Tag Archives: செல்போன்

கவிஞரின் கோபமும் நமது சமாதானமும்!

21 நவ்

காலையில் ஆபீசுக்குப் போய் மெயில்களை பார்த்துக் கோன்டிருந்த போது, செல்போன் ஒலித்தது. எடுத்தால் நமது கவிஞர் கடிவேலுதான்.

“ஹலோ, கவிஞரே, சௌக்கியமா?” என்றோம் உற்சாகமாக.

“சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல். சௌக்கியம், சௌக்கியம்” என்றார் உணர்ச்சியின்றி.

என்ன ஆயிற்று, இந்த கடிவேலுவுக்கு! ஏதோ வேண்டா வேறுப்பாகப் பேசுகிறாரே!

“என்ன ஆச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா?” என்றோம் அக்கறையாக.

“உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீர்தான் சரியில்லை” என்றார் சுரத்தில்லாமல்.

“என்ன சொல்கிறீர், என் மீது ஏதோ கோபம் போல் தெரிகிறதே!” என்றோம். அவர் இது போல் கோபப்பட்டு நாம் இதுவரை பார்த்த்தில்லையே.

“நீர் என்னுடைய நல்ல நண்பர் என்று நினைத்திருந்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் இதுவரை நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றவரை இடைமறித்து,

“கவிஞரே, இன்னும் பதினைந்து நிமிடத்தில் உம்முடைய இடத்துக்கு வந்து நேரில் பேசுகிறேன்” என்று சொல்லி விட்டு உடனே கிளம்பினேன்.

அங்கு போனபோது கவிஞர் நம்மை வரவேற்று ஒரு சோபாவில் அமர வைத்தார். உடனே, “நீர் என்னுடைய நல்ல நண்பர்தானே, அதிலென்ன உமக்கு சந்தேகம்” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“நானும் இதுவரை அப்படித்தான் நினைத்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றார் மீண்டும்.

“அது உண்மைதானே, என்னுடைய நண்பரின் கவிதையை ரசிப்பதில் எனக்கு எப்பவுமே மகிழ்ச்சிதான். அதற்கு என்ன வந்தது?”

“ஆனால் உம்மிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் எதிர் பார்க்கவில்லை” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை. ஆனால் நம் மீது ஏதோ மன வருத்தம் இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

“கவிஞரே, உமது மன்ம் புண்படும்படியாக அப்படி என்ன வார்த்தையை நான் சொல்லி விட்டேன். கொஞ்சம் விபரமாகச் சொல்லும்”

“நேற்று அந்த மனிதரிடம் பேசியபோது என்னைப் பற்றி என்ன சொன்னீர், ஞாபகப்படுத்திப் பாரும்” என்றார் கொஞ்சம் காட்டமாக.

“எந்த மனிதர், யாரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தேன்?” என்றேன் இன்னும் புரியாமல்.

“கம்பனைப் பற்றி பேசினீர் அல்லவா?” என்று அவர் சொன்னவுடன்தான் ஞாபகம் வந்தது.

“அட, ஆமாம், கவிஞரே, உம்மைப் போலவே கம்பனும் ஸ்ரீராமனின் ஜாதகத்தை ஒரு பாட்டில் வடித்திருக்கிறான்” என்றேன்.

“ம்..ம்.. நானும் படித்தேன். அதைத்தான் சொல்கிறேன். அப்போது என்னை சாதாரண கவிஞர் கடிவேலு என்று சொன்னீர் அல்லவா?”

நமக்கு அப்போதுதான் கவிஞருடைய கோபத்திற்கு காரணம் புரிந்தது.

“அய்யோ, நான் வேண்டுமென்று சொல்லவில்லை. கம்பனைப் பற்றிப் பேச்சு வந்தபோது, கம்பனை பெருமைப் படுத்தி சொல்வதற்காக அப்படிப் பேசும்படி ஆகிவிட்டது”

“அதற்காக நான் குறைந்து விட்டேனா, எனக்கு கவி பாடத் தகுதியில்லையா” என்று எகிற ஆரம்பித்தார்.

கவிஞர்கள் வாழ்நாளில் அவர்களுடைய பெருமை உலகிற்கு தெரிவதில்லை. அவருடைய காலத்திற்குப் பிறகுதான் ஒரு கவிஞரின் பெருமை மக்களுக்குப் புரிகிறது. பாரதியார் அதற்கு சரியான் உதாரணம் என்று பலவாறாக அவரைத் தேற்றி சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

கவிஞருடைய கோபம் குறைந்தது போல் தோன்றினாலும் இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பது புரிந்தது. இது போன்ற சமயங்களில் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்கு நாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகள் எதையாவது சொல்லி மற்றவரின் மன வருத்தத்தைப் போக்குவதுண்டு. அது போல் ஒரு முயற்சியைத் தொடங்கினோம்.

“கவிஞரே, இப்போது இணையத்தில் வரும் நிறைய விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாரும்” என்று ஒரு பேப்பரை நீட்டினேன்.

அதை வாங்கி கவிஞர் படிக்க ஆரம்பித்தார்.

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்…

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!
பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?
ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
பெண்: நீ என்னை அடிப்பாயா?
ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

படித்து முடித்து விட்டு, நம்மை நிமிர்ந்து பார்த்தார்.

“சரி, இரண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள். இதிலென்ன இருக்கிறது?” என்றார்.

“அந்தப் பேப்பரின் மடித்த பகுதியைப் பிரித்து படியும்” என்றோம். அதை பிரித்து படித்தார்.

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.

என்று இருந்தது. அதன்படி கீழிருந்து மேலே படித்து விட்டு சிரித்து விட்டார் கவிஞர். நமக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

இனிமேல் தாராளமாக அவர் ஜோதிடரான காரணத்தைப் பற்றிக் கேட்கலாம் என்று கொஞ்சம் நேரம் பொறுமையாகக் காத்திருந்தோம்.

நன்றி: இந்த நகைச்சுவைத் துணுக்கை இணையத்தில் வலையேற்றியவருக்கு நமது நன்றி!
Advertisements

கொலம்பஸிடம் செல்போன் இருந்திருந்தால்…..?

1 பிப்

இன்றைய நம் தினசரி வாழ்க்கையில் செல்போன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். அதன் உபயோகத்தால் நன்மை அதிகமா அல்லது தொந்திரவு அதிகமா என்பது பேராசிரியர் சாலமன் பாப்பையாவை வைத்து பட்டி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஒருவருக்கு அவருடைய வியாபார நடைமுறைக்கு செல்போனின் உபயோகம் மிகவும் அவசியம் என்பதில் வேறு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஒரு சிலர் அதைப் பொழுது போக்காகவும், வீண் அரட்டை அடிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை, அதிலும் கேம் விளையாடுகிறேன் பேர்வழி என்று இரவு வெகு நேரம் அதிலேயே மூழ்கி தூக்கத்தைத் தொலைப்பவர்களும் உண்டு. அது அவர்களை அடிமையாக்கி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்குகிறது.

அது மட்டுமில்லாமல் எந்த நேரத்தில் என்று இல்லாமல் எப்போதும் போன் பேசிக் கொண்டே சென்று, கவனக்குறைவின் காரணமாக இரயிலிலோ, பஸ்ஸிலோ அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் செல்போன் என்பது கவனத்தை திசை திருப்பி நமது பெரும்பாலான நேரத்தை வீணடிக்கிறது என்பது உண்மை.

செல்போனைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால் முற்காலத்தில் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்காக கொலம்பஸ் ஒரு கப்பலில் புறப்பட்டு கடலில் வழி தவறி பல இன்னல்களை அனுபவித்து முடிவில் கரை ஒதுங்கி அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் அல்லவா?

அப்படி கப்பலில் புறப்பட்ட நேரத்தில் கொலம்பஸிடம் ஒரு செல்போன் இருந்திருந்தால் அவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்திருப்பாரா? என்று கேட்டார். அதோடு ‘மாமா நீங்க எங்க இருக்கீங்க?’ என்று காலர் ட்யூன் வேறு வைத்திருந்தார் என்றால், அவர் அவ்வளவு அவஸ்தைப் பட்ட பிறகு பயணத்தை தொடர்ந்திருப்பாரா? என்று கேட்டார். இந்தக் கேள்வி நமக்கு கொஞ்சம் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. நகைச்சுவையான அந்த உரையாடல் துணுக்கை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை அழுத்தவும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. அதாவது நமது கடினமான முயற்சியை, மனத்தின் வலிமையைக் குலைப்பதில் இந்த செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. மனத்தை ஒருமுகப் படுத்தி ஏதாவது தீவிரமான முயற்சியில் இருக்கும் போது, செல்போன் ஒலித்தால் அது நமது முயற்சியின் வீரியத்தைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், நாம் தீவிரமான கவனத்துடன் வேலை செய்ய வேண்டிய நேரங்களில் அதனை சைலண்ட் மோடில் போட்டு வைப்பது உத்தமம். விஞ்ஞான வளர்ச்சியை நாம் நம்முடைய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த நினைக்கும் அதே சமயத்தில் அது நம்முடைய வளர்ச்சியையோ அல்லது நிம்மதியையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். சரிதானே!

பொன்னான நேரம் எப்படி யெல்லாம் வீணாக்கப்படுகிறது!?

22 ஆக

உங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறீர்கள்? (தொடர்ச்சி…)

நாம் எப்படி நமது நேரத்தை செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கைத்தரம் அமைகிறது என்று கடந்த இடுகையில் சொன்னேன் அல்லவா? இரயில் ஓடிய வேகத்தில் நம் சிந்தனையும் ஓடியது. ஒரு சில வசதிகளுக்காக இப்படி பயணத்திலேயே பாதி வாழ்க்கையை சிலர் கழிக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. காலம் பொன் போன்றது என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படி எத்தனையோ பேர் அதன் அருமை தெரியாமல் அதை வீணடிக்கிறார்கள். நேரத்தை வீணடித்து விட்டு பிறகு, தனக்கு நேரம் சரியில்லை, ஜாதகம் சரியில்லையென்று புலம்புவார்கள்.

உண்மையில் காலம் விலை மதிப்பற்றது. ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கது. வேறு எது போனாலும் திரும்ப கிடைத்து விடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த நொடி, இந்த நிமிடம் போனால் மறுபடி வரவே வராது என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நிஜம். இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட யாரும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தின் மதிப்பை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை.

எப்படியெல்லாம் நேரம் வீணடிக்கப் படுகிறது என்பதை யோசித்தால், நாம் சரியாக நேரத்தை உபயோகப்படுத்துகிறோமா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். எப்போது TV என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்ததோ, அன்றே இந்த வழக்கம் ஆரம்பமாகி விட்டது. வீட்டில் ஒரு மூலையில் சாதுவாய் உட்கார்ந்திருக்கிறதே, TV என்ற பெயரில் ஒரு பெட்டி, அது நம்மைப் படாதபாடு படுத்துவதோடு நம்முடைய பெரும்பாலான நேரத்தையும் விழுங்கி விடுகிறது.

அத்தோடு இப்போது செல்போன் என்று ஒன்று வந்திருக்கிறது, அது படுத்துகிற பாடு சொல்லி மாளாது. “டேய், கணேசா, நீ எங்க இருக்கே?” என்ற சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நானும் பார்த்தேன். ஒருவர் செல்போனை காதில் வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார். “என்னது, A/C பெட்டிக்கு பின்னால் உள்ள பெட்டியில் இருக்கியா? நானும் அங்கேதான்டா இருக்கிறேன்” என்றதும், இரண்டு இருக்கைக்கு முன்னால் இருந்த ஒருவர் செல்போனைக் காதில் வைத்தவாறே எழுந்து திரும்பிப் பார்த்தார். அதைக் கண்டு எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

அப்போதுதான் கவனித்தேன். நான் இருந்த இருக்கைக்கு பக்கத்தில், எதிரில் இருந்த அனைவரது கையிலும் (தூங்குகிற நண்பரைத் தவிர) செல்போன் இருந்தது. இந்த செல்போன் இருக்கிறதே, அதை வைத்துக் கொண்டு சிலர் படாதபாடு படு(த்து)கிறார்கள். எப்போது பார்த்தாலும் SMS அனுப்புவது, கேம் விளையாடுவது அல்லது யாருடனாவது போனில் பேசிக்கொண்டேயிருப்பது; இல்லாவிட்டால் அந்த ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்கிறேன் பேர்வழி என்று நேரத்தை வீணடிப்பது. இவர்களிடம் போய் ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக, வந்து கலந்துகொள்ளுங்கள் என்று அழைத்தால் ‘டைம்’ இல்லை என்று ஸ்டைலாகச் சொல்வார்கள்.

நேர விரயத்தில் இன்டர்நெட்டின் பங்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆபீஸிலோ, வீட்டிலோ கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்டுக்குள் நுழைந்து விட்டால் பலருக்கு அதை விட்டு வெளியே வருவதற்கே மறந்து விடும். அடுத்த லிங்க், அடுத்த லிங்க் என்று போய்க் கொண்டே இருக்கும். இப்படிச் சொல்வதால் TV யோ, செல்போனோ, இன்டர்நெட்டோ தேவையில்லை என்று சொல்வதாக அர்த்தமாகாது. இன்றைய வாழ்க்கை நடைமுறையில் அவையெல்லாம் இல்லாமல் வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

ஆனால் அதைப் பயன்படுத்துவதே ஒரு போதை போலாகி நம்முடைய பொன்னான நேரம் விரயமாவதைத் தான் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதே விஷயங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகச்சிலரே. பெரும்பாலானோர் மேலே சொன்னது போல மதிப்பு மிக்க பல மணி நேரங்களை வீண்டிக்கவே செய்கிறார்கள்.

சென்ற இடுகையில் குறிப்பிட்டது போல போக்குவரத்திலும், மற்ற காத்திருப்புகளிலும் தவிர்க்க முடியாமல் அல்லது அதன் தீர்வுக்கான வழி தெரியாமல் நேரத்தை விரயம் செய்வது ஒரு பக்கம் என்றால் தெரிந்தொ தெரியாமலோ பலர் ஆக்கபூர்வமற்ற செயல்களில் ஈடுபட்டு வீணாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

இந்த நேர விஷயத்தில் கடவுள் யாரையும் வஞ்சிக்கவில்லை. எல்லோருக்கும் சரிசமமாக ஒரே அளவு நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறான். அவன் கறுப்போ, சிகப்போ, எழையோ, பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். யாருக்கும் ஒரு நிமிடம்கூட அதிகமோ, குறைவோ கிடையாது. சிலர் அதை சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் நினைத்ததைச் சாதித்து, புகழின் உச்சத்தை அடைகிறார்கள். ஆனால் பலர் நல்ல அறிவு, திறமை இருந்தும், சரியாக நேரத்தை பயன்படுத்த தவறி வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என்று எனக்கு அறிவுறுத்திய நான் குருவாக மதிக்கும் திரு. மோகன் ராமநாதன் அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

நேரம்தான் பணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எப்படி பணத்தை முதலீடு செய்து மேலும் மேலும் அதைப் பெருக்க முடியுமோ, அது போல நேரத்தையும் முதலீடு செய்து பலப்பல மடங்காக வருமானத்தை பெருக்க முடியும். நேரத்தின் அருமையைப் புரிந்து கொள்வோம். விரயமாகும் நேரத்தைப் பற்றி விழிப்புணர்வு கொள்வோம். அந்த நேரத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி வாழ்வை வளப்படுத்திக் கொள்ள உறுதி எடுத்துக் கொள்வோம்.

அப்புறம் ஒரு விஷயம். நீங்கள் அரக்கோணம் இரயில் நிலையத்தில் இறங்கி பஸ் ஸ்டாண்டு போகவேண்டுமென்றால் கொஞ்சம் அதிக தூரம்தான் என்றாலும் மெதுவாக நடந்து போய் விடுவது உத்தமம். ஷேர் ஆட்டோ இருக்கிறதே ஒரு பத்து நிமிடம் மிச்சப்படுத்தலாம் என்று ஆசைப்பட்டு அதில் ஏறி விட்டீர்கள் என்றால் இரயில் நிலையத்திலிருந்து பஸ் ஸ்டாண்டு போவதற்குள் ‘கண்டேன் காதலை’ சினிமா படத்தில் காமெடி நடிகர் சந்தானம் சொல்வது போல நடு முதுகுத்தண்டு நகர்ந்துவிடும். அந்த ரோடு இருக்கும் லட்சணம் அப்படி.

அன்றாட வாழ்வில் நகைச்சுவை!!

7 ஜூலை

அது இருந்தா இது இல்லே!

       இது இருந்தா அது இல்லே!

அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா

       அவனுக்கிங்கே இடமில்லே!

`நல்ல தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்ற மிக நல்ல கருத்துள்ள அருமையான பாடல் இது. மாபெரும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாட்டு என்று நினைக்கிறேன்.

இதில் வரும் அது இது என்ற வார்த்தைகளுக்கு பலவித அர்த்தத்தை அந்தப் பாட்டில் கவிஞர் சொல்லியிருப்பார்.

இப்பொழுதும் சிலர் கோபத்திலோ, வார்த்தை வராமல் தடுமாறும்போதோ, அது இது என்று சொல்வார்கள். அது சில சமயங்களில் சிரிப்பை உண்டாக்கும் விதமாக அமைந்து விடும்.

அதுபோலத்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் அப்பார்ட்மென்ட்டில் அஸோஸியேசன் மீட்டிங் நடந்தது. இது சாதாரணமாக அவ்வப்போது நடப்பதுதான். இப்போது கரண்ட் பில் எக்கச்சக்கமாக ஏறி இருப்பதால் மெயின்டனென்ஸ் சார்ஜை அதிகப்படுத்துவது பற்றி பேசுவதற்காகத்தான் அந்த மீட்டிங் ஏற்பாடாகியிருந்தது.

குறித்த நேரத்திற்கு எல்லோரும் வந்து விட்டார்கள். அஸோஸியேசன் பிரஸிடென்ட், செகரட்டரி மற்றும் பொருளாளர் எல்லோரும் ஆஜராகியிருந்தார்கள். பொதுவான விளக்குகளுக்கும், தண்ணீரை மேலே உள்ள தொட்டியில் ஏற்றுவதற்கு ஆகும் மோட்டார் கரண்ட்டுக்கும் சேர்த்து இப்போது 1200 ரூபாய் அதிகமாவதால், மெயின்டனென்ஸ் சார்ஜை மாதம் ஐம்பது ரூபாய் என்று ஏற்றலாம் என்று ஒருமனதாக முடிவெடுத்தபின் மற்ற விஷயங்களைப் பற்றி பேச்சு திரும்பியது.

அப்போது வீட்டினுள் உள்ள குழாயில் அடிக்கடி கலங்கலான தண்ணீர் வருவதாகவும், மேலே உள்ள தொட்டியை சுத்தம் பண்ணுவது சரியில்லையென்றும் ஒருவர் குறை சொன்னார். மற்றும் சிலரும் அதையே சொன்னார்கள். உடனே அஸோஸியேசன் செகரட்டரி, வாட்ச்மேனை அழைத்தார். ஏனென்றால் அவன்தான் சுத்தம் செய்பவன். கொஞ்ச நாள் முன்னாடி வரை சுத்தம் செய்வதற்கு வெளியிலிருந்து ஒருவன் வந்துகொண்டிருந்தான்.

இப்போது செகரட்டரி பற்றியும், வாட்ச்மேன் பற்றியும் ஒரு சின்ன அறிமுகம். செகரட்டரி ஒரு கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். கொஞ்சம் கண்டிப்பானவர். கோபத்தை எப்படி காண்பித்து வேலை வாங்குவது என்று தெரிந்தவர். இப்போதுள்ள வாட்ச்மேன் புதிதாக வந்தவன். எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பான். மதியம் ஒருமணிக்கு வாசலில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருப்பான். மற்றவர்கள் வந்தால் அவனுக்குப் பயமில்லை. ஆனால் செகரட்டரியோ, பிரஸிடென்டோ வந்தால் அரக்கப் பரக்க எழுந்து நிற்பான். மற்றவர்களும் அவனைக்கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் இப்போது நல்ல வாட்ச்மேன் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது.

இதற்கு முன்னால் வேறு ஒரு வாட்ச்மேன் இருந்தான். அவன் தனி ஆளாக இருந்த வரைக்கும் அவனுடைய சம்பளத்திலேயே நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்குத் திருமணம் ஆன பிறகு வருமானம் போதவில்லையென்று தானே தொட்டியை சுத்தம் செய்வதாகவும், அதற்குரிய பணத்தை தனக்கே கொடுத்துவிடுமாறும் கேட்டு, எல்லோரும் ஒத்துக் கொண்டதால், அவனே அதைச் செய்து வந்தான். அத்துடன் மோட்டார் பைக்கையோ, காரையோ தினமும் சுத்தம் செய்து அதற்கு ஒரு தொகையையும் மாதாமாதம் பெற்று வந்தான்.

அந்த வாட்ச்மேன் சொந்த பிரச்சினை காரணமாக வேலையை விட்டுப் போய்விட்டான். அவனை அடுத்து வந்தவன்தான் இப்போதுள்ள வாட்ச்மேன். இவன் இளைஞன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இருந்தாலும் பழைய வாட்ச்மேன் செய்த அதே வேலையை இவனும் செய்து அதற்குரிய பணத்தை பெற்று வந்தான். ஆனால் இவனுடைய வேலை சுத்தமில்லை என்றுதான் இப்போது எல்லோரும் கம்ப்ளெயின்ட் பண்ணுகிறார்கள்.

செகரட்டரி கூப்பிட்டவுடன் வாட்ச்மேனும் வந்தான். “நீ தொட்டியை சரியாகச் சுத்தம் பண்ணுவதில்லையென்று எல்லோரும் சொல்கிறார்கள். ஏன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டாயா?” என்று அவனிடம் கேட்டார்.

“இல்லை சார், நன்றாகத்தான் சுத்தம் செய்கிறேன்.” என்றான் அவன்.

“அடுத்த முறை சரியாக இது செய்யவில்லையென்றால் (ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் கத்தரிக்கோல் போல் அசைத்தவாறு) அது கட்டாகி விடும்” என்றார். அவன் பயந்து விட்டான். மற்றவர்களும் செகரட்டரியைப் பார்த்தார்கள். செகரட்டரி கோபக்காரர்தான், ஆனால் இப்போது என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் வாட்ச்மேன் விழித்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பிரஸிடென்ட், “நீ சரியாக சுத்தம் செய்யவில்லையென்றால் உனக்கு அதற்கென்று கொடுக்கப்படும் பணம் கட்டாகிவிடும் என்று சார் சொல்கிறார்” என்றார். இதைக்கேட்டு மற்றவர்களெல்லாம் சிரித்துவிட்டார்கள்.

இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை.

நம் ரசனை எங்கே போகிறது?

6 ஜன

இன்று செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறிவிடலாம். அந்தளவுக்கு செல்போனும் கையுமாகவே மக்கள் திரிகிறார்கள். பாத்ரூமில் செல்போன், சாப்பிடும்போது செல்போன், கோயிலில் செல்போன், தூங்கும் போதும் செல்போனை பக்கத்தில் வைத்துக் கொண்டேதான் தூங்குகிறார்கள்.

இதைக் கூட நாம் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ரிங் டோன் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறதே! அதுதான் கொடுமை. இந்த விஷயத்தில்தான் ஒவ்வொருவருக்கும் வித விதமான ரசனைகள். சிலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களை காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். சிலர் வித்தியாசமாக குழந்தையின் சிரிப்பையோ அல்லது அழுகையையோ காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை.

சிலர், `போனை எட்றா டேய்! போனை எட்றா! கஸ்மாலம் டேய்! போனை எட்றா!’ என்று கூட காலர் ட்யூன் வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, நாய் குரைப்பது போல காலர் ட்யூன் வைத்திருக்கிறார்கள். என்ன ரசனையோ! இதைத்தான் காமெடி நடிகர் விவேக், “ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் எருமை மாடு சாணி போடுவதைக் கூட ரிங் டோனாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே!” என்று ஒரு படத்தில் கிண்டலடித்திருப்பார்.

சற்றுப் பொறுங்கள். யாரோ வருவது போல் தெரிகிறது…

ஓ! நம்ம கவிஞர் கடிவேலுதான். உங்களுக்கு கவிஞர் கடிவேலுவைத் தெரியாதா?

அப்பு வணக்கம்ப்பு…..

கவனஈர்ப்பு ஏற்படுத்தவே காலர்-ட்யூன் – அதிலே

    கதறித் துடிக்கும் நாய்குட்டியின் பதிவுஏன்?

கவனக்குறைவு ஏற்பட்டாலே காலன்தான் – ரோட்டிலே

    அலறித் துடித்தும் பயனில்லை எச்சரித்தேன்!

நாம் எழுதும் கருத்தை ஒட்டியே அவரும் கவிதை சொன்னதால் என்னவென்று விசாரித்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து நன்றாகக் குணமாகி வீடு திரும்பி விட்டாராம். ஆஸ்பத்திரியில் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னார்களாம். அதனால் ஒரு நண்பர் அழைத்ததன் பேரில் இன்சூரன்ஸ் சம்பந்தமான ஒரு கூட்டத்துக்குப் போனாராம்.

அங்கு நல்ல கூட்டம். காரணம் அன்று அந்தக் கம்பெனி புதிதாக ஒரு பாலிசி அறிமுகப் படுத்தியிருந்தார்கள். எல்லோரும் மிக மிக ஆர்வமாக உரையைக் கவனித்துக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று கூட்டத்தில் ஒரு நாய்குட்டியை யாரோ மிதித்தது போல் நாய்குட்டியின் கதறல் சத்தம். இந்தக் கூட்டத்தில் நாய்க் குட்டி எப்படி வந்தது? என்று எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தால்…

அது யாரோ ஒருவருடைய காலர்-ட்யூனாம். எங்கும் சிரிப்பலை பரவியதாம். இந்த சத்தம் ரோட்டில் வாகனத்தில் செல்லும்போது யாருடைய போனிலிருந்தாவது கேட்டால், என்ன நடக்கும்? என்று சிந்தித்தாராம். அதன் பாதிப்பினால் நம் கவிஞர் கடிவேலுவுக்கு உதித்த கவிதையாம் அது.