Tag Archives: தமிழ் பதிவர் திருவிழா 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா 2012!

5 செப்

தமிழ் கவிதைகள் மற்றும் வேர்கள் இடையில் ரசிப்பு

கடந்த 26-08-12 அன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை மேற்கு மாம்பலத்தில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா 2012 நடந்தது. ஏராளமான வலைப்பதிவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் நாமும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைந்தோம். அந்த நிகழ்ச்சியைப் பற்றி அதில் கலந்து கொண்ட பதிவர்களும், ஏன் கலந்து கொள்ள இயலாத பதிவர்களும்கூட நிறைய செய்திகளை தங்களது வலைப்பூவில் சொல்லிவிட்டார்கள். ஆனால் நாம் இதுவரை அதைப்பற்றி எதுவும் சொல்லாதது நமக்கு ஒரு மனக்குறையாக இருந்தது. இந்த இடுகையின் மூலம் அந்தக் குறை நீங்குகிறது. அநேகமாக அதைப்பற்றி எழுதும் கடைசி பதிவர் நான்தான் என்று நினைக்கிறேன்.

நமது நண்பர்கள் பாண்டியன்ஜி அவர்களையும் ரிஷ்வன் அவர்களையும் அங்கே சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. மேலும் திண்டுக்கல் தனபாலன், கோவை கோவி போன்ற பதிவர்களின் அறிமுகமும் சந்தோஷமளித்தது. வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பதிவர்களை பார்க்க முடிந்தது. ‘தூரிகையின் தூறல்’ மதுமதி அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த விழாவில், புலவர் இராமானுஜம், சென்னைப்பித்தன் போன்ற மூத்த பதிவர்களையும், சில பெண் பதிவர்களையும் பார்க்க முடிந்தது.

உள்ளே நுழையும்போது அடையாள அட்டையில் பெயரும், வலைப்பூவின் பெயரும் எழுதிக் கொடுத்தார்கள். சட்டைப் பையில் மாட்டிக்கொள்ளலாம். நமது வலைப்பூவின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு, அடையாள அட்டை கொடுப்பவர் ‘ராசிப்பூ’வா? என்று கேட்டார் (இந்த ராசிதான்  நம்மை என்ன பாடுபடுத்துகிறது?). இல்லை ‘ரசிப்பு’ என்றோம். அவர் நமது அட்டையில் ‘ரசிப்பூ’ என்று எழுதிக்கொடுத்து விட்டார். அதைப் பார்த்த மதுமதி அவர்கள் இந்த நெடிலுக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். ‘ரசிப்பு’தான், தவறாக எழுதிவிட்டார் என்றேன். உடனே பேனாவை எடுத்து சரி செய்தார்.

வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வின் போது சில சுவையான விஷயங்களும் நடந்தது. அதிலும் சேட்டைக்காரன் என்பவரின் நகைச்சுவையான அறிமுகம் ரசிக்கும்படி  இருந்தது. ராசிகளைப் பற்றியும், ஜோதிட சம்பந்தமாகவும் எழுதும் ஒரு வலைப்பதிவர் அறிமுகத்துக்காக மேடையேறும் போது படியில் தடுமாறி, கீழே விழாமல் சுதாரித்துக் கொண்டு மேடையேறினார். ‘அவருக்கே நேரம் சரியில்லை போல’ என்று சிலர் ஜாலியாக கமெண்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது.

புதிய தலைமுறை, மக்கள் தொலைக்காட்சி, ஆனந்த விகடன் போன்ற ஊடகங்களிலிருந்து வந்திருந்து நிகழ்ச்சியை கவரேஜ் செய்தார்கள். நிகழ்ச்சிக்கு வரமுடியாதவர்கள் இன்டர்நெட் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மதியம் சுவையான சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

நம்மால் உணவு இடைவேளை வரைதான் கலந்து கொள்ள முடிந்தது. 3.00 மணிக்கு வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் 2.00 மணிக்கு நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். அதனால் மதியம் நடந்த நிகழ்ச்சியில், நண்பர்களின் கவிதை வாசித்தலையோ, சசிகலா அவர்களின் கவிதைப் புத்தகம் வெளியிட்ட நிகழ்வையோ, புகழ் பெற்ற எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் பேச்சையோ கேட்க முடியவில்லை.

மொத்தத்தில் சந்தோஷமான சந்திப்பாக நடந்து முடிந்தது அந்த திருவிழா. இது மேலும் தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது நமது எண்ணம். இந்த விழாவினை ஏற்பாடு செய்த மதுமதி அவர்களுக்கும், விழாக்குழுவினர்களுக்கும் நமது பாராட்டுக்கள். அதில் எடுக்கப் பட்ட படத்தை இந்தப் பக்கத்தில் காணலாம். இதுவரை எந்த படமுமே நமது வலைப்பூவில் வரவில்லை என்ற குறையும் இதனால் நீங்குகிறது.