மகாலட்சுமி மந்திரம் – 19

19 மார்ச்

மந்திரம் – 19

पुत्रपौत्र धनं धान्यं हस्त्यश्वादिगवे रथम् ।
प्रजानां भवसि माता आयुष्मन्तं करोतु माम् ॥१९॥

புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஶ்வாதிகவே-ரதம் |

ப்ரஜாநாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மாம் ||..19

அர்த்தம்:

புத்ர பௌத்ர- குழந்தைகள், பேரக்குழந்தைகள்

தனம் – செல்வம்

தான்யம் – தானியங்கள்

ஹஸ்த்- யஶ்வாதிகவே – யானை, குதிரை, பசு போன்றவை

ரதம் – ரதங்கள் (மகிழுந்துகள்)

ப்ரஜாநாம் – அளவற்ற (சொத்துக்கள்)

பவஸீ – இவைகளை

மாதா – அன்னையே

ஆயுஷ்மந்தம் – வாழ்வாங்கு வாழ

கரோது – தந்தருள்க

மாம்– எனக்கு

பொருள்:

உலகின் சகல உயிர்களுக்கும் அன்னையே, குழந்தைகள், பேரக்குழந்தைகள், செல்வம், தான்யம், பசு, யானை குதிரை போன்ற வாகனம் ஆகியவற்றைத் தரும் திருமகளே என்னை நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெரும் செல்வமும் உள்ளவனாய் வாழ்வாங்கு வாழ அனைத்தையும் தந்தருள்வாய்

வெண்பா:

பசுகுதிரை யானைகள் பொன்பொருள் தான்ய

வசுரதமும் நான்பெற்று சீராய் – சிசுபேரன்

சொந்தம் தழைத்தோங்கித் தான்வாழ ஆயுளுடன்

தந்தருள்வாய் எல்லாம் எனக்கு

விளக்கம்:

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியே!

எனது வம்சம், குழந்தைகளுடனும் பேரன் பேத்திகளுடனும் தழைந்தோங்கி நீடூழி வாழத் தேவையான பொன் பொருள், ரத்தினம், பசு, யானை போன்ற அனைத்து செல்வங்களையும், குதிரை, ரதம் (இந்தக் காலத்தில் மகிழுந்து) போன்ற வாகனங்களையும், அதை அனுபவிக்க தேவையான நீண்ட ஆயுளையும் தந்தருள்வாய் அன்னையே.

மகாலட்சுமியை அன்னையே என்று அழைக்கும்போது, அவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பாக வாழ்வதற்கு என்னென்ன தேவையோ, அவை அனைத்தையும் நிச்சயம் வழங்குவாள் என்று பொருள் கொள்ளலாம்.

பின்னூட்டமொன்றை இடுக