Tag Archives: லண்டன்

வெற்றிபெற வேண்டுமா? கடினமாக பயிற்சி செய்யுங்கள்!

7 ஆக

தான் கூட்டத்தில் பேசியபோது நிகழ்ந்த சுவையான விஷயங்களைப் பற்றி நெல்லிக்கனியைக் கொடுத்தது அதியமானா? அவ்வையாரா? இடுகையில் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா?

அதற்குப் பிறகு இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. வியாபாரத்தில் தீவிரமாக இருக்கிறார் போலும் என்று நினைத்தேன். ஆனால் திடீரென நேற்று நம்மைப் பார்க்க வந்திருந்தார். ஒரு நண்பரை பார்க்க வந்ததாகவும், அப்படியே நம்மையும் பார்க்க வந்ததாகவும் சொன்னார். கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சின் நடுவே, “கவிஞரே, நீர் நன்றாகப் பேசுகிறீர், உம்முடைய பேச்சை எல்லோரும் ரசிக்கிறார்கள், எல்லாம் சரிதான்; ஆனால் நெல்லிக்கனியைக் கொடுத்தது அதியமானா? அவ்வையாரா? என்று பேசிய விஷயத்தை குறிப்பிட்டீரே, அந்த அனுபவத்திலிருந்து நீர் கற்றுக் கொண்டது என்ன?” என்று கேட்டேன்.

“கூட்டத்தில் பேசுவது என்பது ஒரு கலை; எப்படி ஆரம்பிக்க வேண்டும். எப்படி முடிக்க வேண்டும். பேசும்போது நமது பார்வை எப்படி இருக்க வேண்டும். நமது செய்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொண்டால் நமது பேச்சு சிறப்பாக இருக்கும் என்று என்னுடைய நண்பர் ஒருவர் சில குறிப்புக்களை சொல்லியிருக்கிறார். அதைத்தான் இப்போது பயிற்சி பண்ணுகிறேன்”. என்றார்.

“அது என்ன? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்?” என்று கேட்டோம். நாமும் அதை தெரிந்து கொள்ளலாமே என்ற ஆர்வம்தான்.

“மேடைப் பேச்சில் முதலில் போக்க வேண்டியது அவை நடுக்கம். புதிதாக பேசுபவர்களுக்கு கை, காலெல்லாம் நடுங்கும். பேச்சு வராது. முன்னால் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தால் பயம் வரும். ஆனால் இந்த பயத்தைப் போக்க ஒரு வழிமுறை இருக்கிறது. எனது நண்பர் அதற்கான பயிற்சியில் கலந்து கொண்டபோது சொல்லிக் கொடுத்தார்களாம். அதாவது முன்னால் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு பேச வேண்டுமாம். அப்படி நினைத்துக் கொண்டு பேசும்போது பயம் போய் விடுமாம்.” என்றார்.

“நீர் அப்படித்தான் நினைத்துக் கொள்வீரா?” என்று கேட்டோம்.

“இல்லை, இன்னொரு மனப்பான்மையும் இருக்கிறது. அதாவது நம் முன்னால் இருப்பவர்கள் எல்லாம் நம்மிடம் கடன் வாங்கியவர்கள் என்று நினைத்துக் கொள்வது. அதை திருப்பிக் கொடுப்பதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று நம்மிடம் கெஞ்சுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டால், நமக்கு ஒரு தோரணை வருமல்லவா? அதே மனப்பாங்கில் பேச வேண்டுமாம்.” என்றவர், தொடர்ந்து “அதைவிட முக்கியம் பேசும்போது கூட்டத்தினரை நம்முடன் உரையாட வைக்க வேண்டும். நாம் கேள்வி கேட்டு கூட்டத்தில் உள்ளவர்களைப் பதில் சொல்ல வைத்தால் கேட்பவர்களுக்கு உற்சாகம் பிறக்குமாம்.”

“அப்படியா?”

“உதாரணமாக நான் பேசியபோது, ‘நெல்லிக்கனி, அவ்வைப் பிராட்டி என்றவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது?’ என்று கூட்டத்தினரைப் பார்த்து கேட்டிருந்தால், கூட்டத்திலிருந்து அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தான் என்று பதில் வந்திருக்கும். பதில் எதுவும் வராவிட்டாலும் ‘அதியமான், அவ்வையாரிடமிருந்து நெல்லிக்கனியைப் பெற்றான் அல்லவா?’ என்று கேட்டிருந்தால், இல்லை, இல்லை அதியமான்தான் அவ்வையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தான்’ என்று பதில் வந்திருக்கும்.

நாம் உடனே சுதாரித்துக் கொள்ளலாம். ‘நீங்கள் தூங்குகிறீர்களா, இல்லையா? என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் மாற்றிச் சொன்னேன் என்று சமாளித்து விடலாம்’. கூட்டமும் அதை வெகுவாக ரசிக்கும்” என்றார்.

பேச்சுக்கலையில் கவிஞர் மிகவும் தேறிவிட்டார் என்றுதான் தோன்றியது. ஆரம்ப காலத்தில் இருந்த கவிஞர் கடிவேலுவா இவர்? எப்படி இருந்தவர் எப்படி மாறிவிட்டார்!

“ஒலிம்பிக் போட்டிகளை ரசித்தீரா?” நமது சிந்தனை ஓட்டத்தை கவிஞரின் கேள்வி கலைத்தது.

“ஆம், மிகவும் ரசித்துப் பார்ப்பேன். அதிலும் நம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் விளையாடும்போது விரும்பிப் பார்ப்பேன்.” என்றேன்.

“சாய்னா நேவாலின் திறமை இந்த ஒலிம்பிக்கில் பளிச்சிட்டதைக் கவனித்தீரா?” என்றார் கவிஞர்.

“ஆமாம். சாய்னாவின் கடின உழைப்பு அவருடைய ஆட்டத்தில் தெரிந்தது. ஆனால் அரை இறுதியில் தோற்றது பாட்மின்டனில் நமது தங்கக் கனவை தகர்த்து விட்டது. அவரே ஒரு பேட்டியில் கூறியதைப் போல, சீன வீராங்கனைகள் நெட்டுக்கு மிக அருகில் வந்து விளையாடுகிறார்கள். அந்த அளவுக்கு நமக்கு அதில் பயிற்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நாம் திறமையை வளர்த்துக் கொண்டால், சாய்னாவை யாராலும் வெல்ல முடியாது என்பது நிச்சயம். இப்போதைக்கு இந்த வெண்கலப் பதக்கமே ஒரு சாதனைதான். சாய்னாவுக்கு நமது வாழ்த்துக்கள்.” என்றோம்.

“நீர் சொல்வது உண்மைதான். அரை இறுதியில் இந்த தோல்வி சாய்னாவின் திறமையை மேலும் மெருகூட்ட ஒரு அடித்தளமாக அமையும் என்று நம்பலாம். டென்னிஸில் சானியா, லியாண்டர் பயஸ் ஜோடியும் நன்றாகத்தான் ஆடியது. ஆனால் சோபிக்க முடியவில்லை” என்றார்.

“கவிஞரே, உமக்கு லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கவனிக்கக்கூட நேரம் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு வீரரின் பின்னாலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் கூடிய கடின உழைப்பு இருக்கிறது. வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் ஒவ்வொரு வீரரும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு செய்யும் முயற்சி பாராட்டத்தகுந்தது.” என்றார்.

“அதேபோல் நாமும் நம்முடைய வாழ்க்கையில், நமது ஒவ்வொரு முயற்சியிலும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, வெற்றிபெற கடினமாக பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மேடைப்பேச்சாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் அல்லது வியாபாரமாக இருந்தாலும், வெற்றி பெறுவது நிச்சயம். அதற்கு இந்த விளையாட்டு வீரர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்” என்றார்.

கவிஞர் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

Advertisements

லண்டனுக்கு இலவச சுற்றுப்பயணம் போக வேண்டுமா?

9 ஜூன்

தன்னுடைய நண்பர் லண்டனுக்கு இலவச சுற்றுப்பயணம் சென்று வந்ததாக கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா?

நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. காலையிலேயே கவிஞர் கடிவேலுவும் போன் செய்து ஞாபகப் படுத்தினார். சரியாக பத்து மணிக்கு சென்னை பாரிமுனையில் இருக்கும் அந்த மண்டபத்துக்கு வந்து விடச் சொன்னார்.

நான் அங்கு சென்ற போது ஒரு நீண்ட க்யூ வரிசை நின்றிருந்தது. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார். அதனால் வரிசையில் நிற்காமல் உள்ளே நுழைந்தோம். குளிரூட்டப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக கூடியிருந்தார்கள்.

யாரோ ஒருவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அன்றையக் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்தினார். அதுவே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது.

பின்னர் சிவப்புக் கலரில் டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும் அணிந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் மேடையில் தோன்றினார். கூட்டத்தினருக்கு தன்னை அறிமுகப்படுத்தி விட்டு எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனே கவிஞர் கடிவேலு, “இவர்தான், இவர்தான் சமீபத்தில் இலவசமாக லண்டன் சென்று வந்தவர்” என்றார்.

பின்பு, மேடையில் இருந்த ஒரு வெள்ளைத்திரையில் சில போட்டோக்களைக் காண்பித்தார்கள். அதில் அந்த மனிதர் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்புவது, அவரை வழியனுப்ப வந்தவர்கள் யார் யார், விமானத்தில் படுத்து தூங்க வசதியான இருக்கை (பிஸினஸ் கிளாஸ் பயணமாம்) போன்ற படங்களும், பின்பு லண்டன் மாநகரில் அவர்கள் சுற்றிப்பார்த்த `லண்டன் ஐ’, `மேடம் துஸ்ஸாட் மியூசியம்’, மற்றும் பல இடங்கள் ஆகியவையும் அந்த போட்டோக்களில் இருந்தது.

அத்துடன் இவர்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் யார் யார் அந்த சுற்றுப் பயணத்திற்கு வந்தார்கள் என்றும் அந்த போட்டோக்களில் இருந்தவர்களைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.

பின்பு அவருடைய மனைவி பேசும் போது, லண்டனில் இந்த வருடம் (2012) ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதாலும், இங்கிலாந்து நாட்டின் எலிஸபெத் மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டம்  என்பதாலும், லண்டன் மாநகரமே கோலாகலமாக இருந்ததாகவும், இந்த சமயத்தில் அங்கு சுற்றுலா சென்றது மிகவும் மகிழ்ச்சியளித்தாகவும் கூறினார்.

ஒவ்வொரு விஷயத்தை அவர்கள் சொல்லும் போது மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்ததையும், ஆர்ப்பரித்ததையும் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆனால் இன்னும் என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எதற்காக இந்தக் கூட்டம்? யாரோ வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று வந்த அனுபவத்தை கேட்டு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? இலவச சுற்றுப் பயணம் என்று வேறு கூறுகிறார்களே, எதற்கு, யார் கூட்டிப் போனார்கள்?

விடை தெரியவில்லை. சற்று திரும்பி கவிஞர் கடிவேலுவைப் பார்த்தேன். அவரோ உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார். இப்போது அவரிடம் கேட்டாலும் நிச்சயமாக பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லையென்பது புரிந்தது. அதனால் கூட்டம் முடியும் வரை பொறுமையாக இருக்கலாம் என்று முடிவு செய்து நடப்பதைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

மனதின் ஒரு ஓரத்தில் நமது நண்பர் மூணாறுக்கு சுற்றுலா சென்று அவஸ்தைப்பட்டு வந்த கதையும் நினைவுக்கு வந்தது.