Tag Archives: `

கவிஞர் கடிவேலு ஜோதிடரான கதை!

5 நவ்

ரொம்ப நாள் கழித்து கவிஞர் கடிவேலுவை ஒரு ஜவுளிக் கடையில் பார்த்தபோது அவர் ஜோதிட மாமணி கடிவேலு என்று எழுதப்பட்ட ஒரு விசிட்டிங் கார்டை நம்மிடம் கொடுத்தார் என்று சென்ற இடுகையில் சொல்லி இருந்தோமல்லவா? அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

அன்று அந்த ஜவுளிக் கடையில் கவிஞர் கடிவேலுவைப் பார்த்தது முதல் மனம் வேறு எந்த வேலையிலும் ஒட்டவில்லை. மனிதர் திடீரென்று ஏன் இப்படி ஆகி விட்டார்? ஜோதிட மாமணியாமே! யார் கொடுத்தது அந்தப் பட்டம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாகவும், ஒரு வகையில் அதிசயமாகவும் இருந்தது.

இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறது. நமக்கு எதுவுமே தெரியாமல் போய்விட்டதே!. இந்த கடிவேலுகூட நம்மிடம் இதைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டாரே. அன்றைக்கு பார்த்தபோது கொஞ்ச நேரம் நின்றுகூட பேசவில்லை. அவர் ரொம்பவும் பிகு பண்ணிக் கொண்டது போல்தான் தெரிந்தது. சரி! எங்கே போகப் போகிறார்; பார்த்துக் கொள்ளலாம். மறுபடி நம் கண்ணில் படாமலா போய் விடுவார்.

மேலும் மேலும் அதைப் பற்றிய நினைவுகளே சுற்றிச் சுற்றி வந்தது. நினைக்க நினைக்க அந்த விஷயத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது. என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். போன் பண்ணிப் பார்க்கலாமா? மறுபடி பிகு பண்ணிக் கொள்வாரோ?

என்ன ஆனாலும் ஆகட்டும், போன் செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்து, அவருடைய நம்பருக்கு போன் செய்தேன். இரண்டு மூன்று முறை மணி அடித்த பிறகு, “ஹலோ, யார் பேசறது?” என்று ஒரு குரல் கேட்டது. என்ன இது கவிஞர் குரல் போல் தெரியவில்லையே. ஆள்தான் மாறி விட்டார் என்றால், குரலையுமா மாற்றிக் கொள்வார்?

“ஹலோ, கவிஞரே, நான்தான் பேசுகிறேன். என்ன கவிஞரே, குரலே மாறிப் போய் விட்டது?”

“கவிஞரா? அப்படி யாரும் இங்கே இல்லீங்க. இது ஜோதிட மாமணி கடிவேலுவோட ஆபீஸ்” என்றான் மறுமுனையில் பேசியவன்.

“ஆமாம், கடிவேலுதான். அவர்கூடத்தான் பேசணும்”

“ஹலோ, நீங்க யாரு?” மறுபடி கேட்டது அந்தக் குரல்.

“நான் அவரோட ஃபிரண்ட். ரசிப்புன்னு சொல்லுங்க, அவருக்குத் தெரியும்”

“ரசிப்பா? அப்படி ஒரு பேரா? புதுசா இருக்கே”

“இல்லீங்க, என் பெயர் பழனிச்சாமி. ரசிப்புன்னு ஒரு பிளாக் இருக்கு அதுல எழுதுறேன். அதில் அவரோட கவிதையெல்லாம்கூட வந்திருக்கிறது”

“அப்படியா, கொஞ்சம் இருங்க” கொஞ்ச நேரம் அமைதி.

கவிஞர் ரொம்பவும் பிசியான ஆளாகி விட்டது போல் தோன்றுகிறது. நம்மை ஞாபகம் இருக்குமா, இல்லை ஒருவேளை மறந்திருப்பாரோ? பேசாமல் போனை வைத்து விடலாமா? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தபோது, “ஹலோ” என்று ஒரு குரல் குறுக்கிட்டது. அது கவிஞரின் குரல்தான்.

“கவிஞரே, எப்படி இருக்கிறீர்?” என்றோம் உற்சாகமாக.

“நான் நல்லா இருக்கேன். நீர் எப்படி இருக்கிறீர்?” என்றார் பதிலுக்கு.

“நான் நலமாகத்தான் இருக்கிறேன். கவிஞரே, உம்மிடம் கொஞ்சம் பேச வேண்டுமே”

“என்ன விஷயம்? சொல்லும்” அவர் சொன்ன பதிலில் இருந்து எந்தவிதமான உணர்ச்சியையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

“திடீரென்று ஜோதிடராகி விட்டீரே, எப்படி?” என்றேன் ஆவலை அடக்க முடியாமல்.

அதற்கு பதிலாக ஒரு கவிதையை சொல்ல ஆரம்பித்தார்.

பொங்கிய பாக்கியத்தில்
       பொன்னவனும் சிரசினில்
தங்கிய குஜனுமிக்க 
       சுகத்திலுச்ச மாய்புதனும்
சுங்கனொடு புண்ணியத்தில்
       இந்துவும்கூட ஆட்சியில்
மந்தனும் ரவியுமானால்
       அவனும்புகழ் ஜோதிடனே

நாம் இடையில் குறுக்கிட்டு “கவிஞரே? எப்படி ஜோதிடராக ஆனீர் என்று கேட்டால், ஏதோ கவிதையை வாசிக்கிறீரே?” என்றோம்.

“இந்தக் கவிதையில் சொல்லியுள்ளபடி ஒருவனுடைய பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் அவன் புகழ் பெற்ற ஜோதிடனாவான். அதைத்தான் சொன்னேன்” என்றார் கவிஞர்.

“அதிருக்கட்டும். நான் அதைக் கேட்கவில்லை, நீர் எப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டீர். எதனால் திடீரென்று ஜோதிடர் ஆகிவிட்டீர் என்றுதான் கேட்டேன்”

“கிரக நிலைகளில் அவ்வாறு இருக்கும்போது, நான் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும். எப்படியும் அதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டு விடாதா? அப்படித்தான், நான் வேறு ஏதோ தொழில் பண்ணிக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட தசாபுக்தி வரும் போது நான் ஜோதிடனாவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது” என்றார் கவிஞர்.

“சரிதான், ஜோதிடத்தை யாரிடம் கற்றுக் கொண்டீர்?” என்றோம்.

“புகழ் பெற்ற ஜோதிடர் திரு. சேகர் அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீரா? அவருடைய மாணவர் திரு. ராமச்சந்திரன் அவர்கள்தான் என்னுடைய குரு மற்றும் வழிகாட்டி” என்றார்.

“ரொம்ப சந்தோஷம். நீர் இதிலும் புகழோடு பிசியாக இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல வருமானமா?” என்று ஒரு கேள்வியை வீசினோம்.

“ஒரு விஷயம். வருமானத்திற்காக நான் ஜோதிடராக ஆகவில்லை. எனக்கு ஏற்கெனவே வேறு பிசினஸ் இருக்கிறதல்லவா. அதற்காக இலவசமாகவும் இதைச் செய்யவில்லை. ஆனால் இதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவழிக்கிறேன்” என்றார்.

கவிஞருடைய வளர்ச்சியை நினைத்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ஒருமுறை நேரில் பார்க்கலாம் என்று தோன்றியது. அவரிடம் அதைச் சொன்ன போது, “போன் செய்து விட்டு வாரும். உமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க மாட்டேனா?” என்றார்.

அடுத்து எப்போது கவிஞர் (ஜோதிட மாமணீ) கடிவேலுவைப் பார்ப்போம் என்று ஆவலாக இருந்தது.