Tag Archives: நெட்வொர்க்

நடுவுல கொஞ்சம் கடிவேலுவைக் காணோம்!!

23 ஜன

என்ன ஆயிற்று இந்த கவிஞர் கடிவேலுவுக்கு? கொஞ்ச நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லையே! கடைசியாக புத்தாண்டு கவிதை எழுதி அனுப்பியதோடு சரி. அதன் பிறகு எங்கே போனார், என்ன ஆனார் என்று எதுவுமே தெரியவில்லை. நமக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் கொஞ்ச நாட்களாக இடுகைகளை எழுத இயலாமல் போய் விட்டது. நாமும் கவிஞரை கொஞ்சம் மறந்து விட்டோம் என்பது உண்மைதான்!

ஆனால் நமது இடுகை வெளியான உடனேயோ அல்லது திண்ணையில் நமது சிறுகதை வெளியான உடனேயோ உடனுக்குடன் அதைப் பற்றிக் கருத்து தெரிவித்து விடுவார் நமது கவிஞர். ஆனால் நமது சென்ற இடுகையான ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ பற்றிக் கூட இதுவரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே கவிஞருக்கு என்ன ஆயிற்று என்று நமக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. ஒருவேளை உடம்பு சரியில்லாமல் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறாரோ? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் தவிக்கிறாரோ? இவ்வளவு நாள் ஒரு தகவலும் இல்லாமல் அவர் இருந்ததில்லையே!

பலவிதமாக யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை. ரொம்பவும் குழப்பமாகவே இருந்தது. வெளிநாடு எங்காவது சென்று விட்டாரோ? அப்படிப் போனால் நம்மிடம் சொல்லாமல் போக மாட்டாரே? இப்போது என்ன செய்யலாம்? அவருடைய செல்லுக்கு போன் போட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நமக்கு பதற்றமாகி விட்டது. என்னதான் ஆயிற்று? அவருடைய வீட்டுக்குப் போய் பார்க்கலாமா? அதுதான் சரி! நேரே அவருடைய வீட்டுக்குப் போய் பார்த்துவிட வேண்டியதுதான். உடனே ஆபீஸிலிருந்து கிளம்பி விட்டேன்.

நான் அவருடைய வீட்டை அடைந்த போது காலை மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. காம்பவுண்டைத் தாண்டி காலிங் பெல்லை அடிக்கலாமா என்று யோசித்த போதுதான் கவனித்தேன். கதவில் பூட்டு தொங்கியது. வீடு பூட்டி இருக்கிறது. சரி, பக்கத்தில் விசாரிக்கலாம் என்று பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து வயதான பெரியவர் ஒருவர் கதவைத் திறந்தார்.

“ஐயா, பக்கத்து வீட்டில் கவிஞர் கடிவேலு என்று ஒருவர் இருந்தாரே, அவரைப் பார்க்க வந்தேன். ஆனால் வீடு பூட்டி இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா?” என்றேன்.

“ஓ! கவிஞரா? என்னுடைய நண்பர்தான். அவர் குடும்பத்தோடு சொந்த ஊர்ப்பக்கம் போயிருக்கிறார். இன்னும் பத்து இருபது நாள் கழித்துத்தான் வருவார்கள்” என்றார்.

“போய் ரொம்ப நாள் ஆகி விட்டதோ?” என்று கேட்டேன்.

“ஆமாம்! ஏதோ வியாபார விஷயமாக அங்கேயே கொஞ்ச நாள் இருக்க வேண்டியதிருக்கும் என்றார்” என்றார் பெரியவர்.

“ரொம்ப நன்றி ஐயா! மறுபடி திரும்பி வந்தவுடன், நான் வந்து போனதாகச் சொல்லுங்கள்” என்று என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தேன்.

“எப்போதாவது இடையில் போன் செய்தால்கூட நீங்கள் வந்ததை அவரிடம் சொல்கிறேன்” என்றார். நன்றி சொல்லி விடை பெற்றேன்.

கவிஞர் மிகவும் தீவிரமாக அவருடைய வியாபார விஷயங்களைக் கவனிக்கிறார் என்பது புரிந்தது. அவருடன் நாம் நடத்திய உரையாடல்களைப் பற்றி முந்தைய இடுகைகளில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா?. இடையில் திடீரென்று ஒருநாள் வந்து டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞரைப் பற்றிச் சொல்லிவிட்டு இரண்டு ஒலி வடிவ உரையையும் கொடுத்து கேட்கச் சொல்லி இருந்தார். அதையும் ஒரு இடுகையில் சொல்லியிருந்தோம்.

அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்? என்ற நமது முந்தைய இடுகையில் நீர்ப்பறவை என்ற படத்தைப் பற்றி பேசிவிட்டு, அதுகூட ஒருவகையில் விளம்பரம்தான் என்று சொன்னார். அது போல நாமும் விளம்பரம் செய்யலாம் என்று ஒரு ஆசை வந்தது. அதனால்தான் விஜய் டிவியில் நாம் ரசித்த ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருந்தோம். அதுவும் ஒருவகையில் விளம்பரம் போலத்தானே. ஆனால் கவிஞர் சொன்னது போல் விளம்பரம் செய்தால் எப்படி பணம் வரும் என்பது புரியவில்லை.

இன்னும் பல விஷயங்களைப் பற்றி நமக்கு ஆவல் ஏற்பட்டது. ஆனால் அவர் மறுபடி தொடர்பு கொண்டால்தான் கேட்க முடியும். இப்போது கவிஞரை மீண்டும் எப்போது காண்போம் என்று ஒரு ஏக்கமே உண்டானது. சீக்கிரமே அவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

காத்திருப்போம். அதுவரை அவருடன் நாம் நடத்திய உரையாடல்களை நினைவு படுத்திக் கொள்ளலாம்.

கடந்த இடுகைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

டெங்கு நோயிலிருந்து மீண்ட இளைஞர்! ஓர் அதிசயம்!

அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்?

வியாபாரத்தின் முக்கியத்துவம்!

மாற்றமே மன அமைதியைக் கொடுக்கும்!

29 நவ்

சென்ற இடுகையில் நமது கதையைப் பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை தெரிவித்த கவிஞர் கடிவேலு ஒரு புதுக் கவிதையையும் சொன்னார் அல்லவா? அதன் பிறகு மாற்றம் ஒன்றே முன்னேற்றத்துக்கு அடிப்படை என்றார். அதை மீண்டும் ஞாபகப் படுத்தி கொள்ள இங்கே சொடுக்கவும். கவிஞர் சொன்ன புதுக் கவிதை!

அதன் பின்னர் கவிஞருடன் நாம் நெட்வொர்க் பிஸினஸைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நமது வேலைப்பளு மிகவும் அதிகமாகி விட்ட காரணத்தினால் அடுத்த இடுகையை எழுதுவது மிகவும் தாமதமாகி விட்டது. அப்போது பேசிய விஷயங்களை இந்த இடுகையில் தொடர்கிறோம்.

“நீர் சொல்வது சரிதான்! கால ஓட்டத்துக்குத் தகுந்த மாதிரி நாமும் மாற வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்” என்று ஆமோதித்தோம்.

“ஆனால் பெரும்பாலானோர் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதுதான் அவர்களுடைய பிரச்சினை” என்றார்.

“ஏன் தயங்குகிறார்கள்? அப்படி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள சிலர் மறுப்பதற்கு காரணம் என்ன?” என்று வினவினோம்.

“எல்லாம் நமது மூளையின் உண்மையான சக்தியை புரிந்து கொள்ளாததுதான் காரணம். ஒரே மாதிரி வேலையை செய்து பழக்கப்பட்ட நமக்கு, நாளடைவில் அது சுகமானதாக மாறி விடுகிறது. அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமது மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல நியூரான்களின் தொகுப்பாக பதிவாகி இருக்கும். அதாவது நமது கடந்த கால அனுபவங்களும், நமக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளும் அந்த நியூரான்களில் பதிவாகி இருக்கும். அதன் காரணமாக நமக்கு ஏற்படும் ஒரு வகையான நம்பிக்கையே, நமது சிந்தனையையும், எண்ணங்களையும், செயல்பாடுகளையும் நிர்ணயிக்கிறது. அந்த அடிப்படையில்தான் நாம் எந்த ஒரு புதிய விஷயத்தையும் அணுகுகிறோம். அப்படி நாம் ஒரு புதிய விஷயத்தை முயற்சி செய்ய நினைக்கும்போது அது பற்றி ஒரு பயம் ஏற்படுவது இயற்கை. அந்த பயம் காரணமாகவே புதிதாக எந்த முயற்சியையும் செய்ய பெரும்பாலானோர் தயங்குகிறார்கள்” என்றார் கவிஞர்.

அவருடைய பேச்சு நமக்கு இதுவரை தெரியாத, கேள்விப்படாத ஒரு உண்மையை உணர்த்துவதாக தோன்றியது. அதனால் நாம் மேலும் கேட்பதற்கு தயாராக மௌனம் காத்தோம். கவிஞரே தொடர்ந்தார்.

“நமது மூளையில் கோடிக்கணக்கான நியூரான்கள் இருப்பது தெரியுமல்லவா? அது நமது சிந்தனைக்கேற்பவும், அனுபவத்திற்கேற்பவும் மாற்றமடைகிறது. நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது இந்த நியூரான்களும் மாற்றமடைகிறது. அப்படி ஏற்படும் மாற்றம் நமது பயத்தைப் போக்கி நமக்கு மன அமைதியைக் கொடுக்கிறது” என்றார்.

“அப்படியா! புதிய விஷயங்களை முயற்சி செய்யும்போது, நாம் சந்திக்கும் பிரச்சினைகளால் நமக்கு மன அமைதி குறையும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நீர் மன அமைதி ஏற்படும் என்கிறீரே?” என்றோம்.

“இதைத்தான் தன்னுடைய வாழ்க்கையில் விரும்பும் மாற்றத்தை உங்கள் கேள்விகள் அமைத்துக் கொடுக்கும் (Ask Yourself Questions And Change Your Life) என்ற தன்னுடைய அற்புதமான புத்தகத்தில் ஆர்லென் ஹார்டெர் (Arlene Harder) சொல்லியிருக்கிறார்” என்றார். “அதாவது

‘நம்பிக்கை-நடத்தை-விளைவுகள்-நம்பிக்கை என்ற வட்டத்தில் நம் சிந்தனைகளைச் சுருக்கிக் கொள்வதால் புதிய கருத்துக்களுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை. அதாவது நாம் பாதுகாப்பாக உணர்ந்திருக்கும் கூட்டிலிருந்து வெளியேறாமல் அரைத்த மாவையே அரைத்து சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் செய்ததையே திரும்பத் திரும்ப செய்து மூளையும் பழகி விடுகிறது. எண்ணங்களும், நடத்தைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, ஒரே வழியில் பயணிக்கச் செய்கிறோம். குடை இராட்டினமாக வாழ்வதில் சுகம் கண்டு விட்டோம். ஏதும் தொல்லைகள் நேராத வரையில் அந்தச் சுற்று விளிம்பைத் தாண்டி வெளியேற ஒருபோதும் நாம் சிந்திப்பதில்லை.

என்கிறார் அவர்” என்றார் கவிஞர். தொடர்ந்து அவரே, “அத்தோடு

‘இது நல்லது அல்லது கெட்டது என்று எவ்வித பாகுபாடும் செய்யாமல் ஒரு கேமரா படம் பிடிப்பதைப் போல நிகழ்வுகளைப் பட்சம் சாராமல் பார்க்கப் பழகுங்கள். இதைப் பழகப் பழக உங்கள் கண்ணோட்டம் மாறுபடும். புதிய விஷயங்கள் உங்கள் புத்தியில் பதியும். புதிய எண்ணங்கள் உங்கள் மனதில் உருவாகும். இது சரியா தவறா, நல்லதா கெட்டதா என்று ஒவ்வொரு முறையும் மதிப்பீடு செய்து பார்க்கப் பழகிக் கொண்டிருப்பதால் இழந்திருக்கும் உள்மன அமைதியை நீங்கள் மறுபடியும் பெற்று ஆனந்தமடைவீர்கள். உங்கள் நடத்தைகளையும் மற்றவர்கள் நடத்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அசூசை படும் மனதை மாற்றிக்கொள்ளும் நேரத்தில் நிர்மலமான சந்தோஷம் உங்களுக்கு ஒப்பற்ற மன அமைதியைக் கொடுக்கும்’

என்றும் ஆர்லென் ஹார்டெர் அந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்” என்றார் கவிஞர்.

அவர் சொன்ன விஷயங்களைக் கேட்ட பிறகு, ஒவ்வொரு மாற்றமும் எவ்வளவு முக்கியமானது என்றும், நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியமும் புரிந்தது.

“கவிஞரே, நீர் சொல்வது அற்புதமான விஷயம்தான். மாற்றம் ரொம்பவும் முக்கியமானது என்பது நன்றாகப் புரிகிறது. இப்போது நான் கேட்கும் ஒரு கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லும். ஒருவர் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைய விரும்புகிறார் என்றால் அவர் முதலில் எதை மாற்ற வேண்டும்?” என்று கேட்டோம்.

“முதலில் அவரது மனோபாவத்தை மாற்ற வேண்டும். அதற்கு முதல் கட்டமாக அவருடைய வாங்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும்” என்றார்.

திண்ணையில் நமது சிறுகதை – நைலான் கயிறு…!…?

12 நவ்

சென்ற இடுகையில் நாம் கவிஞர் கடிவேலுவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடியதைப் பற்றிச் சொன்னோமல்லவா? அப்போது நமது சிறுகதைகளைப் பற்றி அவருடைய கருத்துக்களாக சில விஷயங்களைச் சொன்னார். பிறகு நமது வழக்கமான உரையாடலைத் தொடங்கி மீட்டிங் பற்றிய நமது கேள்வியைக் கேட்டோம். பிறகு மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவருக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

இன்று காலை நாம் ஆபீசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் அவரிடமிருந்து போன் வந்தது. முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் நமது சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை தெரிவித்தார். இது திண்ணையில் வெளியாகும் நமது ஆறாவது சிறுகதை என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நைலான் கயிறு…!…? என்ற அந்த சிறுகதையை படிக்க இங்கே சொடுக்கவும் நைலான் கயிறு…!…?

திண்ணைக்கு நமது நன்றி!

இதுவரை திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளுக்கு கவிஞர் கடிவேலு, தன்னுடைய கருத்துக்களாக சொன்ன விஷயங்களை சென்ற இடுகையில் சொல்லியிருந்தோம். எல்லாக் கதைகளுக்கும் தன்னுடைய பிசினஸை சம்பந்தபடுத்தியே அவருடைய கருத்துக்கள்  அமைந்து இருந்தன. ஆனால் நைலான் கயிறு…!…? கதை சற்று வித்தியாசமானது என்பதால் இந்தக் கதையை அவருடைய பிசினஸோடு சம்பந்தப்படுத்தி கருத்து எதுவும் சொல்ல முடியாது என்று நான் நினைத்தேன்.

ஆனால் நமக்கு வாழ்த்துச் சொன்ன கவிஞர், “ஒருவருக்கு வாழ்க்கையில் எல்லா சந்தோஷமும் கிடைத்து இருப்பதாக நினைத்தாலும், தன்னுடைய அன்பான வாழ்க்கைத் துணையோடு எப்போதும் இருக்க முடிவதில்லை. ஆனால் நெட்வொர்க பிசினஸில் கணவன் மனைவி இருவரும் சமமான வியாபார பங்குதாரர்களாக இருப்பதால் எப்போது இணைந்தே இருப்பார்கள். இணைந்தே எங்கும் செல்வார்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடியும்” என்றார்.

நமக்கு மிகவும் வியப்பாக இருந்தது. கவிஞரே தொடர்ந்தார்.

“அத்தோடு எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், பணத்துக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய முயற்சிக்கும் அதில் அடையும் வெற்றிக்கும் பாராட்டு கிடைக்க வேண்டும் என்பது அவனுடைய ஆழ்மனத்தின் ஏக்கமாக இருக்கிறது. அந்த பாராட்டு கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். அதிலும் அந்தப் பாராட்டு கணவன் மனைவி இருவருக்கும் அவர்களுடைய வெற்றிக்காக ஒரே சமயத்தில் கிடைத்தால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்கிறதா? நெட்வொர்க் பிசினஸில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

இப்படி எல்லா விஷயத்தையும் தன்னுடைய பிசினஸோடு தொடப்பு படுத்தி பேசுகிறாரே கவிஞர், என்று ஆச்சரியும் அதிகமானது. அந்த அளவுக்கு தன்னுடைய பிசினஸை நேசிக்கிறார், மதிக்கிறார் என்பதும் நமக்குப் புரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் சொன்னோம். பின்னர், தீபாவளிக்கு விடுமுறைக்குப் பிறகு இன்னும் சில விஷயங்கள் நம்மோடு பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

கவிஞரின் கண்ணோட்டத்தில் நமது சிறுகதைகள்!

9 நவ்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி நெருங்குவதால் சீக்கிரம் ஊருக்கு திரும்பி விடுவேன் என்று கவிஞர் கடிவேலு நமக்கு செய்தி அனுப்பி இருந்தார். அப்படி ஊருக்கு வந்தவுடன் நமக்காக சிறிது நேரம் ஒதுக்குமாறு கேட்டு பதில் அனுப்பினோம். அதனால் நேற்று ஊருக்கு வந்து விட்டதாக நமக்கு போன் பண்ணினார். உடனே நாம் அவரைச் சந்திக்க வருவதாக சொல்லி எப்போது வரலாம் என்று கேட்டோம். சாயந்தரம் 6.00 மணிக்கு மேல் அவருடைய வீட்டுக்கு வரச் சொன்னார்.

அவருடைய வீட்டுக்கு நாம் போன போது கவிஞர் நம்மை வாசலுக்கே வந்து வரவேற்றார். அவருடைய மனைவி வந்து வணக்கம் சொன்னார்கள். கவிஞர் மூலம் கேள்விப்பட்டு நாம் எழுதிய சிறுகதைகளை எல்லாம் திண்ணை வார இதழில் படித்ததாகச் சொன்னார். மிகவும் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார். பின்னர் நமக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தார். அதைக் குடித்தபடி கவிஞருடன் உரையாட ஆரம்பித்தோம்.

முதலில் நமது கதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். மன தைரியம்! கதையில் அருண் மூலம் வெற்றி பெறத் தேவையான சில விஷயங்களை நாம் சொல்லியிருந்ததாக கவிஞர் கூறினார். அதாவது, வெற்றி பெறுவதற்கு, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். தோல்வி அடைந்து விடுவோமோ என்று துளிகூட சந்தேகம் வரக்கூடாது என்று அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது என்றார். அதைவிட முக்கியமாக எந்த ஒரு செயலையும் நுணுக்கமாக திட்டமிட்டு அதன்படி செயலாற்ற வேண்டும் என்றும் அதில் தெளிவுபடுத்தி இருந்ததாக பாராட்டினார்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தை விட்டு விட்டாலே வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும் என்பதை அந்தக் கதை உணர்த்துகிறது என்றார்.

மனிதாபிமானம்! கதையில் அவனுக்கு ஏற்பட்ட பயமே, திலீப்குமார் தன்னுடைய அப்பாவிடம் அடுத்தடுத்து பொய் சொல்லத் தூண்டியது. அந்த குணமே அவனை எதிர்மறை எண்ணம் கொண்டவனாக மாற்றியது, தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை வரை அவனைக் கொண்டு போனது. நேர்மறை சிந்தனையுள்ள மனிதாபிமானம் மிக்க ஒருவரை சந்தித்து அவருடன் பழக ஆரம்பித்த பின் எப்படி அவன் தன்னம்பிக்கை உள்ளவனாக மாறினான் என்று அந்த கதை சொல்லியது என்றார்.

அடுத்து, வெற்றி நிச்சயம்! கதையைப் பற்றி பேசினார். எந்த ஒரு விஷயமும், அது பற்றிய விபரம் தெரியாமல் இருக்கும் போது பயமும் தயக்கமும் ஏற்படும் என்றும், அதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் விளக்கும் போது அதே விஷயம் மிகவும் எளிதாகி விடும் என்றும் அந்தக் கதையின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது என்றும் சொன்னார்.

அது மட்டுமில்லாமல் புதிதாக ஒரு விஷயத்தை முயற்சிக்கும் போது எளிதான வேலை கூட மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்றும், அப்போது வரும் பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து விடாமல் அதை தீர்க்க முடிவு செய்து, தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்பது அந்தக் கதையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்று கூறினார். மேலும் நன்றி சொல்லும் குணமும், அடுத்தவருக்கு உதவி செய்ய தயங்காத குணமும் ஒருவரை வெற்றியின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்பது ராஜனின் கதை மூலம் புலனாகிறது என்றார்.

கடைசியாக சந்திராஷடமம்! கதை Law of attraction என்ற இயற்கை விதிக்கு ஒரு சான்றாக அமைகிறது என்றார். எந்த விஷயத்தை ஒருவர் தீவிரமாக நம்புகிறாரோ அந்த விஷயத்தை தன்னை நோக்கி அவர் ஈர்க்கிறார் என்பது பூபாலன் கதாபாத்திரத்தின் மூலம் தெளிவாகிறது என்றும் கூறினார். எவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு கதையையும் அலசியிருக்கிறார் என்பது நமக்குப் புரிந்தது. அதனால் அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து நன்றி தெரிவித்தோம்.

“நம்பிக்கைகள் பலவிதம்! சிறுகதை பற்றி எதுவும் சொல்லவில்லையே!” என்றோம்.

“ஆமாம்! அது உமது முதல் கதையல்லவா, அதைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே” என்றார். அவருடைய ஞாபக சக்தி நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

பின்பு நமது வழக்கமான உரையாடலை ஆரம்பித்தோம்.

“கவிஞரே, முதலில் நமக்கு உள்ள ஒரு சந்தேகத்தை கேட்டு விடுகிறேன். நெட்வொர்க் பிசினஸ் என்றாலே ‘மீட்டிங், மீட்டிங்’ என்று கூப்பிடுகிறார்களே! எதற்கெடுத்தாலும் மீட்டிங் என்று சொல்வதாலேயே சிலருக்கு அலர்ஜி ஆகி விடுகிறது. அதனாலேயே நெட்வொர்க் பிசினஸ் என்றாலே பலர் ஓடுகிறார்கள். அதை ஏன் வேறு வழியில் முறைப்படுத்தக் கூடாது?” என்றோம்.

“மீட்டிங்கைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் அங்குதான் நமக்கு பிசினஸைப் பற்றிய செய்திகளும் ஊக்கமும், தயாரிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. மேலும் ஒத்த கருத்துள்ள, வியாபார நோக்கமுள்ள பல நண்பர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதனால்தான் எந்த பிசினஸிலும் வியாபாரக் கூட்டமே முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் ஒவ்வொரு கம்பெனியிலும், முதலாளியும், உயர் அதிகாரிகளும் மீட்டிங்கில்தானே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்” என்றார் கவிஞர்.

“அப்படியென்றால் மீட்டிங்கில் கலந்து கொள்வதுதான் பிசினஸை சிறப்பாக செய்வதற்கான வழி என்கிறீரா?” என்றோம்.

“ஆமாம்! இதோ இந்த உரையைக் கேட்டுப் பாரும். நெட்வொர்க் பிசினஸில் மீட்டிங்கின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது” என்று அவருடைய போனைக் கொடுத்தார். அதில் அந்த உரையைக் கேட்டு ரசித்தோம்.

அந்த ஒலி வடிவ உரையைக் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை சொடுக்கவும்.

திண்ணையில் நமது சிறுகதை – சந்திராஷ்டமம்!

7 நவ்

நமது சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலுவுடன் பேச முடியவில்லை என்றும் அதனால் உடனடியாக அடுத்த இடுகையை எழுத முடியவில்லை என்றும் சொன்னோமல்லவா?. நமக்கு கொஞ்சம் நேரம் கிடைத்ததால் ஒரு சிறுகதை எழுத முடிந்தது. அந்த சிறுகதை,  தமிழின் முதல்இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (04-11-2012) வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திண்ணையில் வெளியான நமது ஐந்தாவது சிறுகதை இது.

திண்ணைக்கு நமது நன்றி!

நமது வேலை சம்பந்தமாக இரண்டு நாட்கள் வெளிமாநிலத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால் நமது கதை வெளியானதை இணையத்தில் காண முடியவில்லை. ஆனால் நமக்கு முன்னாலேயே கவிஞர் அந்தக் கதையை படித்து விட்டு நமக்கு பாராட்டு தெரிவித்தார்.

‘அந்தக் கதையில் வரும் தொழுநோயாளியைப் பார்ப்பது போலத்தான், நெட்வொர்க்கின் மதிப்பை உணராதவர்கள் நம்மை அருவருப்பாக பார்ப்பார்கள். ஆனால் இறைவனின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருந்து, நெட்வொர்க் பிசினஸில் அவர் வெற்றி பெற்றால், அந்த நோயாளி, பூபாலனின் உயிரைக் காப்பாற்றியது போல, தன்னுடைய வாழ்க்கையும் காப்பாற்றப் பட்டிருக்கிறது என்பதை ஒருவர் உணருவார்’ என்றும் தன்னுடைய கருத்தை மெயிலில் அனுப்பி இருந்தார்.

அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் சந்திராஷ்டமம்!

இதற்கு முன்னால் திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளை வாசிக்க அந்தந்த கதை தலைப்புகளை சொடுக்கவும்.

திண்ணை 28-10-2012 இதழில் வெளியான சிறுகதை மனிதாபிமானம்!!

திண்ணை 14-10-2012 இதழில் வெளியான சிறுகதை மன தைரியம்!

திண்ணை 30-09-2012 இதழில் வெளியான சிறுகதை வெற்றியின் ரகசியம்!

திண்ணை 16-09-2012 இதழில் வெளியான சிறுகதை நம்பிக்கைகள் பலவிதம்!

 

எந்த வகை வருமானம் நம்முடையது?

3 நவ்

கவிஞர் கடிவேலு பிசினஸ் விஷயமாக வெளியூரில் இருப்பதாகவும் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமென்றும் சொன்னார் அல்லவா? அதனால் நேரம் கிடைக்கும் போது நம்மிடம் பேசச் சொல்லிக் கேட்டிருந்தோம். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள கீழே உள்ள தலைப்பை சொடுக்கவும்.

கவிஞருடன் நமது உரையாடல் தொடர்கிறது….

கடந்த முறை பேசியதற்குப் பிறகு அவர் நம்முடன் பேசவேயில்லை. நாம் முயற்சித்த போதும் அவருடைய போன் கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக அடுத்த இடுகையை எழுத முடியவில்லை.

ஆனால் நமது சென்ற இடுகையை படித்து விட்டு, நம்முடைய வருமானத்திற்காக, பிடித்தமான வேலையை செய்யக்கூட  நமக்கு நேரமில்லை என்று நாம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டு, அதனால்தான், தான் நெட்வொர்க் பிசினஸை சிபாரிசு செய்வதாகவும், இப்போது நமது வருமானம் ஆக்டிவ் இன்கம் (Active Income) என்ற வகையில் வருவதாகவும், அதற்கு பாதுகாப்பு கிடையாது என்றும் ஈமெயில் அனுப்பியிருந்தார்.

நெட்வொர்க் பிசினஸில் கிடைப்பது பாஸிவ் இன்கம் (Passive Income) என்றும், அதுதான் பாதுகாப்பான வருமானம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். ஆக்டிவ் இன்கம் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக ஒரு ஒலி வடிவ உரையையும் அனுப்பியிருந்தார். நாம் அதைக் கேட்டு ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம். அந்த ஒலி வடிவ உரையைக் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை சொடுக்கவும்.

கவிஞருடன் நமது உரையாடல் தொடர்கிறது….

27 அக்

சில நாட்களுக்கு முன்னால் கவிஞர் கடிவேலுவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது நெட்வொர்க் பிசினஸைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நமக்கு ஒரு போன் வந்தது. நமக்கு இரண்டு புது புராஜெக்ட்கள் மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், அவைகளை இரண்டு வாரத்தில் முடித்து கொடுக்க வேண்டும் என்றும் நம்முடைய வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டார்.

அதனால் கவிஞருடனான நம்முடைய உரையாடலை கொஞ்சம் தள்ளிப் போட வேண்டியதாகி விட்டது. அவருக்கும் ரொம்ப நேரம் பேசியதால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால் இரண்டு வாரம் கழித்து மறுபடி தொடர்பு கொள்கிறோம் என்று கவிஞரை மரியாதையுடன் அனுப்பி வைத்தோம்.

ஆனால் நம்முடைய அவசர வேலையெல்லாம் ஒருவழியாக முடித்து விட்டு கவிஞரை தொடர்பு கொண்டால், அவர் பிசினஸ் விஷயமாக வெளியூரில் இருப்பதாகவும் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமென்றும் சொன்னார். நமக்கு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து எழுத வேண்டும் என்பது கட்டாயம் என்று தோன்றியதால், நேரம் கிடைக்கும்போது போனில் பேசும்படி கேட்டுக் கொண்டோம். அதன்படி கவிஞருடன் போனில் நமது உரையாடல் தொடர்கிறது.

முந்தைய இடுகையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

“கவிஞரே, நெட்வொர்க் பிசினஸைப் பற்றி சொன்னீர். ஆனால் அந்த பிசினஸைப் பற்றி நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறோம். அதைப் பற்றி வெளியில் வேறுவிதமான அபிப்பிராயம் இருக்கிறதே! நிறையப் பேர் அதை முயற்சி பண்ணிப் பார்த்து விட்டு வெற்றி காண முடியாமல் விட்டிருக்கிறார்களே” என்றோம்.

“நீர் சொல்வது சரிதான். எந்த வியாபாரத்தையும் ஆரம்பிக்கும் எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை” என்றார். பிறகு அவரே தொடர்ந்து,

“ஒருவருக்கு எது தேவை அல்லது எது தேவையில்லை என்று தீர்மானிக்கத் தெரிய வேண்டும். சிலருக்கு அவர்கள் செய்யும் வேலை பிடிக்கும், ஆனால் அதில் வரும் வருமானம் பிடிக்காது. அதாவது போதுமானதாக இருக்காது. சிலருக்கு வேலை பிடிக்காது, ஆனால் வருமானம் பிடிக்கும். சிலருக்கு வேலையும் பிடிக்காது, வருமானமும் பிடிக்காது. அது போல எது பிடிக்கும், எது வேண்டும் என்று தீர்மானிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதை அடைய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அதற்காக கனவு காண வேண்டும். அதற்குப் பெயர்தான் குறிக்கோள். தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதில் தெளிவு வேண்டும்” என்றார்.

“நீர் சொல்வது சரிதான். இப்போது எனக்கே நான் செய்யும் வேலை பிடிக்கிறது. வருமானமும் பிடிக்கிறது. ஆனால் நேரம் இல்லை. இப்போது திடீரென்று  புராஜெக்ட்கள் வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தூங்குவதற்குக் கூட நேரமில்லை. அதை முடித்த பிறகுதான் கொஞ்சமாவது நேரமிருக்கிறது” என்றோம்.

“அதனால்தான் நீர் சில நாட்களாக இடுகைகள் எதுவும் எழுதவில்லை அல்லவா?”

“ஆமாம், எழுதுவதில் நமக்கு இருக்கும் ஆர்வத்தைக்கூட தள்ளி வைக்க வேண்டியதாகி விட்டது” என்றோம்.

“அதுதான், நான் சொல்வது. வருமானத்துக்காக வேலை செய்ய வேண்டி இருப்பதால், நமக்கு பிடித்த வேலையைக் கூட செய்ய நேரம் கிடைப்பதில்லை” என்றார்.

“அதற்கு நெட்வொர்க் பிசினஸ்தான் தீர்வு என்கிறீரா? ஆனால் அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டுமல்லவா?” என்றோம்.

“அதற்கும் நேரம் ஒதுக்குவது அவசியம்தான். ஆனால் அதில் செலவிடும் நேரம், நான் முன்பே சொன்னது போல முதலீடாக மாறி பல மடங்காக திரும்பி வரும். அப்போது உமக்கு தேவையான வருமானத்தோடு, விருப்பமானதை செய்ய தேவையான நேரமும் கிடைக்கும்” என்றார்.

“ஆனால் நெட்வொர்க் பிசினஸில் எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லையே” நமது சந்தேகத்தை கேள்வியாக்கினோம்.

“இது எல்லோருக்குமான பிசினஸ் இல்லை. எல்லோரும் முயற்சி பண்ணலாம். ஆனால் எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியாது” என்றார்.

“ஏன், என்ன காரணம்?”

“வெற்றிகரமாக இந்த வியாபாரத்தை எப்படி நடத்துவது என்பதை எல்லோரும் புரிந்து கொள்வதில்லை. இந்த பிசினஸை எப்படி செய்வது என்பதற்கு பயிற்சிகள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொள்வதற்கு நிறையப் பேருக்கு பொறுமை இருப்பதில்லை. ஒரு சிலர் தங்களுடைய அனுபவத்திலிருந்து தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த முறையில் முயற்சிக்கிறார்கள். ஆனால் சென்ற இடுகையில் சொன்னது போல வெற்றி பெற்ற யாராவது ஒருவரை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு சரியான வழியில் முயற்சித்தால்தான் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றார்.

“அப்படியென்றால் எல்லோரும் வெற்றி பெற முடியாதா?” என்றோம் மறுபடியும்.

“பரேட்டோ பிரின்ஸிபில் (Paretto Principle) என்று ஒன்று இருக்கிறது. அதாவது 80/20 சதவீத விகிதாச்சாரம். அதன்படி எல்லா விஷயத்தையும் இதன் மூலம் வரையறுக்க முடியும். அதாவது பொதுவாகச் சொல்வதானால் இந்த உலகத்தில் உள்ள மக்களில் 20 சதவீதம் பேர்கள் உலகிலுள்ள 80 சதவீத சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். மீதியுள்ள 20 சதவீத சொத்துக்களுக்கு மட்டுமே 80 சதவீத மக்கள் போட்டி போடுகிறார்கள். நீங்கள் 20 சதவீத மக்களுடன் சேர வேண்டுமா அல்லது 80 சதவீத மக்களுடன் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

நாம் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பது புரிந்தது.

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 5

8 அக்

நம்ப முடியாத விஷயத்தை கவிஞர் கடிவேலு சொன்னதால், அதை ஜீரணித்துக் கொள்ள நமக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. அதனால் நாம் காபி சாப்பிடலாமா என்று கேட்டவுடன் கொஞ்சம் இடைவெளி விட்டார். காபி குடிக்கும் போது அவருடைய போனைக் கொடுத்து ஒரு ஜோக்கை கேட்கச் சொன்னார் அல்லவா? இதற்கு முன்னால் அந்த ஜோக்கை கேட்காதவர்கள் இங்கே சொடுக்கவும். நாம் கொடுப்பதே நமக்கு திரும்ப வரும்

இதற்கு முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? – பகுதி 4

அந்த ஜோக்கை கேட்டுக் கொண்டே காபி குடித்து முடித்த பின்னர் கவிஞரைப் பார்த்தோம்.

“எப்படி இருந்தது அந்த ஜோக்?” என்றார் அவர்.

“நல்ல அர்த்தமுள்ள ஜோக்தான் அது. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இப்போது ஏன் நம்மை அந்த ஜோக்கை கேட்கச் சொன்னீர்?” என்றோம்.

“நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கு மிகவும் பொருத்தமானது இந்த ஜோக்” என்றார்.

“எப்படி?”

“அதாவது நாம் எதைக் கொடுத்தாலும் அது நமக்குத் திரும்பி வருமல்லவா? இதுவும் ஒரு விதிதான். பணத்தை முதலீடு செய்தீர் என்றால் உமக்கு பணம் திரும்பக் கிடைக்கும். நேரத்தை முதலீடு செய்தீர் என்றால் நேரம் உமக்கு திரும்பக் கிடைக்கும்” என்றார்.

“நேரம் திரும்பக் கிடைக்குமா? நேரம் போனால் வராது என்றல்லவா சொல்வார்கள்?”

“அது உண்மைதான்! நேரத்தை வீணடித்தால் அது திரும்ப கிடைக்காது. ஆனால் இங்கே நேரத்தை வீணடிக்கவில்லை, அதற்குப் பதிலாக நேரத்தை முதலீடு செய்கிறீர். அதனால் அது உமக்கு திரும்பக் கிடைக்கும். அதுவும் பல மடங்காக திரும்பக் கிடைக்கும்” என்றார்.

“எப்படி பல மடங்காக திரும்பக் கிடைக்கும்?” என்றோம் புரியாமல்.

“10000 மணி நேர விதியை மீறி வெற்றி பெற ஒரு வழி இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? மால்கம் கிளாடுவெல் அந்த விதியை ஏமாற்ற ஏழு படிகள் (7 Steps to cheat the rule) இருக்கின்றன என்று சொல்கிறார்”

“அது என்ன ஏழு படிகள்?”

“அந்த ஏழு படிகள் இவைதான்:

1.        உங்களுக்கு வழிகாட்ட ஒரு கோச்சை (Coach)   தேர்ந்தெடுங்கள்.
2.        உங்களைப் போன்ற சிந்தனையுள்ள தனி மனிதர்களையே நீங்கள் பழகும் வட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
3.        வெற்றிபெற தேவையான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.
4.        சாதாரண விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
5.        தொடர்ந்து விடாப்பிடியாக பயிற்சி செய்யுங்கள்.
6.        மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
7.        நீங்கள் பாதை மாறும் போது உங்களை நெறிப்படுத்தும் ஒருவரை கண்டுபிடித்து, அவரை உங்களுடன் வைத்திருங்கள்.

என்று அவற்றை வரையறுக்கிறார் அவர்” என்றார் கவிஞர்.

“சரி, இதன் மூலம் நேரத்தை எப்படி முதலீடு செய்வது?” என்றோம்.

“அந்த ஏழு படிகளிலும் பொதுவான ஒரு விஷயம் புலப்படுவது தெரிகிறதா? அதாவது உங்கள் நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் வேண்டும் என்பது அதன் அர்த்தம்”

“இன்னும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்” என்றோம். கவிஞர் விளக்கினார்.

1. உங்களுக்கு ஒரு வழிகாட்டி இருந்தால், நீங்கள் தேவையில்லாமல் புதிதாக எதையாவது செய்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்.

2. உங்களைப் போன்ற சிந்தனையுள்ள மனிதர்களே உங்களைச் சுற்றி இருந்தால் உங்கள் கவனமோ, குறிக்கோளோ சிதறாது.

3. வெற்றி பெறத் தேவையான பழக்க வழக்கங்களில் உங்கள் நேரம் செலவழிக்கப் படும்.

4. அதனால் சாதாரண விஷயங்களில் நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்.

5. விடாப்பிடியாக பயிற்சி செய்தால் உங்கள் நேரம் முதலீடாக மாறும்.

6. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நீங்கள் உங்களைப் போல பலரை உருவாக்குகிறீர்கள்.

7. உங்களை இடித்துரைக்க ஒருவர் உங்களுடன் இருந்தால் உங்கள் திறமை பளிச்சிடும்.

ஆக நேர மேலாண்மையும் அதை பல மடங்காக ஆக்குவதும் இந்த ஏழு படிகளில் அடங்குகிறது” என்றார் கவிஞர்.

மால்கம் கிளாடுவெல் சொன்ன ஏழு படிகளுக்கு, தன்னுடைய பாணியில் கவிஞர் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் தோன்றியது. ஆனால் நம் சந்தேகம் இன்னும் தீரவில்லை.

அதனால் “10000 மடங்கு மாத வருமானம் சம்பாதிக்க வழி இருக்கிறது என்றீரே, அப்படி இருந்தால் இதுவரை யாரும் முயற்சி செய்யாமலா இருப்பார்கள்?” என்றோம்.

“இதுவரை யாரும் செய்யாத வியாபாரம் என்று சொல்லவில்லை. ஆனால் வியாபாரம் ஆரம்பித்த உடனேயே 10000 மடங்கு வருமானம் கிடைக்கும் என்றும் நாம் சொல்லவில்லை. அப்படி கிடைக்கவும் வாய்ப்பில்லை. முதலில் 10000 ரூபாய் விற்றுமுதலுக்கு 10 சதவீதம் வருமானம் ஈட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு 100 சதவீதம் வருமானம் கிடைக்க என்ன வழி என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு 10 மடங்கு வருமானம் பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாகத்தான் வியாபாரத்தை வளர்க்க வேண்டும்” என்றார்.

“ஆனால் நடைமுறையில் எந்த வியாபாரத்திலும் 100 சதவீதம் வருமானம் கிடைப்பதற்கே வழியில்லையே. ஆனால் நீரோ 10 மடங்கு 100 மடங்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறீரே. அப்படி என்ன வியாபாரம் அது?” என்றோம்.

“மற்ற வியாபாரத்திற்கும் இந்த வியாபாரத்திற்கும் கொஞ்சமும் ஒற்றுமை இருக்காது. அதனால் இந்த வியாபாரத்தை நன்கு புரிந்து கொண்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத்தான் ரிச் டாட் பூவர் டாட் (Rich Dad Poor Dad) புகழ் ராபர்ட் கியோஸாகி இருபத்தியோராம் நூற்றாண்டின் வியாபாரம் (The Business of the 21st Century) என்று அழைக்கிறார். அதுதான் பிணைய வியாபாரம் (Networking Business) என்பது” என்றார்.

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 4

3 அக்

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு, நேரம்தான் பணம் என்பதை விளக்கி, வியாபாரம் ஆரம்பிப்பவர்கள், வேலை செய்ய ஆட்களை அமர்த்துவதன் மூலம் எப்படி நேரத்தை பெருக்குகிறார்கள் என்று சொன்னார் அல்லவா? 10000 மணி நேரம் ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள் என்றும் அதன் மூலம் எப்போது என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்று தெரிந்து கொள்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே பெற்று விடுகிறார்கள் என்று நாம் சொன்னதை ஆமோதித்த கவிஞர், “அதையே 10000 மணி நேர விதி என்று அழைக்கிறார்கள்” என்றார்.

“அப்படியென்றால் வெற்றி பெற திறமையோ, நுணுக்கமோ தேவை என்பதை விட 10000 மணி நேர உழைப்பே முக்கியம் என்று சொல்கிறீரா?” என்றோம்.

“ஆமாம், இதைத்தான் மால்கம் கிளாட்வெல் கூறுகிறார். அதாவது இந்த 10000 மணி நேர விதியைக் கடைப்பிடித்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார்” என்ற கவிஞர், “ஆனால், இந்த விதியை மீறி குறுகிய காலத்திலேயே வெற்றி பெறவும் அவரே அவரே வழியும் சொல்கிறார்” என்றார்.

“விதியை மீறுவதா? விதியை மீறுவது என்றால் அது தவறான காரியம் அல்லவா?” என்றோம்.

“இல்லை, இல்லை. விதியை மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அதைத்தான் சொல்கிறேன். அதாவது எல்லாவற்றுக்கும் பொருந்தும் பொதுவான ஒன்றை விதி என்கிறோம். அதையே நமது நன்மைக்காக நம் அறிவு நுட்பத்தை பயன்படுத்தி அந்த விதியை மாற்றுகிறோம். அதுதான் விதியை மதியால் வெல்வது என்பது” என்றார் கவிஞர்.

“கொஞ்சம் புரியும்படி சொல்லும்” என்றோம்.

“தண்ணீர் உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிப் பாயும் என்பது ஒரு இயற்கை விதி அல்லவா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றோம்.

“பிறகு எப்படி உங்கள் வீட்டில் தண்ணீரை கீழே உள்ள தொட்டியில் இருந்து மொட்டை மாடியில் உள்ள தொட்டிக்கு அனுப்புகிறீர்?. இது இயற்கை விதியை மீறுவதுதானே? தண்ணீர் கீழிருந்து மேலே செல்கிறதல்லவா?” என்றார். நமக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது.

“அதுபோல 10000 மணி நேர விதியையும் மீற முடியும் என்கிறீரா?” என்றோம்.

“ஆமாம், இந்த விதியையும் மீறி வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்” என்றார்.

நமக்கு இப்போது குழப்பம் அதிகமாகி விட்டது. வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே பெற்று விடுகிறார்கள் என்று நாம் சொன்னதை ஆமோதித்து அது ஒரு விதி என்றார். இப்போது விதியை மீறலாம் என்கிறார். இது முரண்பாடாகத் தெரிகிறதே?

“கவிஞரே, எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள். 10000 மணி நேர விதியை பின்பற்றுபவர்கள் வெற்றி பெறுகிறார்களா? அல்லது அதை மீறுபவர்கள் வெற்றி பெறுகிறார்களா?” என்றோம்.

“ஒரு விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டீரென்றால் உமக்கு உண்மை புரியும். வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் நேரத்தை அதிகப் படுத்துகிறார்கள். ஆனால் வியாபாரத்தில் எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாதல்லவா?” என்றார்.

“ஆமாம்! உண்மைதான்” என்றோம். அவரே தொடர்ந்து,

“வியாபாரம் என்றாலே பணத்தை முதலீடு செய்வதுதான் முக்கியம். எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது ஐந்து சதவீதத்தில் இருந்து இருபது அல்லது இருபத்தைந்து சதவீதம் வரை இருக்கலாம். பணம் முதலீடு செய்வதால் ரிஸ்க்கும் இருக்கும் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்” என்றார்.

“அப்படியானால் எல்லோரும் வியாபாரம் ஆரம்பிக்க முடியாது. அப்படியே ஆரம்பித்தாலும் வெற்றி பெறுவது கடினம். அதனால் நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அப்படித்தானே?” என்றோம். நமக்கு சற்றே ஏமாற்றம்தான்.

“ஆனால், ஒரு வழி இருக்கிறது. 10000 மணி நேர விதியைப் பற்றி சொன்னேனல்லவா? அந்த விதியை மீறி, அதிகமான ரிஸ்க்கும் இல்லாமல் வியாபாரத்தில் வெற்றி பெறவும் வழியிருக்கிறது” என்றார் கவிஞர்.

“ரிஸ்க் இல்லாமல் வியாபாரமா? அப்படியென்றால் பணம் அதிகமாக முதலீடு செய்யத் தேவை இல்லை என்றுதானே அர்த்தம்? அப்படி ஒரு வியாபாரம் செய்து அதில் வெற்றி பெற முடியுமா?” என்றோம் வியப்புடன்.

“ஆமாம்! 10000 ரூபாய் விற்று முதல் (Turnover)செய்து 10000 மடங்கு வருமானம் ஈட்ட வழி இருக்கிறது” என்றார்.

“இரும்! இரும்! இப்போது என் காதில் விழுந்த விஷயங்கள் அதிர்ச்சியளிப்பது போல் இருக்கிறதே! இன்னொரு முறை சொல்லும்” என்று கேட்டோம்.

“அதாவது மாதம் 10000 ரூபாய்க்கு மட்டுமே விற்று முதல் (Turnover) செய்து மாதம் 10000 மடங்கு வருமானம் சம்பாதிக்க வழியிருக்கிறது என்று சொன்னேன்” என்றார்.

“10000 ரூபாய்க்கு 10000 மடங்கு என்றால் 10 கோடி ரூபாய் மாத வருமானமா? நடக்கக்கூடிய விஷயமா இது? சும்மா விளையாடாமல் சீரியஸாகப் பேசும்” என்றோம். 10000 என்று ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு என்னென்னவோ பேசுகிறாரே?

“உண்மையைத்தான் சொல்கிறேன். நடக்கிற, நடந்து கொண்டிருக்கிற விஷயம்தான் இது” என்றார் கவிஞர். இதுவரை நமக்கு அவர் மேலிருந்த நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இந்த மனிதர் தெளிவோடுதான் பேசுகிறாரா? இல்லை சொல்வதைக் கேட்பதற்கு ஆள் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கதை விடுகிறாரா?

“கவிஞரே, எனக்குத் தலை சுற்றுகிறது. இந்த விஷயத்தை கொஞ்ச நேரம் கழித்து தொடரலாம். நீர் சொன்னதை ஜீரணம் செய்யவே கொஞ்ச நேரம் ஆகும் போலிருக்கிறது. இப்போது காபி சாப்பிடலாம்” என்றோம்.

“சரி காபி ஆர்டர் பண்ணும்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் போனில் ஆழ்ந்து விட்டார். நாமும் ஈமெயிலில் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினோம்.

சற்று நேரத்தில் காபி வந்தது. “கவிஞரே, காபி எடுத்துக் கொள்ளும்” என்றோம். காபியை எடுத்துக் கொண்ட கவிஞர், “முதலில் உமக்கு எமது பாராட்டுக்கள்” என்றார்.

“என்ன திடீரென்று எனக்குப் பாராட்டு” என்றோம் புரியாமல்.

“நீர் எழுதிய இன்னொரு கதை திண்ணை வார இதழில் வந்திருக்கிறதே, அதற்காகத்தான். வெற்றியின் ரகசியம் என்று நீர் எழுதியுள்ள கதையில் வெற்றிக்கான பல விஷயங்களை, சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறீர். அதனால் நான் சொல்ல வருவதை உம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்” என்றார்.

அவர் பாராட்டியது நமக்கு டானிக் சாப்பிட்டது போல புத்துணர்ச்சி கொடுத்தது.

முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (30-09-2012) வெளியான வெற்றியின் ரகசியம் என்ற அந்த சிறுகதையைப் படிக்க இங்கே சொடுக்கவும். http://puthu.thinnai.com/?p=15114 கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பின்னூட்டமிடவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

27 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 3

நேரம்தான் பணம் என்பதை விளக்கிக்கொண்டு வந்த கவிஞர் கடிவேலு நான்கு வகைகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி, அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், அதிகமான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் சொன்னார். பிறகு, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஒரு கேள்வியையும் கேட்டு, மிக முக்கியமான விஷயமாக அவர்கள் கனவு காண்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

“கனவு காண்பதோடு நிற்பதில்லை வியாபாரம் ஆரம்பிப்பவர்கள். நாம் முந்தைய கவிதையில் சொன்னது போல் கனவில்லாத மனிதர்களை தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்” என்றார்.

“அது எப்படி, கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம்.

“அவர்கள் தங்களது வியாபாரத்தை நடத்துவதற்கு, ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு வகையான திறமை கொண்ட ஆட்கள் தேவை. அதனால் அவர்கள் அதுபோல பல ஆட்களை மாதாமாதம் ஒரு சம்பளத்தை வரையறுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். தங்களது பணியை பல பகுதிகளாக பிரித்து அவர்கள் மூலமாக செய்து விடுகிறார்கள். இதனால் இருவருக்குமே நன்மை” என்றார்.

“அதாவது நம்பிக்கையான ஆட்கள் அவருக்கு கிடைக்கிறார்கள். அது போல் ஒரு நிலையான மாத வருமானம் வேலை செய்பவருக்கு கிடைக்கிறது. ஆனால் வியாபாரத்தில் ஏற்படும் லாபமோ, நஷ்டமோ வேலை செய்பவர்களை பாதிப்பதில்லை, சரிதானே” என்றோம்.

“மிகவும் சரி. ஏனென்றால் வியாபாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது முதலாளியின் விருப்பம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் செய்வார். அந்த பொறுப்பு அவர் கையில்தான் இருக்கிறது” என்றார்.

“சரி, இதன் மூலம் நீர் சொல்ல வருவது என்ன?” என்றோம்.

“அதாவது நிறையப் பேரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுடைய நேரத்தை அவர் விலைக்கு வாங்கி விடுகிறார் அல்லவா?” என்றார்.

“ஆமாம், ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் கொடுத்த வேலையை செய்ய வேண்டும் என்பதுதானே அதன் அர்த்தம்” என்றோம்.

“உதாரணமாக ஒருவர் தன்னுடைய வியாபாரத்திற்காக 50 பேரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவருக்கு தினமும் 400 மணி வேலை நேரம் கிடைக்கிறதல்லவா?” என்றார்.

“ஓஹோ! இதைத்தான் நேரத்தை பலமடங்காக பெருக்குவது என்கிறீரா?” என்றோம். நமக்கு இப்போது ஓரளவு புரிய தொடங்கி விட்டது.

“அதாவது பத்து பேர் சேர்ந்து ஒரு வேலையை பத்து நாளில் செய்தால், அதே வேலையை இருபது பேர் சேர்ந்து எத்தனை நாளில் செய்வார்கள்?” என்று கேட்டார் கவிஞர்.

“ஐந்து நாளில் செய்வார்கள். இது பள்ளியில் படித்த கணக்குப் பாடமாயிற்றே” என்றோம்.

“அதேதான். அதுதான் இங்கும் நடக்கிறது. மேலும் எந்த ஒரு செயலிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் அதற்காக 10000 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். அதாவது சரியான நேரத்தில் சரியான விஷயத்தை செய்ய அதில் 10000 மணி நேரம் அனுபவம் இருக்க வேண்டும். இதையே Practice makes perfect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்பொழுதுதான் அதில் நினைத்தபடி வெற்றியடைய முடியும். இதைத்தான் தன்னுடைய புத்தகத்தில் ராபர்ட் கியோஸாகி சொல்கிறார்” என்றார்.

நமக்கு இந்த கருத்து புதுமையானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் மிகவும் பயனுள்ளது என்பதும் புரிந்தது.

கவிஞரே தொடர்ந்து, “ஒரு சின்ன கணக்குப் போட்டு பாரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்பவர் ஒரு மாதத்தில் 25 நாட்களில் 200 மணி நேரம் வேலை செய்கிறார். அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு 2400 மணி நேரம். ஆக அவர் 10000 மணி நேரம் வேலை செய்ய சுமாராக ஐந்து வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். இதையே மால்கம் கிளாட்வெல் என்பவரும் 8765 மணி நேரம் கொண்ட ஒரு வருடத்தில் முழு நேர வேலைக்குச் செல்லும் ஒரு நபர் சராசரியாக 2080 மணி நேரம் வேலை செய்கிறார் என்று வரையறுக்கிறார்” என்றார்.

“ஆக வேலைக்குச் செல்பவருக்கு மட்டுமல்ல, வேலை கொடுப்பவருக்கும் அனுபவம் அதிகமாகிறது. வேலைக்குச் செல்பவர் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டு சரியாக செய்ய ஆரம்பிக்கும் போது ஐந்து ஆண்டுகள் ஓடி விடுகிறது. ஆனால் வேலை கொடுப்பவர் அதை முன்பே கற்றுக் கொண்டு விடுகிறார்” என்றோம்.

“ஆமாம், ஆனால் அந்த ஐந்து வருடங்களில் எல்லாமே மாறி விடுகிறது. பிறகு மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த 10000 மணி நேரத்தை அதற்கு முன்பே நீங்கள் பெற்று விட்டால், அப்போது காலத்தை ஜெயிப்பதாக ஆகிவிடும் அல்லவா?” என்றார். நமக்கு ஏதோ ஒரு விஷயம் தெளிவாவது போல் தோன்றியது.

“அதாவது நீங்கள் நேரத்தை பல மடங்காக பெருக்கும்போது இந்த 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே அதாவது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களிலேயே பெற்றுவிடலாம். சரிதானே!” என்றோம்.

தலையை ஆட்டி ஆமோதித்தார் கவிஞர்.