Tag Archives: பாராட்டு

அணியாத முகமூடி கவிதைக்குப் பாராட்டு

6 ஜூலை

சென்ற வாரம் வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டி – 19 க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அதில் நாம் அனுப்பி இருந்த அணியாத முகமூடி ஜாக்கிரதை என்ற தலைப்பிலான கவிதை, இரண்டாவது இடத்துக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப் பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நாம் அனுப்பிய கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

Advertisements

மாபெரும் கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை…

30 ஜூன்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இணையத் தமிழே இனி! என்ற தலைப்பில்

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய 

மாபெரும் கவிதைப் போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றவர்கள்

வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை…

 

இணையத் தமிழே இனி
அற்புதமாய் ஓர்உலகம் நாம்படைப்போம் அங்கு
       அனைத்துவகை மக்களுமே தானிருப்பர்
சிற்பியவன் தான்செதுக்கும் சிற்பம்போல் மக்கள்
       சிறப்புடனே வாழ்ந்திடவே செய்திடுவோம்
உற்சாகம் பொங்குகின்ற உன்னதவாழ்க் கையை
       உலகத்தோர் பெற்றிடவே ஒத்துழைப்போம்
பொற்காலம் என்றதனை பிற்கால சரிதம்
       போற்றிடவே ஏற்பாடுநாம் செய்திடுவோம்

 

தற்பெருமை பேசிடஓர் ஆளுமில்லை எங்கும்
       தவறான பேர்வழியாய் யாருமில்லை
தற்குறிதான் ஊரிலில்லை லஞ்சமில்லை எங்கும்
       தர்மமிகு வாழ்க்கைதான் எங்கெங்கும்
பிற்காலச் சந்ததிகள் யாவருக்கும் அங்கே
       பிறந்தாலே பெருமைதான் என்றிருக்கும்
உற்பாதம் ஏற்படுத்த யாருமில்லை என்ற
       உண்மையே எங்கேயும் நின்றிருக்கும்

 

கற்பதற்கு மூலமாகத் தீந்தமிழ்தான் கணினி
       கையாள தேவையும் அம்மொழிதான்
பற்பலவாய் எத்தனையோ மொழியிருந்தும் பலரும்
       படித்திடவே ஏங்குவது தமிழாகும்
அற்புதமாய் விஞ்ஞானக் கருத்தெல்லாம் நல்ல
      அழகான தமிழிலேதான் அமைந்திருக்கும்
நற்காலம் வருகுதென்று நாமுரைப்போம் இனிமேல்
      நாமிணையச் செய்யும்இன் பத்தமிழே

 

 

புதிய சிந்தனைக்குப் பாராட்டு

29 ஜூன்

படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

வல்லமை மின்னிதழ் நடத்தும் இந்தப் போட்டிக்கு நாம் அனுப்பி வைத்த கவிதை பாராட்டுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதோ போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

…………………

…………………

அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
       மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
       இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
       தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
       தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

 

வல்லமைக்கும், போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி!

வல்லமைக்கு நமது நன்றி!

3 ஜூலை

மிக நீ………………………………………ண்ட நாட்களுக்கும் பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். காரணம் ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.

முதல் பரிசு மூன்று கட்டுரைகளுக்கு கிடைத்திருக்கிறது. அதில் ஒன்றாக நமது நண்பர் திரு பாண்டியன்ஜி அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்த்துக்கள் சார்!

அடுத்து இரண்டாவது, மூன்றாவது பரிசு பெற்ற கட்டுரைகளும், சிறப்பானவை என்று இரண்டு கட்டுரைகளும், அது தவிர பாராட்டுக்குரியவை என்று ஏழு கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.

அதில் பாராட்டுக்குரிய கட்டுரைகளில், நான் எழுதிய கட்டுரையும் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.

வல்லமை இதழுக்கும், போட்டியின் நடுவர் திரு. வவேசு அவர்களுக்கும் நமது நன்றி!

இப்படியொரு போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடிக்க காரணமாக இருந்த திரு. காவிரி மைந்தன் அவர்களுக்கும் நமது நன்றி!

அத்துடன் நண்பர் திரு பாண்டியன்ஜி அவர்களுக்கும் நமது நன்றி! அவர்தான் என்னையும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு தூண்டினார். அதனால்தான் நானும் அதில் கலந்து கொண்டு பாராட்டு பெற முடிந்தது.

அந்தப் போட்டி முடிவுகளை வல்லமையில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

புதுமைப்பித்தன் என்றொரு மாமேதை!

25 ஜன

Image1சுந்தர ராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ புத்தகம் வாங்கிய கதை என்ற தலைப்பில் வெளிவந்த சென்ற இடுகையில், சிறு வயதிலேயே எனக்கு படிக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றும், சிறு வயதில் நான் படித்த எழுத்தாளர்கள் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் என்னை ஏன் மறந்தாய் என்று புதுமைப் பித்தனே என்னைப் பார்த்துக் கேட்பது போல், அவரைப் பற்றியும், அவருடைய படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு நமது நண்பர் எழுத்தாளர் வில்லவன் கோதை அவர்கள் மூலமாக நேற்று எனக்குக் கிட்டியது.

சென்னை தி. நகரில் ஸ்ரீ கிருஷ்ணகான சபா மற்றும் ஸ்ரீகிருஷ்னா ஸ்வீட்ஸ் இவர்களுடன் இணைந்து இலக்கிய வீதி இனியவன் ஐயா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த விழாவில் எழுத்தாளர் யு. மா. வாசுகி அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கு பெற்ற அந்த விழாவில் பதிப்பாசிரியரும் பேராசிரியருமான திரு வெங்கடாசலபதி அவர்கள் புதுமைப்பித்தனின் பல்வேறு பரிமாணங்களையும் தன்னுடைய உரையில் எடுத்து வைத்தபோது, தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனே வழிகாட்டியது போல் கிடைத்த வாய்ப்பு அது என்று தோன்றியது.

Image2மலர்மகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்திய பின்னர், புதுமைப்பித்தனின் மகள் திருமதி தினகரி சொக்கலிங்கம் அவர்கள் தன்னுடைய தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பின்பு தலைமை உரை ஆற்றிய திரு இனியவன் அவர்கள் யு. மா. வாசுகிக்கு விருது வழங்கிய பிறகு, அவரும் நன்றி தெரிவித்துப் பேசினார். அதன் பிறகுதான் வெங்கடாசலபதி அவர்கள் பேசிய முக்கியமான கட்டம்.

அவர் பேசிய விஷயங்களில் என்னுடைய ஞாபகத்தில் உள்ள ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு சிலர் புதுமைப்பித்தனிடம் அவருடைய எழுத்துக்களில் உடன்பாடில்லை என்று ஆட்சேபித்தால், அதற்கு பதிலாக ‘இது உங்களுக்காக எழுதியதில்லை’ என்று கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொல்லி விடுவாராம்.

புதுமைப்பித்தன் அவர்கள் நிறைய சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பதோடு கிட்டத்தட்ட அறுபது மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். அதன் மூலம் அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கிடைக்கும் அதற்காகத்தான் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதுகிறார் என்று ஒரு சிலர் விமர்சித்தபோது புதுமைப்பித்தன் சொன்ன பதில் குறிப்பிடத் தகுந்தது.

‘தாமிரபரணித் தண்ணீரைக் குடித்து, அரிசிச் சோறை சாப்பிட்டு உயிர்வாழும் சில பிராணிகள், தங்களைச் சுற்றி நடப்பதுதான் வாழ்க்கை என்று கருதுகிறார்கள். இல்லை, அதற்கு வெளியே, வேறு இடத்தில் வேறு கலாச்சாரத்தில் பலவிதமான வாழ்க்கை முறைகள் இருக்கின்றன என்று உணர்த்தவே நான் எழுதுகிறேன்’ என்றாராம்.

சுந்தர ராமசாமி அவர்கள் மிகவும் வியந்த புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ கதையிலிருந்து இரண்டு வரிகளை சொல்கிறேன் என்று குறிப்பிட்டார் வெங்கடாசலபதி அவர்கள்.

அதில் மருதநாயகம்பிள்ளையின் நிலையைச் சொல்கிறார். அவர் ஒரு ஸ்டோரில் வேலை செய்கிறார். சம்பளம் ரொம்ப கம்மி. அதுவும் முறையாகக் கிடைக்காது. தேவையான போது கிடைக்காது. புதுமைப்பித்தன் எழுதுகிறார்.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப்போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை. இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த் வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

நானும் எவ்வளவோ ஸ்டைலிஸான எழுத்துக்களை எல்லாம் படிச்சிருக்கேன். ஆனால் இதில் சப்ஜெக்ட்டு எது, எழுவாய் எது, பயனிலை எது ஒன்னுமே கண்டுபிடிக்க முடியாது. இதுதான் புதுமைப்பித்தன்.

என்று சுவாரசியாமாக பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசினார்.

மொத்தத்தில் அவர் ஒரு மாமேதை என்பது புரிந்தது. விழாவில் தெரிந்து கொண்ட மற்றொரு விஷயம். சுந்தர ராமசாமியின் முதல் இலக்கிய முயற்சி ‘புதுமைப்பித்தனின் நினைவு மலர் என்றும், தமிழில் வாசித்த முதல் சிறுகதைத் தொகுப்பு ‘காஞ்சனை’ என்றும், எழுதத் தூண்டியது புதுமைப்பித்தன் கதைகளின் யதார்த்தம் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த விழா முடிந்து வெளியே வந்தபோது, சுந்தர ராமசாமியைப் பற்றி சிலாகித்து எழுதினாயே, இப்போதாவது என்னைப் பற்றித் தெரிந்து கொண்டாயா?’ என்று புதுமைப்பித்தனே கேட்பதுபோல் இருந்தது.

யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்? – பகுதி 2

25 பிப்

சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன்னால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?’ என்ற தலைப்பில் ஒரு இடுகையை எழுதியிருந்தோம். அதில் அந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதில் பங்கேற்ற போட்டியாளர்களைப் பற்றியும், நடுவர்கள் செஃப் தாமு, வெங்கடேஷ் பட் மற்றும் நடிகர் சுரேஷ் ஆகியவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

நமது முந்தைய இடுகையில், பூஜா போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டது நமக்கு வருத்தமளிப்பதாகவும், ஆனாலும் நடுவர்களின் தீர்ப்பு பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடியே அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும். அப்போது வெளியேறிய பூஜா, ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் திரும்பவும்  போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்று, இறுதிப் போட்டி வரையிலும முன்னேறி கடைசியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். வாழ்த்துக்கள் பூஜா!

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்த வரை சில குறிப்பிடத்தக்க விஷயங்களும் இருக்கின்றன. அதாவது பதினோரு பேரை பங்கேற்பாளர்களாக வைத்து ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பூஜா போட்டியிலிருந்து வெளியேறிய போது பிரியா, பிரீத்தி, லலிதா, இளவரசன், சந்தியா என்று ஐந்து பேராக குறைந்து விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியிருந்தது. அந்த ஐந்து பேரில் லலிதா, இளவரசன் ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இறுதிப் போட்டிக்கு பிரியா, பிரீத்தி மற்றும் சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஏற்கெனவே வெளியேற்றப் பட்டவர்களில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் இளவரசனும், பூஜாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஆக, டாப் 5 ஆக இருந்தவர்களில் லலிதாவைத் தவிர மீதி நான்கு பேரும் பூஜாவுடன் இறுதிப் போட்டியில் போட்டியிட்டனர். அதிலும் பிரீத்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற சிறப்பைப் பெற்றார். ஆனால் அவர் இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினார். மீதியுள்ள நான்கு பேர்களுடன் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுக்கள் நடந்து முடிந்தன.

மூன்றாவது சுற்றில் இளவரசனும், பூஜாவும் ஒரு குரூப்பாகவும், பிரியாவும், சந்தியாவும் ஒரு குரூப்பாகவும் போட்டியிட்டனர். அதில் இளவரசனை வென்று பூஜாவும், சந்தியாவை வென்று பிரியாவும் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். கடைசி சுற்றில் பூஜா செய்த புதுமையான சமையலும் அவருடைய சமயோசித அறிவும்தான் அவருக்கு இறுதி வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பது நிசர்சனமாகத் தெரிந்தது.

போட்டியின் நடுவே, ‘இறுதிப் போட்டிக்குத் தகுந்த டிஷ்தானா இது?’ என்று பிரியாவிடம் செஃப் தாமு கேட்டாலும், ஓட்டுப் போடும் போது, அவர் மட்டும் பிரியாவுக்கே தனது ஓட்டைப் போட்டது பார்வையாளர்களைத் திருப்திப் படுத்தத்தானோ? என்ற கேள்வி ஏனோ மனதில் எழுந்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் கடைசியில் வெற்றி பெற்ற பூஜாவின் மனோபாவம். நமது முந்தைய இடுகையை எழுதிய சமயத்தில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப் பட்டபோது தோல்வியை ஏற்றுக் கொண்ட விதமும், இப்போது வெற்றி பெற்ற பின் காட்டிய உணர்ச்சிகரமான சந்தோஷமும் அவருடைய பக்குவத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு வெறி அவரிடம் இருந்ததைக் காண முடிந்தது. வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரிடமும் இருக்க வேண்டிய குணாம்சம் அதுவே.

நடுவர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டது போல பூஜாவுடைய புத்திசாலித்தனம்தான் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற அவருக்கு உதவியது. எமோசனல் இன்டலிஜன்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை அவரிடம் காண முடிந்தது. எது எப்படியோ, நம்மைக் கவர்ந்த ஒரு பங்கேற்பாளர் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டிச் சென்றது நமக்கு உண்மையில் சந்தோஷத்தை தந்தது. ஒருவேளை யார் வெற்றி பெறுவார்கள் என்று முன் கூட்டியே கணிக்கும் திறமை நம்மிடம் இருக்கிறதோ என்னவோ! (சரி, சரி! புரிகிறது! இது கொஞ்சம் ஓவர்தான்!)

இது போன்ற ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுத்த விஜய் டிவிக்கு நமது பாராட்டுக்கள்.

யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்?

7 ஜன

சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட ரஜினிகாந்த் பெயரை உச்சரிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அது என்ன கிச்சன் சூப்பர் ஸ்டார்? நமது தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ரசிக்கும்படியாகவும், புதுமையாகவும் நிகழ்ச்சிகளைக் கொடுப்பதில் முதன்மையானது விஜய் டிவிதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கோபிநாத்தின் ‘நீயா நானா’ ஒரு நல்ல உதாரணம். அது போல், ‘சூப்பர் சிங்கர்’, ‘காமெடி கிங்’, ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ போன்று தொடர் போட்டிகள் நடத்தி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது விஜய் டிவி. அதே வரிசையில் ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்று ஒரு சமையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமையலைப் பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத என் போன்றவர்களையும் ஒன்றரை மணி நேரம் கட்டிப் போட்டது போல் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வைக்க முடியும் என்று நிருபித்த விஜய் டிவிக்கு நமது பாராட்டுக்கள். மெட்ரோ பிரியா, லலிதா, பிரீத்தி, பூஜா, சந்தியா, இளவரசன் போன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் அறிமுகமான பதினோரு பங்கேற்பாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று (06-01-2013) வெறும் ஐந்து பங்கேற்பாளர்களாக குறைந்து விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியுள்ளது.

நடுவர்களாக சமையல் கலை நிபுணர்கள் தாமுவும், வெங்கடேஷ் பட்டும், நடிகர் சுரேஷும் பங்கேற்கிறார்கள். அவர்களின் விமரிசனமும், பாராட்டும் பங்கேற்பாளர்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் அவர்கள் சொல்லும் விஷயங்கள் பெரும்பான்மையான பார்வையாளர் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பது ஒரு சிறப்பு. ஒருவேளை அதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடிப்படையோ!

இதில் நாம் குறிப்பிட விரும்பும் மற்றொரு விஷயம், இதுவரை யாரையுமே இவர்தான் இறுதியில் கிச்சன் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் ஒரு வாரத்தில் செஃப் ஆஃப் தி வீக் (Chef of the Week) ஆக வருபவர்கள் அடுத்த வாரம் மோசமான சமையல் அயிட்டத்தைக் கொடுத்து நீக்கம் (Elemination) என்ற அபாய கட்டத்துக்குப் போய் விடுகிறார்கள். மூன்று முறை அது போல செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய மெட்ரோ பிரியாவே இந்த முறை அபாய கட்டத்துக்கு வந்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அதாவது ஒரே வகையான பொருட்களை வைத்து இரண்டு போட்டியாளர்கள் ஏதாவது ஒரு புதுமையான உணவை தயார் செய்ய வேண்டும் என்றும் அதில் யார் மோசமாக தயார் செய்கிறார்களோ அவர்கள் நீக்கப் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள் என்பதுதான் இந்த முறை தரப்பட்ட பரீட்சை. ‘இது போல் ஒரு பரீட்சையில் மிகவும் கைதேர்ந்த நீங்கள் சாதாரண ஒரு டிஷ்ஷை செய்து வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்ற நடுவர்களின் விமரிசனத்துக்கு ‘எனக்கு அந்த சமயத்தில் அதுதான் தோன்றியது, அதைத்தான் நான் செய்தேன்’ என்றார் பிரியா.

அதுதான் யதார்த்தம். அதாவது எல்லோருமே சமையலில் நிபுணர்களாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வித்தியாசமாக ஏதாவது உணவு சமைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருக்கும்போது அப்போது அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதுதான் அவர்களுடைய வெற்றிக்கோ தோல்விக்கோ அடிப்படையாக அமைகிறது. அதனால் சமையல் கலையில் திறமை மட்டும் இல்லாமல் அவர்களுடைய முடிவெடுக்கும் திறனுக்கும் ஒரு பரீட்சையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

முடிவில் யாரோ ஒருவர்தான் கிச்சன் சூப்பர் ஸ்டாராக முடிசூடப் போகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அதனால் யாராவது ஒருவர் ஒவ்வொரு காலகட்டத்தில் வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம்தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ பிரியா, பூஜா, சந்தியா போன்றவர்கள் வெளியேறும் கட்டத்தில் வந்தது எதிர்பார்க்காத ஒன்று. அதிலும் முடிவில் பூஜா வெளியேறியது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

ஆனால் அவர் அதை ஏற்றுக் கொண்ட விதம் பாராட்டத் தகுந்தது. நடிகை என்பதாலோ என்னவோ அவர் விடை பெறும் நிகழ்வையே ஒரு சோலோ பெர்ஃபார்மென்ஸாக ஆக்கி வியக்க வைத்து விட்டார். தோல்வியை ஸ்போர்டிவாக ஏற்றுக் கொண்ட அவருடைய மனோபாவம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. மீதி இருக்கும் ஐந்து பேரில் நான்கு பேர் இது போல் ஒவ்வொரு கட்டத்தில் வெளியேற வேண்டியவர்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக் காட்டாக தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பக்குவமாக உணர்த்திய விதம் அருமை. வெல்டன் பூஜா!

விதவிதமான சமையலை நடுவர்கள் ருசிக்கும்போது நமக்கும் அதை ருசித்துப் பார்க்க ஆசை வருவது உண்மைதான். அதிலும் ஒரு சில உணவு வகைகளை ஆஹா! ஓஹோ! என்று அவர்கள் பாராட்டும்போது நாக்கில் எச்சில் ஊறுவது உண்மைதான். ஆனால் தாமுவைப் போலவோ, வெங்கடேஷ் பட் போலவோ, நடிகர் சுரேஷ் போலவோ உடல் பருமன் ஆவதில் நமக்கு ஆசையில்லாத காரணத்தினால் ரசிப்பதோடு திருப்தி அடைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாம் நிகழ்ச்சியை மட்டும் சுவைக்கும் ரசிகர்கள். அவ்வளவுதான்!

திண்ணையில் நமது சிறுகதை – நைலான் கயிறு…!…?

12 நவ்

சென்ற இடுகையில் நாம் கவிஞர் கடிவேலுவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடியதைப் பற்றிச் சொன்னோமல்லவா? அப்போது நமது சிறுகதைகளைப் பற்றி அவருடைய கருத்துக்களாக சில விஷயங்களைச் சொன்னார். பிறகு நமது வழக்கமான உரையாடலைத் தொடங்கி மீட்டிங் பற்றிய நமது கேள்வியைக் கேட்டோம். பிறகு மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவருக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

இன்று காலை நாம் ஆபீசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் அவரிடமிருந்து போன் வந்தது. முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் நமது சிறுகதை வெளியாகியிருக்கிறது என்பதை தெரிவித்தார். இது திண்ணையில் வெளியாகும் நமது ஆறாவது சிறுகதை என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நைலான் கயிறு…!…? என்ற அந்த சிறுகதையை படிக்க இங்கே சொடுக்கவும் நைலான் கயிறு…!…?

திண்ணைக்கு நமது நன்றி!

இதுவரை திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளுக்கு கவிஞர் கடிவேலு, தன்னுடைய கருத்துக்களாக சொன்ன விஷயங்களை சென்ற இடுகையில் சொல்லியிருந்தோம். எல்லாக் கதைகளுக்கும் தன்னுடைய பிசினஸை சம்பந்தபடுத்தியே அவருடைய கருத்துக்கள்  அமைந்து இருந்தன. ஆனால் நைலான் கயிறு…!…? கதை சற்று வித்தியாசமானது என்பதால் இந்தக் கதையை அவருடைய பிசினஸோடு சம்பந்தப்படுத்தி கருத்து எதுவும் சொல்ல முடியாது என்று நான் நினைத்தேன்.

ஆனால் நமக்கு வாழ்த்துச் சொன்ன கவிஞர், “ஒருவருக்கு வாழ்க்கையில் எல்லா சந்தோஷமும் கிடைத்து இருப்பதாக நினைத்தாலும், தன்னுடைய அன்பான வாழ்க்கைத் துணையோடு எப்போதும் இருக்க முடிவதில்லை. ஆனால் நெட்வொர்க பிசினஸில் கணவன் மனைவி இருவரும் சமமான வியாபார பங்குதாரர்களாக இருப்பதால் எப்போது இணைந்தே இருப்பார்கள். இணைந்தே எங்கும் செல்வார்கள். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடியும்” என்றார்.

நமக்கு மிகவும் வியப்பாக இருந்தது. கவிஞரே தொடர்ந்தார்.

“அத்தோடு எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், பணத்துக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய முயற்சிக்கும் அதில் அடையும் வெற்றிக்கும் பாராட்டு கிடைக்க வேண்டும் என்பது அவனுடைய ஆழ்மனத்தின் ஏக்கமாக இருக்கிறது. அந்த பாராட்டு கிடைக்கும்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான். அதிலும் அந்தப் பாராட்டு கணவன் மனைவி இருவருக்கும் அவர்களுடைய வெற்றிக்காக ஒரே சமயத்தில் கிடைத்தால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்கிறதா? நெட்வொர்க் பிசினஸில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

இப்படி எல்லா விஷயத்தையும் தன்னுடைய பிசினஸோடு தொடப்பு படுத்தி பேசுகிறாரே கவிஞர், என்று ஆச்சரியும் அதிகமானது. அந்த அளவுக்கு தன்னுடைய பிசினஸை நேசிக்கிறார், மதிக்கிறார் என்பதும் நமக்குப் புரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் சொன்னோம். பின்னர், தீபாவளிக்கு விடுமுறைக்குப் பிறகு இன்னும் சில விஷயங்கள் நம்மோடு பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.