Tag Archives: இலட்சியம்

2019ம் வருடத்தின் நினைவுகள்

31 டிசம்பர்

இன்று காலையில் கம்ப்யூட்டரை ஆன் செய்து, ஈமெயிலை திறந்து பார்த்தபோது முதலாவதாக இந்த செய்தி வந்திருந்தது.

Another wonderful year is going to end. Remember all the good memories you have made. One more year is on the way to decorate your life with unlimited colours of joy. May the NEW YEAR bring you peace, prosperity, and good health.

Happy New Year 2020.

ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக இருந்து ரிட்டையர் ஆன ஒரு பெரிய மனிதர்  இதை அனுப்பி இருந்தார்.  அவருடைய வாழ்த்துக்கும் ஆசிக்கும் என்னுடைய பணிவான நன்றி.

இது இந்த வருடத்தின் கடைசி நாள். அவருடைய செய்தியில் இருப்பது போல் இந்த வருடம் நடந்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

இந்த வருடத்தில் சில புத்தகங்களை வாசித்தேன். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய அம்மா வந்தாள். ஜெயமோகன் எழுதிய இரவு, யானை டாக்டர், வணங்கான், அறம் சிறுகதைகள், சோற்றுக்கணக்கு, ரயிலில் போன்ற சில சிறுகதைகள், அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய அசங்கா சிறுகதை,  Claire Douglas எழுதிய The TEXT Short story, இன்னும் பல.

இந்த வருடம் ரசிப்பு வலைப்பூவில் வெண்பாக்கள் எழுதியிருக்கிறேன். இணையப் பத்திரிகைகள் எதற்கும் சிறுகதைகள் எழுதவில்லை. ஏற்கனவே எழுதி இருக்கும் சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக போடலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. அது விஷயமாக ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இளங்கோவன் என்று ஒருவரைப் பற்றி சொன்னார்.

இளங்கோவன் நிறைய பதிப்பகங்களோடு தொடர்பு உள்ளவர் என்று அவர் சொன்னதால், அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் குள்ளநரிக்கூட்டம் என்ற திரைப்படத்தில் அப்பாவாக நடித்தவர். நிறைய கவிதைகள் எழுதுவேன் என்று சொன்னார். சிலவற்றை வாசித்தும் காண்பித்தார்.

அவரிடம் நான் எழுதிய சிறுகதைகள் பற்றியும், பாரதியாரின் முடிவுறாத கதைக்கு எழுதிய ‘சந்திரிகையின் கதை தொடர்ச்சி’ பற்றியும் சொல்லி அவற்றை புத்தகங்களாக போடலாம் என்று நினைப்பதாகச் சொன்னேன். ஆனால் அவர் என்னுடைய நோக்கத்தை புரிந்து கொண்டதாகவோ, ஆர்வம் காட்டியதாகவோ எனக்கு தெரியவில்லை. இன்னொரு நாள் பேசலாம் என்றார்.

அதனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அமேசான் நடத்தும் கிண்டில் போட்டி பற்றி பேஸ்புக்கில் எழுத்தாளர் சி. சரவணகார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஒரு போஸ்ட் படித்தேன். அவருக்கு என்னுடைய நன்றி. அதற்கு முன்னால் அமேசான் பிரைம் மெம்பராக நான் இருந்தபோது கிண்டில் புத்தகங்களை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

அதனால் இப்பொழுது கிண்டிலில் எப்படி புத்தகங்கள் வெளியிடுவது என்பதைப்பற்றி அதிகமாக படித்து தெரிந்து கொண்டேன். அது பற்றி தெரிந்தவர்கள் யாரும் எனக்கு பழக்கம் இல்லாததால். நானே முயற்சி செய்து அது வெளியிடும் முறையை புரிந்து கொண்டேன். இன்னொரு வேடிக்கை வேறு ஒருவருக்கும் அவருடைய புத்தகம் கிண்டிலில் வெளியாக உதவி இருக்கிறேன்.

செப்டம்பர் மாதத்தில் முதன் முதலாக Inspire Yourself with real life stories என்ற பெயரில் ஒரு ஆங்கில புத்தகம் கிண்டிலில் வெளியிட்டேன்.

Inspire

புத்தகம் வெளியிடும் போது வரும் பிரச்சனைகள் என்ன, அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி எல்லாம் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அதே மாதத்தில் தொடர்ச்சியாக தமிழில் 5 புத்தகங்களை வெளியிட்டு வெளியிட்டேன்

வெற்றியின் ரகசியம், வாழ்க்கைத்தரம் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்பு புத்தகங்கள், சந்திரிகையின் கதை 2.0 ஒன்று, சும்மா ஊதுங்க பாஸ் என்ற நகைச்சுவை குறுநாவல் ஒன்று, பிறகு அமேசான் கிண்டில் நடத்தும் PENTOPUBLISH2019 போட்டிக்காக எழுதிய கிளினிக்கில் ஒருநாள் என்ற நகைச்சுவை நாடகம் புத்தகமும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டேன்.

Vetri-image Vazhkai  Summa-new Clinic - 4a Chandrigai

மேலும் அந்தப் போட்டிக்கு ஒரு நாவலை எழுதும் முயற்சியில் இறங்கி, ஒரு மாதகாலத்தில் அப்பாவின் பெண் என்ற நாவலையும் எழுதி முடித்து அதையும் கிண்டிலில் வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நாவல் அது.

Appavin

அதன் பிறகு கவிதைத் தொகுப்பாக, படங்களுக்கு ஏற்ற கவிதைகள் என்று அப்பாவின் அருமை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டேன். இப்போது அமேசான் கிண்டில் ஸ்டோரில் மொத்தமாக எட்டு புத்தகங்கள் இருக்கின்றன.

appavain arumai

சென்ற வருடம் என்னுடைய புத்தகங்கள் கிண்டிலில் வெளிவந்ததை என்னுடைய எழுத்து முயற்சியில் ஒரு படிக்கல்லாகவே நான் நினைக்கிறேன். இப்போது ஆங்கிலத்தில் ஒரு நாவலும், தமிழில் மூன்று புத்தகங்களும், பாதி எழுதிய நிலையில் இருக்கின்றன. 2020ம் வருடம் அந்தப் புத்தகங்கள் வெளியாகலாம்.

வரும் 2020ம் வருடம் தங்கள் அனைவருக்கும் தங்ககளுடைய கனவுகளை அடைய, குறிக்கோள்களை நிறைவேற்ற ஏற்ற வகையில் அனைத்தும் கிடைக்கும் சிறந்த வருடமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த வருடம் எல்லா வகையிலும் தங்களுக்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் வளத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன்

 

கனவு காணலாம் தவறில்லை

30 நவ்

தினமும் அமேசானில் கிடைக்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஏராளமான ரிவ்யூக்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். வெளியான நான்கைந்து நாட்களிலேயே இருபது முப்பது என்று ரிவ்யூக்கள் எகிறிக் கொண்டிருக்கும்.

அவற்றைப் படித்துப் பார்த்தால் எல்லாமே, அற்புதம், அருமை, புத்தகத்தை படிக்க ஆரம்பித்து கடைசி வரை நிறுத்தாமல் படித்தேன் என்ற ரீதியிலேயே ரிவ்யூக்கள் இருக்கும். பெரும்பாலும் எல்லாமே ஐந்து ஸ்டார்கள் கொண்டதாக இருக்கும்.

ஆனால் நாம் எழுதிய புத்தகத்துக்கு ரிவ்யூ எதுவும் வரவில்லையே என்று மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம் என்னைப் போல் இன்னும் சிலருக்கும் இருக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்.

நமக்குத் தெரிந்தவர்களிலும் புத்தகம் படிப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களும் பேஸ்புக்கில் நண்பர்களாக இருக்கிறார்களே என்று யோசித்து எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாள நண்பரிடம் என்னுடைய புத்தகம் E-Book ஆக கிடைக்கிறது என்று சொன்னேன்.

கண்டிப்பாக படித்து விட்டு உங்களுக்கு என் கருத்தை எழுதுகிறேன் என்று நான் கேட்காமலே சொன்னார். நான் அவரிடம் உங்கள் கருத்தை அமேசானில் எழுதுங்கள் என்றேன்.

கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணினார். அமேசான் அக்கவுண்டு பாஸ்வேர்டு மறந்து விட்டது என்றார். Forget Password ல் புது பாஸ்வேர்டு உண்டாக்கி உள்ளே செல்லலாம் என்றேன். மறுபடி ஒரு போன் அவரிடமிருந்து வந்தது புத்தகம் கிண்டிலில் டவுண்லோடு ஆகவில்லை என்று.

அதை எப்படி டவுண்லோடு செய்வது என்று தனக்குப் புரியவில்லை என்றார். அந்த வழிமுறையை போனில் சொல்லியும், அதன்படி செய்தாலும் வரவில்லை என்றார். கொஞ்சம் வயதானவர்களுக்கு டெக்னாலஜிகளைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பது போலத் தெரிகிறது.

சரி, யாராவது நமது புத்தகத்தை படித்து ரிவ்யூ செய்தால் செய்யட்டும் என்று விட்டு விட்டேன். இளைஞர்களை நமது ஃபேஸ்புக் பிரண்டு லிஸ்ட்டில் அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மற்றவர்களுக்கு ரிவ்யூக்கள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால் ஒரு திருப்பமாக அப்பாவின் பெண் புத்தகத்துக்கு ஒரு ரிவ்யூ வந்தது. அதில் ஐந்து ஸ்டாரெல்லாம் இல்லை. பெரிதாக பாராட்டும் இல்லை. பரவாயில்லை என்றுதான் அவர் எழுதி இருந்தார். ஆனால் அது மிகவும் உண்மையான கருத்தாக எனக்குப் பட்டது. மனதில் பட்டதை தயங்காமல் சொன்ன அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது போன்ற கருத்துக்கள் தான் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

இலக்கியத்தரம் வாய்ந்த #1 Best Seller என்று சொல்லப்படும் வகையில் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவுக்கு இது நிச்சயம் ஒரு தூண்டுதலாக அமையும் என்று கருதுகிறேன்.

அப்படி ஒரு புத்தகம் எப்போது வரும், என்ன தலைப்பு, என்ன மாதிரியான கதை அது அமேசானில் வருமா என்ற கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் இப்போது பதில் இல்லை.

என்னப்பா இது, If you ask your wish to the Universe it will give it to you, but that should be specific and in particular அப்படின்னு நீயே எங்கோ சொன்னதாக நினைவிருக்கிறதே என்று என் மனசாட்சி கேட்கிறது.

ஆனால் இப்போதைக்கு அது எனக்குத் தெரியவில்லை. அப்பாவின் பெண் புத்தகத்துக்கு கருத்து சொன்ன திரு. ஜோசப்பைப் போல என் மனதில் பட்டதைச் சொல்லி விட்டேன்.

Vetri-image

வெற்றியின் ரகசியம் என்ற என்னுடைய புத்தகத்தில் உள்ள சிறுகதைத் தொகுப்பில் அங்கீகாரம் என்ற தலைப்பில் உள்ள ஒரு சிறுகதையின் ஆரம்பத்தில்

சரித்திரத்தில் உன் பெயர் இடம் பெற வேண்டுமானால், அது உருவாகும் இடத்தில் நீ இருக்க வேண்டும் – ஒரு துரும்பு அளவிற்காவது”

என்ற வரிகள் வரும். அது போல நான் இப்போது ஒரு துரும்பு அளவிலாவது என்னுடைய பங்கை செலுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

நான் முந்தைய இடுகையில் குறிப்பிட்டது போல ரிவ்யூ எழுதிய திரு. ஜோசப் அவர்களுக்காக இந்த வெண்பா.
இச்சென்று ஒன்றுதந்தால் இன்பமாகும் உள்மனதில்
நிச்சயமாய் உண்மையே வெல்லுமென்று நச்சென்று
தன்கருத்தை நல்கினார் ஜோசப் அவர்கருத்து
என்கனவை நிச்சயிக்கத் தூண்டும்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்?

5 பிப்

உடல் இளைத்து சின்னப் பையன் போல் வந்த கவிஞர் கடிவேலுவைப் பார்த்து நாம் பிரமித்து நின்றோம் அல்லவா? காரணம் கேட்டதற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டி உடல் எடையைக் குறைத்ததாகச் சொன்னார். சரியான உடல் எடையைக் கணிப்பதற்கு ஒரு ஃபார்முலாவையும் சொன்னார். எப்படி அவருடைய உடல் எடையைக் குறைத்தார்? என்று ஆவலோடு கேட்டோம். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீர் முடிவெடுத்து விட்டால், அதன் பிறகு நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில இருக்கிறன. அவற்றைத் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

“என்னென்ன நடைமுறைகள்?”

“சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நேர்மறை மனோபாவம், சரியான தூக்கம் ஆகியவை. சீரான ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இவைதான் தேவை”

“சரிவிகித உணவுப் பழக்கம் என்றால் என்ன?”

“நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்துக்களும், புரதச்சத்துக்களும், விட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களும், மற்றும் நார்ச்சத்தும், கொழுப்புச் சத்தும் தேவையான விகித்த்தில் இருக்க வேண்டும். உடல் இளைக்க முயற்சி மேற்கொள்ளும் சமயங்களில் இந்த விகிதத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

“கலோரிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால் எப்படி?”

“அதாவது ஒருநாளைக்கு நாம் உண்ணும் உணவில் சராசரியாக 2500 இலிருந்து 3000 கலோரி வரை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் 2000 இலிருந்து 2500 கலோரி அளவே நமது தினசரி செயல்பாட்டுக்குப் போதுமானது. சிலருக்கு 1800 கலோரி அளவே போதுமானது. அந்த அளவு மட்டும் எடுத்து கொள்ளும் போது நமது எடை கூடவோ, குறையவோ செய்யாது அப்படியே இருக்கும்”

“அப்படியானால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 2000 கலோரியை விடவும் மிகக்குறைவாக உள்ள உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். சரிதானே?”

“மிகவும் சரி. அப்படி குறைவான கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, தினசரி செயல்பாட்டுக்குத் தேவையான கலோரிகளை, நமது உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப் பட்டுள்ள கொழுப்பிலிருந்து உடல் எடுத்துக் கொள்ளும்”

“அப்படி எடுத்துக் கொள்வதால் உடலில் பாதிப்பு ஏற்படாதா?”

“சரிவிகித உணவு முறையைப் பின்பற்றும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப் படுமே ஒழிய பாதிப்பு எதுவும் ஏற்படாது”

“சரி, நீர் சொல்வது போல கலோரி குறைவான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமா? வேறு எதுவும் செய்ய வேண்டாமா?”

“அப்படியில்லை. தவறாமல் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்”

“அப்படி உடற்பயிற்சியும் வேண்டும் என்றால், அதை அதிக நேரம் செய்யும் போது இன்னும் அதிக கலோரிகள் செலவாகி உடல் எடை அதிகம் குறையும் அல்லவா?”

“நீர் நினைப்பது போல்தான் நிறையப் பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறைய வேண்டுமானால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் எடையைக் குறைக்கிறேன் என்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எடை குறையாது”

“தீவிர உடற்பயிற்சி செய்யும் போது அதிக கலோரி செலவாகும் அல்லவா? அப்படி அதிக கலோரி செலவானால் எடை குறையாதா?”

தீவிர உடற்பயிற்சியின் போது அதிக கலோரி செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் அதிகப்படியான மாவுச்சத்துதானே கொழுப்பாக நம் உடலில் சேர்த்து வைக்கப் படுகிறது. அப்படி ஏற்கெனவே சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்துதான் தீவிர உடற்பயிற்சியின் போது தேவைப்படும் கலோரியை உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்காக நாம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நாம்தான் உடற்பயிற்சி செய்கிறோமே அதனால் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் சாப்பிடுவோம். அப்போது உடற்பயிற்சியினால் செலவான கலோரி மறுபடி உடலில் சேர்ந்து விடும். இப்போது அது ஈடுகட்டப்பட்டு விடுவதால் எடை குறையும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தீவிர உடற்பயிற்சியை விட எளிமையான உடற்பயிற்சியே சிறந்தது. ஆனால் அதை தவறாமல் செய்ய வேண்டும்

“இது மிகவும் உபயோகமான தகவல்தான்” என்றோம்.

“அதுமட்டுமல்ல. நேர்மறை மனோபாவமும் அவசியம். அதாவது நம்மால் எடை குறைக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும்”

“நம்பிக்கை இல்லாமலா, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள்?”

“நம்பிக்கையுடன்தான் ஆரம்பிக்கிறார்கள். சிறிது காலம் முயற்சிப்பார்கள். ஆவலோடு, எடை குறைகிறதா என்று எடை மெஷினில் ஏறிப் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நினைத்தது போல் எடையில் வித்தியாசம் இல்லையென்றால் நம்பிக்கை குறைந்து விடும். உடனே வேறு வழியில் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்”

“அவர்களுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது வேறு என்ன செய்ய முடியும்?”

“அதற்குத்தான் நேர்மறை மனோபாவம் அவசியம். எடை குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டு அது வரை பொறுத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது”

“சரிதான்! ‘நானும் எவ்வளவோ முறைகளை முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால் உடல் எடை குறையவில்லை’ என்று சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்”

ஆமாம், உடல் எடையைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கெடுவை குறிக்கோளாக வைத்துக் கொண்டு, அதற்காக முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், குறைவான கலோரி உள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்

உடல் எடையைக் குறைக்கும் முறைகளைப் பற்றியும், சரி விகித உணவைப் பற்றியும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்.

திண்ணையில் நமது சிறுகதை – மனிதாபிமானம்!!

29 அக்

முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (28-10-2012) நமது நான்காவது சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் மனிதாபிமானம்!!

திண்ணைக்கு நமது நன்றி!

இதற்கு முன்னால் திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளை வாசிக்க அந்தந்த கதை தலைப்புகளை சொடுக்கவும்.

திண்ணை 14-10-2012 இதழில் வெளியான சிறுகதை மன தைரியம்!

திண்ணை 30-09-2012 இதழில் வெளியான சிறுகதை வெற்றியின் ரகசியம்!

திண்ணை 16-09-2012 இதழில் வெளியான சிறுகதை நம்பிக்கைகள் பலவிதம்!

வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன?

11 ஜூலை

சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலு, நம்மிடம் பேசிக் கொண்டிருந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அப்போது திடீரென்று கவிஞர் கடிவேலு, ‘உம்முடைய இலட்சியமென்ன’ என்று நம்மைப் பார்த்துக் கேட்டார். திடீரென்று கேட்டவுடன் நம்மால் உடனடியாகப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் யோசித்து விட்டு, “நாம் எழுதும் கருத்துக்களால் ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்துதல் கிடைத்தால், மற்றும் சிலருக்கு மகிழ்ச்சி கிடைத்தால் அதுதான் நமக்கு சந்தோஷம்.” என்றேன்.

“நான் அதைக் கேட்கவில்லை. தனிப்பட்ட முறையில் உமது சொந்த வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அல்லது எதையாவது அடைய வேண்டும் என்று நினைத்திருக்கும் இலட்சியங்கள் ஏதாவது உண்டா? என்று கேட்கிறேன். உதாரணமாக சொந்தமாக ஒரு பெரிய வீடு வாங்க வேண்டும், பெரிய கார் வாங்க வேண்டும், குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை கொடுக்க வேண்டும். இதுபோல” என்றார் விடாப்பிடியாக.

“அதெல்லாம் இல்லாமலிருக்குமா? உண்டுதான். மனைவிக்கு ஆசைப்பட்ட நகைகளை வாங்கிக்கொடுக்க வேண்டும். குடும்பத்தோடு ஒரு பத்து நாள் சுற்றுலா போக வேண்டும். நமது சொந்தங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும், என்று நிறைய ஆசைகள் உண்டு” என்றேன்.

“அதைத்தான் கேட்கிறேன். நமது குறிக்கோள் தெளிவாக இருந்தால்தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும்” என்று சொன்ன கவிஞர் அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையையும் சொன்னார்.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் MBA இறுதியாண்டு படிக்கும் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டதாம். அதாவது அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களில் அவர்கள் சாதிக்க நினைக்கும் விஷயங்கள் அல்லது செயல்படுத்த நினைக்கும் திட்டங்கள் என்ன என்று கேட்டார்களாம்.

அதற்கு, மொத்தமுள்ள மாணவர்களில் 80 சதவீதம் பேர், தாங்கள் ஏதாவது பெரிய கம்பெனிகளில் நல்ல வேலையில் சேர்ந்து சிறப்பாக வாழ்க்கையை நடத்துவோம் என்று சொன்னார்களாம். மீதியுள்ளவர்களில் 15 சதவீத மாணவர்கள் ஓரளவு திட்டங்கள் வைத்திருப்பதாகச் சொன்னார்களாம். 5 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருப்பதாகவும், அவற்றை எவ்வாறெல்லாம் செய்து சாதித்துக் காட்டுவோம் என்றும் சொன்னார்களாம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 10 வருடங்கள் கழித்து அதே மாணவர்களை மறுபடியும் சந்திக்கும் போது, பெரிய கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வோம் என்று கூறிய 80 சதவீத மாணவர்களை விட ஓரளவு திட்டங்கள் வைத்திருந்த 15 சதவீத மாணவர்கள் இரண்டு மடங்கு வருமானம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் தெளிவாகத் திட்டமிட்ட 5 சதவீத மாணவர்கள் மற்றவர்களை விட 10 மடங்கு வருமானம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்களாம்.

இந்தக் கதையை சொல்லி முடித்துவிட்டு, அதனால் நம்முடைய இலட்சியம் என்னவென்பதில் நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்றார் கவிஞர் கடிவேலு.

அவர் இந்தக் கதையை விவரித்த விதம் பிரமிப்பாக இருந்தது.