Tag Archives: நேர மேலாண்மை

கவிஞர் சொன்ன புதுக் கவிதை!

16 நவ்

தீபாவளிக்கு விடுமுறைக்குப் பிறகு இன்னும் சில விஷயங்கள் நம்மோடு பேச வேண்டும் என்று கவிஞர் கடிவேலுவை கேட்டுக் கொண்டோம் அல்லவா? அதை ஞாபகப் படுத்திக் கொள்ளவும் இதற்கு முந்தைய இடுகையை படிக்கவும் இங்கே சொடுக்கவும்.

அதன்படி தீபாவளி முடிந்த அடுத்த நாள் அவர் நம்மைத் தொடர்பு கொண்டார். அன்று நம் ஆபீஸுக்கு வருவதாகச் சொன்னார். நமக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீக்கிரமே கிளம்பி ஆபீசுக்குப் போய் கவிஞரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம். சரியாக 9.30க்கு கவிஞர் வந்தார்.

“கவிஞரே, தீபாவளியெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என்று பேச்சை ஆரம்பித்தோம்.

தீபாவளியை தன்னுடைய குடும்பத்தில் எல்லோரும் உற்சாகமாகக் கொண்டாடியதாகச் சொன்னார். பிறகு நாம் எழுதியிருந்த நைலான் கயிறு…!…? சிறுகதை தம்மை மிகவும் யோசிக்க வைத்ததாகச் சொன்னார்.

“அப்படி என்ன யோசிக்க வைத்தது?” என்று வினவினோம்.

“அந்தக் கதையில் வரும் மாப்பிள்ளை புத்திசாலி, நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பாதிக்கிறார் என்று எழுதியிருந்தீர். தன்னைப் போல் ஒரு பிசினஸ்மேனை மாப்பிள்ளையாக்காமல் கம்பெனியில் வேலைக்கு செல்பவரை தன்னுடைய பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததில் அவருடைய அனுபவம் தெரிகிறது” என்றார்.

“இதில் என்ன புதுமை இருக்கிறது? இது நிறைய இடங்களில் நடக்கும் விஷயம்தானே! கம்பெனி வேலையில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் சம்பளமாகக் கிடைத்து விடுகிறதல்லவா? குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமே!” என்றோம்.

“ஆமாம், திருமணமான புதிதில் பணத்தை விட வாழ்க்கையில் மகளின் சந்தோஷத்தையே பெற்றோர் பெரிதாக நினைக்கின்றனர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதாகி, தேவைகள் அதிகமான பின்புதான் பணத்தின் முக்கியத்துவம் தெரிகிறது” என்றார்.

“எல்லோருக்கும் தெரிந்த பொதுவான கருத்துத்தானே இது” என்றோம்.

“அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். மாப்பிள்ளை பிசினஸ் பண்ணுபவராக இருந்தால், பிசினஸில் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது புதிதாக திருமணமாகி வந்திருக்கும் மனைவியுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு செல்வது, பொழுதுபோக்குகளுக்கு நேரம் செலவிடுவது போன்றவைகள் அவருக்கு சிரமமாக இருக்கும். அதனால் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடு ஏற்படும். அதுவே பின்னால் பெரிய பிரச்சினையாக உருவாக ஒரு அடித்தளமாகி விடும்” என்றார்.

“என்ன கவிஞரே, ஒரு சாதாரண விஷயத்தை மிகவும் பூதாகரமாக கற்பனை செய்கிறீரே?” என்றோம்.

“கற்பனை அல்ல. யதார்த்தமான உண்மை இது. ஒரு சில இடங்களில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விவாகரத்தில் போய் முடிவது உண்டு. நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் நடந்த விஷயம் இது. இதோ இந்தக் கவிதையைப் படித்துப் பாரும்” என்று ஒரு பேப்பரை நீட்டினார். தராசு என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த அந்த கவிதை…

தராசு!

கால ஓட்டத்தில்

பொருளாதார தராசு

சான்டி புயலில்

சிக்கியது போல்

சதிராட்டம் ஆடியது

மாமனார் வெயிட்டாக

அவர் தட்டு கீழிறங்கி

தராசுமுள் அவர் பக்கம்.

பணத்துக்கு மயங்காத

மாப்பிள்ளை மீது

பாசம் குறைந்தது

மனவிகாரம் கூடியதால்

மணவாழ்க்கை ஆடியது

விஷயம் முற்றியது

விவகாரமாய் போனது

நீதிமன்ற தராசிடம்

நியாயம் கேட்டது

பண வேற்றுமை

மன வேற்றுமையானது

விவேகம் குறைந்துபோய்

விவாகரத்தில் முடிந்தது.

“அட கடவுளே! மிகவும் பரிதாபமான கதைதான். கவிஞரே, இது நடந்த விஷயம் என்று சொல்கிறீர். ஆனால் நீரும் வியாபாரத்தைத்தானே சிபாரிசு செய்கிறீர்?” என்றோம்.

“நான் சிபாரிசு செய்யும் வியாபாரம் என்பது கணவன் மனைவி இரண்டு பேருமே பங்குதாரர்களாக செயல்படும் ஒரு வியாபாரம். அதனால் இதில் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு” ஏன்றார் கவிஞர்.

“கவிஞரே, இதுவரை நீர் எழுதிய கவிதைகளுக்கும், இந்த கவிதைக்கும் அமைப்பில் நிறைய வித்தியாசம் தெரிகிறதே, ஏன் இந்த மாற்றம்?” என்றோம்.

“இப்போது இது போன்ற முறையில் கவிதை சொன்னால்தான் நிறைய பேருக்கு பிடிக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் நாமும் மாற வேண்டியது தானே. மாற்றம்தானே முன்னேற்றத்துக்கு அடிப்படை” என்றார்.

Advertisements

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 5

8 அக்

நம்ப முடியாத விஷயத்தை கவிஞர் கடிவேலு சொன்னதால், அதை ஜீரணித்துக் கொள்ள நமக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. அதனால் நாம் காபி சாப்பிடலாமா என்று கேட்டவுடன் கொஞ்சம் இடைவெளி விட்டார். காபி குடிக்கும் போது அவருடைய போனைக் கொடுத்து ஒரு ஜோக்கை கேட்கச் சொன்னார் அல்லவா? இதற்கு முன்னால் அந்த ஜோக்கை கேட்காதவர்கள் இங்கே சொடுக்கவும். நாம் கொடுப்பதே நமக்கு திரும்ப வரும்

இதற்கு முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? – பகுதி 4

அந்த ஜோக்கை கேட்டுக் கொண்டே காபி குடித்து முடித்த பின்னர் கவிஞரைப் பார்த்தோம்.

“எப்படி இருந்தது அந்த ஜோக்?” என்றார் அவர்.

“நல்ல அர்த்தமுள்ள ஜோக்தான் அது. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இப்போது ஏன் நம்மை அந்த ஜோக்கை கேட்கச் சொன்னீர்?” என்றோம்.

“நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கு மிகவும் பொருத்தமானது இந்த ஜோக்” என்றார்.

“எப்படி?”

“அதாவது நாம் எதைக் கொடுத்தாலும் அது நமக்குத் திரும்பி வருமல்லவா? இதுவும் ஒரு விதிதான். பணத்தை முதலீடு செய்தீர் என்றால் உமக்கு பணம் திரும்பக் கிடைக்கும். நேரத்தை முதலீடு செய்தீர் என்றால் நேரம் உமக்கு திரும்பக் கிடைக்கும்” என்றார்.

“நேரம் திரும்பக் கிடைக்குமா? நேரம் போனால் வராது என்றல்லவா சொல்வார்கள்?”

“அது உண்மைதான்! நேரத்தை வீணடித்தால் அது திரும்ப கிடைக்காது. ஆனால் இங்கே நேரத்தை வீணடிக்கவில்லை, அதற்குப் பதிலாக நேரத்தை முதலீடு செய்கிறீர். அதனால் அது உமக்கு திரும்பக் கிடைக்கும். அதுவும் பல மடங்காக திரும்பக் கிடைக்கும்” என்றார்.

“எப்படி பல மடங்காக திரும்பக் கிடைக்கும்?” என்றோம் புரியாமல்.

“10000 மணி நேர விதியை மீறி வெற்றி பெற ஒரு வழி இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? மால்கம் கிளாடுவெல் அந்த விதியை ஏமாற்ற ஏழு படிகள் (7 Steps to cheat the rule) இருக்கின்றன என்று சொல்கிறார்”

“அது என்ன ஏழு படிகள்?”

“அந்த ஏழு படிகள் இவைதான்:

1.        உங்களுக்கு வழிகாட்ட ஒரு கோச்சை (Coach)   தேர்ந்தெடுங்கள்.
2.        உங்களைப் போன்ற சிந்தனையுள்ள தனி மனிதர்களையே நீங்கள் பழகும் வட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
3.        வெற்றிபெற தேவையான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.
4.        சாதாரண விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
5.        தொடர்ந்து விடாப்பிடியாக பயிற்சி செய்யுங்கள்.
6.        மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
7.        நீங்கள் பாதை மாறும் போது உங்களை நெறிப்படுத்தும் ஒருவரை கண்டுபிடித்து, அவரை உங்களுடன் வைத்திருங்கள்.

என்று அவற்றை வரையறுக்கிறார் அவர்” என்றார் கவிஞர்.

“சரி, இதன் மூலம் நேரத்தை எப்படி முதலீடு செய்வது?” என்றோம்.

“அந்த ஏழு படிகளிலும் பொதுவான ஒரு விஷயம் புலப்படுவது தெரிகிறதா? அதாவது உங்கள் நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் வேண்டும் என்பது அதன் அர்த்தம்”

“இன்னும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்” என்றோம். கவிஞர் விளக்கினார்.

1. உங்களுக்கு ஒரு வழிகாட்டி இருந்தால், நீங்கள் தேவையில்லாமல் புதிதாக எதையாவது செய்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்.

2. உங்களைப் போன்ற சிந்தனையுள்ள மனிதர்களே உங்களைச் சுற்றி இருந்தால் உங்கள் கவனமோ, குறிக்கோளோ சிதறாது.

3. வெற்றி பெறத் தேவையான பழக்க வழக்கங்களில் உங்கள் நேரம் செலவழிக்கப் படும்.

4. அதனால் சாதாரண விஷயங்களில் நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள்.

5. விடாப்பிடியாக பயிற்சி செய்தால் உங்கள் நேரம் முதலீடாக மாறும்.

6. மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நீங்கள் உங்களைப் போல பலரை உருவாக்குகிறீர்கள்.

7. உங்களை இடித்துரைக்க ஒருவர் உங்களுடன் இருந்தால் உங்கள் திறமை பளிச்சிடும்.

ஆக நேர மேலாண்மையும் அதை பல மடங்காக ஆக்குவதும் இந்த ஏழு படிகளில் அடங்குகிறது” என்றார் கவிஞர்.

மால்கம் கிளாடுவெல் சொன்ன ஏழு படிகளுக்கு, தன்னுடைய பாணியில் கவிஞர் சொன்னது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் தோன்றியது. ஆனால் நம் சந்தேகம் இன்னும் தீரவில்லை.

அதனால் “10000 மடங்கு மாத வருமானம் சம்பாதிக்க வழி இருக்கிறது என்றீரே, அப்படி இருந்தால் இதுவரை யாரும் முயற்சி செய்யாமலா இருப்பார்கள்?” என்றோம்.

“இதுவரை யாரும் செய்யாத வியாபாரம் என்று சொல்லவில்லை. ஆனால் வியாபாரம் ஆரம்பித்த உடனேயே 10000 மடங்கு வருமானம் கிடைக்கும் என்றும் நாம் சொல்லவில்லை. அப்படி கிடைக்கவும் வாய்ப்பில்லை. முதலில் 10000 ரூபாய் விற்றுமுதலுக்கு 10 சதவீதம் வருமானம் ஈட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு 100 சதவீதம் வருமானம் கிடைக்க என்ன வழி என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு 10 மடங்கு வருமானம் பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாகத்தான் வியாபாரத்தை வளர்க்க வேண்டும்” என்றார்.

“ஆனால் நடைமுறையில் எந்த வியாபாரத்திலும் 100 சதவீதம் வருமானம் கிடைப்பதற்கே வழியில்லையே. ஆனால் நீரோ 10 மடங்கு 100 மடங்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறீரே. அப்படி என்ன வியாபாரம் அது?” என்றோம்.

“மற்ற வியாபாரத்திற்கும் இந்த வியாபாரத்திற்கும் கொஞ்சமும் ஒற்றுமை இருக்காது. அதனால் இந்த வியாபாரத்தை நன்கு புரிந்து கொண்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இதைத்தான் ரிச் டாட் பூவர் டாட் (Rich Dad Poor Dad) புகழ் ராபர்ட் கியோஸாகி இருபத்தியோராம் நூற்றாண்டின் வியாபாரம் (The Business of the 21st Century) என்று அழைக்கிறார். அதுதான் பிணைய வியாபாரம் (Networking Business) என்பது” என்றார்.

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 4

3 அக்

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு, நேரம்தான் பணம் என்பதை விளக்கி, வியாபாரம் ஆரம்பிப்பவர்கள், வேலை செய்ய ஆட்களை அமர்த்துவதன் மூலம் எப்படி நேரத்தை பெருக்குகிறார்கள் என்று சொன்னார் அல்லவா? 10000 மணி நேரம் ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள் என்றும் அதன் மூலம் எப்போது என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்று தெரிந்து கொள்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே பெற்று விடுகிறார்கள் என்று நாம் சொன்னதை ஆமோதித்த கவிஞர், “அதையே 10000 மணி நேர விதி என்று அழைக்கிறார்கள்” என்றார்.

“அப்படியென்றால் வெற்றி பெற திறமையோ, நுணுக்கமோ தேவை என்பதை விட 10000 மணி நேர உழைப்பே முக்கியம் என்று சொல்கிறீரா?” என்றோம்.

“ஆமாம், இதைத்தான் மால்கம் கிளாட்வெல் கூறுகிறார். அதாவது இந்த 10000 மணி நேர விதியைக் கடைப்பிடித்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறுகிறார்” என்ற கவிஞர், “ஆனால், இந்த விதியை மீறி குறுகிய காலத்திலேயே வெற்றி பெறவும் அவரே அவரே வழியும் சொல்கிறார்” என்றார்.

“விதியை மீறுவதா? விதியை மீறுவது என்றால் அது தவறான காரியம் அல்லவா?” என்றோம்.

“இல்லை, இல்லை. விதியை மதியால் வெல்லலாம் என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அதைத்தான் சொல்கிறேன். அதாவது எல்லாவற்றுக்கும் பொருந்தும் பொதுவான ஒன்றை விதி என்கிறோம். அதையே நமது நன்மைக்காக நம் அறிவு நுட்பத்தை பயன்படுத்தி அந்த விதியை மாற்றுகிறோம். அதுதான் விதியை மதியால் வெல்வது என்பது” என்றார் கவிஞர்.

“கொஞ்சம் புரியும்படி சொல்லும்” என்றோம்.

“தண்ணீர் உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கிப் பாயும் என்பது ஒரு இயற்கை விதி அல்லவா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றோம்.

“பிறகு எப்படி உங்கள் வீட்டில் தண்ணீரை கீழே உள்ள தொட்டியில் இருந்து மொட்டை மாடியில் உள்ள தொட்டிக்கு அனுப்புகிறீர்?. இது இயற்கை விதியை மீறுவதுதானே? தண்ணீர் கீழிருந்து மேலே செல்கிறதல்லவா?” என்றார். நமக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது.

“அதுபோல 10000 மணி நேர விதியையும் மீற முடியும் என்கிறீரா?” என்றோம்.

“ஆமாம், இந்த விதியையும் மீறி வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்” என்றார்.

நமக்கு இப்போது குழப்பம் அதிகமாகி விட்டது. வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே பெற்று விடுகிறார்கள் என்று நாம் சொன்னதை ஆமோதித்து அது ஒரு விதி என்றார். இப்போது விதியை மீறலாம் என்கிறார். இது முரண்பாடாகத் தெரிகிறதே?

“கவிஞரே, எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள். 10000 மணி நேர விதியை பின்பற்றுபவர்கள் வெற்றி பெறுகிறார்களா? அல்லது அதை மீறுபவர்கள் வெற்றி பெறுகிறார்களா?” என்றோம்.

“ஒரு விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டீரென்றால் உமக்கு உண்மை புரியும். வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் நேரத்தை அதிகப் படுத்துகிறார்கள். ஆனால் வியாபாரத்தில் எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாதல்லவா?” என்றார்.

“ஆமாம்! உண்மைதான்” என்றோம். அவரே தொடர்ந்து,

“வியாபாரம் என்றாலே பணத்தை முதலீடு செய்வதுதான் முக்கியம். எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது ஐந்து சதவீதத்தில் இருந்து இருபது அல்லது இருபத்தைந்து சதவீதம் வரை இருக்கலாம். பணம் முதலீடு செய்வதால் ரிஸ்க்கும் இருக்கும் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்” என்றார்.

“அப்படியானால் எல்லோரும் வியாபாரம் ஆரம்பிக்க முடியாது. அப்படியே ஆரம்பித்தாலும் வெற்றி பெறுவது கடினம். அதனால் நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அப்படித்தானே?” என்றோம். நமக்கு சற்றே ஏமாற்றம்தான்.

“ஆனால், ஒரு வழி இருக்கிறது. 10000 மணி நேர விதியைப் பற்றி சொன்னேனல்லவா? அந்த விதியை மீறி, அதிகமான ரிஸ்க்கும் இல்லாமல் வியாபாரத்தில் வெற்றி பெறவும் வழியிருக்கிறது” என்றார் கவிஞர்.

“ரிஸ்க் இல்லாமல் வியாபாரமா? அப்படியென்றால் பணம் அதிகமாக முதலீடு செய்யத் தேவை இல்லை என்றுதானே அர்த்தம்? அப்படி ஒரு வியாபாரம் செய்து அதில் வெற்றி பெற முடியுமா?” என்றோம் வியப்புடன்.

“ஆமாம்! 10000 ரூபாய் விற்று முதல் (Turnover)செய்து 10000 மடங்கு வருமானம் ஈட்ட வழி இருக்கிறது” என்றார்.

“இரும்! இரும்! இப்போது என் காதில் விழுந்த விஷயங்கள் அதிர்ச்சியளிப்பது போல் இருக்கிறதே! இன்னொரு முறை சொல்லும்” என்று கேட்டோம்.

“அதாவது மாதம் 10000 ரூபாய்க்கு மட்டுமே விற்று முதல் (Turnover) செய்து மாதம் 10000 மடங்கு வருமானம் சம்பாதிக்க வழியிருக்கிறது என்று சொன்னேன்” என்றார்.

“10000 ரூபாய்க்கு 10000 மடங்கு என்றால் 10 கோடி ரூபாய் மாத வருமானமா? நடக்கக்கூடிய விஷயமா இது? சும்மா விளையாடாமல் சீரியஸாகப் பேசும்” என்றோம். 10000 என்று ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு என்னென்னவோ பேசுகிறாரே?

“உண்மையைத்தான் சொல்கிறேன். நடக்கிற, நடந்து கொண்டிருக்கிற விஷயம்தான் இது” என்றார் கவிஞர். இதுவரை நமக்கு அவர் மேலிருந்த நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இந்த மனிதர் தெளிவோடுதான் பேசுகிறாரா? இல்லை சொல்வதைக் கேட்பதற்கு ஆள் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கதை விடுகிறாரா?

“கவிஞரே, எனக்குத் தலை சுற்றுகிறது. இந்த விஷயத்தை கொஞ்ச நேரம் கழித்து தொடரலாம். நீர் சொன்னதை ஜீரணம் செய்யவே கொஞ்ச நேரம் ஆகும் போலிருக்கிறது. இப்போது காபி சாப்பிடலாம்” என்றோம்.

“சரி காபி ஆர்டர் பண்ணும்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய மொபைல் போனில் ஆழ்ந்து விட்டார். நாமும் ஈமெயிலில் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினோம்.

சற்று நேரத்தில் காபி வந்தது. “கவிஞரே, காபி எடுத்துக் கொள்ளும்” என்றோம். காபியை எடுத்துக் கொண்ட கவிஞர், “முதலில் உமக்கு எமது பாராட்டுக்கள்” என்றார்.

“என்ன திடீரென்று எனக்குப் பாராட்டு” என்றோம் புரியாமல்.

“நீர் எழுதிய இன்னொரு கதை திண்ணை வார இதழில் வந்திருக்கிறதே, அதற்காகத்தான். வெற்றியின் ரகசியம் என்று நீர் எழுதியுள்ள கதையில் வெற்றிக்கான பல விஷயங்களை, சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறீர். அதனால் நான் சொல்ல வருவதை உம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்” என்றார்.

அவர் பாராட்டியது நமக்கு டானிக் சாப்பிட்டது போல புத்துணர்ச்சி கொடுத்தது.

முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (30-09-2012) வெளியான வெற்றியின் ரகசியம் என்ற அந்த சிறுகதையைப் படிக்க இங்கே சொடுக்கவும். http://puthu.thinnai.com/?p=15114 கதை உங்களுக்கு பிடித்திருந்தால் பின்னூட்டமிடவும்.

திண்ணையில் நமது சிறுகதை – வெற்றியின் ரகசியம்!

1 அக்

முதல் தமிழ் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (30-09-2012) நமது மற்றுமொரு சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றியின் ரகசியம்! என்ற அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும். http://puthu.thinnai.com/?p=15114

இதற்கு முன்பு திண்ணை (16-09-2012) இதழில் வெளியான நம்பிக்கைகள் பலவிதம்! என்ற சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும். http://puthu.thinnai.com/?p=14733

திண்ணைக்கு நமது நன்றி!

நமது முந்தைய இடுகைகளில், நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு, நேரம்தான் பணம் என்பதை விளக்கி, வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் எப்படி வேலை செய்ய ஆட்களை அமர்த்துவதன் மூலம் நேரத்தை பெருக்குகிறார்கள் என்று சொன்னார் அல்லவா? 10000 மணி நேரம் ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுகிறார்கள் என்றும் அதன் மூலம் எப்போது என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

கவிஞர் கடிவேலுவுடனான நமது உரையாடல் அடுத்த இடுகையில் தொடரும்.

நேரம்தான் பணம்! – பகுதி 4 (Time is Money! – Part 4)

27 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 3

நேரம்தான் பணம் என்பதை விளக்கிக்கொண்டு வந்த கவிஞர் கடிவேலு நான்கு வகைகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி, அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், அதிகமான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் சொன்னார். பிறகு, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஒரு கேள்வியையும் கேட்டு, மிக முக்கியமான விஷயமாக அவர்கள் கனவு காண்கிறார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

“கனவு காண்பதோடு நிற்பதில்லை வியாபாரம் ஆரம்பிப்பவர்கள். நாம் முந்தைய கவிதையில் சொன்னது போல் கனவில்லாத மனிதர்களை தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்” என்றார்.

“அது எப்படி, கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம்.

“அவர்கள் தங்களது வியாபாரத்தை நடத்துவதற்கு, ஒவ்வொரு மட்டத்திலும் வெவ்வேறு வகையான திறமை கொண்ட ஆட்கள் தேவை. அதனால் அவர்கள் அதுபோல பல ஆட்களை மாதாமாதம் ஒரு சம்பளத்தை வரையறுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். தங்களது பணியை பல பகுதிகளாக பிரித்து அவர்கள் மூலமாக செய்து விடுகிறார்கள். இதனால் இருவருக்குமே நன்மை” என்றார்.

“அதாவது நம்பிக்கையான ஆட்கள் அவருக்கு கிடைக்கிறார்கள். அது போல் ஒரு நிலையான மாத வருமானம் வேலை செய்பவருக்கு கிடைக்கிறது. ஆனால் வியாபாரத்தில் ஏற்படும் லாபமோ, நஷ்டமோ வேலை செய்பவர்களை பாதிப்பதில்லை, சரிதானே” என்றோம்.

“மிகவும் சரி. ஏனென்றால் வியாபாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பது முதலாளியின் விருப்பம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவர் செய்வார். அந்த பொறுப்பு அவர் கையில்தான் இருக்கிறது” என்றார்.

“சரி, இதன் மூலம் நீர் சொல்ல வருவது என்ன?” என்றோம்.

“அதாவது நிறையப் பேரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களுடைய நேரத்தை அவர் விலைக்கு வாங்கி விடுகிறார் அல்லவா?” என்றார்.

“ஆமாம், ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் கொடுத்த வேலையை செய்ய வேண்டும் என்பதுதானே அதன் அர்த்தம்” என்றோம்.

“உதாரணமாக ஒருவர் தன்னுடைய வியாபாரத்திற்காக 50 பேரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவருக்கு தினமும் 400 மணி வேலை நேரம் கிடைக்கிறதல்லவா?” என்றார்.

“ஓஹோ! இதைத்தான் நேரத்தை பலமடங்காக பெருக்குவது என்கிறீரா?” என்றோம். நமக்கு இப்போது ஓரளவு புரிய தொடங்கி விட்டது.

“அதாவது பத்து பேர் சேர்ந்து ஒரு வேலையை பத்து நாளில் செய்தால், அதே வேலையை இருபது பேர் சேர்ந்து எத்தனை நாளில் செய்வார்கள்?” என்று கேட்டார் கவிஞர்.

“ஐந்து நாளில் செய்வார்கள். இது பள்ளியில் படித்த கணக்குப் பாடமாயிற்றே” என்றோம்.

“அதேதான். அதுதான் இங்கும் நடக்கிறது. மேலும் எந்த ஒரு செயலிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றால் அதற்காக 10000 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். அதாவது சரியான நேரத்தில் சரியான விஷயத்தை செய்ய அதில் 10000 மணி நேரம் அனுபவம் இருக்க வேண்டும். இதையே Practice makes perfect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்பொழுதுதான் அதில் நினைத்தபடி வெற்றியடைய முடியும். இதைத்தான் தன்னுடைய புத்தகத்தில் ராபர்ட் கியோஸாகி சொல்கிறார்” என்றார்.

நமக்கு இந்த கருத்து புதுமையானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் மிகவும் பயனுள்ளது என்பதும் புரிந்தது.

கவிஞரே தொடர்ந்து, “ஒரு சின்ன கணக்குப் போட்டு பாரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்பவர் ஒரு மாதத்தில் 25 நாட்களில் 200 மணி நேரம் வேலை செய்கிறார். அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு 2400 மணி நேரம். ஆக அவர் 10000 மணி நேரம் வேலை செய்ய சுமாராக ஐந்து வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். இதையே மால்கம் கிளாட்வெல் என்பவரும் 8765 மணி நேரம் கொண்ட ஒரு வருடத்தில் முழு நேர வேலைக்குச் செல்லும் ஒரு நபர் சராசரியாக 2080 மணி நேரம் வேலை செய்கிறார் என்று வரையறுக்கிறார்” என்றார்.

“ஆக வேலைக்குச் செல்பவருக்கு மட்டுமல்ல, வேலை கொடுப்பவருக்கும் அனுபவம் அதிகமாகிறது. வேலைக்குச் செல்பவர் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டு சரியாக செய்ய ஆரம்பிக்கும் போது ஐந்து ஆண்டுகள் ஓடி விடுகிறது. ஆனால் வேலை கொடுப்பவர் அதை முன்பே கற்றுக் கொண்டு விடுகிறார்” என்றோம்.

“ஆமாம், ஆனால் அந்த ஐந்து வருடங்களில் எல்லாமே மாறி விடுகிறது. பிறகு மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த 10000 மணி நேரத்தை அதற்கு முன்பே நீங்கள் பெற்று விட்டால், அப்போது காலத்தை ஜெயிப்பதாக ஆகிவிடும் அல்லவா?” என்றார். நமக்கு ஏதோ ஒரு விஷயம் தெளிவாவது போல் தோன்றியது.

“அதாவது நீங்கள் நேரத்தை பல மடங்காக பெருக்கும்போது இந்த 10000 மணி நேர அனுபவத்தை குறுகிய காலத்திலேயே அதாவது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களிலேயே பெற்றுவிடலாம். சரிதானே!” என்றோம்.

தலையை ஆட்டி ஆமோதித்தார் கவிஞர்.

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

25 செப்

நேரம்தான் பணம் என்பதை விளக்கிக்கொண்டு வந்த கவிஞர் கடிவேலு நான்கு வகைகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி, அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், அதிகமான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் சொன்னார் அல்லவா? கடைசியாக, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஒரு கேள்வியையும் கேட்டார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நாம் கொஞ்ச நேரம் யோசித்த பின், “ஒரு வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் முதலில் பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு என்ன செய்யப் போகிறோம், எந்த இடத்தில் செயல்படப் போகிறோம் என்றெல்லாம் தீர்மானித்து தேவையான இடத்தையும், இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள் போன்றவற்றையும் வாங்கி அதனதன் இடத்தில் பொருத்த வேண்டும். வேலைக்குத் தேவையான தகுந்த ஆட்களை நியமிக்க வேண்டும். உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டியதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது போன்ற பல வகையான வேலைகளைத்தான் வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் செய்வார்கள்” என்றோம்.

“அதெல்லாம் சரிதான். ஆனால் வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் செய்யும் இன்னொரு மிக மிக முக்கியமான விஷயம் என்ன?” என்று கேட்டார்.

“பணத்தை ஏற்பாடு செய்வது…. இல்லை இல்லை ஆட்களை நியமிப்பது” என்றோம். நமக்கு சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நாம் தடுமாறுவதைப் பார்த்த கவிஞர் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்?” என்றோம் சற்றே பொய் கோபத்துடன்.

“இதற்கு பதில் தெரிந்தால் இப்பொழுது நீரும் வியாபாரம் ஆரம்பித்திருப்பீர்” என்று சொல்லி விட்டு, “வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் முதலில் கனவு காண்கிறார்கள்” என்றார்.

“என்னது? கனவு காண்கிறார்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டோம்.

“ஆமாம்! கனவு காண்கிறார்கள். எப்படிப்பட்ட வீட்டில் வாழ வேண்டும், எந்த மாதிரி காரில் செல்ல வேண்டும், எவ்வளவு பணம் தங்களது கணக்கில் வங்கியில் இருக்க வேண்டும், எந்த ஊருக்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டும், எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற பல கனவுகளை அவர்கள் காண்கிறார்கள். அதனை நிறைவேற்ற முயற்சித்து வியாபாரத்தில் வெற்றி பெறுகிறார்கள்” என்றார்.

“ஆனால், மற்றவர்களும் இவற்றை எல்லாம் செய்கிறார்கள் அல்லவா?” என்றோம் சந்தேகமாக.

“இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்தோ அல்லது தங்கள் சக்திக்கு எது முடியுமோ, அந்த அளவில் மட்டுமே திருப்திப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் வியாபாரம் செய்பவர்கள் முதலில் பெரிய கனவு கண்டு அதை எப்படியாவது அடைய முயற்சிக்கிறார்கள்” என்றார்.

“அதனால்தான் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், ‘இளைஞர்களே! கனவு காணுங்கள்’ என்றாரா” என்றோம்.

“ஆமாம், அவ்வாறு கனவு கண்டால் இந்தியா வல்லரசாகும் என்பது அவருடைய கனவு. அதைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம்” என்றார்.

“ஒருவேளை அப்படி கனவு காணத்தவறினால் என்ன ஆகும்?” என்றோம்.

“யார் கனவு காண்கிறார்களோ, அவர்களுடைய கனவுகளை நனவாக்க உங்களை அறியாமலே நீங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டுவிடுவீர்கள்” என்றார். எவ்வளவு பெரிய நடைமுறை உண்மை இது. அதையும் கவிதையிலேயே சொன்னார் கவிஞர்.

இதோ அவருடைய கவிதை.

தூங்கினால் வருவதல்ல கனவு உன்னைத்

தூங்காமல் செய்வதுதான் கனவு – ஏங்கியே

இளமையை கழிக்காமல் அப்துல்கலாம் ஐயாசொன்ன

வளமான பாரதத்தை உருவாக்க கனவுகாண்பாய்!

 

கனவேதும் காணாமல் போனால்பின் என்னாகும்?

வினவினால் விடைஇதுவே தெரிந்துகொள்! – கனவுகளே

வேண்டாமென நீஇருந்தால் வேறொருவர் உன்னைத்தங்க

கூண்டிலே கவர்ந்துசெல்வார் அவர்கனவை நனவாக்க!

“எனவே கனவு காண்பதுதான் மிக முக்கியம் என்கிறீர் அல்லவா?” என்றோம்.

“ஆமாம்” என்றவர், “மனித வாழ்க்கையும் மட்டன் பிரியாணியும் ஒன்று” என்றார்.

இப்போது நாம் சிரித்தோம்.

“என்ன கவிஞரே, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்?” என்றோம்.

“ஆமாம், இரண்டுமே பீஸ்ஃபுல்லாக இருந்தால்தான் திருப்தியாக இருக்கும்” என்றார்.

பீஸ்ஃபுல் என்ற ஒரே மாதிரியான உச்சரிப்புள்ள இரண்டு ஆங்கில வார்த்தைகளை அமைதிக்கும், நிறைய துண்டுகள் என்பதற்கும் பயன்படுத்திய விதத்தைப் பார்த்த நாம் அடைந்த ஆச்சரியம், அடுத்து அவர் சொன்ன ஒரு சிலேடை கவிதையைக் கேட்டதும் இன்னும் பல மடங்கானது.

பணத்தால் கிடைக்கும் தேங்காய் சேர்வதால்

மணந்தால் சுவைக்கும் பீஸ்ஃபுல்லாய் இருந்தால்

வாய்க்கும் மனதிருப்தி அதனால் நல்மனித

வாழ்க்கையும் மட்டன் பிரியாணி ஆகும்

என்று ஒரு கவிதையை சொன்னார். எப்படித்தான் உடனுக்குடன் எதுகை மோனையுடன் கவிதை புனைகிறாரோ என்ற ஆச்சரியம் நமக்கு ஏற்பட்டது. இதற்கு முன்னால் கவிஞர் சொன்ன சிலேடை கவிதையும் நம் ஞாபகத்துக்கு வந்தது.

பணம் கொடுத்தால்தான் பிரியாணி கிடைக்கும். அதுபோல் போதுமான பணம் இருந்தால் நல்ல வாழ்க்கை அமையும். அதனால்தான் அதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறார். மேலும் தேங்காய் சேர்வதால் மணந்தால் சுவைக்கும் என்பதில் தேங்காய் சேர்க்கும்போது பிரியாணியின் மணமும் சுவையும் அதிகமாகும் என்பதற்கும், அதையே தேன் போன்ற இனிமையும் காய் போல கசப்பும் சேர்ந்ததுதான் மணவாழ்க்கை, அதுதான் சுவைக்கும் என்பதற்காகவும் பயன்படுத்தி இருப்பதை ரசித்தோம். அது போல வாய்க்கும் மனதிருப்தி என்பதை திருமண வாழ்க்கை மனதுக்கு திருப்தியானதாக வாய்க்கும் என்றும், சாப்பிடும் போது வாய்க்கு ருசியாக இருந்தால் மனத்தில் திருப்தி ஏற்படும் என்பதற்கும் பயன்படுத்தி இருப்பதையும் மிகவும் ரசித்தோம்.

“கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் கனவு கண்டால் மட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி சொல்லும்” என்றோம்.

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

20 செப்

நான்கு வழிகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்றும் அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கவிஞர் கடிவேலு விளக்கினாரல்லவா? இதன் மூலம் நேரம்தான் பணம் என்பதை புரிந்து கொண்டோம். எந்த அளவுக்கு நேரத்தை பிரயோஜனமாகப் பயன்படுத்துகிறோமோ அதைப்பொருத்து நமது வருமானம் அதிகமாகும் என்பதும் புரிந்தது.

நேரம்தான் பணம்! (Time is Money) முந்தைய இடுக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்.

“கவிஞரே, நேரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அதை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்தினால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்றும் புரிந்து கொண்டோம்” என்றோம். அதை ஆமோதித்த கவிஞர்,

“ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால் நேரம் என்பது மாற்ற முடியாத மேற்கூரை கொண்டது. அதாவது ஒருநாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் என்பதை யாரும் மாற்றமுடியாது. அந்த நேரத்துக்குள்தான் நாம் நம்முடைய அன்றாட வேலைகளையும் (சாப்பிடுவது, குளிப்பது, பிரயாணம், தூக்கம், டிவி பார்த்தல், அரட்டை அடித்தல், ஷாப்பிங் போவது போன்ற வேலைகளையும்) மற்ற அத்தியாவசிய வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. இவற்றில் எந்த வேலைகளைக் குறைத்து, அந்த நேரத்தை வருமானத்திற்கு பயன்படுத்த முடியும்?” என்று கேட்டார். நமக்கு பதில் தெரியாததால் அமைதியாக இருந்தோம். கவிஞரே தொடர்ந்தார்.

“மாத சம்பளத்திற்கு வேலை செய்பவரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து மணி நேரம் வேலை செய்து ஒரு வருமானம் ஈட்டுகிறார். அவர் அந்த வருமானத்தை அதிகப்படுத்த  வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இன்னும் ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்ய முடியுமா? ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் வேலை செய்தால் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவழிக்க முடியுமா? உடம்புதான் என்ன ஆகும்?. ஆனால் சிலர், சில சமயங்களில் ஓவர்டைம் செய்து வருமானம் ஈட்டுவதுண்டு. ஆனால் அதுவே தினசரி வாழ்க்கையாக முடியுமா என்ன?” என்று கேட்டார்.

“தினசரி ஓவர்டைம் கிடைக்காதே, அப்படியே கிடைத்தாலும் தினமும் திறமையாக பணி செய்ய முடியாமா?” என்றோம். நாம் முடிக்கும் முன்பே,

“அதனால்தான் சிலர் புத்திசாலித்தனமாக, படித்து வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இரட்டை வருமானம் கிடைக்கிறது. ஆனால் குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதான பிறகு வருமானம் அதிகமாக தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி வேலைக்குச் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகளையும், குடும்பத்தை சரிவர கவனிக்க முடிவதில்லை.” என்றார் கவிஞர். தொடர்ந்து,

“சரி, சொந்த தொழில் செய்பவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களும் தங்கள் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால், அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அல்லது உதவிக்கு ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிறகு அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், நிர்வகிக்க வேண்டும் என்பதால் அதிக நேரம் அலுவலகத்திலேயே இருக்க வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. இதனாலும் சிக்கல் ஏற்படுகிறது” என்றார்.

“நீர் சொல்வதைப் பார்த்தால் எல்லாம் பிரச்சினையாகவே இருக்கிறதே, பிறகு என்னதான் செய்வது?” என்று கேட்டோம். அதற்கு, “கொஞ்சம் பொறும். இன்னும் சில விஷயங்களையும் பார்ப்போம். வியாபாரம் செய்பவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் மேலும் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. பிறகு அதிக நேரம் வேலை செய்து அதை நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அதிகப்பணம் சம்பளமாகக் கொடுத்து நிர்வாகிகளையும், வேலையாட்களையும் வேலைக்கு வைக்க வேண்டியிருக்கிறது. அதிகப்பணம் முதலீடு செய்வதால் நஷ்டமாகாமல் தவிர்க்க மிகவும் எச்சரிக்கையாக வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இதே போல்தான் முதலீடு செய்பவர்களும். அதிகமான பணத்தை முதலீடு செய்தால்தான் வருமானத்தை அதிகப்படுத்த முடியும். அதனால் ரிஸ்க்கும் அதிகம்” என்றார்.

“வேலையில் இருப்பவர்களுக்கு நஷ்டம் என்ற ரிஸ்க் இல்லை. அவர்களுக்கு பணம் குறைவாக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் இருக்கும். ஆனால் பணத்தை முதலீடு செய்து சொந்த தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் நிறைய பணம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் இருக்காது. நாம் சொல்வது சரிதானே?” என்றோம்.

“ரொம்பவும் சரி! அத்தோடு பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் இதே நிலைதான். குடும்பத்தில் இருப்பவர்களுடன் செலவழிக்க நேரம் கிடைத்தாலும், எப்போதும் டென்சனும் அதிகமாகவே இருக்கும். முதலீட்டுக்கு தகுந்த லாபம் வர வேண்டுமல்லவா” என்றார்.

“எல்லாம் சரிதான், ஆனால் நீர் நேரத்தை பலமடங்காக பெருக்குவது எப்படி? என்றுதானே சொல்லத்தானே ஆரம்பித்தீர். அதற்கு என்ன செய்வது? அதை தெரிந்து கொள்ளத்தான் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றோம். நாம் கேட்டது சரிதானே?

“சொல்கிறேன். அதற்கு முன்னால், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும்” என்று வழக்கம் போல ஆரம்பித்தார்.

“என்ன கேட்கப் போகிறீர்?, கேளும்! தெரிந்தால் சொல்கிறோம்” என்றோம்.

“ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார் கவிஞர்.

ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? யோசித்தோம்.

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money – Part 1)

18 செப்

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை என்று ஒரு புராணக் கதையை சொல்லிவிட்டு பிறகு, இயற்கையின் விதி என்றும் மாறாது என்றும் சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? முடிக்கும் போது நேரம்தான் பணம் என்பது உமக்குத் தெரியுமா? என்று ஒரு கேள்வியையும் கேட்டார். இடையில் நமது நண்பர் போன் செய்து திண்ணையில் நமது சிறுகதை வந்திருப்பதாக சொன்னதால் இடையில் அதுபற்றி பேச வேண்டியதாகிவிட்டது. அந்த சிறுகதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

மறுபடி நமது பேச்சு நேரம்தான் பணம் என்பது பற்றித்திரும்பியது. கவிஞர் கடிவேலு சொன்னார், “இந்த உலகமே ஒரு விஷயத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. அதுதான் பணம். ஒருவன் பிறப்பதிலிருந்து இறப்பு வரை பணம் சம்பாதிப்பது எப்படி, அதன் மூலம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழமுடியும், வாழ்க்கையில் என்னென்ன வசதிகளை அடைய முடியும் என்பது பற்றித்தான் ஒவ்வொரு படியாக கற்றுக்கொடுக்கப் படுகிறது” என்றார்.

நாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தோம். கவிஞர் மேலும் தொடர்ந்தார், “எந்தப் பள்ளியில் படித்தால் நல்ல மார்க் எடுக்கலாம். எவ்வளவு மார்க் எடுத்தால் என்ன வேலைக்குப் போகலாம். என்ன வேலைக்குப் போனால் எவ்வளவு சம்பாதிக்கலாம். எவ்வளவு சம்பாதித்தால் எப்படிப்பட்ட குடும்பத்தில் பெண் கிடைக்கும். அதன் மூலமாக எவ்வளவு வரதட்சணை அல்லது வாழ்க்கை வசதிகள் கிடைக்கும். எப்படிப்பட்ட வீட்டில் வாழலாம். எந்த காரில் போகலாம். எந்த கிளப்பில் மெம்பராகலாம். சமுதாயத்திலும், சுற்றத்தாரிடத்திலும் எப்படிப்பட்ட அந்தஸ்து கிடைக்கும். பிறகு குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்கலாம். இப்படி எல்லாமே பணத்தை சுற்றிதான் வாழ்க்கையே நடக்கிறது” என்றார்.

“ஆமாம், உண்மைதான்” என்றோம். அவரே மேலும் தொடர்ந்து, “வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த பணத்தை எப்படி பணம் சம்பாதிப்பது என்று கொஞ்சம் யோசித்தோமானால் எல்லோருக்கும் தெரிந்த வழிகள் நான்கு தான். ஏதாவது ஒரு வேலை செய்தோ, தொழில் செய்தோ, வியாபாரம் செய்தோ அல்லது முதலீடு செய்தோதான் நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கிறது” என்றார்.

நமக்கு இப்போது ஊடகங்கள் மூலமாக கேள்விப்படுகிற ஊழல், லஞ்சம் போன்ற வழிகளில் சிலர் கோடிகோடியாக பணம் சம்பாதிப்பது ஞாபகம் வந்தது. ஆனால் நேர்மையான முறையில் என்று கவிஞர் முன்பே சொல்லிவிட்டதால் ஏதும் பேசாமல் அவரைக் கவனித்தோம்.

கவிஞர் தொடர்ந்து, “ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம், இதில் எந்த வகையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும் அங்கு நேரமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான். எப்படி என்று பார்ப்போம். ஒருவர் ஒரு வேலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் வேலை செய்வதற்கு, வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சம்பளமாக கொடுக்கப்படும். தினக்கூலி வேலையாக இருந்தால் அவருக்கு தினசரி அந்த வேலைக்கு கூலி கிடைக்கும். இதுதான் நடைமுறை!

இதில் திறமையைப் பொருத்து அந்த சம்பளம் முடிவு செய்யப்படும். தனியார் வேலையோ, அரசாங்க வேலையோ இதுதான் நிலைமை. கல்வித்தகுதி, வேலையில் எவ்வளவு காலம் அனுபவம், திறமை இதைப்பொருத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஆனாலும் நீங்கள் அந்த குறிப்பிட்ட மணி நேரம் வேலை செய்துதான் ஆகவேண்டும். அதாவது நீங்கள் வேலை செய்யும் நேரம்தான் பணமாக உங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் வருமானம் என்பது நீங்கள் வேலை செய்யும் நேரம். உங்களுக்கு மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் திறமை இருந்தாலும் நீங்கள் வேலை செய்யவில்லை என்றால் உங்களுக்கு பணம் கிடைக்குமா? எனவே நேரம்தான் பணம் என்பது இப்போது புரிகிறதல்லவா?” என்றார் கவிஞர்.

இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை அல்லவா? அதனால், “ஆமாம்” என்றோம்.

கவிஞர் தொடர்ந்தார், “உங்கள் திறமை மற்றும் நீங்கள் வேலை செய்யும் நேரம் இதுதான் உங்கள் வருமானத்துக்கு அடித்தளம். இதோ ஒரு ஃபார்முலாவாக சொன்னால்

திறமை X வேலை நேரம் = வருமானம் (இதில் திறமை என்பதில் கல்வித்தகுதி, அனுபவம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்)

இதிலும் நீங்கள் வேலை செய்யும் சூழ்நிலை அதாவது இடம் அல்லது தொழில் ஆகியவற்றைப் பொருத்தும் உங்கள் வருமானம் கூடவோ, குறையவோ செய்யும். இப்போது அதே ஃபார்முலா

சூழ்நிலை (திறமை X வேலை நேரம்) = வருமானம்

என்று மாறுபடும். அதாவது ஒரே அளவிலான திறமையும் வேலை நேரமும் கொண்ட இருவர் செய்யும் தொழிலையோ, சூழ்நிலையோ பொறுத்து வருமானம் வேறுபடும்.

உதாரணமாக ஒரு பொறியியல் பட்டதாரி ஒரு கட்டுமான கம்பெனியில் பெறும் சம்பளமும், அதே அளவில் திறமையான ஒருவர் அரசாங்க வேலையில் பெறும் சம்பளமும், ஒரு I.T. கம்பெனியில் எஞ்சினியராக பெறும் சம்பளமும் வேறு வேறு அளவில் வித்தியாசப்படும்.

இதே விஷயம் சொந்த தொழில் செய்பவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக ஒரு டாக்டர் தினமும் எவ்வளவு நேரம் தன்னுடைய கிளினிக்கில் அமர்ந்து நோயாளிகளை கவனிக்கிறாரோ அந்த அளவுதான் அவருடைய வருமானமும் இருக்கும். இதுவும் சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். அதாவது இங்கும் அதே ஃபார்முலா

சூழ்நிலை (திறமை X வேலை நேரம்) = வருமானம்

இப்போது வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுபவர்களை பார்ப்போம். இங்கும் நேரம்தான் வருமானத்தை நிர்ணயிக்கிறது என்றாலும், இங்கு பணமும் முதலீடு செய்யப்பட்டு அதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பணம் X  திறமை X வேலை நேரம் = வருமானம்

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் பணம். பணத்தை முதலீடு செய்து, அதை திரும்ப ஈட்டி, திறமையையும், வேலை நேரத்தையும் முறையாகப் பயன்படுத்தும் போது அதற்கேற்றாற்போல் வருமானம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் முதலீடு செய்வதற்கோ, திரும்ப ஈட்ட வேண்டிய பணமோ சுருங்கும் போது வருமானமும் சுருங்கி விடும். அதனால் நஷ்டம் ஏற்படவும் நிறைய வாய்ப்பு உண்டு. திறமையையும், வேலை நேரத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதால் பணத்தின் தாக்கம் மிக அதிகம். மிகவும் திறமையான முறையில் நிர்வகிக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அடுத்து முதலீட்டாளர்களை எடுத்துக் கொண்டால், இங்கும் பணம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் ரிஸ்க் அதிகம். அத்தோடு அந்த பணம் வியாபாரத்தில் முதலீடு செய்யப் படுவதால், அதை திரும்ப ஈட்ட சில காலம் காத்திருக்க வேண்டும். அதனால் இங்கும் நேரம்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இதிலிருந்து நேரத்தின் அருமையும், அதன் மதிப்பும் புரிகிறதல்லவா? எனவே நேரம்தான் பணம்” என்றார். நாம் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தோம்.

இயற்கையின் விதி என்றும் மாறாதது!

13 செப்

நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை! (தொடர்ச்சி)

கவிஞர் கடிவேலு நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்லிக் கொண்டு வரும்போது சுவையான ஒரு கதையை சொன்னாரல்லவா? நமக்கு நல்ல நேரம் வாய்க்க மற்றவர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“நீர் சொல்வது நமக்குப் புரிகிறது” என்று சொன்னோம்.

“அப்படியானால் உமக்கு ஆசீர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம்” என்றார். அத்தோடு, “எம்பெருமான் பரமசிவனும் அன்னை பார்வதியும் உரையாடியதாக சொன்ன கதையின் மூலம் இன்னொரு விஷயமும் நமக்கு புரிகிறது” என்றார்.

“அது என்ன?” என்று கேட்டோம்.

“இயற்கையின் விதியை மாற்ற முடியாது என்பதுதான்” என்றார் கவிஞர்.

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம் ஆர்வமாக.

“ஒருவனுடைய பாவபுண்ணியத்திற்கான பலனை அவன் கண்டிப்பாக அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று பார்த்தோம் அல்லவா? அது போல எதையும் முறைப்படி செய்தால் அதற்குரிய பலன் கட்டாயம் வந்தே தீரும். இது தான் இயற்கையின் விதி” என்றார்.

“அதாவது புவியீர்ப்பு விசை (Gravity) போலவா?” என்றோம்.

“ஆமாம், புவியீர்ப்பு விசை என்பது ஒரு இயற்கையின் விதி. அது எல்லோருக்கும் பொதுவானது. யார் ஒரு பொருளை மேலே தூக்கிப் போட்டாலும் அது கீழே விழுந்துதான் ஆகவேண்டும். அது போல் நல்லவனோ கெட்டவனோ யார் சூடு பண்ணினாலும் தண்ணீர் 100 டிகிரி செல்சியஸில் ஆவியாகித்தான் ஆக வேண்டும். இந்த விதி எப்பொழுதும் மாறாவே மாறாது” என்று சொல்லிவிட்டு

கட்டையோ குட்டையோ கருப்போ சிவப்போ

பட்டையோ சட்டையோ புத்தியோ – மட்டையோ

யார்எறிந் தாலும்அது மேலேசென்றால் பூமிவரும்

யார்எரித் தாலும்தண் ணீர்கொதித்தால் ஆவிவரும்

என்று ஒரு கவிதையையும் சொன்னார். நமக்கு ஆச்சரியமாக இருந்தது.

“கவிஞரே, எப்படி உடனுக்குடன் எதுகை மோனையுடன் கவிதை புனைகிறீர்?” என்றோம்.

“நாம் ஒரு விஷயத்தில் நுணுக்கமாக கவனம் செலுத்தும் போது எல்லாம் தானாகவே உருவாகி வரும்” என்றார் மிகவும் சாதாரணமாக.

“ஆமாம், அந்தக் கவிதையில் பட்டையோ சட்டையோ என்று சொல்லியிருக்கிறீரே, அப்படியென்றால் என்ன அர்த்தம்?’ என்றோம்.

“கடவுள் இருக்கிறார் என்று உறுதியாக நம்பி, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு, உடம்பில் திருநீறை பட்டையாக பூசிக்கொள்ளும் பக்திமான்களையும், கடவுள் இல்லையென்று வாதிடும் கருப்புச் சட்டைக்காரர்களையும் அது குறிக்கிறது” என்றார்.

அவர் சொன்ன கவிதையில் மட்டை என்ற வார்த்தையை முட்டாள் என்று குறிப்பதற்கும், மேலே தூக்கிப்போடும் பொருளாகவும், எரிக்கும் பொருளாகவும் அர்த்தம் வரும்படி பயன்படுத்தியிருப்பதை இரசித்தோம்.

பிறகு “அதாவது கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களுக்கும், இல்லை என்று சொல்பவர்களுக்கும் இயற்கையின் விதி ஒன்றுதான் என்கிறீர். அப்படித்தானே?” என்றோம்.

“ஆமாம், கடவுள் எல்லோருக்கும் ஒரே விதமான ஆற்றலை அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறார். அதை அவரவர்கள் தங்களுடைய மனப்பான்மைக்கும், அறிவுத்திறனுக்கும் தகுந்தாற்போலும், பூர்வபுண்ணியத்துக்கு ஏற்றார் போலவும் பயன்படுத்தி தங்களுக்கு வாழ்வோ தாழ்வோ ஏற்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார். தொடர்ந்து, “பதினாறு கவனகர் ஐயா அவர்கள் அந்த இறையாற்றலை நாம் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் மின்சாரத்துக்கு ஒப்பிடுவார்.

அதாவது ‘நாம் பயன்படுத்தும் மின்சக்தி ஒன்றுதான். ஆனால் அது எந்த உபகரணத்தில் பயன்படுத்தப் படுகிறதோ அதற்கேற்றவாறு அதன் பயன்பாடு மாறுகிறது. மின்விசிறிக்குள் செல்லும்போது அது சுற்றுகிறது. பல்புக்குள் செல்லும்போது அது ஒளிர்கிறது. குளிர்சாதனப் பெட்டிக்குள் செல்லும்போது குளிர்ச்சியைக் கொடுக்கிறது. இஸ்திரிப் பெட்டிக்குள் சென்றால் உஷ்ணத்தை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சென்று ஒலி ஒளிக்காட்சியாக மாறுகிறது. வானொலிப்பெட்டியில் பாடலாக சத்தமிடுகிறது என்று கூறுவார்” என்றார்.

“அதாவது அந்த இறையாற்றலை ஈர்த்துக் கொள்ளும் விதமாக நாம் எவ்வாறு நம் மனத்தை தயார் செய்கிறோமோ, அது போல் நமது வாழ்க்கை அமைகிறது, சரிதானே!” என்றோம்.

“மிகவும் சரியாக சொல்லிவிட்டீர். நாம் என்னவாக ஆக வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் நம்மை நாமே டிசைன் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நாம் இறையாற்றலை சரியான விதத்தில் பயன்படுத்தி எதையும் சாதிக்க முடியும்” என்றார் கவிஞர்.

“கவிஞரே, நாம் நமது தலைப்பை விட்டு வேறு திசையில் சென்று விட்டோம் என்று நினைக்கிறேன்” என்றேன் திடீரென நினைவு வந்தவனாக.

“இல்லை, இதுவும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். இந்த மாறாத இயற்கையின் விதியை, நேரத்தை பல மடங்காக பெருக்கவும் பயன்படுத்துவோம். சரி, இப்போது நேரத்தின் அருமையைப் பற்றி பேசுவோம். நேரம்தான் பணம் என்பது உமக்குத் தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்டார்.

“கேள்விப்பட்டிருக்கிறோம். நீர் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்” என்றோம்.

நல்ல நேரம் கிடைக்க ஆசீர்வாதம் தேவை!

12 செப்

நேரத்தை பல மடங்காகப் பெருக்குவது எப்படி? – பகுதி 2

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்று சொல்ல ஆரம்பித்த கவிஞர் கடிவேலு, நம்முடைய வாழ்க்கைத் தரம், நாம் எப்படி நேரத்தை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும், நாம் எடுக்கும் சில முடிவுகளின் அடிப்படையிலும்தான் அமைகிறது என்று சொன்னார் அல்லவா? பிறகு ஒரு கதை சொல்லடுமா? என்று கேட்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

“இது நான் கேள்விப்பட்ட ஒரு புராணக்கதை. நீரும் கூட கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சமயம் கைலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்களாம். பார்வதி அன்னை கருணையே உருவானவள் அல்லவா? பக்தர்கள் மீது கருணையுள்ளம் கொண்டு அவர்களின் துன்பங்களைப் போக்க எண்ணுபவள்.

பரமசிவனிடம் அன்னை பார்வதி கேட்கிறாள், ‘ஒரு சிலர் ஏழையாகப் பிறந்தாலும், நாளடைவில் பணக்காரர்களாகி நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் வேறு சிலர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவர்களால் முன்னேற முடிவதில்லையே. கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்க்கையைக் கழிக்கிறார்களே, இதற்கு காரணம் என்ன?’ என்று கேட்கிறாள்.

அதற்கு பரமசிவன், ‘முந்தைய பிறவியில் அவரவர்கள் பண்ணிய பாவ புண்ணியத்தின் பலனை இந்த பிறவியில் அனுபவிக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி இந்தப் பிறவியில் ஏழைக்குடும்பத்திலோ, பணக்காரரின் வீட்டிலோ பிறக்கிறார்கள். பிறகு இந்தப் பிறவியில் பண்ணும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவும் வாழ்க்கை மாறுகிறது” என்கிறார்.

“அது எப்படி?” என்று அன்னை பார்வதி கேட்க, “மற்றவருக்கு கேட்காமலே உதவி செய்த புண்ணியத்தை பெற்றவன் இந்தப் பிறவியில் வசதியான குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்படாமல் வாழ்கிறான். பிறர் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்ட பிறகு அந்த உதவியைச் செய்பவன் இந்தப் பிறவியில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்தாலும், தன்னுடைய முயற்சியினால் முன்னேறி நல்ல வாழ்க்கையை வாழும் பேறு பெறுகிறான். ஆனால் மற்றவர் உதவி கேட்டும் செய்யாதவன் இந்த பிறவியில் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முன்னேற முடியாமல் கடைசிவரை கஷ்டத்திலேயே வாழ்க்கையைக் கழிக்கிறான்’ என்று சொல்கிறார் இறைவன்.

உடனே பார்வதிதேவி, ‘கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தும் ஒருவன், இந்தப் பிறவியில் நல்லது பண்ணி மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் ஏற்படும் புண்ணியத்தின் காரணமாக கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ முடியாதா?” என்று கேட்கிறாள்.

அதற்கு பரமசிவன் பதில் சொல்கிறார், “அதற்கும் அவன் முந்தைய பிறப்பில் புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் அப்படி ஒரு சூழ்நிலை அவனுக்கு அமையும். அப்படி அமைந்தால்தான் அவனுடைய கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வாழ்க்கை வாழ முடியும்” என்கிறார்.

“அவனுடைய முன்வினைப் பயன்தான் காரணம் என்று சொல்கிறீர்கள். ஒருவன் நம்மைத் துதித்து வேண்டிக்கொண்டால், அப்போது நம்மால் அவனுடைய தலையெழுத்தை மாற்ற முடியுமல்லவா?” என்று கேட்கிறாள் கருணையே வடிவான அன்னை பார்வதி. ஆனால் எம்பெருமான் சிரித்துக் கொண்டே, “ஒருவனுடைய வினைப்பயன் தீரும்வரை யார் நினைத்தாலும் அவனுடைய விதியை மாற்ற முடியாது. அவனுடைய வினைக்கான பலனை அவன் அனுபவித்தேதான் ஆக வேண்டும்” என்கிறார்.

“நம்மால் கூட ஒருவனது தலையெழுத்தை மாற்ற முடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாம் நினைத்தால் நிச்சயம் முடியும். இதோ இந்த பக்தன் தினமும் என்னை நினைத்து தவறாமல் பூஜை செய்கிறான். இருந்தாலும் தன்னுடைய கஷ்டம் தீர வழி தெரியாமல் தவிக்கிறான். அவன் படும் அவஸ்தையை பார்க்க சகிக்க முடியவில்லை. அருள்கூர்ந்து அவனுடைய கஷ்டத்தை தீர்க்க வழி செய்யுங்கள்” என்று பரமசிவனிடம் மன்றாடுகிறாள்.

அதற்கு இறைவன் “அவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. அது வரை அவன் கஷ்டப் பட்டுத்தான் ஆகவேண்டும். யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது” என்று சொல்கிறார்.

உடனே கோபம் கொண்ட அன்னை பார்வதி, “என்னால் கூட முடியாதா? நான் நடத்திக் காட்டுகிறேன் பாருங்கள். இதோ என்னுடைய சக்தியினால் அவனுடைய கஷ்டத்தைப் போக்குகிறேன்” என்று சொல்லி சபதமிட்டு விட்டு, ஒரு சாக்குப்பை நிறைய பணத்தை நிரப்பி, அவன் நடந்து போகும் பாதையில் போட்டு விடுகிறாள்.

அந்த மனிதன் நடந்து வந்து கொண்டிருக்கிறான். இன்னும் கொஞ்ச தூரம்தான். அந்த பணம் நிறைந்த சாக்குப்பை கிடக்கும் இடத்துக்கு வந்து விடுவான். அதைப் பார்த்து விட்டான் என்றால் அத்தோடு அவனுடைய கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடும். ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் அன்னை பார்வதி.

அந்த நேரத்தில்தான் விதி விளையாடுகிறது. அவனுக்கு முன்னால் நான்கு குருடர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நடந்து வருகிறார்கள். அதைப் பார்த்த அந்த பக்தன் மனதில் ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ‘கண் தெரியும் நாமே நடந்து போகும்போது எதிலாவது இடறிக்கொள்கிறோம். பாவம் கண் தெரியாமல் இவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுவார்கள்’ என்று நினைத்துப் பார்க்கிறான். கண்ணை மூடிக்கொண்டு அவர்களைப் போல் நடந்து பார்க்க முயற்சிக்கிறான். கொஞ்ச தூரம் வரை அப்படியே நடந்து செல்கிறான்.

அதனால் அந்த பணம் நிறைந்த சாக்குப்பையைத் தாண்டிச் சென்று விடுகிறான். இதைப் பார்த்த பரமசிவன் சிரிக்கிறார்” என்று கதையை முடித்தார் கவிஞர் வடிவேலு. அற்புதமான கதை. சுவையாக கதை சொல்வதற்கு கவிஞருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

“இந்தக் கதையின் மூலம் நீர் சொல்ல வருவது என்ன?” என்றோம்.

“இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், தெய்வமே முயன்று ஒருவனுக்கு நல்லது பண்ண நினைத்தாலும் அவனுக்கு நேரம் சரியில்லை என்றால் எதுவும் நடக்காது, அவனுடைய கஷ்டம் தீராது. அத்தோடு மற்றவருக்கு உதவி செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம், அதுவும் மற்றவர்கள் கேட்காமலே அவர்கள் கஷ்டத்தைத் தீர்ப்பவன் எவ்வளவு புண்ணியத்தை சம்பாதிக்கிறான் என்பதும் இதிலிருந்து புரிகிறதல்லவா?” என்றார் கவிஞர்.

“அதாவது நல்ல நேரம் உமக்கு வர வேண்டுமென்றால், நீர் நிறைய புண்ணியம் சேர்த்து இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதத்தையும், வாழ்த்துக்களையும் பெற வேண்டும். அப்படி பெற்ற ஆசிகள் உமக்கு நல்ல வாழ்க்கை அமைய தேவையான வாய்ப்புக்களை உருவாக்கித் தரும்” என்றார்.

தொடர்ந்து, “Giving is Living என்று சொல்வார்கள். அதாவது கொடுப்பதுதான் வாழ்வின் சாராம்சம். நம்மால் என்ன முடியுமோ, அதை மற்றவர்களுக்கு தர வேண்டும். எந்த வகையிலான உதவியாக இருந்தாலும் சரி! அதனால் புண்ணியம் கிட்டும். அத்தோடு மற்றவர்களின் ஆசியும் கிடைக்கும். உங்களுக்கு நிறைய ஆசிகளும், ஆசீர்வாதங்களும் கிடைத்தால் இறைவனின் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதுதான் நல்ல நேரம். நீங்கள் ஒரு அடி நடந்தால் கடவுள் உங்களை பத்து அடி முன்னோக்கி நகர்த்துவார்.

இது ஏதோ மூடநம்பிக்கையினால் சொல்லப்படும் விஷயமல்ல. இதை சரியான வகையில் புரிந்து கொள்ளவும் பெரியவர்களின் ஆசி பெற்றிருக்க வேண்டும்” என்றார் கவிஞர்.