Tag Archives: போட்டி

வீணையும் பெண்ணும் – சிலேடை

5 ஆக
படக்கவிதைப் போட்டி - 24

படக்கவிதைப் போட்டி – 24

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-24 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்

வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்

வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்

நல்லதோர் வீணையாம் பெண்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

Advertisements

பறவைகள் காணும் அதிசயம்!

17 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 21

படக்கவிதைப் போட்டி – 21

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-21 க்கு நாம் அனுப்பிய கவிதை.

குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு

சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை

காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்

கூட்டமாய் வந்தது பார்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அரசனுக்கு இது முறைதானோ?

10 ஜூலை
படக்கவிதைப் போட்டி-20

படக்கவிதைப் போட்டி-20

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-20 க்கு நாம் அனுப்பிய கவிதை.

அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
       அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
       உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
       இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க 
சிறுமுயலை கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
       செயல்தான் முறையாமோ சொல்லேன்?

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி கவிதைக்குப் பாராட்டு

6 ஜூலை

சென்ற வாரம் வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டி – 19 க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அதில் நாம் அனுப்பி இருந்த அணியாத முகமூடி ஜாக்கிரதை என்ற தலைப்பிலான கவிதை, இரண்டாவது இடத்துக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப் பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நாம் அனுப்பிய கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி ஜாக்கிரதை!

3 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 19

படக்கவிதைப் போட்டி – 19

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-19 க்கு நாம் அனுப்பிய கவிதை.

விதவிதமாய் மனிதர்தாம் நம்மிடையே இருக்கின்றார்;

     விசித்திரமாய் நாய்புலிமான் சிங்கம் நரியாக

நிதமொரு விதமான விலங்காக வலம்வந்தே

     நடமாடித் திரிகின்றார்; மனிதமுக(மே) முகமூடி!

முதலையாய் கடித்துயானை சாய்த்திடுவார்; விழுங்கும்

     மலைப்பாம்பாய் மாறிடுவார்; நன்மைதான் செய்து

உதவுகின்ற சாக்கில் உறவாடித் திரிந்திடுவார்;

     உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!

 

பழகும் விதத்தில் பார்க்கும் திறத்தில்

     பக்குவம் அறிந்து உணர்ந்து கொள்வீர்

அழகான முகத்தில் அணியாத முகமூடி

     அரவமா கொக்கா ஆளையே விழுங்கும்

கழுகா சிங்கமா நரியாஎன் றேஅறிந்து

     கணித்து அதற்கேற்ப முகமூடி அணிந்திடுவீர்

வழுவாது இக்கருத்து; அதுவிடுத்து புலியின்முன்

     வந்தமான் படும்பாடு யாவரும் அறிவரே!

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

மாபெரும் கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை…

30 ஜூன்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இணையத் தமிழே இனி! என்ற தலைப்பில்

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய 

மாபெரும் கவிதைப் போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றவர்கள்

வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை…

 

இணையத் தமிழே இனி
அற்புதமாய் ஓர்உலகம் நாம்படைப்போம் அங்கு
       அனைத்துவகை மக்களுமே தானிருப்பர்
சிற்பியவன் தான்செதுக்கும் சிற்பம்போல் மக்கள்
       சிறப்புடனே வாழ்ந்திடவே செய்திடுவோம்
உற்சாகம் பொங்குகின்ற உன்னதவாழ்க் கையை
       உலகத்தோர் பெற்றிடவே ஒத்துழைப்போம்
பொற்காலம் என்றதனை பிற்கால சரிதம்
       போற்றிடவே ஏற்பாடுநாம் செய்திடுவோம்

 

தற்பெருமை பேசிடஓர் ஆளுமில்லை எங்கும்
       தவறான பேர்வழியாய் யாருமில்லை
தற்குறிதான் ஊரிலில்லை லஞ்சமில்லை எங்கும்
       தர்மமிகு வாழ்க்கைதான் எங்கெங்கும்
பிற்காலச் சந்ததிகள் யாவருக்கும் அங்கே
       பிறந்தாலே பெருமைதான் என்றிருக்கும்
உற்பாதம் ஏற்படுத்த யாருமில்லை என்ற
       உண்மையே எங்கேயும் நின்றிருக்கும்

 

கற்பதற்கு மூலமாகத் தீந்தமிழ்தான் கணினி
       கையாள தேவையும் அம்மொழிதான்
பற்பலவாய் எத்தனையோ மொழியிருந்தும் பலரும்
       படித்திடவே ஏங்குவது தமிழாகும்
அற்புதமாய் விஞ்ஞானக் கருத்தெல்லாம் நல்ல
      அழகான தமிழிலேதான் அமைந்திருக்கும்
நற்காலம் வருகுதென்று நாமுரைப்போம் இனிமேல்
      நாமிணையச் செய்யும்இன் பத்தமிழே

 

 

புதிய சிந்தனைக்குப் பாராட்டு

29 ஜூன்

படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

வல்லமை மின்னிதழ் நடத்தும் இந்தப் போட்டிக்கு நாம் அனுப்பி வைத்த கவிதை பாராட்டுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதோ போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

…………………

…………………

அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
       மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
       இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
       தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
       தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

 

வல்லமைக்கும், போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி!

கைகாட்டியாய் தடுக்கும் மரக்கிளை

26 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 18

படக்கவிதைப் போட்டி – 18

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-18 க்கு நாம் அனுப்பிய கவிதை.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை

     மனத்தால் மதமும் மதத்தால் இனமும்

இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்

     இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்

தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே

     தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ

தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட

     தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

நன்றி: வல்லமை மின்னிதழ்

உதயமும் அஸ்தமனமும்

19 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 17

படக்கவிதைப் போட்டி – 17

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-17 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தங்க நிறத்தில் வானம்

தகதகக்கும் இளஞ் சூரியன்

துள்ளி வரும் வெள்ளலைகள்

கொள்ளை கொள்ளும் மணல்வெளி

இதமான காற்றின் தழுவல்

இன்பமான காலைப் பொழுது

பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து

பரவசப்படுத்தும் அற்புத அழகு

இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்

இன்பமான வாழ்வில் மகிழ்வோம்

எல்லாம் சரிதான் – ஆனால்….

எச்சரிக்கை செய்கிறது மனது

அழகின் பின்னே மறைவாய்

ஆபத்தும் இருக்கலாம்  ஜாக்கிரதை!

இன்று போல்தான் உலகம்

அன்றும் விடிந்தது நமக்கு

அமைதியாய் தோன்றும் கடலும்

ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது

சுனாமி பேரலையாய் புகுந்து

சுருட்டிக் கொண்டு போனது

மனித உயிர்கள் எல்லாம்

மரணத்தின் பிடியில் சிக்கியது

கொத்துக் கொத்தாய் உயிரற்று

குடிசைகள் எங்கும் பிணங்கள்

வருஷம்பல கடந்தும் மனது

வலிக்கின்ற ஆறாத ரணங்கள்

ஒரே நாளில் வாழ்வு

உருக்குலைந்து போனது

அழகான உதயம் அன்று

அஸ்தமனமாய் ஆனது

நன்றி: வல்லமை மின்னிதழ்

குரங்கு சொல்லும் சேதி!

12 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 16

படக்கவிதைப் போட்டி – 16

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-16 க்கு நாம் அனுப்பிய கவிதை.

வலது பக்க உடலைக்கூட

வலது கையால் சொறியும்

வனத்துக் குள்ளே மரத்திலேறி

தாவித் தாவித் திரியும்

தாவுகின்ற கிளைகள் எல்லாம்

பூமி நோக்கிச் சரியும்

பூவைப் பிய்த்து போடும்போது

குரங்கின் சேட்டை புரியும்

 

குதித்து வந்து வாழைப்பழத்தை

பறித்துக் கொண்டு விரையும்

பல்லைக் காட்டி சீறும்வாயும்

காதை நோக்கி விரியும்

காசுக்காக ஆடச் சொல்வான்

மனிதன் என்று அறியும்

மனமுமொரு குரங்கு என்று

மனிதருக் கெல்லாம் தெரியும்

 

மரத்தை வெட்டி காடழித்தால்

மழையும் அங்கே பொய்க்கும்

நீண்ட தூரம் நீருக்காக

நடக்கும் நிலை வாய்க்கும்

வழியும் துளியாம் குடிநீரை

வாயை வைத்து உறியும்

நிலமை வந்து சேருமென்று

நமக்கும் கூடத் தெரியும்

 

இயற்கை பறவை விலங்குகளின்

இயல்பில் மனிதன் கற்பான்

அறிவு ஆற்றல் சிந்தனையால்

அரிய செயல்கள் புரிவான்

குரங்கு தரும் எச்சரிக்கை

புரிந்தால் வாழ்வு சிறக்கும்

பூமியெங்கும் பசுமையானால்

புதிய வாழ்வு பிறக்கும்

நன்றி: வல்லமை மின்னிதழ்