Tag Archives: வெண்பா

உடலினை பேணிக் காப்பது அவசியம்

2 ஜன

இதற்கு முந்தைய ஒரு இடுகையில் நோய் என்ற சொல்லில் முடியும்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

என்ற திருக்குறளைப் பற்றி பார்த்தோம். நோய் என்பது உடம்புக்கு வருவது. அதற்கு மருந்து உண்டு. ஆனால் ஞானிகள் இந்த உடம்பையே நோய் என்று சொல்கிறார்கள்.

மேலும், இந்தப் பிறப்பையும் ஒரு நோய் (பிறவிப்பிணி) என்று கருதுகிறார்கள். அதனால்தான் பிறப்பால் உருவாகும் இந்த உடலை காயம் என்கிறார்கள். ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா?.

தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் 10வது குறளில்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

என்று சொல்லுகிறார்.

அப்படி என்றால் இறைவன் அடி சேர்ந்து, அந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்துவது எப்படி? காயம் என்று சொல்லப்படுகின்ற இந்த உடம்பு இனிமேல் இன்னொரு பிறப்பு எடுக்காமல் இருப்பதற்கு என்ன வழி? அதையும் ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அதைத்தான் இந்த வெண்பா எடுத்துரைக்கிறது.

உடலகல் ரத்தம்நெய் நூல்விந் துயிர்தீ

கடமகல் காலம் வரையில் – உடலினைக்

காத்துநாம் ஈசனடி சேரலாம் என்பது

மூத்தவர் சொல்லும் நெறி

உடலகல் – உடல்+அகல் (உடலை அகல் விளக்காக உருவகப் படுத்துவது)

கடமகல் – கடம்+அகல் (கடம் என்று சொல்லப்படும் இந்த உடலை விட்டு அகலுவது)

அதாவது இந்த உடம்பை அகல் விளக்காகவும், அதில் இருக்கும் ரத்தத்தை நெய்யாகவும், விந்து என்று சொல்லப்படும் உயிர்சக்தியை நூலாகவும் கருதி இந்த உயிர் என்னும் தீபத்தை எரியவிட்டு இந்த உடலைப் பேண வேண்டும். இந்த உயிர், உடலை விட்டு செல்லும் காலம் வரையில் உடலினை காத்து வர வேண்டும். பிறகு, சில உபாயங்கள் மூலமாக இந்த உடலில் இறைவன் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். இதுவே சித்தர்களும், ஞானிகள் காட்டும் வழி.

இதையே திருமந்திரத்தில்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே

என்று திருமூல தெய்வம் கூறுகிறார்.

அதனால் நாம் உடலை நன்றாகப் பேணிக் காக்க வேண்டும். அதன் மூலம் இறைவனை உணர்ந்து, பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டும்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

30 டிசம்பர்

இதற்கு முந்தைய இடுகையில் இல்லை என்ற சொல் வரும் ஒரு வெண்பாவை பற்றி ஒரு விளக்கம் எழுதி இருந்தேன். அதில் இல்லை என்ற சொல் வரும் இரண்டு திருக்குறள்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு  இன்னும் ஒரு திருக்குறள் என் ஞாபகத்துக்கு வந்தது

அறிவுடைமை அதிகாரத்தில் 429 வது குறள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

‘வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை’ என்று இதற்கு அர்த்தம் சொல்லியிருக்கிறார் மு. வரதராசன் அவர்கள்.

 பின்னால் வரும் ஒரு விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஒருவருக்கு திடீரென்று அதிர்ச்சி தரக்கூடிய அல்லது அஞ்சி நடுங்க வைக்கக்கூடிய ஒரு துன்பம் வராது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது இன்னும் சில தமிழறிஞர்களின் கூற்று.

ஆனால் என் கேள்வி என்னவென்றால் பின்னால் நடக்கப் போவதை ஒருவர் எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான். இது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் அல்லவா?.

அந்தக் காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தங்களுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக பின்னால் நடக்கப் போகும் விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் அது சாதாரணமான மற்றவர்களால் எப்படி முடியும் என்பது தெரியவில்லை.

இன்றைய கால கட்டத்தில் ஜோதிடம் என்று ஒன்று இருக்கிறது. அதன் மூலம் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்த ஜோதிடத்தைப் பற்றியா இந்த குறளில் சொல்லி இருப்பார். அவருக்கு ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இருப்பதாக திருக்குறளில் எங்காவது சொல்லியிருக்கிறாரா?.

அதனால் இந்த குறள் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவதாக எனக்கு தோன்றுவது என்னவென்றால் ஒரு செயலின் முயற்சியை முன்னெடுக்கும் போது ஏதாவது ஒரு குறிக்கோள் உள்ளவன் அல்லது ஒரு எதிர்பார்ப்பு உள்ளவன், பின்னால் வரும் அதன் விளைவை முன்கூட்டியே யோசித்து திட்டமிடுவதைப் பற்றி குறிப்பிடுவதாகவே கருதுகிறேன்.

இப்படி நடந்தால் இது போன்ற விளைவுகள் வரும். அதை இப்படி சமாளித்துக் கொள்ளலாம் அல்லது வேறு மாதிரி நடந்தால் வரும் விளைவுகளை வேறுவகையில் சாமாளித்துக் கொள்ளலாம் என்று முன்கூட்டியே திட்டமிடுவது அல்லது தீர்மானிப்பது என்பதையே இங்கு அவர் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது திட்டமிடலில் திட்டம் ஒன்று, திட்டம் இரண்டு, திட்டம் மூன்று என்றெல்லாம் சொல்கிறார்களே, அது போன்று ஒரு செயலை செய்யும் போது அதன் விளைவு இப்படி இருந்தால் என்ன செய்வது அல்லது வேறு விதமாக இருந்தால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதன்படி தனக்கு பாதிப்பு வராமல் காப்பாற்றிக் கொள்ளும் அறிவு உள்ளவர்களை இங்கு அவர் குறிப்பிடுகிறார்.

அப்படி திட்டமிட்டு முன்கூட்டியே நடக்கப் போகும் விளைவுகளை அறிந்து அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்பவர்களுக்கு, பின்னால் நடப்பது எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்கு துன்பம் விளைவிக்காது. அதாவது அவர்களை அது அதிர்ச்சிக்கு உள்ளாக்காது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

******

இப்பொழுதுதான் நான் தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய அம்மா வந்தாள் என்ற நாவலைப் படித்து முடித்தேன். இந்தக் குறளை அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களோடு  ஏனோ சம்பந்தப்படுத்தி பார்த்தேன்.

அதில் வரும் கதாநாயகன் பெயர் அப்பு. அவனுடைய அம்மா அலங்காரத்தம்மாள். அவள் தான் செய்யும் பாவத்தை போக்கிக் கொள்வதற்காகவே எட்டு வயதான அப்புவை வேதம் படிப்பதற்காக 16 வருடங்களுக்கு முன்பு சித்தன்குளத்துக்கு பாடசாலைக்கு அனுப்புகிறாள்.

ஆனால் அவனோ 16 வருடங்கள் கழித்து பாடம் முடிந்து, எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வரும்போது, அங்கு நடக்கும் விஷயங்கள் அவனுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அவன் வேதம் படித்தவன்தான், புத்திசாலி, அறிவு உள்ளவன்தான் ஆனால் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று தன் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே யோசித்து பார்க்கத் தோன்றாததால் அவனுக்கு அந்த அதிர்ச்சி உண்டாகிறது.

அவன் ஒரு வேத வித்தகனாக, ரிஷியாக ஒரு நெருப்பு போல் வருவான், அதில் தன்னுடைய எல்லா பாவங்களையும் பொசுக்கிக் கொள்ளலாம் என்று அலங்காரத்தம்மாள் நம்புகிறாள். அவளுக்கு அவனிடம் அப்படி ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நீ ரிஷியாகிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே!

என்பாள் அவள்.

மறுபடி சித்தன்குளத்துக்குச் செல்கிறான் அப்பு. அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகம் அலங்காராத்தம்மாளுக்கு உண்டாகிறது. அதனால் சில நாட்களுக்குப் பிறகு அவள் கிளம்பி அப்புவைப் பார்க்கப் போகிறாள்.

அலங்காரத்தம்மாள் எதிர்பார்த்தபடி தன் மகன் அப்பு திரும்பி வரமாட்டான் என்று தெரிந்து விடுவதால், காசிக்குச் சென்று அங்கேயே கடைசி வரை இருந்து இறந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து பிரிந்து செல்கிறாள். ஒருவேளை அப்பு இதுபோல் இருந்தால் இது மாதிரி செய்யலாம் என்று அவள் முன்கூட்டியே யோசித்து இருப்பாளோ என்னவோ, அதனால் அவளுக்கு அது அதிர்ச்சியை அளிக்கவில்லை என்று தோன்றுகிறது.

பின் குறிப்பு:

அந்த நாவலில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு இடம் வருகிறது. அம்மாவை ரயிலில் ஏற்றிவிட்டு திரும்பி வருவான் அப்பு. அவன் வருவதைப் பார்த்து ‘அப்பு’ என்று குரல் கொடுக்கிறாள் இந்து. அப்போது அவள் சொல்வதாக தி. ஜானகிராமன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“அம்மா இத்….தனை அழகாக இருக்காளே! எனக்குத் தெரியவே தெரியாதே. நீ சொல்லவே இல்லியே. என்ன களை! என்ன அழகு!”

அதற்கு அப்பு பதில் சொல்கிறான்.

“அழகா இருந்தா, ரொம்ப கஷ்டம் இந்து!” என்று சுவரைப் பார்த்துக் கொண்டே நின்றான் அவன்.

 இந்த நாவலின் சாரத்தை இதில் அடக்கி விடுகிறார் ஆசிரியர்.

எளிய வார்த்தைகள் – உயர்ந்த கருத்து

27 டிசம்பர்

பொறுமையை விட உயர்ந்த  தவம் என்று ஒன்று இல்லை. கருணையை விட பெரிய அறச்செயல் ஒன்றும் இல்லை. திருப்தி என்பதற்கு  மேலான இன்பம் எதுவும் இல்லை. அதுபோல் மன்னிப்பதை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை.

இந்தக் கருத்து மிகவும் எளிய கருத்தாகத் தோன்றலாம். ஆனால் அவரவர் அனுபவத்தைக் கொண்டு தம் மனதில் ஆழ்ந்து சிந்திக்கும் போதுதான் இதன் சிறப்பு புரியும்.

 இதையே இந்த வெண்பா எடுத்துரைக்கிறது

இல்லை பொறுமையி னும்உயர்ந்த தோர்தவம்

இல்லை கருணை யுயர்அறம் – இல்லை

திருப்தியி னில்உயர்ந்த இன்பம்மன் னிப்பின்

பெருத்ததோர் ஆயுதம் இல்லை

ஒரு தலைவன் கருத்தில் கொள்ள வேண்டியவை

25 டிசம்பர்

இயற்கையாக இருக்கும் சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது. உதாரணமாக சூரியனுடைய வெப்பத்தையும். சந்திரனுடைய குளிர்ச்சியான தன்மையையும். நேர்மையான எண்ணம் கொண்டவர்களின் குணத்தையும் யாரும் மாற்றிவிட முடியாது. இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிலும் ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் நிச்சயம் அவர்களால் வெற்றி பெற முடியும். இதில் மாற்றுக் கருத்தும் இல்லை.  விவாதிப்பதற்கும் எதுவுமில்லை.

இதையே இந்த வெண்பா எடுத்துரைக்கிறது.

சூரியன் வெப்பமும் சந்திரன் தன்மையும்

நேரியன் எண்ணமும் மாறாது – காரியம்

சாதிக்க முயலும் மனிதருக்கு இக்கருத்தில்

வாதிக்க எதுவுமில்லை தான்

 

சீர் நின்ற வாழ்க்கை

24 டிசம்பர்

ஒரு சிலர் (Born with Silver spoon என்று சொல்வார்களே அதுபோல) பிறந்த நாள் முதல் செல்வத்துடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து வருவார்கள். அப்படி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் வசதி குறையும் போது மிகவும் தடுமாற்றம் அடைவார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள், புலம்புவார்கள். சாதாரண வாழ்க்கை வாழ அவர்களால் முடியாது.

 இன்னும் சிலர் மிகவும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். அவர்களுக்கு திடீரென்று செல்வாக்கு உண்டாகி செல்வம் கொழிக்க ஆரம்பித்தால், அவர்கள் தலை கால் புரியாமல் ஆடுவார்கள். அதனால் பல விதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்வார்கள்.

 ஆனால் சாதாரண நிலையில் இருந்தாலும் வளமான வாழ்க்கை வாழ்ந்தாலும் மனதளவில் ஒரே நிலைப்பாடு கொண்டு சமநிலையில் மனதை வைத்திருப்பவர்கள் எந்த நிலையிலும் தவிக்கவோ தடுமாறவோ மாட்டார்கள்.

அப்படிப்பட்ட  எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களே என்றும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதையே இந்த வெண்பா எடுத்துக் கூறுகிறது.

வளமான வாழ்வின் வழியில் பழகின்

வளம்குறைந்த தாழ்வில் தவிப்பர் – உளமாற

ஓர்நிலை கொண்டோர் தடுமாற மாட்டார்தாம்

சீர்நின்ற வாழ்க்கை அதில்

 

மதிப்புரைக்கு நன்றி

20 டிசம்பர்

எழுத்தாளர் வில்லவன் கோதை அவர்கள் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர். பிறருடைய புத்தகங்களை வாசித்து தான் என்ன உணருகிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்துபவர்.

Appavin

அவர் புத்தகத்திற்கு ரேட்டிங்காக ஐந்து நட்சத்திரங்கள் கொடுப்பதில் தயக்கம் காட்டுபவர். ஒருவருக்கு அதிக பட்ச ரேட்டிங் கொடுத்து விட்டால் அவருடைய இன்னொரு புத்தகம் இதை விட நன்றாக இருந்தால் அப்போது என்ன ரேட்டிங் கொடுப்பது என்று கருதுபவர்.

அப்பாவின் பெண் புத்தகத்துக்கு அவர் மதிப்புரை தந்திருக்கிறார். அதை வாசிக்கவும் புத்தகத்தை தரவிறக்கவும் அருகில் உள்ள படத்தையோ அல்லது லிங்க்கையோ சொடுக்கவும்.

அதனால் அவர் கொடுத்த மூன்று நட்சத்திர மதிப்பீட்டையே எனக்குக் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

வேலைப்பளு காரணமாக உடனடியாக அதற்கென்று இடுகை போட முடியவில்லை.

நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மதிப்புரை வழங்கிய திரு. வில்லவன் கோதை அவர்களுக்கான வெண்பா இது.

நல்லகதை என்றாலும் ஐந்துஸ்டார் யாருக்கும்

வில்லவன் கோதை தருவதில்லை – வல்லவனாய்

ஏற்றம்நான் பெற்றிட வேண்டியே உண்மையை

சாற்றியவர் தம்கருத்து நன்று

 

பணிவு எது என்று அறிவது அணி

17 டிசம்பர்

பணியாள் அணியும் பணிவு கடமை

பணிவது பண்பாளன் பண்பு – அணியும்

மணியது, மாண்பு; துணிவான் பணிக்காய்

பணிவான் கணித்தல் அணி

Politeness

வெண்பாவின் பொருள்:

நம்மிடம் வேலை செய்யும் ஒரு வேலையாள் பணிவாக நடந்து கொள்வதை மிகவும் சாதாரணமானது. நாம் அதை ஒரு பண்பு என்று சொல்லிவிட முடியாது. அது அவனது கடமை.

ஆனால் பொதுவாக ஒருவன் மற்றவரிடம் பணிவாக நடந்து கொள்வது எனபது வேறு. அது அவனது பண்பைக் குறிக்கும். அவனது பெருமையை பறைசாற்றும். அந்த மனிதனை மதிப்பு உள்ளவனாக மாற்றும்.

ஆனால்  எதற்கும் துணிந்த ஒரு சிலர் நம்மிடம் ஏதாவது ஒரு காரியம் சாதிக்க வேண்டும் என்பதற்காக பணிவாக நடந்து கொள்வதைப் போல் நடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை சரியாக அறிந்து, அவர்களது நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வது எனபது ஒரு கலை. அது நமக்கு ஒரு அணிகலனாய் மாறும். அப்படி நடந்து கொண்டால் பின்னர் நமக்கு அவர்களால் ஏமாற்றம் உண்டாகாது.

கயவர்தம் தன்மை

14 டிசம்பர்

செவிடனும் கத்திபேசு வான்பயந்த வள்போல்
பவித்திர மாய்நடிப்பாள் தாசி – தவித்தே
இயல்புக்கு மேலாய் இருப்பதுபோல் காட்டும்
கயவர்தம் தன்மை அது

வெண்பாவின் பொருள்:

காது கேளாதவன் சத்தமாகப் பேசுவது இயற்கை. தனக்கு காது கேட்காதது போல் மற்றவர்களுக்கும் கேட்காது என்ற எண்ணத்தில் அப்படி பேசுவான்.

ஹெட்போனில் ஏதாவது பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் பேசிப் பாருங்கள். அவர் சாதாரணமாகப் பேசுவதை விட சத்தமான குரலில் உங்களுக்குப் பதில் சொல்லுவார்.

மற்றும் எந்த ஒரு விஷயத்துக்கும் மற்ற பெண்களை விட ஒரு பரத்தையானவள் ரொம்பவே அலட்டிக் கொள்வாள். அதாவது தான் ரொம்பவும் பவித்திரமானவள் என்று மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள  வேண்டும் என்ற பாவனையில் அவள் நடந்து கொள்வாள். அதுவே அவள் எப்படிப் பட்டவள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அதுபோல தன்னுடைய உண்மையான குணத்தை மறைத்து தன்னை மற்றவர்கள் நல்லவனாக கருத வேண்டும் என்பதற்காக நடிப்பது கயவர்களது இயற்கை குணம். அதை சரியாகப் புரிந்து கொண்டால் நாம் அவர்களிடம் ஏமாறாமல் இருக்கலாம்.

கவிக்கேது நாளைக் கணக்கு

12 டிசம்பர்

Antபதினாறு கவனகர் திரு. இராம. கனகசுப்புரத்தினம் அவர்களின் கவனக நிகழ்ச்சிகளில் ஈற்றடி தந்தால் அதற்கு வெண்பா இயற்றுவது அவர் வழக்கம். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கவிக்கேது நாளைக் கணக்கு என்று ஈற்றடி கொடுத்தாராம் . அந்த ஈற்றடிக்கு வெண்பா இயற்றுவதற்கு அவர் யோசித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு சிறகடித்துப் பறந்த ஒரு காகம் தூண்டுதலாக இருந்தது என்று சொல்லுவார். அவர் இயற்றிய வெண்பாவும் அதன் பொருளும் வேறு.

அரசனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறும் கவிஞனுக்கு அடுத்த நாளைப் பற்றிய கவலை இருக்காது என்ற பொருளில் அது அமைந்திருக்கும்.

அதே ஈற்றடிக்கு நான் இயற்றிய ஒரு வெண்பா இது. அதை இங்கே காணலாம்.

மழைக்காலம் யோசித்து சேர்த்த இரையால்

பிழைத்திருக்கும் சின்ன எறும்பு ~ தழைத்த

புவியரசின் வான்புகழ் பாடியே வாழும்

கவிக்கேது நாளைக் கணக்கு

இப்போது அரசனுடைய முடியாட்சி முறை இல்லாததால் இங்கே புவியரசு என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகாரம் மிக்கவர்களைக் குறிக்கும். அதுபோல் கவி என்ற சொல் கவிஞர்களைக் குறிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய சுயலாபத்திற்காக பொய் சொல்லிக் காரியம் சாதிப்பவர்களையும் குறிக்கும். கவிதை என்பதே ஒரு வகையில் ரசிக்கும்படி பொய்யுரைப்பதுதானே.

இதையே கவிஞர் வைரமுத்து அவர்களும்,

கண்ணுக்கு மை அழகு

கவிதைக்குப் பொய் அழகு

என்று ஒரு திரைப்பாடலில் எழுதியிருப்பார்.

இப்போது வெண்பாவுக்கு வருவோம்.

பின்னால் வரப்போகும் மழைக்காலத்துக்காக முன்கூட்டியே உணவை சேமிப்பது சுறுசுறுப்பான எறும்புகளின் வழக்கம். தன்னுடைய உணவுக்காக பிறர் கையை எதிர்பார்க்காத தன்மானம் அதில் புலப்படும்.

தான் பிழைப்பதற்காக தன்மானம் இன்றி, பலமும் அதிகாரமும் உள்ளவரைச் சார்ந்து அவரைப் புகழ்ந்து பேசி இழிவான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அடுத்த நாளைப் பற்றிய எந்தக் கவலையும் இருக்காது. அதுபோல் மற்றவர் வாழ்க்கையைப் பற்றிய கவலையும் இருக்காது. ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரைப் பற்றிக் கொள்வார்கள். பிறரை அழித்தாவது தான் வாழ நினைப்பார்கள்.

அவர்களை விட உருவத்தில் சிறிய எறும்பு உண்மையில் பெரியது.

பேசும் வார்த்தையில் இனிமை வேண்டும்

10 டிசம்பர்

வான்புகழ் தான்பெற்ற போதிலும் மாண்புமிக்கோர்
தான்புகல் வார்த்தைகள் மென்மையாய் – தேன்சொட்டும்
வகையினில் சொல்லுவர்; பண்பறியா ஜென்ம
பகைவரும் செல்வர் பணிந்து

வெண்பாவின் பொருள்:

பண்பும் மாண்பும் உள்ளவர்கள் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் இனிமையான வார்த்தைகளையே பேசுவார்கள்.

அப்படி பேசும் போது பண்பாடு இல்லாதவர்களும் ஜென்ம பகைவரும் கூட அவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்.