Tag Archives: யோகசூத்ரம்

எதுவும் சாத்தியமே!

22 செப்

மீண்டும் கவிஞர் கடிவேலு!

சென்ற இடுகையில் நகைச்சுவைக் கவிதை என்ற தலைப்பில், எலித்தொல்லையால் அவஸ்தைப் பட்ட நம் நண்பர், அது பற்றி நாம் எழுதிய ஒரு கவிதையை பிரிண்ட் எடுத்து எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்ததாகவும், அதன் பிறகு அவருக்கு எலித்தொல்லை குறைந்து விட்டது என்று அவர் சொன்னதாகவும் எழுதி இருந்தோம்.

அதைப் படித்த இன்னொரு நண்பர் நமக்கு போன் செய்து, இதெல்லாம் சாத்தியமான விஷயமல்ல என்றும், ஒன்று உமது நண்பர் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதாவது காரணங்களால் எலித்தொல்லை குறைந்திருக்க வேண்டும் என்றும் அதனால் இதெயெல்லாம் நம்ப வேண்டாம் என்றும் சொன்னார். நமக்கும் அவர் சொல்வது சரியென்றே தோன்றியது.

ஆனால் அதைப் படித்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது கவிஞர் கடிவேலுவும் போன் பண்ணினார். அவருடைய குரலைக் கேட்ட நமக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

“என்ன கவிஞரே, நலமாக இருக்கிறீரா? ரொம்ப நாளாக காணவில்லையே” என்றோம்.

“இப்போது நீரே கவிதை எழுதுகிறீரே. அதனால் நான் இல்லாதது ஒன்றும் பெரிய குறையாகத் தெரியாது” என்றார்.

“ஒரு ஜோதிடராக நீர் இப்போது பிஸியாகி விட்டதால் உம்மைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நானே கவிதை எழுத முயற்சிக்கிறேன்” என்றேன்.

“நன்றாகத்தான் எழுதுகிறீர். வல்லமை மின்னிதழில்கூட உமது சிலேடைக் கவிதையை பாராட்டி இருந்தார்களே” என்றார்.

“எல்லாம் உமது சகவாசத்தால் வந்த விஷயம்தான். பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நம் மனதுக்கு பயிற்சி கொடுத்தால் அது நம்ப முடியாத பல வேலைகளையும் எளிதாக செய்து விடும். இதில் அதிசயம் ஒன்றுமில்லை” என்றார்.

“மனதுக்குப் பயிற்சியா, என்ன சொல்கிறீர்?, புரியவில்லையே” என்றேன்.

“ஆமாம், பிராணாயாமம், தியானம் போன்ற முறைகளினால் மனத்தை ஒழுங்கு படுத்தினால் சாதாரணமாகச் செய்ய முடியாத வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என்று பதஞ்சலி முனிவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

“கவிஞரே, நீர் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுகிறீர் என்று புரிகிறது. அதைக் கொஞ்சம் விளக்கமாக நமக்குப் புரியும்படி சொல்லுங்களேன்” என்றேன்.

“சரி, உதாரணமாக உமது சென்ற இடுகையையே எடுத்துக் கொள்வோம். தொந்தரவு தந்த எலியை காலி செய்ய வைப்பதற்காக நீர் ஒரு கவிதையை எழுதி இருந்தீர் அல்லவா”

“ஆமாம்”

“அதன் பிரதியை உமது நண்பர் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்து, அதனால் எலித்தொல்லை குறைந்து விட்டதாகவும் சொல்லி இருந்தீரே”

“ஆமாம். அவர் அப்படித்தான சொன்னார்”

“அது நடந்திருக்க சாத்தியம் உள்ளது” என்றார். நமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

“உண்மையாகத்தான் சொல்கிறீரா” என்றோம்

“ஆமாம், உமது நண்பர் சாத்வீகமானவர் என்றும் பிற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்று நினைப்பவர் என்றும் சொல்லி இருந்தீர். அதுதான் முதல்படி. இதைத்தான் அஹிம்சை என்கிறார் பதஞ்சலி முனிவர். மனதை ஒழுங்கு படுத்துவதில் இது ஒரு அங்கம். அதில் தேர்ச்சி பெற்று, மனம் அமைதி அடையும் போது மனம் பொருளை அசைக்கும். மனத்தில் நினைக்கும் விஷயங்கள் தானாக நடக்க ஆரம்பிக்கும்” என்றார்.

“வெளியேற வழியே இல்லாத ஒரு இரும்புக் கூண்டுக்குள் ஒரு எலியை அடைத்தால் அது தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று சுஜாதா சொல்லி இருக்கிறாரே, அது போலவா?” என்றோம்.

“இல்லை, அது வேறு. அது அணுவியல் சம்பந்தப்பட்டது. இந்த விஷயம் வேறு” என்றார்.

கவிஞர் கடிவேலு சொன்ன விஷயங்கள் நமக்கு முழுவதுமாகப் புரியவில்லை. ஆனால் ஏதோ கொஞ்சம் புரிவது போலும் தோன்றியது.

“கவிஞரே, இந்த விஷயத்தைப் பற்றியும், பதஞ்சலியின் யோகத்தைப் பற்றியும் எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்” என்று கேட்டேன்.

“பார்க்கலாம். அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. எனக்கு நேரம் கிடைக்கும்போது, பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் சிலவற்றை விளக்க முயற்சிக்கிறேன்” என்றார்.

நமக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

“கவிஞரே, உம்மைப் போன்ற ஒரு நண்பரைப் பெற்றது, எனது பாக்கியம்” என்றேன்.

“அதுபோல் யாரையும் மிகவும் உயர்வாக சொல்ல வேண்டாம். எல்லோருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது. அதை உணர்ந்து கொண்டவர்கள் அதைப் பயன் படுத்துகிறார்கள். அவ்வளவுதான்” என்றார்.

“சரி, உமக்கு நேரம் கிடைக்கும் போது என்னை அழையும்” என்று சொல்லி போனை வைத்தேன்.

கவிஞர் கடிவேலு ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது கொண்டு வருகிறார். அது நல்ல விஷயமாகவும் தேவையானதாகவும் இருக்கிறது. இப்போது நமக்கு யோகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிகமான ஆவல் ஏற்பட்டது.

அதனால் அவருடைய அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

Advertisements