Tag Archives: பரிகாரம்

சோதனைகளைத் தவிர்க்க என்ன பரிகாரம்?

2 டிசம்பர்

மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளுக்கு பாவபுண்ணியம்தான் காரணம் என்று சென்ற இடுகையில் கவிஞர் சொன்னாரல்லவா? அப்படி வரும் சோதனைகளை தவிர்க்க முடியுமா, அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

“உமக்கு இப்போது நடக்கும் தசாபுக்தியினால் ஏற்படும் தீய பலனின் தீவிரத்தைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது” என்றார் கவிஞர்.

“அது என்னவென்று சொல்லும், உடனடியாக அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றோம். உடனே கவிஞர்,

காக்கைக் காக்கை காக்கை காக்க 

கங்கைக் கொக்கை கொக்குக்காக்கி

காக்கைக்கீக காக்கைக் கோக்கு

காக்கிக்காகி காக்கைக்காகும் சுகமே!

என்றார்.

“என்ன கவிஞரே, பரிகாரம் ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால், எதையோ திக்கித் திக்கி சொல்கிறீரே?” என்றோம்.

“பரிகாரத்தைத்தான் கவிதையில் சொன்னேன்” என்றார்.

“ஏதோ காக்கை காக்கை என்றுதானே சொன்னீர், இதில் பரிகாரம் எங்கே இருக்கிறது?” என்றோம். கவிஞர் சிரித்தார்.

“அந்தக் கவிதையை நன்றாகக் கவனியும்,

காக்கைக் காக்கை காக்கை காக்க

அதாவது காக்கைக்கு ஆக்கை கால்கை காக்க இதற்கு அர்த்தம் என்னவென்றால், காகம் தன் உடலுடன் கால் மற்றும் இறக்கைகளைப் பாதுகாக்க உணவு வேண்டும் அல்லவா? அப்படி அது உணவு உண்டு உடலைக் காக்க

கங்கைக் கொக்கை

கங்கைக்கு ஒக்கும் புண்ணிய நதியாக தென்னிந்தியாவில் கருதப் படும் காவிரி எனப்படும் பொன்னியை (இங்கு பொன்னி என்பது, காவிரிக்கரையில் விளைந்ததினால் பொன்னி என்று பெயர் பெற்ற அரிசியை குறிக்கிறது)

கொக்குக்காக்கி

கொக்கின் வெண்மைக்கு ஆக்கி அதாவது சோறாக வடித்து

காக்கைக்கீக

காக்கைக்கு ஈந்தால் (வைத்தால்),

காக்கைக் கோக்கு

காக்கையை வாகனமாகக் கொண்ட அதன் தலைவன் (கோ என்றால் அரசன்) அதாவது எஜமானனான சனி பகவானுக்கு

காக்கிக்காகி

மனம் குளிர்ந்து

காக்கைக்காகும் சுகமே!

கால் கைகளுக்கு சுகம் கிடைக்கும்

என்று விளக்கம் அளித்தார். நமக்குத் தெரிந்த அளவில் கவி காளமேகத்துக்குப் பிறகு ககர வர்க்கத்தில் ஒரு கவிதையை புனைந்தது நம் கவிஞராகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

“கவிஞரே, காகத்திற்கு சோறு வைக்க வேண்டும், என்று சொன்னால் போதுமே! அதற்கு இப்படி ஒரு கவிதையா?” என்றோம். கவிஞர் சிரித்தார்.

நடிகர் வடிவேலு பாணியில், ‘கொஞ்சம் ஓவராத் தான் போய்க்கிட்டிருக்கு’ என்று சொல்லத் தோன்றியது.

ஒரிரு பக்கங்களில் சொல்ல வேண்டிய கருத்தை நான்கு வரியில் கவிதையாக வடிப்பதும் கவிஞர்கள்தான். ஒரே வரியில் சொல்ல வேண்டிய விஷயத்தை ஒரு ரசனைமிக்க கவிதையாக புனைவதும் அவர்கள்தான் என்று நினைத்தாலே மிகவும் வியப்பாக இருக்கிறது.

ஆனாலும் காக்கிக்காகி என்பதற்கு மனம் குளிர்ந்து என்று அர்த்தம் சொன்னாரே, அது எப்படி என்று புரியவில்லை. நமது சந்தேகத்தை அவரிடமே கேட்டோம்.

“காக்கிக்காகி என்பதை கால் ‘கிக்’ஆகி என்று படிக்க வேண்டும். கிக் என்றால் போதை அல்லவா? சிலருக்கு மதுவால் கிடைப்பது முழு போதை. பிறர் சொல்லும் புகழ்ச்சி வார்த்தைகளாலோ, நமக்கு விருப்பமான செயல்களைச் செய்யும்போதோ, கிடைப்பது லேசான போதை அதாவது கால்பங்கு ‘கிக்’. அப்படி ஏற்படும் போது மனம் குளிர்ந்து அவருக்கு நல்லது செய்வதற்கு மனம் இரங்கும். இங்கு காக்கைக்கு சோறு வைத்தால் அதனால் மனம் குளிர்ந்து சனி பகவான் மனமிரங்கி கெடுதலைக் குறைப்பார் என்று அர்த்தம்” என்றார்.

நமக்கு அவர் சொன்னது சரியா என்று தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் கிக் என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருப்பது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் பாடலில் ஆங்கில வார்த்தைகள் கலப்பது சர்வ சாதாரணமாகி விட்டதால் நம்மால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியவில்லை. அதனால், “கவிதை நன்றாக இருக்கிறது. மிகவும் ரசித்தோம்” என்று சொன்னோம்.

தொடர்ந்து, “கவிஞரே, உம்மிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் தேவை. அதற்காக சில நாட்களாக காத்திருக்கிறோம்” என்று ஆரம்பித்தோம்.

“என்ன கேள்வி?” என்றார்.

“நீர் எப்படி திடீரென சோதிடரானீர் என்று கேட்டதற்கு ஒரு கவிதையைச் சொல்லி சமாளித்து விட்டீர். ஆனால் அதில் எமக்கு சமாதானமாகவில்லை. வேறு ஏதோ முக்கியமான காரணம் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்ன என்று சொல்வீரா?” என்றோம்.

“ஓ! அதுவா, அது ஒரு பெரிய கதை” என்றார் கவிஞர்.

“கதையா? கதை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். உடனே சொல்லும், கேட்க காத்திருக்கிறோம்” என்றேன்.

“ஒன்பது மாதங்களுக்கு முன்னால், என்னுடைய வியாபார விஷயமாக வாடிக்கையாளர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தேன்” என்று கதையை ஆரம்பித்தார் கவிஞர் கடிவேலு.

மன்னிக்கவும், இந்த இடுகை மிகவும் நீளமாகி விட்டதால், தொடர்ச்சி அடுத்த இடுகையில்.

Advertisements