Tag Archives: சன் டிவி

ரோஜா – தொலைக்காட்சித் தொடர்

22 செப்

பொதுவாக நான் தொலைக்காட்சியில் வரும் தொடர்களை  அதிகம் பார்ப்பதில்லை. இரவு சாப்பிடும் நேரத்தில் டிவியில் ஏதாவது சீரியல் வந்தால், அதைமட்டும் கொஞ்ச நேரம் பார்ப்பது வழக்கம்.

 சீரியல்களைப் பற்றி சிலர் இப்படிச் சொல்வதுண்டு. அதாவது எந்த தொலைக்காட்சித் தொடரையும்  தொடர்ந்து பார்க்கா விட்டாலும், இடையிடையே ஒரு சில எபிசோடுகள் பார்த்தாலே அதன் கதை முழுவதும் புரிந்து விடும் என்று சொல்வார்கள்.

 நாம் பார்க்கும் தொடரில் வரும் கதை பற்றியோ அல்லது கதாபாத்திரத்தைப் பற்றியோ மனைவியிடம் ஏதாவது கேட்டால், ஆர்வத்தோடு முழு கதையையும் நம்மிடம் ஒப்பிக்கும் போது, ஏண்டா இதை கேட்டோம், இப்படி மாட்டிக் கொண்டோமே என்றுகூடத் தோன்றும்.

அநேகமாக எல்லா சீரியல்களின் கதைக்களமும் கிட்டத்தட்ட ஒரே மாதியானவை என்றுதான் தோன்றுகிறது. ஒரு கதாநாயகி, ஒரு வில்லி, அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் தொடர் போராட்டம். வில்லி ஜெயித்துக்கொண்டு இருக்கும் வரை தொடரும் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால் ஊரங்கு காலத்தில் டிவியை விட்டால் வேறு பொழுது போக்கும் இல்லை என்பதால் அதில் வரும் எல்லா சீரியல்களையும் பார்த்தே ஆக வேண்டி இருந்தது.

 அவற்றுள் இந்த ரோஜா சீரியல் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றியது. அதனால் அதை நான் விரும்பி பார்த்தேன். அந்த அளவுக்கு நன்றாக இருந்தது.

அதில் வரும் காட்சிகளாகட்டும், அதில் நடிக்கும் கதாபாத்திரங்களாகட்டும், கதை வசனமாகட்டும் அல்லது ஒவ்வொரு எபிசோடையும் அவர்கள் கொண்டு போகும் விதமாகட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதிலும் மற்ற எல்லா சீரியல்களிலும் இருக்கும் லாஜிக் இல்லாத பல விஷயங்கள் உண்டு. என்றாலும் ரசிக்கும்படி இருந்தது. ஊரங்கு காலத்தில் மன இறுக்கத்தைக் குறைக்கவும், கவலைகளைப் போக்கவும் அது ஒரு வடிகாலாக இருந்தது.

சன் டிவியில் அந்தத் தொடர் ஆரம்பத்தில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பினார்கள். அதனால் அதை பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் சில சமயங்களில் அந்த நேரத்தில் அந்த சீரியலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு சில நாட்கள் பார்க்கும்போதே அதில் ஒருவித ஈர்ப்பு உண்டானது என்றே சொல்ல வேன்டும்.

அந்த சீரியலில் வரும் காட்சிகளிலும் வசனங்களிலும் ஒரு இயல்புத்தன்மை இருந்தது. அதில் வரும் கதாநாயகன் அர்ஜூன், கதாநாயகி ரோஜாவிடம் காதல் வயப்படும் காட்சிகள் மிகவும் இயல்பானதாக தோன்றியது.

அதனால் கொரோனா காலத்துக்கு முன்பு எப்பொழுதெல்லாம் நேரம் வாய்க்கிறதோ அப்போது அந்த சீரியலை மட்டும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் இடையிலிருந்து பார்த்ததால் முன் கதை தெரியவில்லை. நான் பார்த்த வரையில் கதை கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது.

 பிறகு அதே சீரியல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தது. நடிகை நதியா அதில் ஒரு கதாபாத்திரமாக தோன்றுவதாக சன் டிவியில் விளம்பரம் வந்தது. அதனால் அந்த சீரியலை இரவு ஒன்பது மணிக்கு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.

 அதன்பிறகு சில நாட்களிலேயே அந்த சீரியல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது. கதை நன்றாக இருந்தாலும் தொடர்ந்து பார்த்தாலும் அதற்கு முன்னால் கிட்டத்தட்ட 350 அல்லது 400 எபிசோடுகளுக்கு மேல் பார்க்காததால், கதையைப் புரிந்து கொள்ள, அதனைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது

 டைகர் மாணிக்கம் சென்ற கார் எப்படி விபத்தில் சிக்கியது, அவருடைய மகள் அனு எப்படி அனாதை ஆசிரமத்திற்கு போனாள், பிறகு ரோஜாவாக வரும் அந்தக் கதாபாத்திரம், அர்ஜுனை எப்படி எந்த சுழ்நிலையில் சந்தித்தது, எப்படி ஒரு வருட காண்ட்ராக்டில் அர்ஜுனுக்கு மனைவியாக வந்தாள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள நினைத்து முந்தைய எபிசோடுகளை யூடியூபில் வரிசையாக பார்த்தேன்.

 ஊரடங்கில் வீட்டில் இருந்த நாட்களில் அது ஒன்றுதான் பொழுதுபோக்காக இருந்தது. தொடர்ந்து பார்க்கப்பார்க்க அந்த சீரியல், சிறப்பானதாக என்னால் கருத முடிந்தது.

அதனால்தான் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் மற்ற தொடர்காட்சித் தொடர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இன்று வரை TRP யில் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்று எண்ணுகிறேன்.

ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவிய அந்த சீரியலுக்கு நன்றி!