Tag Archives: திருக்குறள்

மாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்!

13 ஆக

சென்னை சாலையில் பயணித்து காலையில் ஆபீஸ் போவது என்பது இப்போதெல்லாம் நமது பொறுமையை சோதிக்கும் ஒரு விஷயமாகி விட்டது. எங்கே பார்த்தாலும் ட்ராபிக் ஜாம். மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதால், நிறைய இடங்களில் ஒருவழிப் பாதையாக வேறு ஆக்கி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் ஒரிடத்திற்குச் செல்வதானால் கூட சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றால், இது போன்ற தற்காலிக அசௌகரியத்தை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். மெட்ரோ ரெயில் ஓட ஆரம்பித்த பிறகு அந்த வசதியை அனுபவிக்கப் போவது நாம்தானே. அதனால் இப்போது படும் இந்த அவஸ்தைகள் பரவாயில்லை. ஒரு வழியாக ட்ராபிக் நெரிசலில் ஊர்ந்து ஆபீஸ் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் ஈமெயிலைத் திறந்து ஏதாவது செய்தி இருக்கிறதா என்று ஆராய்ந்த போது, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கவிஞர் கடிவேலு அனுப்பியிருந்த ஒரு ஈமெயிலில்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குக் தக.

என்ற திருக்குறள் இருந்தது. எதற்கு இதை நமக்கு அனுப்பியிருக்கிறார் என்று புரியவில்லை. வழக்கமாக அவர் எழுதிய கவிதையைத் தானே ஈமெயிலில் அனுப்புவார். இப்போது ஒரு திருக்குறளை அனுப்பியிருக்கிறாரே, காரணம் என்னவாக இருக்கும்? எவ்வளவு யோசித்தும் நமக்கு பதில் தெரியவில்லை.

அப்போது நமது கைபேசி அழைத்தது. எடுத்தால் எதிர்முனையிலிருந்து கவிஞர் கடிவேலுதான் பேசினார். நமது முந்தைய இடுகையான சிறந்த மனோபாவத்தை பெறுவது எப்படி?யைப் படித்தாராம். “அதில் கவனகர் என்று குறிப்பிட்டிருக்கிறீரே, மெகா டிவியில் தினமும் காலையில் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் பேசுகிறாரே, அவரைத்தானே சொல்கிறீர்?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன்.

“பத்து வருடங்களுக்கு முன்னால் அவருடைய பயிலரங்கம் ஒன்றில் கலந்து கொண்டேன். அசைவ உணவு உண்பதனால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டுக் காட்டினார். சொந்த அனுபவத்தையும் சொன்னார். அன்றிலிருந்து சுத்தமான சைவ உணவு சாப்பிடுபவனாக மாறிவிட்டேன்” என்று சொன்னார் கவிஞர் கடிவேலு.

“ஆஹா! நல்ல விஷயம்தான்.” என்றேன்.

“கவனகர் அவர்கள் திருக்குறளை நன்கு கற்றவர்; அதனை எப்படி வேண்டுமானாலும் சொல்லும் திறமை பெற்றவர். அத்தோடு சைவ உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் ஒவ்வொரு கட்டத்திலும் வலியுறுத்துவார்” என்றார். பிறகு, அவர் நமக்கு ஈமெயிலில் அனுப்பி வைத்துள்ள திருக்குறளுக்குக் காரணம் என்ன என்று கேட்டேன்.

“திருக்குறளுக்கு எத்தனையோ பேர் அர்த்தம் சொல்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் சொல்லவும் செய்வார்கள். ஆனால் எத்தனை பேர் அதனை உயிரெனப் போற்றி உணர்ந்து சொல்கிறார்கள் என்றால், பதில் சொல்வது கடினம். தெய்வப்புலவர் திருவள்ளுவர், கல்வி என்ற அதிகாரத்தின் ஆரம்பத்திலேயே

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குக் தக.

என்று கூறியிருக்கிறார். அதாவது நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை தெளிவாகக் கற்றுக் கொண்டு, அதன்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால், நாம் படிக்கிறோமே தவிர, அதனை அதில் கூறியுள்ளபடி பின் பற்றுகிறோமா?” என்று கேட்டார்.

“ஒரு சிலர் பின்பற்றலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நானறிந்த ஒரு சிலரையே அதற்கு உதாரணமாகக் கூறலாம்” என்றேன். “எப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டார்.

“ஒரு பக்கம் திருக்குறளைப் பற்றி விளக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் பறப்பன, நடப்பன, ஓடுவன எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறார்கள். வள்ளுவப் பெருந்தகை புலால் மறுத்தலைப் பற்றி ஒரு அதிகாரமே இயற்றியிருக்கிறார். புலால் உண்ணாதவனைப் பார்த்து எல்லா உயிரும் தொழும் என்று கூறியிருக்கிறார். ஆனால் எத்தனை பேர் அதைப் பின்பற்றுகிறார்கள்?” என்றேன்.

“நீர் கேட்பது நியாயமான கேள்விதான். தவம் என்ற அதிகாரத்திற்கு முன்னதாக புலான்மறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்து, பத்துக் குறள்களில் இதனைச் சொல்லியிருக்கிறார். ஆனால் கொடுமை என்னவென்றால் தியானம் கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் கூட அசைவ உணவைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்” என்றார் கவிஞர்.

உடனே எனக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்ன ஒரு நகைச்சுவை ஞாபகம் வந்தது. தியானம் கற்றுக்கொள்ள வந்த ஒருவர் மகரிஷியிடம் சொன்னாராம். ‘அய்யா, எனக்கு தியானம் கற்றுக் கொள்ளவும் ஆசையாயிருக்கிறது. அசைவ உணவை சாப்பிடுவதிலும் ஆசை இருக்கிறது. நான் என்ன செய்வது?’ என்று கேட்டாராம். அதற்கு மகரிஷி அவர்கள் இப்படி பதில் சொன்னாராம். ‘ஒன்றும் கவலைப் படவேண்டாம். இரண்டையுமே தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு எதில் அதிக விருப்பம் ஏற்படுகிறதோ, மற்றது தானாகவே உங்களிடமிருந்து போய் விடும்’ என்றாராம்.

அதாவது தியானத்தில் விருப்பம் அதிகமானால் அசைவ உணவு சாப்பிடுவதில் ஆசை போய்விடும். அசைவ உணவு சாப்பிடுவதில் ஆசை அதிகமானால் தியானத்தில் விருப்பம் போய்விடும் என்று அர்த்தம்.

எனவே நமது முன்னேற்றத்திற்கு தேவையான மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ளத் தயங்கக் கூடாது. நீங்கள் நினைப்பது, சொல்வது, செய்வது எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களுக்கு நினைப்பது யாவும் நிறைவேறும். எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்!

Advertisements