுப்பிய கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி ஜாக்கிரதை!

3 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 19

படக்கவிதைப் போட்டி – 19

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-19 க்கு நாம் அனுப்பிய கவிதை.

விதவிதமாய் மனிதர்தாம் நம்மிடையே இருக்கின்றார்;

     விசித்திரமாய் நாய்புலிமான் சிங்கம் நரியாக

நிதமொரு விதமான விலங்காக வலம்வந்தே

     நடமாடித் திரிகின்றார்; மனிதமுக(மே) முகமூடி!

முதலையாய் கடித்துயானை சாய்த்திடுவார்; விழுங்கும்

     மலைப்பாம்பாய் மாறிடுவார்; நன்மைதான் செய்து

உதவுகின்ற சாக்கில் உறவாடித் திரிந்திடுவார்;

     உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!

 

பழகும் விதத்தில் பார்க்கும் திறத்தில்

     பக்குவம் அறிந்து உணர்ந்து கொள்வீர்

அழகான முகத்தில் அணியாத முகமூடி

     அரவமா கொக்கா ஆளையே விழுங்கும்

கழுகா சிங்கமா நரியாஎன் றேஅறிந்து

     கணித்து அதற்கேற்ப முகமூடி அணிந்திடுவீர்

வழுவாது இக்கருத்து; அதுவிடுத்து புலியின்முன்

     வந்தமான் படும்பாடு யாவரும் அறிவரே!

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

மாபெரும் கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை…

30 ஜூன்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இணையத் தமிழே இனி! என்ற தலைப்பில்

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய 

மாபெரும் கவிதைப் போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றவர்கள்

வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை…

 

இணையத் தமிழே இனி
அற்புதமாய் ஓர்உலகம் நாம்படைப்போம் அங்கு
       அனைத்துவகை மக்களுமே தானிருப்பர்
சிற்பியவன் தான்செதுக்கும் சிற்பம்போல் மக்கள்
       சிறப்புடனே வாழ்ந்திடவே செய்திடுவோம்
உற்சாகம் பொங்குகின்ற உன்னதவாழ்க் கையை
       உலகத்தோர் பெற்றிடவே ஒத்துழைப்போம்
பொற்காலம் என்றதனை பிற்கால சரிதம்
       போற்றிடவே ஏற்பாடுநாம் செய்திடுவோம்

 

தற்பெருமை பேசிடஓர் ஆளுமில்லை எங்கும்
       தவறான பேர்வழியாய் யாருமில்லை
தற்குறிதான் ஊரிலில்லை லஞ்சமில்லை எங்கும்
       தர்மமிகு வாழ்க்கைதான் எங்கெங்கும்
பிற்காலச் சந்ததிகள் யாவருக்கும் அங்கே
       பிறந்தாலே பெருமைதான் என்றிருக்கும்
உற்பாதம் ஏற்படுத்த யாருமில்லை என்ற
       உண்மையே எங்கேயும் நின்றிருக்கும்

 

கற்பதற்கு மூலமாகத் தீந்தமிழ்தான் கணினி
       கையாள தேவையும் அம்மொழிதான்
பற்பலவாய் எத்தனையோ மொழியிருந்தும் பலரும்
       படித்திடவே ஏங்குவது தமிழாகும்
அற்புதமாய் விஞ்ஞானக் கருத்தெல்லாம் நல்ல
      அழகான தமிழிலேதான் அமைந்திருக்கும்
நற்காலம் வருகுதென்று நாமுரைப்போம் இனிமேல்
      நாமிணையச் செய்யும்இன் பத்தமிழே

 

 

புதிய சிந்தனைக்குப் பாராட்டு

29 ஜூன்

படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

வல்லமை மின்னிதழ் நடத்தும் இந்தப் போட்டிக்கு நாம் அனுப்பி வைத்த கவிதை பாராட்டுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதோ போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

…………………

…………………

அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
       மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
       இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
       தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
       தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

 

வல்லமைக்கும், போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி!

கைகாட்டியாய் தடுக்கும் மரக்கிளை

26 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 18

படக்கவிதைப் போட்டி – 18

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-18 க்கு நாம் அனுப்பிய கவிதை.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை

     மனத்தால் மதமும் மதத்தால் இனமும்

இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்

     இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்

தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே

     தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ

தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட

     தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

நன்றி: வல்லமை மின்னிதழ்