Tag Archives: சுற்றுலா

கவிஞர் கடிவேலுவின் விஷயஞானம்

12 ஜூன்

கவிஞர் கடிவேலுவுடன் ஞாயிற்றுக்கிழமை ஓரிடத்திற்குச் சென்றேனல்லவா? அந்த நிகழ்ச்சியில் ஒருவர் தான் லண்டனுக்கு சென்ற இலவச சுற்றுப்பயணம் பற்றியும், அங்கே எடுத்த போட்டோக்களையும் காண்பித்தார்கள் அல்லவா? அது முடிந்து வெளியே வந்தவுடன், “எப்படி இருந்தது” என்று கவிஞர் கடிவேலு கேட்டார்.

எனக்கு எதுவுமே புரியவில்லை என்றேன். எல்லோரும் உற்சாகமாகவும், ஆரவாரத்தோடும் நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான். மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் என்ன? ஏன் இந்த உற்சாகம்? யாரோ போய்விட்டு வந்த சுற்றுப்பயணத்தை கண்டு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் என்றேன்.

உடனே கவிஞர் கடிவேலு கவிதையிலேயே பதில் சொன்னார்.

பள்ளிக் கூடம் வந்த அன்றே

      பட்டம் வழங்கிட வேண்டுமா?

முட்டை ஓட்டை உடைத்து குஞ்சு

      முனைந்து வெளிவர வேண்டாமா?

அள்ளித் தெளித்த அவசர கோலம்போல்

      அலங்கோல மாகிட வேண்டுமா?

பட்டை தீட்டிய வைரம் ஜொலிக்க

      வெட்டுப் பட்டிட வேண்டாமா?

அவர் சொன்ன கவிதையில் பலவித அர்த்தங்கள் இருந்தது போல் தோன்றியது. புரிந்தது போலவும் தெரிகிறது. புரியாதது போலவும் இருக்கிறது.

அத்துடன் அவர் வழக்கமாக ஆரம்பிக்கும் போது சொல்லும்

அப்பு…. வணக்கம்ப்பு….    கூட இல்லை.

“பள்ளிக்கூடமா? பட்டம் வாங்குவதா? என்ன கவிஞரே, ஏதேதோ சொல்கிறீர். ஒன்றும் புரியவில்லையே” என்றேன்.

“நான் சொன்ன கவிதையை மறுபடி படியும்” என்றார்.

மறுபடி படித்துப் பார்த்துவிட்டு, “கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன” என்றேன்.

அவர் சொன்ன விளக்கத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது இதுதான். இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாம். ஆனால் உடனடியாக அதைப்பற்றி தெரிந்து அல்லது புரிந்து ஒரு முடிவு எடுத்துவிட முடியாதாம்.

எப்படி கல்வி கற்று பட்டம் வாங்க வேண்டுமென்றால், முறையாக ஒவ்வொரு வகுப்பாகத் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்க வேண்டுமோ, அது போல கற்று தேர்ச்சி பெற வேண்டுமாம்.

முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர, எப்படி ஒரு கோழியின் இளஞ்சூடு தேவைப்படுகிறதோ, அதுவும் தொடர்ந்து இருபத்தியோரு நாள் பொறுமை காக்க வேண்டியிருக்கிறதோ, அது போல பொறுமையாக தொடர் முயற்சி செய்ய வேண்டுமாம்.

அது மட்டுமல்ல குஞ்சு வெளிவர சரியான காலம் கழிந்தபின் அதுவாகவே முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவர வேண்டும். அதன் மீது பரிதாபப்பட்டு, நாம் முட்டையின் ஓட்டை உடைத்து அது வெளிவர உதவி செய்தோமென்றால், வெளிவந்த சிறிது நேரத்தில் அது இறந்து விடும்.

அத்துடன் அவசரத்தில் அள்ளித்தெளித்து கோலம் போட்டால் அது அலங்கோலமாகவே முடியும்.

மேலும் வைரம் பட்டை தீட்டும் முன்பு சாதாரணக்கல் போலவே இருக்கும். அதைக்கண்டு பிடித்து, சரியான முறையில் பட்டை தீட்டினால் மட்டுமே அது மதிப்பு மிக்க வைரமாக ஜொலிக்கும். அப்படி பட்டை தீட்டும்போது அந்தக் கல் வெட்டுப்படும். ஆதாவது தேவையில்லாத பகுதிகள் வெட்டி எறியப்படும்.

அதுபோல இந்த அரிய வாய்ப்பை சரியான முறையில் பயன் படுத்தி வெற்றி பெற வேண்டுமென்றால், நாமும் மேற்கண்டவாறு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விளக்கினார் கவிஞர் கடிவேலு.

அவர் இவ்வாறு பேசியதைக் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏதோ அவ்வப்போது வந்து கவிதை என்ற பெயரில் வேடிக்கையாக ஏதாவது சொல்லுவார் என்றுதான் அவரைப் பற்றி நினைத்திருந்தேன். ஆனால் இப்போது ஆசிரியர் பாடம் எடுப்பது போல் பேசுகிறாரே என்று அதிசயித்தேன்.

அத்துடன் அவர் சொன்ன கவிதையை கவனித்தால், ஒவ்வொரு வரியின் முடிவிலும் வேண்டுமா? வேண்டாமா? என்றே முடிக்கிறார். அதாவது இந்த வாய்ப்பு வேண்டுமா? வேண்டாமா? தேவையென்றால் எடுத்துக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு என்ற தொனியில் இருக்கிறது.

இவரையே இந்தளவு மாற்றியிருக்கிறது என்றால் அது என்னவென்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

Advertisements

லண்டனுக்கு இலவச சுற்றுப்பயணம் போக வேண்டுமா?

9 ஜூன்

தன்னுடைய நண்பர் லண்டனுக்கு இலவச சுற்றுப்பயணம் சென்று வந்ததாக கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா?

நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. காலையிலேயே கவிஞர் கடிவேலுவும் போன் செய்து ஞாபகப் படுத்தினார். சரியாக பத்து மணிக்கு சென்னை பாரிமுனையில் இருக்கும் அந்த மண்டபத்துக்கு வந்து விடச் சொன்னார்.

நான் அங்கு சென்ற போது ஒரு நீண்ட க்யூ வரிசை நின்றிருந்தது. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார். அதனால் வரிசையில் நிற்காமல் உள்ளே நுழைந்தோம். குளிரூட்டப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக கூடியிருந்தார்கள்.

யாரோ ஒருவர் வந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அன்றையக் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்தினார். அதுவே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக இருந்தது.

பின்னர் சிவப்புக் கலரில் டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும் அணிந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் மேடையில் தோன்றினார். கூட்டத்தினருக்கு தன்னை அறிமுகப்படுத்தி விட்டு எல்லோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடனே கவிஞர் கடிவேலு, “இவர்தான், இவர்தான் சமீபத்தில் இலவசமாக லண்டன் சென்று வந்தவர்” என்றார்.

பின்பு, மேடையில் இருந்த ஒரு வெள்ளைத்திரையில் சில போட்டோக்களைக் காண்பித்தார்கள். அதில் அந்த மனிதர் சென்னையிலிருந்து விமானத்தில் கிளம்புவது, அவரை வழியனுப்ப வந்தவர்கள் யார் யார், விமானத்தில் படுத்து தூங்க வசதியான இருக்கை (பிஸினஸ் கிளாஸ் பயணமாம்) போன்ற படங்களும், பின்பு லண்டன் மாநகரில் அவர்கள் சுற்றிப்பார்த்த `லண்டன் ஐ’, `மேடம் துஸ்ஸாட் மியூசியம்’, மற்றும் பல இடங்கள் ஆகியவையும் அந்த போட்டோக்களில் இருந்தது.

அத்துடன் இவர்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் யார் யார் அந்த சுற்றுப் பயணத்திற்கு வந்தார்கள் என்றும் அந்த போட்டோக்களில் இருந்தவர்களைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.

பின்பு அவருடைய மனைவி பேசும் போது, லண்டனில் இந்த வருடம் (2012) ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதாலும், இங்கிலாந்து நாட்டின் எலிஸபெத் மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டம்  என்பதாலும், லண்டன் மாநகரமே கோலாகலமாக இருந்ததாகவும், இந்த சமயத்தில் அங்கு சுற்றுலா சென்றது மிகவும் மகிழ்ச்சியளித்தாகவும் கூறினார்.

ஒவ்வொரு விஷயத்தை அவர்கள் சொல்லும் போது மொத்தக் கூட்டமும் ஆரவாரம் செய்ததையும், ஆர்ப்பரித்ததையும் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆனால் இன்னும் என் கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எதற்காக இந்தக் கூட்டம்? யாரோ வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று வந்த அனுபவத்தை கேட்டு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? இலவச சுற்றுப் பயணம் என்று வேறு கூறுகிறார்களே, எதற்கு, யார் கூட்டிப் போனார்கள்?

விடை தெரியவில்லை. சற்று திரும்பி கவிஞர் கடிவேலுவைப் பார்த்தேன். அவரோ உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார். இப்போது அவரிடம் கேட்டாலும் நிச்சயமாக பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லையென்பது புரிந்தது. அதனால் கூட்டம் முடியும் வரை பொறுமையாக இருக்கலாம் என்று முடிவு செய்து நடப்பதைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

மனதின் ஒரு ஓரத்தில் நமது நண்பர் மூணாறுக்கு சுற்றுலா சென்று அவஸ்தைப்பட்டு வந்த கதையும் நினைவுக்கு வந்தது.

இலவச சுற்றுப் பயணமா? அதுவும் லண்டனுக்கு.

1 ஜூன்

ஆபீஸில் வேலையில் மூழ்கியிருக்கும் போது ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தால்….    அட நம்ம கவிஞர் கடிவேலு.

அப்பு வணக்கம்ப்பு….

உற்ற நண்பன் உரைத்ததை உணர்ந்திட்டால்

உற்றதுணையும் சுற்றமும் சுகம்தானே – அல்லால்

சுற்றுலா சென்ற போதும் சுகமில்லை – தலை

சுற்ற சுற்ற அலையும் நிலை அல்லல்தானே

நமது முந்தைய இடுகையை படித்து விட்டு கவிஞர் கடிவேலு எழுதிய கவிதையாம் இது. கவிதையில் குற்றம் குறை ஏதும் இருந்தால் அவரை மன்னித்து விடுங்கள். ஆனால் அவர் சொன்ன இன்னொரு விஷயம் சுவாரசியமாக இருந்தது.

நமது நண்பர் சுற்றுலா சென்ற அதே தினத்தில் அவருடைய நண்பர் ஒருவரும் சுற்றுலா சென்றாராம். எங்கே தெரியுமா?. லண்டனுக்கு…

நான்கு நாள் பயணம். அதுவும் முற்றிலும் இலவசமாக. மிகவும் சந்தோஷமான பயணமாக இருந்ததாம்.

இலவச சுற்றுப் பயணமா? அதுவும் லண்டனுக்கு. கேட்கும்போதே ஆர்வத்தை தூண்டுகிறது. யார் அழைத்துக்கொண்டு போகிறார்கள்? எதற்காக?

ஆர்வத்தை அடக்க முடியாமல் கவிஞரிடம் கேட்டே விட்டேன். அவர் உடனடியாகப் பதில் சொல்லாமல் வரும் ஞாயிறன்று ஒரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறேன். அப்போது உங்களுக்கே அது புரியும் என்றார். அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்.

நண்பரின் மூணாறு சுற்றுலா (தொடர்ச்சி)

30 மே

முந்தைய இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்

அதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அவரை சந்திக்கிறேன். ஊருக்குக் கிளம்பும் நாளன்று அவருடைய மனைவியின் சகோதரி வீட்டுக்கு வந்தாராம். அவரிடம் இந்த மாதிரி தவறான இரயிலில் டிக்கட் எடுத்து விட்டதால், கோயம்புத்தூரில் இறங்கி, அங்கிருந்து காரில் மூணாறு போக போகிறோம் என்று சொன்னாராம்.

அந்த அம்மணி டிக்கட் மற்றும் இரயில் பற்றிய விவரங்களைக் கேட்டு விட்டு “அந்த இரயில் கோயம்புத்தூரில் நிற்காதே” என்றிருக்கிறார். இதைக் கேட்டதும் நண்பர் அதிர்ந்துவிட்டாராம். பிறகு அந்த அம்மணியே ஒரு ஐடியா தந்திருக்கிறார். அதாவது கோயம்புத்தூர், பாலக்காடு எல்லாம் தாண்டிய பிறகு சோரனூர் என்ற ஸ்டேஷன் வரும். அங்கே இறங்கி வேறு இரயில் பிடித்து எர்ணாகுளம் போய் விட்டால் பிறகு மூணாறு எளிதாக சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார். நண்பருக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியிருக்கிறது.

கவலை எல்லாம் தீர்ந்து விட்டது என்று நிம்மதியாக இரயில் ஏறி குடும்பத்தோடு கிளம்பியிருக்கிறார். ஏ.ஸி. கோச் என்பதால் பயணம் சுகமாக இருந்திருக்கிறது. காலை 4.00 மணிக்கு திடீரென விழிப்பு வர எந்த ஸ்டேஷன் என்று பார்த்திருக்கிறார். அது கோயம்புத்தூர் இரயில்வே ஸ்டேஷன். இங்கு நிற்காது என்றல்லவா சொன்னார்கள். ஆனால் நிற்கிறதே! என்ன செய்வது? இறங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்வதற்குள் வண்டி கிளம்பி விட்டது.

சரி! முதலில் திட்டமிட்டது போலவே சோரனூர் சென்று அங்கிருந்து எர்ணாகுளம் போய் விட வேண்டியதுதான் என்று சோரனூர் எப்போது வரும் என்று காத்திருந்திருக்கிறார். காலை 4.40 மணி ஆகி விட்டதால் அவர் இருந்த கோச்சில் இன்னும் சிலரும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்த போது, “இன்று கேரளா முழுவதும் ஸ்டிரைக் என்பதால் பஸ்ஸோ, காரோ எதுவும் ஓடாது. அதனால் நீங்கள் பாலக்காடு ஸ்டேஷனில் இறங்கி எப்படியாவது தமிழ்நாடு எல்லைக்குள் சென்று விடுங்கள். பிறகு எளிதாக மூணாறு சென்று விடலாம்” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

அதுவும் சரிதான் என்று பாலக்காடு ஸ்டேஷனில் இறங்கி வாடகைக்காரை தேடி இருக்கிறார்கள். பயத்தின் காரணமாக யாரும் சவாரிக்கு வரவில்லை. கடைசியில் ரூ3700 க்கு பேரம் பேசி ஒருவர் மூணாறு வர சம்மதித்திருக்கிறார். ஆயிற்று! இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம்தான், அதையும் தாண்டி விட்டால் தமிழ்நாடு எல்லைக்குள் சென்று விடலாம் என்று நிம்மதி பெருமூச்சு விடும் போது, திடீரென ஓரிடத்தில் எல்லா வண்டிகளும் மறிக்கப்பட்டு போக வழியில்லாமல் ஆகிவிட்டது.

அந்த டிரைவரிடம் கெஞ்சி மீண்டும் பாலக்காடு ஸ்டேஷனில் இறக்கி விடச் சொல்லி ஒரு வழியாக அங்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். டாக்ஸிக்கு ரூ500 கொடுத்து அனுப்பி விட்டு, அடுத்த அரை மணி கழித்து வந்த ஒரு பாஸஞ்சர் இரயிலைப் பிடித்து மீண்டும் கோயம்புத்தூருக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

அது ஆமை வேகத்தில் ஊர்ந்து காலை 11.00 மணிக்குத்தான் கோயம்புத்தூர் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறது. காலையிலிருந்து சாப்பிடாமல் அலைந்து திரிந்ததில் அனைவரும் சோர்ந்து போய் கோயம்புத்தூரில்தான் காலை உணவு சாப்பிட்டிருக்கிறார்கள்.

பிறகு ஒரு வழியாக வாடகைக்காரைப் பிடித்து மூணாறு கிளம்பியிருக்கிறார்கள். மூணாறு போய்ச் சேர மாலை 7.00 மணி ஆகி விட்டதாம். ஒரே அலுப்பாக இருந்ததால் அடுத்த நாள் கொஞ்ச நேரம் மட்டுமே சுற்றிப் பார்க்க முடிந்ததாம். திருப்பி வரும்போது குழப்பம் ஏதுமின்றி நேரடியாக கோயம்புத்தூருக்கு டாக்ஸி பிடித்து கிளம்பினார்களாம்.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சினை. கோயம்புத்தூரில் ட்ராஃபிக் அதிகமாகி இரயில்வே ஸ்டேஷனை அடைவதே பெரும்பாடாகி விட்ட்தாம். இரயிலை பிடிக்க முடியுமோ இல்லையோ என்று அவஸ்தைப் பட்டு, அந்த டிரைவரின் திறமையால் எப்படியோ பின் பக்க வாசல் வழியாக இரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து இரயில் கிளம்ப கொஞ்ச நேரமே இருந்த கடைசி நிமிஷத்தில் இரயிலில் ஏறி சென்னை வந்து சேர்ந்தார்களாம்.

இவ்வாறாக தன்னுடைய பயணக்கதையைச் சொல்லி முடித்தார். இதனால் அனைவருக்கும் நாம் தெரிவித்துக் கொள்வது விசேஷமாக ஏதுமில்லை. இதில் யாரிடம் தவறு இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்வது அவரவர் இஷ்டம். மற்றபடி நண்பரை கிண்டல் பண்ணுவதற்காக இதை நான் எழுதவில்லை.

நண்பரின் மூணாறு சுற்றுலா

30 மே

அய்யா, நீங்கள் எங்காவது உல்லாச சுற்றுலா சென்றதுண்டா? அதுவும் இந்த 110 டிகிரி கோடை வெயிலில் இருந்து தப்பிக்க எங்காவது கோடை வாசஸ்தலத்துக்கு சுற்றுலா சென்று வந்தால் சுகமாக இருக்கும்தானே!

அப்படித்தான் நமது நண்பர் கோபு அவர்கள் மூணாறுக்கு சுற்றுலா சென்று வந்தார். ம்… நம்மால்தான் எங்கேயும் போக முடியவில்லை, அவராவது நல்லபடியாக சென்று வரட்டுமே என்று வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

எல்லோரும் உல்லாச சுற்றுலா சென்று விட்டு, சந்தோஷமாக திரும்புவார்கள். ஆனால் நமது நண்பர் மிகவும் அவஸ்தைப் பட்டு, நொந்து நூலாகி வந்ததாகச் சொன்னார். என்னவென்று விசாரித்தேன்.

“நீங்கள் சொன்னதுபோல் கோயம்புத்தூரில் இறங்கியே மூணாறு போயிருக்கலாம். இடையில் என்னைக் குழப்பி விட்டு அவஸ்தைப்பட வைத்து விட்டார்கள்” என்ற முன்னுரையுடன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர் அந்தக் கதையை சொல்லச் சொல்ல, இந்த மனிதருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அவர் கிளம்புவதற்கு முன்புதான் எத்தனை எத்தனை பிரச்சினைகள். சுற்றுலா செல்ல டிக்கட் எடுத்ததிலிருந்து போய் திரும்பி வரும் வரை மனிதருக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள்.

அந்த நண்பர் சுற்றுலா கிளம்புவதற்கு முன்னால் நடந்த விஷயங்களெல்லாம் என் நினைவுக்கு வந்தது. அதை நினைத்தால் சிரிப்பதா அல்லது அவர் மீது பரிதாபப் படுவதா என்று தெரியவில்லை.

ஒரு நாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக, தான் மூணாறு போகப் போவதைப் பற்றி சொன்னார்.

“இன்றைக்கு வெயில் ரொம்ப அதிகம். இல்லையா சார்?” இது நான்.

“இன்றைக்கு வெயில் எவ்வளவோ பரவாயில்லைங்க, நேற்று, முந்தாநேற்று, இதை விட வெயில் அதிகம்.” இது நமது நண்பர்.

ஆம்! அவருடைய குணாதிசயம் பற்றி ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அதாவது, அவர் எப்பொழுதுமே மற்றவர் சொல்வதை ஆமாம் என்று ஒத்துக் கொள்ள மாட்டார். ஒவ்வொன்றுக்கும் அவர் ஒரு அபிப்பிராயம் சொல்வார். அது தான் அவருடைய வழக்கம். (ஆனால் இந்த சுற்றுலா விஷயத்தில் மட்டும் அது விதி விலக்கு.)

இது எனக்கு தெரிந்திருந்ததால் நான், “அப்படியா சார், சரிதான். இந்த வெயிலுக்கு எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று போய் வந்தால் நன்றாயிருக்கும்” என்றேன்.

உடனே அவர் பெருமை பொங்க, “நான் அடுத்த வாரம் குடும்பத்தோடு மூணாறு போகலாமென்று இருக்கிறேன். நீங்கள் எங்கும் போகவில்லையா?” என்று கேட்டார்.

“எனக்கு இப்போது வேலை அதிகம் இருப்பதால் போக முடியாது. மூணாறுக்கு எப்படி போகிறீர்கள், இரயிலிலா, பஸ்ஸிலா?”

“இரயிலில்தான் ரிசர்வ் பண்ணியிருக்கிறேன்” என்றார். அதுவரை எல்லாம் சரிதான். ஆனால் அடுத்து அவர் சொன்ன விஷயம்தான் என்னை சிரிக்க வைத்து விட்டது. அவர் சொன்னது இதுதான்.

“இரயிலில் கோழிக்கோடு வரை சென்று, அங்கிருந்து வாடகைக்கார் எடுத்துக் கொண்டு மூணாறு செல்வதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

கோழிக்கோடுவிற்கும் மூணாறுக்கும் என்ன சம்பந்தம்? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

“கோழிக்கோடு போகிறீர்களா, எதற்கு? அது இருப்பது வேறு பக்கம், மூணாறு இருப்பது வேறு பக்கம்” என்றேன்.

“இல்லையே, கோழிக்கோடு பக்கம்தானே மூணாறு இருக்கிறது. ட்ராவல்ஸில் இருப்பவன் சொன்னானே” என்றார்.

மூணாறு போக கோழிக்கோடு போக வேண்டியதில்லை. அதற்கு பதிலாக எர்ணாகுளம் போவதுதான் சரியான வழித்தடமாக இருக்கும் என்று அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

‘கூகுள் மேப்’ பில் கோழிக்கோடு எங்கே இருக்கிறது, கோயம்புத்தூர், எர்ணாகுளம், மூணாறு எங்கே இருக்கிறது என்று காண்பித்த பிறகுதான் ஒருவழியாக ஒத்துக் கொண்டார்.

ஆனால் ஒரு பிரச்சினை. ஏற்கெனவே கோழிக்கோடு போக ரிசர்வேஷன் பண்ணியாகி விட்டது. அதை கேன்சல் செய்து விட்டு, எர்ணாகுளம் போக வேறு டிக்கட் வாங்குவதென்றால், அது முடியாத காரியம். அதனால் இப்போது அவருடைய கவலை அதிகமாகி விட்டது.

“இப்படியாகி விட்டதே, முதலியே உங்களிடம் கேட்டிருக்கலாம். போகட்டும், தற்செயலாக இதை உங்களிடம் சொன்னதினால் இப்போதாவது விஷயம் தெரிந்ததே” என்று புலம்பினார். அவருடைய புலம்பலைக் கேட்டதினால், அவருடைய கவலையை தீர்க்க ஒரு ஐடியா சொன்னேன்.

“ஒன்று, நீங்கள் கோயம்புத்தூரில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் மூணாறு சென்று அடையலாம். அல்லது கோயம்புத்தூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு இன்னொரு இரயில் பிடித்து, அங்கிருந்து மூணாறு செல்லலாம்.” என்றேன்.

“அந்த இரயில் கோயம்புத்தூருக்கு எப்போது போய் சேரும்?” என்று கேட்டார்.

அவரிடம் இரயில் நம்பரை கேட்டு வாங்கி, இன்டர்நெட்டில் தேடி விடியற்காலை 3.50க்கு கோயம்புத்தூர் போய் சேரும் என்று சொன்னேன்.

“அய்யய்யோ, மனைவி மற்றும் குழந்தையோடு அந்த நேரத்தில் வெளியே செல்வது பாதுகாப்பானதாக இருக்காதே, என் மனைவி நன்றாகத் திட்டதான் போகிறாள்.” என்றெல்லாம் புலம்பினார்.

கோயம்புத்தூரில் இருந்து மூணாறு செல்வதற்கு கால் டாக்ஸி நம்பர்களையெல்லாம் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். அவர் போன் போட்டு விசாரித்து விட்டு ரூ3800/- ஆகுமென்று சொல்கிறார்கள். பேசாமல் பஸ் ஏதாவது கிடைத்தால் அதில் போவதுதான் சரியாக இருக்கும் என்றார்.

கிளம்பும் நாள் வரை மூணாறு எப்படி போகலாம் வேறு ஏதாவது வழி இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் சென்னை வாலாஜா ரோட்டிலுள்ள Kerala State Tourist Information Center க்கு போன் போட்டு விசாரித்தபோது கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வரை பஸ்ஸில் சென்று, பின் அங்கிருந்து மூணாறு செல்லலாம் என்று சொன்னார்கள். அதை அவரிடம் தெரிவித்து நல்லபடியாக போய் வாருங்கள் என்று வாழ்த்தினேன். நண்பர் அன்று இரவு கிளம்புவதாகச் சொன்னார்.

நான் அன்று மாலை வீட்டுக்குச் சென்று டி.வி. பார்த்தபோது, பெட்ரோல் விலை ரூ7.50 உயர்ந்து விட்டதாகவும், அதனால் அடுத்த நாள் கேரளாவில் பந்த் என்றும், பேருந்துகளோ, டாக்ஸியோ, ஆட்டோவோ ஓடாது என்றும் செய்தியில் அறிவித்தார்கள்.

அய்யய்யோ! நமது நண்பர் எப்படி மூணாறு சென்று சேரப்போகிறாரோ? என்று கவலை ஏற்பட்டது.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்