Tag Archives: பாசம்

பாசத்தின் விலை – சிறுகதை

17 அக்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (16-10-2016) நாம் எழுதிய ‘பாசத்தின் விலை’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

 

தந்தை இறந்த பின் தாயைப் பராமரிக்க வேறு வேறு காரணங்களைச் சொல்லி, அவருடைய மூன்று மகன்களும் தட்டிக் கழிக்கிறார்கள். அப்போது அவரது மருமகன் அனைவரிடமும் பேசுகிறார். அதன் முடிவில் மூன்று மகன்களும் தாயைக் கவனித்துக் கொள்வதற்கு ஆர்வத்துடன் முன் வருகிறார்கள்.

அப்படி அவர்கள் மாறும் வகையில் என்ன நடந்தது? அதுதான் இந்தக் கதை.

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் பசத்தின் விலை

திண்ணைக்கு நமது நன்றி!

Advertisements

பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?

15 ஜூன்

காலையில் ஆபிஸிற்கு வந்ததும் முதல் வேலையாக ஈமெயிலை திறந்து பார்ப்பது நம் வழக்கம். அதுபோல அன்று பார்த்தபோது கவிஞர் கடிவேலுவிடமிருந்து ஒரு கவிதை ஈமெயிலில் வந்திருந்தது.

பணமா? பாசமா?எனப் பந்தயம் வைத்தால்

      பணம்தான் ஜெயிக்கும் பாசமில்லை – அந்தப்

பணத்தின் மீது கொள்ளாதே பாசம் – உன்மீது

      பணம்தான் வைக்கவேண்டும் பாசம்

என்ன இது! பணத்தின் மீது பாசம் வைக்காதே, அதுதான் உன் மீது பாசம் வைக்கவேண்டும் என்றெல்லாம் எழுதியிருக்கிறாரே! பணம் எப்படி நம் மீது பாசம் வைக்கும்? பணத்திற்காகத்தானே எல்லோரும் இந்தப்பாடு படுகிறார்கள். அந்தப் பணத்தை விரும்பாதே என்று அர்த்தம் வரும் வகையில் அல்லவா எழுதியிருக்கிறார். ஒன்றும் புரியவில்லையே. என்ன ஆயிற்று இவருக்கு?

சரி, அவர் வரட்டும் விளக்கம் கேட்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. நமது முந்தைய இடுகையை படித்துவிட்டுத்தான் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.

சரியாக தேநீர் இடைவேளை நேரத்தில் கவிஞர் கடிவேலு நம் முன்பு ஆஜரானார்.

அப்பு… வணக்கம்ப்பு…. என்று வழக்கமாக ஆரம்பித்தார்.

அவரை வரவேற்று உட்காரச் சொன்னேன். பிறகு ,”கவிஞரே, நீர் அனுப்பிய கவிதைக்கு அர்த்தம் என்ன?” என்றேன்.

“முதலில் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும்” என்று திருப்பி நம்மிடமே கேள்வி கேட்டார்.

“நீர் எழுதியிருந்ததைப் படித்தேன். மனைவி கேட்டார் என்பதற்காக கடைக்கு கூட்டிக்கொண்டு போய், மனைவியின் அண்ணனுக்கு மட்டும் இல்லாமல், அவருக்கும் கேட்ட நகையை வாங்கிக்கொடுத்தாரே ஒரு கணவர், அதுபோல் நீரும் உம்முடைய மனைவி கேட்டவுடன் வாங்கிக்கொடுப்பீரா?” என்று கேட்டார் கவிஞர்.

அதைக்கேட்டவுடனே நமக்கு பகீர் என்றது. இப்போது தங்கம் விற்கும் விலையில் நினைத்தவுடன் நினைத்த நேரத்தில் நகை வாங்க முடியுமா? ஒரு நகை வாங்க வேண்டுமென்றாலே அதற்காக பட்ஜெட் போட்டு பணம் சேர்த்து அதன்பின் வாங்குவது, இப்படி செய்வது தானே நமது பழக்கம்.

“அதெப்படி கவிஞரே, நினைத்தவுடனே வாங்க முடியுமா? பணம் வேண்டாமா?”

“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நீர் மட்டுமல்ல பொதுவாக எல்லோருமே இப்படித்தான் பதில் சொல்வார்கள். ஆனால் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். எங்காவது வெளியே சென்றால் அருகில் நகைக்கடையைப் பார்த்தால் போதும். உடனே போய் ஏதாவது நகை வாங்கி வருவார். அவர் வீட்டுக்கு யாராவது சொந்தக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அவற்றை பரிசாகக் கொடுப்பார்” என்றார் கவிஞர் கடிவேலு.

அதிசயமாகவும், கேள்விப்படாத விஷயமாகவும் இருக்கிறதே! காய்கறி வாங்குவது போல் நகை வாங்குவாராம். அதையும் யாருக்காவது தானம் பண்ணுவாராம். ஏதாவது தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறவரா இவருடைய நண்பர்? எனக்கு கவிஞர் கடிவேலு மீதே சந்தேகம் வந்தது. பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?

“கவிஞரே, என்னால் இதை நம்ப முடியவில்லை. இதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா?”

அவர் சிரித்தார். “அவரைப் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாரிமுனையில் சென்ற முறை வந்த அதே மண்டபத்துக்கு வரவேண்டும்” என்றார்.

“ஓ! இலவசமாக லண்டன் போய்விட்டு வந்தாரே, அவரா?” என்று கேட்டேன்.

“இவரும் இலவசமாக லண்டன் போய்விட்டு வந்தவர்தான். ஆனால் இவர் வேறு மனிதர்.” என்று கவிஞர் கடிவேலு சொன்னார்.

ஏதேது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாடிக்கையாக நம்மை அங்கு செல்ல வைத்துவிடுவார் போலிருக்கிறதே! என்று தோன்றியது.

இருந்தாலும் அவர் சொல்லும் செய்திகள் உண்மைதானா என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் ஏற்பட்டது. அதனால், சரி, போய்த்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தேன்.

பாசத்தைக் காட்டவும் பணம் வேண்டும்

13 ஜூன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2012) இரவு விஜய் டிவியில் கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணன் தங்கை பாசம் பற்றிய கலந்துரையாடல் ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. கல்யாணமான பிறகு அண்ணன் தங்கை இடையேயான பாசத்தில் எப்படி விரிசல் ஏற்படுகிறது என்பதை பலரும் அழுகைக்கிடையே விவரித்த விதம் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

நம்முடைய கலாச்சாரத்தில் அண்ணனுக்கும் தங்கைக்கும் உள்ள உறவுமுறை மிகவும் போற்றத்தகுந்தது. தங்கை கல்யாணம் முதல் அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு காது குத்தும் போதும், அவர்களின் திருமணத்தின் போதும், பெண் குழந்தையாக இருந்தால் வயதுக்கு வரும் போதும், தாய்மாமன் என்ற முறையில் அண்ணன் செய்யும் சீர் செனத்திகள் முக்கியமானவையாக கருதப்படும்.

கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பலருக்கும் தங்கள் அண்ணனிடமோ, தங்கையிடமோ ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் ஞாபகத்திற்கு வந்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். பல மனஸ்தாபங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பணம்தான் என்பது அந்த நிகழ்ச்சியின் மூலம் புரிந்தது.

அதில் ஒரு அண்ணன் அவசரத்திற்காக தங்கையிடம் வாங்கிய பத்து பவுன் தங்கச் சங்கிலியை இன்னும் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இத்தனைக்கும் அந்த தங்கச் சங்கிலியை தன் கணவருக்கோ, கணவர் வீட்டாருக்கோ தெரியாமல் தங்கை கொடுத்திருந்தாராம்.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு கணவன் மனைவியிடையே நடந்த ஒரு உரையாடல் எப்படி வேடிக்கையாக முடிந்தது என்று ஒரு நண்பர் சொன்னார்.

அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவி கண் கலங்கியதைப் பார்த்து விட்டு என்ன என்று விசாரித்திருக்கிறார் கணவர். அவர் மனைவி அழுதுகொண்டே சொன்னாராம்.

“என் அண்ணன் என் மீது எப்படியெல்லாம் பாசத்தைக் காட்டினார் என்று நினைக்கும்போது எனக்கு அழுகையாக வருகிறது. அவருக்கு நான் எதுவுமே செய்யவில்லை என்றும் வருத்தமாக இருக்கிறது.”

இதைக்கேட்டவுடன் கணவன் சொன்னாராம்.

“நீ எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது சரிதான். ஆனால் உன் அண்ணியை நினைத்துப் பார்த்தாயா? ஒரு முறை இங்கு வந்த போது அண்ணன் வந்திருக்கிறார் என்று நீ ஆசையாக பன்னீர் பிரியாணி செய்து கொடுக்க, அதைச் சாப்பிட்டு விட்டு தன் மனைவியிடம் அதைப்பற்றி சிலாகித்துப் பேச, உன் அண்ணி பொறாமையால் உன்னை என்ன பாடுபடுத்தினாள் என்பது ஞாபகமில்லையா?”

இதைக் கேட்டவுடன் அந்த மனைவி ஒன்றுமே பேசவில்லையாம். அண்ணனுக்குத் திருமணம் ஆகிவிட்டால் பிறகு தங்கை என்ற பாசத்தைக் காட்டக்கூட வழியில்லாமல் போய்விடும் என்பது அப்போதுதான் அவருக்கு புரிந்ததாம்.

இத்துடன் விஷயம் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கணவர் இப்போதும் புலம்புகிறார். ஏனென்றால் சிறிது நேரம் கழித்து மனைவி சொன்னாராம்.

“பணமாகவோ அல்லது பிரேஸ்லெட் மாதிரி தங்க நகையாகவோ வாங்கிப் போட்டால் அப்போது என்னுடைய அண்ணி ஒன்றும் சொல்லமாட்டார்கள்.”

இதைக்கேட்டதும் கணவருக்கு திக் என்று இருந்ததாம். இப்போது தங்கம் விற்கும் விலையில் பிரேஸ்லெட்டா?

சரி, மனைவியுடைய விருப்பத்தை நிறைவேற்றலாம் என்று கடைக்குக் கூட்டிப் போய் இருக்கிறார். அங்கு தன்னுடைய அண்ணனுக்கு பிரேஸ்லெட் வாங்கியது மட்டுமில்லாமல், தனக்கும் இரண்டு வளையல் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கணவருக்கு வேட்டு வைத்துவிட்டாராம் மனைவி.