Tag Archives: விலைவாசி

விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்

19 ஜூலை

சென்ற ஞாயிற்றுக்கிழமை (15.07.12) விஜய் டி.வி.யில் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் மிக மிக முக்கியமான ஒரு விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட்து. அதாவது இப்போதைய விலைவாசி உயர்வு ஏன் ஏற்பட்டது, அது எப்படி நம்மைப் பாதிக்கிறது என்பது பற்றி கோபிநாத் அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் IT போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், சாதாரண பொதுமக்களும், சிறப்பு விருந்தினர்களாக சில பொருளாதார நிபுணர்களும், பொருளாதார பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சாதாரணமாக சிறப்பு விருந்தினர்கள், பாதி விவாதத்திற்கு பிறகுதான் விவாதத்தில் பங்கேற்பார்கள். மிக முக்கியமான இந்த விவாதத்தில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பங்கேற்றது ஒரு விசேஷம். தங்கத்தில் முதலீடு, பணவீக்கம் போன்ற பல விஷயங்கள் பேசப்பட்டன. அதில் கலந்து கொண்டவர்கள், பெரும்பாலும் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் விலையேறியிருப்பதாக தெரிவித்தார்கள். அதனால் தினசரி வாழ்க்கை நடத்துவதே மிகவும் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

அதாவது அரிசி, காய்கறி, கீரை, பழங்கள், பால், போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருள்களும், பஸ் டிக்கெட், ஆட்டோ, பெட்ரோல் போன்ற போக்குவரத்திற்கான அனைத்தும், கல்விக் கட்டணம், மின்சாரக் கட்டணம், கியாஸ் சிலிண்டர் விலை போன்றவைகளும், ஓட்டல் சாப்பாடு உட்பட அனைத்துமே விலை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்கள். ஒருவர் மாட்டுக்குத் தேவையான தவிடு, புண்ணாக்கு போன்றவையும் விலையேறியிருப்பதாக சொன்னார்.

இந்த விலையேற்றத்திற்கான காரணங்களை பொருளாதார நிபுணர்கள் அலசினார்கள். வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தது ஒரு காரணம் என்றும் இந்திய ரூபாயில் மதிப்பு குறைவது ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார்கள். டெபாசிட்டுக்கு 12% அளவில் அதிக வட்டி கொடுத்தாலும் முதலீடு செய்ய ஆளில்லை என்று சொன்னது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. பெட்ரோல் விலை உயர்வும் இதில் முக்கியப் பங்குவகிக்கிறது என்று அவர்கள் சொன்னதை சரியென்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பொருளாதாரம் படித்த பெட்ரோல் பங்க் சொந்தக்காரரும் ஒருவரும் அதில் பங்கேற்றார். அவர் சொன்ன விஷயம் முக்கியமானது. அதாவது அரசாங்கம் நினைத்தால் பெட்ரோல் விலையை நிச்சயமாக குறைக்க முடியும் என்றார். பெட்ரோலின் அடக்க விலை 46 ரூபாய் தான் என்றும் மீதியெல்லாம் அரசாங்க வரியென்றும், அதைக் குறைத்தால் பெட்ரோல் விலை கணிசமாகக் குறையும் என்றும் அது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணையின் விலை 111 டாலரிலிருந்து 86 டாலராக் குறைந்த போதும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததின் காரணமாக இங்கு பெட்ரோல் விலையை அதிகப் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் காரணம் சொல்கிறார்கள். இதற்குத் தீர்வாக கச்சா எண்ணையின் விலை குறையும் போது சீனா செய்வது போல நாமும் கச்சா எண்ணையை வாங்கி சேமிக்கலாம் என்று ஒருவர் சொன்னது நல்ல தீர்வாக அமையலாம்.

ஒவ்வொரு வருடமும் நம் நாட்டின் பட்ஜெட்டில், பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதனை சரி செய்ய அரசாங்கம் கரன்சியை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது. அப்படி பணப்புழக்கம் அதிகரித்தாலும் அதற்கேற்ப உற்பத்தி அதிகமாகாத போது விலைவாசி கட்டாயம் உயரும் வாய்ப்புள்ளது என்பது பொருளாதார நிபுணர் நாகப்பன் அவர்களின் கருத்து.

அத்தோடு தேவை அதிகரித்து உற்பத்தி குறைந்தாலும் விலைவாசி உயரும் என்பதும் பொருளாதார நிபுணர்களின் கருத்து. உதாரணமாக இப்போது மின்சாரத்தின் பயன்பாடு மிக அதிகமாக ஆகியிருக்கிறது. ஆனால் அதற்கேற்ப மின்சார உற்பத்தி அதிகமாகவில்லை.

பொருளாதாரத்தை சரியாக கையாளாததும் ஒரு காரணம் என்று அழகேச பாண்டியன் என்பவர் கூறினார். அதாவது எண்ணைக் கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குவதால் பெட்ரோல் விலையேற்றம் தவிர்க்க முடியாதாதது என்று காரணம் சொல்லப் படுகிறது. ஆனால் இழப்பீடு கிடைத்தவுடன் அதே எண்ணைக் கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தது அதிசயமல்லவா? என்று அவர் கேட்டது சிந்திக்க வைத்த கேள்வி.

கடந்த ஐந்து வருடங்களில் சுமார் இருபது லட்சம் கோடி ரூபாயை வரிவிலக்கு என்ற பெயரில் அரசாங்கம் விட்டுக் கொடுத்திருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டில் கல்வி, மருத்துவம், மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தாராளமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒருவர் சொன்னது யோசிக்க வேண்டிய விஷயம்.

விலைவாசியைக் கட்டுப் படுத்துவதற்கான காரணங்களை அலசியபோது சில அற்புதமான திட்டங்களை சிலர் முன் வைத்தார்கள். உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் அதன் உற்பத்தி விலை பத்து ரூபாய்தான். ஆனால் அது பல கைகள் மாறி கடைக்கு வரும்போது முப்பத்தைந்து ரூபாய் அல்லது நாற்பது ரூபாய் ஆகிறது. அதாவது உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைப்பதை விட இடைத்தரகர்களுக்கு மூன்று மடங்கு பணம் போகிறது. எனவே இடைத்தரகர்களை விட்டுவிட்டு ஏன் நேரடி விற்பனை முறையை கொண்டு வரக்கூடாது என்று ஒருவர் கேட்டார். மிகவும் அர்த்தமுள்ள கேள்வி.

மாற்றம் என்பது ஒன்றே மாற்ற முடியாதது. அதனால் மாற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்யலாம், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், கூடுதல் நேரம் வேலை செய்து அதிகப்படியான செலவுகளுக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கலாம் என்றும் ஒருவர் சொன்னார். மற்றொருவர் தரமான பொருளுக்கு அதிக விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது தவிர்க்க முடியாதது, விலைவாசி உயர்ந்தால் நம்முடைய வருமானமும் உயரும் என்று ஒரு சாரர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் சம்பளமாக வாங்கும் பணத்தின் மதிப்பும் குறைந்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் சொன்னது மறுக்க முடியாத உண்மை.

இதைப் பார்த்த போது நமக்கு சில கேள்விகள் எழுந்தன. விலையேற்றத்தினால் வியாபாரிகள் பாதிக்கப் படுவதில்லை, அவர்கள் மற்றவர்கள் தலையில் சுமையை ஏற்றி விடுகிறார்கள் என்று ஒருவர் சொன்னார். அப்படியென்றால் ஏன் எல்லோரும் தங்களால் முடிந்த அளவில் ஏதாவது ஒரு வியாபாரம் (பகுதி நேரமாக) செய்யக்கூடாது?

ஒரு பெண், தனக்கு மாதம் 3500 ரூபாய்தான் சம்பளம் என்றும், அதில் தன்னுடைய குழந்தைக்கு பால் வாங்கக்கூட தன்னுடைய சம்பளம் போதவில்லை என்று அழுது கொண்டே சொன்னார். ஒரு பள்ளி ஆசிரியைக்கே இந்த நிலமையா என்று மனம் வலித்தது. இன்னொரு பெண்மணி சொல்லும் போது தன் கணவர் மட்டுமல்ல, தானும் வேலை செய்தால்தான் தினசரி சாப்பாடே சாப்பிட முடிகிறது என்றார். அதுவும் இரவு பதினோரு மணிக்குத்தான் சாப்பிட முடியும் என்றபோது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று எண்ணத் தோன்றியது.

பஸ் கட்டணத்தில் வெறும் 7.50 ரூபாய் மிச்சப் படுத்துவதற்காக சாதாரண வெள்ளை போர்டு பஸ் வருவதற்காக அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை கால் கடுக்க பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக ஒருவர் சொன்னது வேதனையான விஷயம். இன்னொருவர் கூறும்போது தினமும் 10 ரூபாய் மிச்சப் படுத்தலாம் என்று அலுவலகத்துக்கு நடந்தே போவதாகச் சொன்னது இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துக் காட்டியது.

மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த தகுந்த வாய்ப்புகள், நம் நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறது. பயம், தயக்கம், கூச்சம், தோல்வி மனப்பான்மை போன்ற பலவித சுயமுன்னேற்றத் தடைகளை உடைத்தெறிந்து, வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டு தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்தால் இது போன்ற விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வளமான வாழ்க்கைக்கு வழி செய்து கொள்ளலாம்.

இது போன்ற ஒரு விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டதற்காக கோபிநாத் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

Advertisements