Tag Archives: புத்தகம்

மகாகவி பாரதியின் ‘சந்திரிகையின் கதை’க்கு முடிவுரை

6 அக்

மகாகவி பாரதி, ‘சந்திரிகையின் கதை’ என்ற தலைப்பில் எழுதிய அற்புதமான கதையை பூர்த்தி செய்வதற்குள் காலஞ்சென்று விட்டதால், அந்தக் கதை முற்றுப் பெறாமல் போய்விட்டது. அந்தக் கதைக்கு முடிவுரை எழுதும் முயற்சியாக ஒரு போட்டியை டெல்லியில் உள்ள அவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்திருந்தது.

அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டு,  அந்தக் கதையின் முடிவுரையை எழுதி அனுப்பி வைத்து இருந்தேன். இப்போது அந்தப் போட்டியின் முடிவாக  என்னுடைய கதை சிறந்த முடிவுரையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரமணிய பாரதி என்ற பெயரைக் கேட்டாலே சின்னக் குழந்தைக்கும் சுதந்திர வேட்கை உண்டாகும் என்று கற்றறிந்தோர் சொல்வதுண்டு. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று கொண்டாடிய தீர்க்கதரிசி பாரதி. ஆனால் அதற்கு வெகுகாலத்திற்கு முன்பே காலன் பாரதியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆனாலும் இன்றும் மகாகவி பாரதி தன்னுடைய படைப்புகளின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பதை நாமறிவோம். அப்படிப்பட்ட சரஸ்வதியின் முழுமையான கடாட்சம் பெற்ற பாரதியின் முடிவு பெறாத கதைக்கு முடிவு எழுதும் முயற்சியாக ஒரு போட்டியை ஏற்பாடு செய்த

அவ்வை தமிழ்ச் சங்கத்துக்கு நமது நன்றி!

அந்தக் கதை அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் இணைய தளத்திலும், முகநூலிலும் வெளிவர இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

Advertisements

புதுமைப்பித்தன் என்றொரு மாமேதை!

25 ஜன

Image1சுந்தர ராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ புத்தகம் வாங்கிய கதை என்ற தலைப்பில் வெளிவந்த சென்ற இடுகையில், சிறு வயதிலேயே எனக்கு படிக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றும், சிறு வயதில் நான் படித்த எழுத்தாளர்கள் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் என்னை ஏன் மறந்தாய் என்று புதுமைப் பித்தனே என்னைப் பார்த்துக் கேட்பது போல், அவரைப் பற்றியும், அவருடைய படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு நமது நண்பர் எழுத்தாளர் வில்லவன் கோதை அவர்கள் மூலமாக நேற்று எனக்குக் கிட்டியது.

சென்னை தி. நகரில் ஸ்ரீ கிருஷ்ணகான சபா மற்றும் ஸ்ரீகிருஷ்னா ஸ்வீட்ஸ் இவர்களுடன் இணைந்து இலக்கிய வீதி இனியவன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த விழாவில் எழுத்தாளர் யு. மா. வாசுகி அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கு பெற்ற அந்த விழாவில் பதிப்பாசிரியரும் பேராசிரியருமான திரு வெங்கடாசலபதி அவர்கள் புதுமைப்பித்தனின் பல்வேறு பரிமாணங்களையும் தன்னுடைய உரையில் எடுத்து வைத்தபோது, தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனே வழிகாட்டியது போல் கிடைத்த வாய்ப்பு அது என்று தோன்றியது.

Image2மலர்மகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின்னர், புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்கள் தன்னுடைய தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பின்பு தலைமை உரை ஆற்றிய திரு இனியவன் அவர்கள் யு. மா. வாசுகிக்கு விருது வழங்கிய பிறகு, அவரும் நன்றி தெரிவித்துப் பேசினார். அதன் பிறகுதான் வெங்கடாசலபதி அவர்கள் பேசிய முக்கியமான கட்டம்.

அவர் பேசிய விஷயங்களில் என்னுடைய ஞாபகத்தில் உள்ள ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு சிலர் புதுமைப்பித்தனிடம் அவருடைய எழுத்துக்களில் உடன்பாடில்லை என்று ஆட்சேபித்தால், அதற்கு பதிலாக ‘இது உங்களுக்காக எழுதியதில்லை’ என்று கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லி விடுவாராம்.

புதுமைப்பித்தன் அவர்கள் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பதோடு கிட்டத்தட்ட அறுபது மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். அதன் மூலம் அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கிடைக்கும் அதற்காகத்தான் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுகிறார் என்று ஒரு சிலர் விமர்சித்தபோது புதுமைப்பித்தன் சொன்ன பதில் குறிப்பிடத் தகுந்தது.

‘தாமிரபரணித் தண்ணீரைக் குடித்து, அரிசிச் சோறை சாப்பிட்டு உயிர்வாழும் சில பிராணிகள், தங்களைச் சுற்றி நடப்பதுதான் வாழ்க்கை என்று கருதுகிறார்கள். இல்லை, அதற்கு வெளியே, வேறு இடத்தில் வேறு கலாச்சாரத்தில் பலவிதமான வாழ்க்கை முறைகள் இருக்கின்றன என்று உணர்த்தவே நான் எழுதுகிறேன்’ என்றாராம்.

சுந்தர ராமசாமி அவர்கள் மிகவும் வியந்த புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையிலிருந்து இரண்டு வரிகளை சொல்கிறேன் என்று குறிப்பிட்டார் வெங்கடாசலபதி அவர்கள்.

அதில் மருதநாயகம்பிள்ளையின் நிலையைச் சொல்கிறார். அவர் ஒரு ஸ்டோரில் வேலை செய்கிறார். சம்பளம் ரொம்ப கம்மி. அதுவும் முறையாகக் கிடைக்காது. தேவையான போது கிடைக்காது. புதுமைப்பித்தன் எழுதுகிறார்.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப்போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த் வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

நானும் எவ்வளவோ ஸ்டைலிஸான எழுத்துக்களை எல்லாம் படிச்சிருக்கேன். ஆனால் இதில் சப்ஜெக்ட்டு எது, எழுவாய் எது, பயனிலை எது ஒன்னுமே கண்டுபிடிக்க முடியாது. இதுதான் புதுமைப்பித்தன்.

என்று சுவாரசியாமாக பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசினார்.

மொத்தத்தில் அவர் ஒரு மாமேதை என்பது புரிந்தது. விழாவில் தெரிந்து கொண்ட மற்றொரு விஷயம். சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய முயற்சி ‘புதுமைப்பித்தனின் நினைவு மலர் என்றும், தமிழில் வாசித்த முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஞ்சனை’ என்றும், எழுதத் தூண்டியது புதுமைப்பித்தன் கதைகளின் யதார்த்தம் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த விழா முடிந்து வெளியே வந்தபோது, சுந்தர ராமசாமியைப் பற்றி சிலாகித்து எழுதினாயே, இப்போதாவது என்னைப் பற்றித் தெரிந்து கொண்டாயா?’ என்று புதுமைப்பித்தனே கேட்பதுபோல் இருந்தது.

‘ஒரு புளியமரத்தின் கதை’ புத்தகம் வாங்கிய கதை

23 ஜன

சென்னையில் புத்தகக் காட்சி ஆரம்பமாகப் போகிறது என்று 2014 ஜனவரி முதல் வாரத்தில் கேள்விப் பட்டவுடனேயே ஆவலுடன் அதற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். படிக்கும் பழக்கம் உள்ள எல்லோருக்கும் உண்டாகும் ஆவல்தான் அது. ஆனால் இப்போது யாவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பது திரு. சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தி விவாதிக்க வேண்டிய விஷயமாகி விட்டது. இது போன்ற புத்தகக் காட்சிகள் படிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்தும் என்பது நமது உறுதியான நம்பிக்கை.

என்னுடைய எண்ணம் பின்னோக்கிச் செல்கிறது. எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயமாக என்னுடைய தந்தைதான் காரணம். சிறு வயது முதல் நான் வளர்ந்த சூழ்நிலையில், வீட்டில் இறைந்து கிடந்த வார இதழ்களும், கதைப் புத்தகங்களும்தான் காரணம்.

நூல்நிலையம்கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தாலும் புத்தகங்களை வாசிப்பதில் என் தந்தைக்கு இருந்த ஆர்வம் காரணமாக பக்கத்து கிராமத்து நூல்நிலையத்தில் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் ஒரு பிஸியான வியாபாரியாக இருந்தாலும், புத்தகம் படிப்பதில் அவர் காட்டிய ஆர்வம் இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.

என்னைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால் எனக்கும் புத்தகங்களுக்கும் இடையேயான நட்பு இருந்ததை, பின்பு பள்ளியில் படிக்கும் நாட்களில் தெரிந்து கொண்டேன். தவழ்கின்ற வயதில் வீட்டில் உள்ள பல புத்தகங்களிலும் பேனாவை வைத்து நான் கிறுக்கி வைத்து இருந்ததைப் பார்த்தபோது தெரிந்தது .

பள்ளியில் படிக்கும் போது என்னுடைய புத்தக வேட்கைக்கு தடை செய்யாமல் நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்து படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார் என்னுடைய தந்தை. அதுமுதல் புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் பழக்கம் எனக்கு தீவிரமாகி விட்டது. அதிகாலையே விழித்து விடுவேன் புத்தகம் படிப்பதற்காக. அடிக்கடி நூலகத்திற்கு செல்லும் வழக்கமும் ஏற்பட்டது.

ஆனால் நாளைடைவில் அந்த நூலகர் என்னைக் கண்டாலே ஒருவிதமான தர்ம சங்கடத்தில் நெளிய ஆரம்பித்து விட்டார். காரணம், தினமும் ஒரு புத்தகமாகப் படித்து விட்டு, மறுபடி வந்து புத்தகத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று எல்லா புத்தக அலமாரிகளையும் துவம்சம் செய்வதுதான். ஏதாவது ஒரு புத்தகத்தைக் கொடுத்து முதலில் என்னை அங்கிருந்து அனுப்பி வைக்க பெரும்பாடு படுவார்.

நாளாக ஆக எனக்கும் அது தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அதனால் பெரிய பெரிய சைசில் புத்தகங்களை எடுத்து சென்று படிக்க ஆரம்பித்தேன். குறைந்த பட்சம் ஒரு நான்கைந்து நாட்களுக்காவது நூலகரைப் பார்க்க வேண்டியதில்லை அல்லவா?

அப்படி எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்றுதான் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் என்ற நாவல். அதன் மையக் கருத்து என்பது அந்த வயதில் புரிந்து கொள்ள இயலாத விஷயம் என்றாலும், அவருடைய எழுத்துக்களின் வலிமை என்னை ஈர்த்தது உண்மை. பின்னாளில் அது திரைப்படமாக உருப்பெற்றபோது அந்தக் கதையை நிஜ வாழ்க்கையில் காணுவது போல ரசிக்க முடிந்தது.

பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள் பலவும் அப்பொழுது படித்ததுதான். ஒருசில மொழிபெயர்ப்பு புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சிறு வயதில் காமிக்ஸ் புத்தகங்களில் ஆரம்பித்து, தமிழ்வாணன் புத்தகங்களுக்கு மாறி, பிறகு ஜெயகாந்தன், சாண்டில்யன், கல்கி, சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ரமணி சந்திரன் என்று எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புக்களை ரசித்திருக்கிறேன்.

அப்போது படித்ததுதான் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் என்ற சரித்திர நாவல். கதைக்கேற்ற படங்களுடன் வார இதழில் தொடராக வந்த அந்தக் கதை அழகாக பைண்டு பண்ணப்பட்ட புத்தகமாக எங்கள் வீட்டில் இருந்தது. அந்தப் புத்தகத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை என் தந்தை கேட்டார் ‘இது எல்லாமே அரசியலாச்சே, உனக்கு என்ன புரியுதுன்னு இதைப் படிச்சுக்கிட்டு இருக்கே’ என்று. நான் எதுவும் பதில் சொல்லவில்லை.

ஆனால் அந்த எழுத்துக்களின் ஆளுமை என்னை படிக்கத் தூண்டியது. அந்த கதையை இரண்டு மூன்று முறை, இல்லை அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியில் நூலகர் அந்தப் புத்தகத்தை நூலகத்துக்கு இலவசமாக வழங்குமாறு கேட்டபோது, என் தந்தையின் அனுமதி கேட்டு அதை நூலகத்துக்கு கொடுத்து விட்டேன். அதுவரை அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று ஞாபகம் இல்லை. ஏன், நூலகத்துக்கு கொடுத்த பிறகு கூட ஒருமுறை அதை எடுத்து வந்து வாசித்திருக்கிறேன்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த ரோமாபுரிப் பாண்டியன், கலைஞர் டி.வியில் தொடராக வரப் போவதாக வந்த விளம்பரம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் என் கண்ணில் பட்டு மறைந்து விட்டது. உடனே ஒரு ஆவல் ஏற்பட்டு கூகுளில் தேடினேன். அப்போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், தன்னுடைய தளத்தில், ‘தமிழ் நாவல்கள் விமரிசகனின் சிபாரிசு’ என்ற தலைப்பில் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று தரவரிசையில் இரண்டு பகுதிகளாக வரிசைப்படுத்தி இருந்தார். அதில் இரண்டாவது பட்டியலில் வரலாற்றுமிகு கற்பனைப் படைப்புகள் என்று வரிசைப் படுத்திய பகுதியில் ரோமாபுரிப் பாண்டியன் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தேன்.

அந்த இடுகையில் முதல் பத்து என்று வரிசைப் படுத்தியதில், சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை நான்காவதாக இடம் பெற்றிருந்தது. நான் ஏற்கெனவே அந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் என்ற வரிசையில் பார்த்தவுடன் உடனே அதை வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி விட்டது.

சுந்தர ராமசாமி எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு ஏன் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்ற யோசனை எழுந்தது. பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் என்ன என்று தேடியபோது, அவர் மொழி பெயர்த்த செம்மீன் நாவல் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் சிறு வயதில் படித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. ஆக நானும் அவருடைய புத்தகத்தை வாசித்திருக்கிறேன் என்று கொஞ்சம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

அதனால் இப்போது ‘ஒரு புளிய மரத்தின் கதை’யை கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் சென்னை புத்தகக் காட்சிக்கு நான் சென்றபோது, ஒவ்வொரு ஸ்டாலாக தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் அது கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அங்கு அந்தப் புத்தகத்தை வாங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

சென்னை புத்தகக் காட்சி 2014

21 ஜன

book-fair 2014புத்தகங்கள், புத்தகங்கள், எங்கு நோக்கினும் புத்தகங்கள். விதவிதமான தலைப்புகளில், விதவிதமான அளவுகளில், விதவிதமான நிறங்களில் அதற்கேற்றாற் போல் விதவிதமான விலைகளில் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. அந்தப் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்க பரவசம், படிக்கத் துடிக்கும் அவசரம் என்று அலைமோதும் மக்கள் கூட்டம். இதுதான் இந்த வருடம் சென்னை புத்தகக் காட்சியில் நான் கண்ட காட்சி!

காதலியைக் காணும்போது காதலன் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் என்று கவிதை நயத்தோடு சிலர் எழுதுவார்களே, அதுபோன்ற ஒரு அனுபவம் புத்தகத்தைக் காதலிப்பவர்களுக்கும் இதுபோன்ற புத்தகக் காட்சியைக் காணப் போகிறபோது ஏற்படும் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு வருடமும் புத்தகக் காட்சி திருவிழா நடக்கும்போது ஒரிரு முறை சென்று வருவது நமது வழக்கம்தான். இந்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் முதன் முறையாக சென்றேன். கிட்டத்தட்ட உலகையே மறந்து புத்தகக் கடலில் மூழ்கி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்போது நான் வாங்கிய புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்தது, பழம்பெரும் எழுத்தாளரான திரு. சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற புத்தகத்தைச் சொல்ல வேண்டும். அந்தப் புத்தகத்தை நான் வாங்க காரணமான விஷயங்களே ஒரு கதை போன்று சுவாரசியமானது. அதை அடுத்து வரும் இடுகைகளில் எழுத உத்தேசம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக புத்தகக் காட்சியைப் பார்க்க நேற்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நுழைவு வாயிலில் இருந்து காட்சி அரங்கம் வரை செல்ல இலவச சிறிய பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது. அங்கே நாம் சென்றபோது நமது நண்பர் எழுத்தாளர் திரு. ‘க்ளிக்’ ரவியும் நம்மோடு சேர்ந்து கொண்டார். அவருடன் அந்த அரங்கத்தைச் சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம்.

அவர் தற்போது நிறைய வார இதழ்களுக்காகவும் எழுதிக் கொண்டிருப்பதால், புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என்று பலருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். ஆங்காங்கே நின்று ஒரு சிலர் அவருடன் உரையாடும் போதும், இவராகச் சென்று சிலரிடம் பேசும்போதும் நம்மையும் சிலரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாக புத்தகக் கடலில் நீந்தி ஒருவழியாக வெளியே வரும் போது, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, காபி அல்லது தேநீர் அருந்தவோ அல்லது பசியைப் போக்கிக் கொள்ளவோ விரும்பினால் அருகிலேயே ஒரு சிற்றுண்டி உணவகம் ஏற்பாடாகி இருக்கிறது.

நாளையோடு இந்தப் புத்தகக் காட்சி நிறைவடைவது மனதுக்கு கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும், அடுத்த வருடம் இது போன்ற ஒரு புத்தகக் காட்சியை எதிர்பார்த்து காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.