Tag Archives: ரசிப்புத்தன்மை

உங்களை நீங்களே ரசியுங்கள்!

15 டிசம்பர்

ஆங்கிலத்தில் Self Love என்று சொல்வார்கள். உங்களை நீங்களே நேசிப்பது அல்லது ரசிப்பது என்று அர்த்தம். உங்களிடம் உள்ள குறை நிறைகளை தெரிந்து கொண்டு, உங்களின் நிறைகளைப் பற்றி பெருமை கொள்ளுங்கள். மனதளவில் உங்களைப் பற்றிய உயர்வான எண்ணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய உடம்பைப் பற்றிய தெளிவான அறிவு அவசியம். உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்களே கண்காணியுங்கள். யாரோ ஒரு டாக்டரிடம் ஒப்படைக்காதீர்கள். உங்கள் உடம்பைப் பற்றி உங்களுக்கு மட்டுமே அதிகம் அக்கறை இருக்கும். நீங்கள் உங்கள் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு உறுப்பையும் அக்கறையுடன் கவனித்தால் அவை உங்களோடு பேசும். அதாவது அதன் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உங்களுக்கு அர்த்தம் புரியும்.

உதாரணமாக வயிறு சரியில்லையென்றால், என்ன ஆச்சு என்று அதனையே நீங்கள் விசாரிக்கலாம். அது சொல்லும்,

“ராத்திரி பதினோரு மணிக்கு அந்த மோட்டலில் சாப்பிட்டியே. அவன் ஒரு சீக்கான கோழியை பொரிச்சு கொடுத்திட்டான். அது இப்போ வயித்திலே போய் பிரச்சினை பண்ணுது” என்று.

“சரி, இப்போ என்ன பண்றது?” என்று கேட்டால்,

“பேசாம வெறும் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு பட்டினியா இரு. அதுவா சரியாயிடும்.”

நம் உடம்பு ஒரு பெரிய தொழிற்சாலை போல. உள்ளே நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான பிரச்சினைகளை அதுவாகவே சரி செய்து கொள்ளும். முடியாத பட்சத்தில் மட்டுமே வெளியிலிருந்து மருந்து தேவைப் படும்.

இதையே திருமூலர்

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்

உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண் டான்என்

றுடம்பினை யானிருந் தோம்புகின்றேனே

என்று திருமந்திரத்தில் உரைக்கிறார்

உங்களை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிக எளிதாகிவிடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும்போது உங்கள் வெற்றி வெகுதூரத்தில் இல்லை. வானமே வசப்படும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

ரசிப்புத்தன்மை இப்போது இருக்கிறதா?

14 டிசம்பர்

ரசிப்புத்தன்மை பற்றி இன்னும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மக்களிடம் ரசிப்புத்தன்மை குறைந்ததற்கு என்ன காரண்ம்?

பற்றாக்குறைதான் காரணம். பணப் பற்றாக்குறை மட்டுமல்ல, ஆரோக்கியப் பற்றாக்குறையும் ஒரு காரணம்.

வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருப்பவனிடம் போய் கவிதையை ரசி என்றால் அவனால் ரசிக்க முடியுமா?

அதுபோல் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று யோசிப்பவனிடம் சென்று அருமையான பரத நாட்டியத்தை ரசி என்றால் அவனால் முடியுமா?

எனவே தன்னிறைவு பெற்ற தனி மனிதன் ஒருவனால் மட்டுமே எதையும் ரசிக்க முடியும் இல்லையா? அதற்கு நமக்குத் தெரிந்த வரையில் என்ன வாய்ப்பு அல்லது வழிமுறை இருக்கிறதோ, அதனை இந்த வலைப்பூவில் எழுத விருப்பம். விரும்புவோர் முயற்சி செய்து பயன் பெறலாம்.

சரி! ஏன் உயிரோட்டமுள்ள ரசிப்புத்தன்மையை உருவாக்க வேண்டும்? நீங்கள் ஏதோ ஒன்றை ரசிக்கும் போது உங்கள் மனம் ஒரு நிலைப்படுகிறது. மனம் அமைதியடைகிறது. தெளிவான சிந்தனை பிறக்கிறது. சந்தோஷம் கிடைக்கிறது. ஊக்கம் பிறக்கிறது. உற்சாகமாக நோய் நொடியற்ற வாழ்க்கை வாழ முடிகிறது. ஒரு நாகரிகமான சமுதாயம் உருவாகிறது.

சரி! இப்போது ரசிப்புத்தன்மையே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

இருக்கிறது. ஆனால் பயன் தரும் விதத்தில் இருக்கிறதா என்றால், சந்தேகம்தான்.

உதாரணத்திற்கு எல்லோரும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். சினிமாவை, டி.வி. சீரியல்களை ரசிக்கிறார்கள். அதெல்லாம் சரிதான்.

கிரிக்கெட் விளையாட்டை உண்மையில் ரசிக்கிறோமா? உண்மையான ரசனை எனில் யார் வென்றாலும் யார் தோற்றாலும் ரசிக்க வேண்டும். ஆனால் எத்தனை பேர் அப்படி இருக்கிறோம்? நாம் வென்றால் ஒரே துள்ளாட்டம்தான். தோற்றால்?

என்னைக் கேட்டால் ரசனையென்றால் அதன் மூலம் சந்தோஷம் கிடைக்க வேண்டும். மனம் உறுதியடைய வேண்டும். ஒரு தெளிவு பிறக்க வேண்டும்.

எனவேதான் நல்லபடியான ரசிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

என்னுடைய எழுத்து உங்களுக்கு மகிழ்ச்சியளித்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். குறை இருந்தால் என்னிடம் கூறுங்கள். என்னைத் திருத்திக் கொள்ள உதவும்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடலாம். மீண்டும் சந்திப்போம்.

வாழ்க்கையை ரசிக்கலாம் வாருங்கள்

13 டிசம்பர்

அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்.

இது என்னுடைய முதல் தமிழ் வலைப்பூ.

ரசித்தவை என்றுதான் முதலில் பெயரிட நினைத்தேன். ஆனால் அது இறந்த காலத்தை மட்டுமே குறிக்கும் என்ற் காரணத்தால், மூன்று காலங்களுக்கும் பொருந்தும் விதமாக ரசிப்பு என்று பெயரிட்டிருக்கிறேன்.

ரசிப்புத்தன்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமே உரிய ஒரு அற்புதமான விஷயம். அதற்கு மொழி பேதமில்லை. வயது ஒரு பொருட்டல்ல. அந்தஸ்து தடையில்லை. எந்த நாடு என்ற கேள்வியில்லை. ஆண், பெண் வித்தியாசமில்லை. கற்றவர், கல்லாதவர் ஒரு பொருட்டல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம்.

ஆனால் இப்போது ஒரு கேள்வி. இந்த ரசிப்புத்தன்மை இன்றைய தேதியில் எத்தனை பேரிடம் உயிரோட்டமாக இருக்கிறது? ஒரு சிறு குழந்தைக்கு எதைப் பார்த்தாலும் வியப்புதான். எல்லாமே அதிசயம்தான். ஆனால் பழக பழக, அது வளர வளர அந்த அதிசயம் அர்த்தமற்றதாகி விடுகிறது.

அதற்கான காரணத்தை அலசுவதும், மறுபடியும் ரசிப்புத்தன்மைக்கு புத்துயிர் கொடுப்பதும், என்னுடைய அனுபவத்தின் மூலமாக தெரிந்து கொண்ட, மற்றவர்களுடைய அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஒரு தளம் அமைப்பதும், அதன் மூலம் மற்றவர்கள் பயனடைய உதவுவதுமே இந்த வலைப்பூவின் நோக்கம். ஏன் உங்களுடைய அனுபவ பகிர்வுக்கும் இதில் இடமுண்டு.

தன்னுடைய அனுபவத்தின் மூலமாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்பவன் அறிவாளியாக, விபரமறிந்தவனாக ஆகிறான். ஆனால் மற்றவர்களுடைய அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்டவன் புத்திசாலியாகிறான். அனுபவம் என்பது அவ்வளவு முக்கியமானது. அதையே கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் அருமையாக வடித்திருப்பார்.

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது யாதெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

`அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி

அனுபவம் என்பதே நான்தான் என்றான்!

அனுபவங்களை தெரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடலாம். மீண்டும் சந்திப்போம்.