அந்தாதி வெண்பா

வெண்பா… இதுவரை

முன்னைப் பிறப்பின் வினையாவும் கண்ணியாய்

உன்னைப் பிடிக்கும் அதுநீக்க – அன்னை

பராசக்தி பாதம்தொழுவ ரம்தருவாள் அண்ட

சராசரம்ப டைத்திட் டவள்                                          -01

 

அவள்தன் பெருமை அளப்பரிய ஒன்று

சிவன்மால் பிரம்மனென மூவர் – அவனியில்

தத்தம் பணிசெய்ய வேபணித்த சக்திபாதம்

நித்தம் வணங்கிடுவோம் நாம்                              -02

 

ஓங்காரி தன்னை ஒருமித்து நின்றிட்ட

ஆங்காரம் இல்லா அகத்தினில் – ஓங்கார

வேதமுதல் மந்திரம்தி யானிக்க ஈரைந்து

நாதம்தான் கேட்கும் செவிக்கு                               -03

 

செவிதனில் ஓசை ஒலிக்கும் நிலையில்

புவிதனில் ஆசை விலகும் – பவித்திரமாய்

வந்துதிக்கும் ஞானம்நல் பாடல்களாய் மாந்தருக்கு

தந்திடுமே வாழ்வியல்பா டம்                                -04

 

பாடத்தின் ஞானம் பிறவிக்கடல் நீந்திட

ஓடத்தின் நீள்துடுப்பாய் மாறிடும் – வேடம்

அவசியமே இல்லை அருள்மிகு அன்னை

அவளின் தரிசனம்பெற் றிட                                      -05

 

பெறற்கரிய பேறதனைப் பெற்றார் தமக்கு

பிறப்பின் பலனாம் கடமை – சிறப்பாய்

மனிதரும் வாழ பயன்மிக்க ஞானக்

கனிதரும்நல் செயலது வாகும்                              -06

 

செயலது வெற்றிபெற அன்னை அவளின்

தயவதுவேண் டும்ஓது தோல்வி – பயமது

நீங்கிட மாமுனி கௌசிகர் தந்திட்ட

ஓங்கிய மந்திரம்கா யத்ரி                                         -07

 

அத்ரி முனிவர் அனுசூயை தம்பதிக்கு

புத்திரராய் வந்தார் பதஞ்சலி – உத்தி

பலநிறைந்த நல்யோக சூத்திரம் தந்தார்

நலமாய் அதைப்போற்றி வாழு                             -08

 

வாழும் பொழுதும் மறைந்த பிறகும்

தாழும் மனிதருக்கே தந்திடுவார் – பாழும்மனம்

முத்திபெற செய்யும் வழிவகை யோகத்தால்

சித்தி வகுக்கும் அணி                                                -09

 

அணிமா மகிமா லகிமா கரிமா

கணிக்கும்பி ராப்திபிர காம்யம் – பணியவைக்கும்

ஈசத்துவம் மற்றும் வசித்துவம் யாவுமட்ட

மாசித்தி என்பர்சித் தர்                                              -10

 

சித்தர் வணக்கம் அருளும் நலவாழ்வு

நித்தம் மனம்காணும் நிம்மதி – பித்தம்

தலைக்கேறி புத்திகெட்டு போனவனும் யோகக்

கலைபயின்றால் வெற்றி வரும்                       -11

 

வருகின்ற சித்திகளில் தான்லயிக் காமல்

கருத்தினில் சக்தியை எண்ணு – பெருகிடும்

கூட்டமோ வாழ்த்தி வணங்கிடும் ஆணவமாய்

ஆட்டமே போட்டால் அழிவு                                -12

 

அழிவற்ற அன்னையின் பேரருளைப் பெற்றால்

விழியற்ற அந்தகனும் பார்ப்பான் – மொழியறிவு

இல்லாத மூடனும் பன்மொழிகள் தானுரைப்பான்

கல்லாது வந்திடும் ஞானம்                                -13

 

ஞானமது பெற்றவர் மற்றவரைச் சாராரே

மானம் அவமானம் பாராரே – வானமுது

போற்றிடும் தன்மையே காட்டும் ஒருபானை

சோற்றுக்கோர் சோறுப தம்                              -14

 

பதஞ்சலி மாமுனியின் பாதம் பணிந்து

பதவுரை தந்திட யானும் – இதந்தரும்

வார்த்தையில் வெண்பா வடித்தேன் அதைஉணர்ந்து

பார்த்தோர் தமக்குப் பலன்                               -15

 

பலனது பெற்றால் அதுமட்டும் போதும்

நலமாய்தாம் வாழயோகம் என்றே – உலகில்

வருந்துவோர் தம்கவலை தீர்க்காத பேரால்

மருந்துக்கும் இல்லை பயன்                          -16

 

 பயனது பெற்றிடத் தக்க குருவின்

தயவினை நாடிப் பணிவாய் – மயக்கிடும்

மாய வலையினில் சிக்காத ஏற்றமிக்க

தூய மனம்தான் பிறக்கும்                           -17

 

பிறந்திட்ட ஓர்மனிதன் பேராசை இல்லா

திறந்ததோர் தூய மனத்தால் – சிறப்பான

வாழ்க்கை பெறுவான் எனபழனிச் சாமிநான்

தாழ்மையாய் இங்கறிவித் தேன்             -18

 

தேன்போல வாய்க்கும் தெவிட்டாத பேரின்பம்

வான்மழை யாய்விடாமல் தான்பொழியும் – தான்பெற்ற

இன்பம் பிறர்பெறவே செய்வார் தயவால்நம்

துன்பம் அனைத்துமே தீரும்                        -19

 

தீருமுந்தன் கர்மவினை அன்னைஸ்ரீ தேவியின்

காருண்யம் மிக்க கடாட்சத்தால் – ஆறுதலாய்

யாருமின்றி ஏங்கிடும் வேளையில் தாய்வந்தே

பேருதவி செய்திடு வாள்                             -20

 

வாள்கொண்டு புல்லறுக்கும் தன்மையாய் அன்னையின்

தாள்வணங்கி வேண்டினால் தான்அறுப்பாள் – நீள்பிறப்பில்

தான்சேர்ந்த எல்லா வினைகளையும் அவ்வுயிர்

தான்புகாது மீண்டும்ஓர் கரு                       -21

 

கருத்தை உணர்தல் முயற்சி பயிற்சி

குருவிடம் தீட்சையால் கூடும் – தருவேன்

அறிமுகம்; ஆழ்ந்ததோர் சிந்தனையில் தோன்றும்

பிறிதொரு நல்ல பொருள்                            -22

 

பொருள்தேடிப் போகின்ற பொல்லாத பேர்கள்

அருள்தேடிப் போவோர்க்கு இம்சை – தருகிறார்

பொன்னும் பொருளும் புரியாமல் தம்முடைய

துன்பம் அகற்றிட வேண்டி                            -23

 

வேண்டிய எல்லாம் தருவாள் மனமதைத்

தூண்டியே காட்சி தருவாள் – ஆண்டியே

என்றாலும் அன்றாடம் காய்ச்சியே ஆனாலும்

குன்றாத செல்வம் வரும்                                 -24

 

வருகின்ற தெல்லாம் பிறர்க்கு நிறைவாய்

தருகின்ற வாழ்க்கையே தர்மம் – கருமய்யம்

கொண்ட வினைப்பதி வெல்லாம் இதனாலே

கண்டபடி ஓடும் தெறித்து                                -25

 

தெறித்தே பலதிசையும் ஓடும் மனம்ஓர்

நெறியை அறியா நிலையில் – அறிந்தே

முறையாக யோகம் பயின்றால் வருமே

குறையாத நல்ல பயன்                                  -26

 

பயனைப் பெரிதாய் கருதாமல் என்றும்

சுயநலம் இன்றியே வாழு – தயவினை

நாடியே வந்தவர்தம் துன்பமது நீக்கினால்

தேடியே புண்ணியம் சேரும்                         -27

 

சேருகின்ற செல்வமெல்லாம் தானதர்மம் செய்திடுவேன்

தாருமென்று கேட்பவர்க்குத் தந்திடுவேன் – ஊருலகின்

துன்பமும் நீக்கிடுவேன் என்பவர்முன் ஆண்டவனும்

அன்புருவாய் தோன்றானோ சொல்        -28

 

சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்

நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்

வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்

எல்லாமாய் ஆகிடும் நம்பு                         -29

Advertisements

2 பதில்கள் to “அந்தாதி வெண்பா”

  1. ramanujam ஜனவரி 2, 2018 இல் 9:13 முப #

    வாழ்த்துகள்! அருமை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: