Tag Archives: சிலேடை

மனமும் நாயும் சிலேடை

29 ஏப்
படக்கவிதைப் போட்டி 10

படக்கவிதைப் போட்டி 10

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-10 க்கு நாம் அனுப்பிய கவிதை. இந்தக் க்விதை கலிவெண்பா வகையைச் சேர்ந்தது.

அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்

கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி

பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்

கடிக்கும் குலைக்கும் அதட்டி– கடிந்தால்

மனமது சோரும் நினைவை உரைக்கும்

மனதில் நினைத்த விதமாய் – தினமும்

உலவும் பயிற்சி அளித்தால் உதவும்

பலவும் சரியாய் நடத்தும் – விலகும்

மெதுவாய்ப் பயந்து பணித்தால் துணிந்து

எதுவாய் இருந்தாலும் செய்யும் – அதுவாய்

திரும்பும் நிலையொன்றில் நில்லாது ஓடும்

விரும்பும் இடத்தே கிடக்கும் – கருத்தைச்

சிதைக்கும் மிரட்டினால் ஓய்ந்து நடுங்கும்

பதைத்தால் விரட்டும் நிறுத்தி – அதையே

கவனித்தால் (அ)டங்கும் ஒழுங்கில் மிளிரும்

தவத்தால் சிறக்கும் அடக்க – தவிக்கும்

பயத்தைக் கொடுக்கும் பழகிய பின்தை

ரியத்தை அளிக்கும் ஒருவர் – வயமானால்

அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்

தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே

நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்

என்றும் மனமது நாய்

 

நன்றி: வல்லமை மின்னிதழ்

Advertisements

வல்லமை இதழில் ‘என் பார்வையில் கண்ணதாசன்’

13 ஜூன்

சில நாட்களுக்கு முன்பு நமது எழுத்தாள நண்பர் பாண்டியன்ஜி அவர்கள், வல்லமை மின்னிதழில் ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்திருப்பதாகவும் அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்வது நமக்குப் பிடித்தமானதுதான் என்றாலும், அதிகமான வேலைப்பளு காரணமாக என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவரிடம் சொன்னேன். யார் வெற்றி பெறுவார்கள்? என்று ஒரு தொடரை ஆரம்பித்து அதையும் இன்னும் தொடரவில்லை என்று சொன்னேன்.

ஆனால் அடுத்து வந்த நாட்களில் நமக்கு அதைப்பற்றிய சிந்தனை தீவிரமானது. கண்ணதாசன் நாமறிந்த அற்புதமான கவிஞர் என்பதனாலும் அவருடைய பாடல்களை அன்றாடம் நாம் கேட்டுக் கொண்டு இருப்பதனாலும், நாமும் கண்ணதாசனைப் பற்றி எழுதலாம் என்று ஆவல் ஏற்பட்டது. வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்து ஒரு கட்டுரையாக உருவாக்கி அனுப்பி வைத்தேன்.

அந்தக் கட்டுரை இன்று வல்லமையில் வெளியாகி உள்ளது. கண்ணதாசனின் பாடல்கள் கடல் போன்றது என்பதனால், கவியரசின் பாடல்களுக்கும் கடலுக்கும் பொருத்தமான அர்த்தம் வருமாறு ஒரு சிலேடைக் கவிதையும் நம் சிந்தையில் உதயமானது. அதை அந்தக் கட்டுரையில் காணலாம்.

வல்லமைக்கு நமது நன்றி!

அந்தக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

என் பார்வையில் கண்ணதாசன்

நேரம்தான் பணம்! – பகுதி 3 (Time is Money! – Part 3)

25 செப்

நேரம்தான் பணம் என்பதை விளக்கிக்கொண்டு வந்த கவிஞர் கடிவேலு நான்கு வகைகளில் பணம் எப்படி சம்பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லி, அதில் நேரம் எவ்வாறு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், அதிகமான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காக செலவிடும்போது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகிறது என்றும் சொன்னார் அல்லவா? கடைசியாக, ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று ஒரு கேள்வியையும் கேட்டார். அதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

நேரம்தான் பணம்! – பகுதி 1 (Time is Money! – Part 1)

நேரம்தான் பணம்! – பகுதி 2 (Time is Money! – Part 2)

நாம் கொஞ்ச நேரம் யோசித்த பின், “ஒரு வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் முதலில் பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு என்ன செய்யப் போகிறோம், எந்த இடத்தில் செயல்படப் போகிறோம் என்றெல்லாம் தீர்மானித்து தேவையான இடத்தையும், இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள் போன்றவற்றையும் வாங்கி அதனதன் இடத்தில் பொருத்த வேண்டும். வேலைக்குத் தேவையான தகுந்த ஆட்களை நியமிக்க வேண்டும். உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டியதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது போன்ற பல வகையான வேலைகளைத்தான் வியாபாரம் ஆரம்பிப்பவர்கள் செய்வார்கள்” என்றோம்.

“அதெல்லாம் சரிதான். ஆனால் வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் செய்யும் இன்னொரு மிக மிக முக்கியமான விஷயம் என்ன?” என்று கேட்டார்.

“பணத்தை ஏற்பாடு செய்வது…. இல்லை இல்லை ஆட்களை நியமிப்பது” என்றோம். நமக்கு சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நாம் தடுமாறுவதைப் பார்த்த கவிஞர் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்?” என்றோம் சற்றே பொய் கோபத்துடன்.

“இதற்கு பதில் தெரிந்தால் இப்பொழுது நீரும் வியாபாரம் ஆரம்பித்திருப்பீர்” என்று சொல்லி விட்டு, “வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் முதலில் கனவு காண்கிறார்கள்” என்றார்.

“என்னது? கனவு காண்கிறார்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டோம்.

“ஆமாம்! கனவு காண்கிறார்கள். எப்படிப்பட்ட வீட்டில் வாழ வேண்டும், எந்த மாதிரி காரில் செல்ல வேண்டும், எவ்வளவு பணம் தங்களது கணக்கில் வங்கியில் இருக்க வேண்டும், எந்த ஊருக்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டும், எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது போன்ற பல கனவுகளை அவர்கள் காண்கிறார்கள். அதனை நிறைவேற்ற முயற்சித்து வியாபாரத்தில் வெற்றி பெறுகிறார்கள்” என்றார்.

“ஆனால், மற்றவர்களும் இவற்றை எல்லாம் செய்கிறார்கள் அல்லவா?” என்றோம் சந்தேகமாக.

“இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்தோ அல்லது தங்கள் சக்திக்கு எது முடியுமோ, அந்த அளவில் மட்டுமே திருப்திப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் வியாபாரம் செய்பவர்கள் முதலில் பெரிய கனவு கண்டு அதை எப்படியாவது அடைய முயற்சிக்கிறார்கள்” என்றார்.

“அதனால்தான் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், ‘இளைஞர்களே! கனவு காணுங்கள்’ என்றாரா” என்றோம்.

“ஆமாம், அவ்வாறு கனவு கண்டால் இந்தியா வல்லரசாகும் என்பது அவருடைய கனவு. அதைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம்” என்றார்.

“ஒருவேளை அப்படி கனவு காணத்தவறினால் என்ன ஆகும்?” என்றோம்.

“யார் கனவு காண்கிறார்களோ, அவர்களுடைய கனவுகளை நனவாக்க உங்களை அறியாமலே நீங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டுவிடுவீர்கள்” என்றார். எவ்வளவு பெரிய நடைமுறை உண்மை இது. அதையும் கவிதையிலேயே சொன்னார் கவிஞர்.

இதோ அவருடைய கவிதை.

தூங்கினால் வருவதல்ல கனவு உன்னைத்

தூங்காமல் செய்வதுதான் கனவு – ஏங்கியே

இளமையை கழிக்காமல் அப்துல்கலாம் ஐயாசொன்ன

வளமான பாரதத்தை உருவாக்க கனவுகாண்பாய்!

 

கனவேதும் காணாமல் போனால்பின் என்னாகும்?

வினவினால் விடைஇதுவே தெரிந்துகொள்! – கனவுகளே

வேண்டாமென நீஇருந்தால் வேறொருவர் உன்னைத்தங்க

கூண்டிலே கவர்ந்துசெல்வார் அவர்கனவை நனவாக்க!

“எனவே கனவு காண்பதுதான் மிக முக்கியம் என்கிறீர் அல்லவா?” என்றோம்.

“ஆமாம்” என்றவர், “மனித வாழ்க்கையும் மட்டன் பிரியாணியும் ஒன்று” என்றார்.

இப்போது நாம் சிரித்தோம்.

“என்ன கவிஞரே, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்?” என்றோம்.

“ஆமாம், இரண்டுமே பீஸ்ஃபுல்லாக இருந்தால்தான் திருப்தியாக இருக்கும்” என்றார்.

பீஸ்ஃபுல் என்ற ஒரே மாதிரியான உச்சரிப்புள்ள இரண்டு ஆங்கில வார்த்தைகளை அமைதிக்கும், நிறைய துண்டுகள் என்பதற்கும் பயன்படுத்திய விதத்தைப் பார்த்த நாம் அடைந்த ஆச்சரியம், அடுத்து அவர் சொன்ன ஒரு சிலேடை கவிதையைக் கேட்டதும் இன்னும் பல மடங்கானது.

பணத்தால் கிடைக்கும் தேங்காய் சேர்வதால்

மணந்தால் சுவைக்கும் பீஸ்ஃபுல்லாய் இருந்தால்

வாய்க்கும் மனதிருப்தி அதனால் நல்மனித

வாழ்க்கையும் மட்டன் பிரியாணி ஆகும்

என்று ஒரு கவிதையை சொன்னார். எப்படித்தான் உடனுக்குடன் எதுகை மோனையுடன் கவிதை புனைகிறாரோ என்ற ஆச்சரியம் நமக்கு ஏற்பட்டது. இதற்கு முன்னால் கவிஞர் சொன்ன சிலேடை கவிதையும் நம் ஞாபகத்துக்கு வந்தது.

பணம் கொடுத்தால்தான் பிரியாணி கிடைக்கும். அதுபோல் போதுமான பணம் இருந்தால் நல்ல வாழ்க்கை அமையும். அதனால்தான் அதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறார். மேலும் தேங்காய் சேர்வதால் மணந்தால் சுவைக்கும் என்பதில் தேங்காய் சேர்க்கும்போது பிரியாணியின் மணமும் சுவையும் அதிகமாகும் என்பதற்கும், அதையே தேன் போன்ற இனிமையும் காய் போல கசப்பும் சேர்ந்ததுதான் மணவாழ்க்கை, அதுதான் சுவைக்கும் என்பதற்காகவும் பயன்படுத்தி இருப்பதை ரசித்தோம். அது போல வாய்க்கும் மனதிருப்தி என்பதை திருமண வாழ்க்கை மனதுக்கு திருப்தியானதாக வாய்க்கும் என்றும், சாப்பிடும் போது வாய்க்கு ருசியாக இருந்தால் மனத்தில் திருப்தி ஏற்படும் என்பதற்கும் பயன்படுத்தி இருப்பதையும் மிகவும் ரசித்தோம்.

“கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் கனவு கண்டால் மட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி சொல்லும்” என்றோம்.