Tag Archives: அஞ்சலி

சோதனையான ஆண்டு 2020

1 ஆக

இந்த ஆண்டு ஆரம்பிக்கும்போது, இது எனக்கு சோதனையான ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஆரம்பமே அப்படித்தான் அமைந்தது. ஜனவரி மாதம் 2ஆம் தேதி, ஊரிலிருந்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது. உடனே கிளம்பி மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மதுரைக்கு சென்று சேர்ந்தேன். அம்மாவை படுத்த படுக்கையாகக் காணும் போதே என் இதயம் நொறுங்கி விட்டது.

அம்மாவுக்கு வயது எண்பதை நெருங்கி விட்டாலும் கடைசி வரை தானே எல்லா வேலைகளையும் செய்து வந்தார்கள். சர்க்கரை வியாதியோ, ரத்த அழுத்தமோ அல்லது வேறு எந்த விதமான நோயுமோ இல்லை. எப்பொழுதாவது உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போய் காண்பித்து ஊசி போட்டு விட்டு வந்தேன். இப்பொழுது பரவாயில்லை என்று போன் செய்வார்கள்.

பேங்கில் போய் பணம் எடுப்பது, போடுவது எல்லாம் தானே செய்து கொண்டார்கள். கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்க மாட்டார்கள். வீட்டில் ஓரிடத்தில் விரிசல் இருந்தது, சிமெண்ட் வாங்கி வந்து மணலில் குழைத்து நானே பூசி விட்டேன் என்பார்கள்.

அதையெல்லாம் நீங்கள் ஏன் செய்கிறீர்கள், யாரிடமாவது சொல்லி பணத்தைக் கொடுத்தால் அவர்கள் செய்து கொடுத்து விடுவார்களே என்று சொன்னால், இதெற்கெல்லாம் போய் எதுக்கு யாரையும் கூப்பிடணும் என்பார்கள்.

கிராமத்து வீட்டில், மாடியில்தான் சமையலறை, படுக்கையறை எல்லாமே. தண்ணீர் தேவைக்காக மட்டும் தினமும் கீழே வந்து மோட்டார் போடுவது வழக்கம். தினமும் படிகளில் ஏறி இறங்கி அதுவரை சுறுசுறுப்பாகவே நடமாடிக்கொண்டு இருந்தார்கள்.

மதுரையில் உள்ள என் தங்கை தினமும் காலை 8.30 மணிக்கு அம்மாவிடம் பேசி விடுவது வழக்கம். வேலைகளை முடித்து விட்டு சரியாக 8.30 மணிக்கு போனை எதிர்பார்த்து அம்மா காத்துக் கொண்டிருப்பார்களாம். ஐந்து நிமிடம் தாமதமானால் கூட இந்தப் பெண்ணைப் பாரேன் இன்னும் போன் போடவில்லையே என்று அங்கலாய்பார்களாம்.

அம்மா அந்தக் கிராமத்திலேயே ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். வீடு வாசல், சொத்து சுகம் என்று அந்த ஊரிலேயே அதிக வசதி உள்ள பெரிய தனக்காரர் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தவர்கள். செல்வாக்கோடு வளர்ந்தவர்கள்.

அப்பாவும் அந்த ஊர்தான். ஆனால் அம்மா குடும்பத்தை விட வசதியில் குறைவு. என்றாலும் அந்த ஊரிலும், சுற்றி உள்ள கிராமங்களிலும் பேரும் புகழும் பெற்ற திறமையான வியாபாரி. வசதி படைத்தவர்கள் எத்தனையோ பேர் பெண் கேட்டு வந்தாலும், அப்பாவைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி விட்டார்களாம்.

அவர்கள் இருவரும் அந்த ஊரில் வாழ்ந்த சிறப்பான வாழ்க்கையைப் பற்றி அந்த ஊரில் உள்ள என்னுடைய பால்ய சினேகிதன் இன்றும் சொல்வான். அப்பா இறந்த அன்று ஒருவர் பாக்கியில்லாமல் ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அதன் பிறகு இருபது வருடம் அம்மா தனியே வாழ்ந்திருக்கிறார்கள்.

அப்பா இறந்த பிறகு என்னுடன் வந்து ஒரு சில வருடங்கள் இருந்தார்கள். அவ்வளவுதான். மற்றபடி கிராமம்தான் அவர்கள் இருக்க விரும்புவது. நானும் என் தங்கையும் அம்மா சொன்ன சொல்லை கடைசி வரை தட்டியதில்லை. கிராமத்தில் இருந்தாலும் என் வீட்டிலும், தங்கை வீட்டிலும் அவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது.

கிராமத்தில் அப்படி சுறுசுறுப்பாக இருந்த காரணத்திலோ என்னவோ சென்னையில் வந்து என்னுடன் இருக்கச் சொல்லி பலமுறை கேட்டும் மறுத்து விட்டார்கள். இங்கு கதவைப் பூட்டிக் கொண்டு நம் ஃபிளாட்டுக்குள்ளேயே முடங்கி விடுவது தானே வழக்கம். அது அவர்களால் முடியவில்லை. டிவியை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

சென்னைக்கு வந்தாலும் எப்போது ஊருக்கு கிளம்புவோம் என்று பரிதவிப்பார்கள். மதுரையில் வந்து கொஞ்ச நாள் உடன் தங்கியிருக்குமாறு தங்கை அழைத்தாலும் ஒத்துக் கொள்வதில்லை. மதுரைக்குச் சென்றால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அவ்வளவுதான். பிறகு ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.

அப்படிப்பட்ட அம்மாவா இது, இப்படி நினைவில்லாமல் படுத்திருப்பது என்று நினைத்தால் என்னால் நம்ப முடியவில்லை. தங்கை ஊருக்குச் சென்றிருந்த போது, கை வலிக்கிறது, தூக்க முடியவில்லை என்று சொன்னதால் மதுரைக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்து இருக்கிறார்கள்.

டாக்டர் குளுக்கோஸ் ஏற்றி, மாத்திரையும் டானிக்கும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு இரண்டு நாள் நன்றாக இருந்திருக்கிறார்கள். எழுந்து நடமாட ஆரம்பித்ததுமே ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாள் இருந்து விட்டுப் போகலாம் என்று சொல்லியும் கேட்கவில்லையாம்.

சரி அடுத்த நாள் ஊருக்குப் போகலாம் என்று தங்கை வற்புறுத்தியதால் அன்று இருந்திருக்கிறார்கள். ஆனால் அன்று இரவே உடம்பு முடியாமல் போய் விட்டதாம். மறுநாள் ஏதாவது பேசினால் பதில் சொல்ல சிரமப்படுவதைப் பார்த்து, எனக்கு போன் செய்திருக்கிறார்கள்.

மீண்டும் அவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு பேச்சு வரவில்லை, சிகிச்சை செய்தாலும் உடம்பு தாங்காது என்று சொல்லி விட்டார். வெறும் திரவ உணவை மட்டுமே ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க முடிந்தது.

அம்மா என்று கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஆனால் பார்வையில் கூர்மை இருக்காது. நாம் பேசுவது அவர்களுக்கு புரிகிறது என்று தோன்றியது. அதனால் சாப்பிட ஏதாவது கொடுக்கட்டுமா என்று கேட்டு அவர்கள் பேசாமல் இருந்தால், கொடுத்தால் சாப்பிடுவார்கள். இல்லையென்றால் கையை லேசாக அசைத்து வேண்டாம் என்று உணர்த்துவார்கள்.

ஆனாலும் ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் உள் மனதில் இருந்திருக்கிறது. அதை அவரால் சொல்ல முடியவில்லை. நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதன் பிறகு எதையும் சாப்பிட மறுத்து விட்டார்கள். விஷயம் தெரிந்து என் சித்தியும் (அம்மாவின் தங்கை), மற்ற உறவினர்களும் வந்து விட்டார்கள்.

இங்கே இருக்கப் பிடிக்கவில்லையோ என்று யோசித்து, ‘ஊருக்குப் போகணுமாக்கா’ என்று சித்தி கேட்டதற்கு மௌனம் காட்டினார்கள். ‘ஊருக்கு கூட்டிட்டுப் போறேம்மா, ஏதாவது சாப்பிடுங்கள். ஊருக்குப் போக தெம்பு வேண்டாமா’ என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டார்கள்.

ஊருக்கு அழைத்துச் சென்று, அப்பாவை கடைசியாக படுக்க வைத்திருந்த இடத்தில், அம்மாவை படுக்க வைத்தார்கள். அப்பொழுது அம்மா முகத்தில் அவ்வளவு மலர்ச்சியைப் பார்த்தேன். ஆனால் அடுத்த மூன்று நாட்களில் அம்மா இறந்து விட்டார்கள்.

என்னால் அந்த  துக்கத்தை தாங்க முடியவில்லை. எல்லாக் காரியங்களும் முடிந்து சென்னைக்கு வந்த பிறகும் வெகுநாட்களுக்கு அம்மா நினைவாகவே இருந்தது. எதிலும் மனம் ஒன்றவில்லை. நம்முடைய கடைசி காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் இதுபோல் நம்மால் இருக்க முடியுமா என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் தோன்றும்.

இந்த ஆண்டு நமக்கு மட்டுமே சரியில்லாத ஆண்டு என்ற எண்ணத்தில் இருந்தேன்.. ஆனால் இது உலகத்தில் உள்ள எல்லோருக்குமே சோதனையான ஆண்டு என்பது இந்த  கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவிய பிறகுதான் தெரிந்தது.