Tag Archives: காலர்-ட்யூன்

கொலம்பஸிடம் செல்போன் இருந்திருந்தால்…..?

1 பிப்

இன்றைய நம் தினசரி வாழ்க்கையில் செல்போன் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். அதன் உபயோகத்தால் நன்மை அதிகமா அல்லது தொந்திரவு அதிகமா என்பது பேராசிரியர் சாலமன் பாப்பையாவை வைத்து பட்டி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் ஒருவருக்கு அவருடைய வியாபார நடைமுறைக்கு செல்போனின் உபயோகம் மிகவும் அவசியம் என்பதில் வேறு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஒரு சிலர் அதைப் பொழுது போக்காகவும், வீண் அரட்டை அடிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை, அதிலும் கேம் விளையாடுகிறேன் பேர்வழி என்று இரவு வெகு நேரம் அதிலேயே மூழ்கி தூக்கத்தைத் தொலைப்பவர்களும் உண்டு. அது அவர்களை அடிமையாக்கி அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்குகிறது.

அது மட்டுமில்லாமல் எந்த நேரத்தில் என்று இல்லாமல் எப்போதும் போன் பேசிக் கொண்டே சென்று, கவனக்குறைவின் காரணமாக இரயிலிலோ, பஸ்ஸிலோ அடிபட்டு விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் செல்போன் என்பது கவனத்தை திசை திருப்பி நமது பெரும்பாலான நேரத்தை வீணடிக்கிறது என்பது உண்மை.

செல்போனைப் பற்றி ஒரு கலந்துரையாடலில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால் முற்காலத்தில் இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்காக கொலம்பஸ் ஒரு கப்பலில் புறப்பட்டு கடலில் வழி தவறி பல இன்னல்களை அனுபவித்து முடிவில் கரை ஒதுங்கி அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் அல்லவா?

அப்படி கப்பலில் புறப்பட்ட நேரத்தில் கொலம்பஸிடம் ஒரு செல்போன் இருந்திருந்தால் அவர் அமெரிக்காவைக் கண்டு பிடித்திருப்பாரா? என்று கேட்டார். அதோடு ‘மாமா நீங்க எங்க இருக்கீங்க?’ என்று காலர் ட்யூன் வேறு வைத்திருந்தார் என்றால், அவர் அவ்வளவு அவஸ்தைப் பட்ட பிறகு பயணத்தை தொடர்ந்திருப்பாரா? என்று கேட்டார். இந்தக் கேள்வி நமக்கு கொஞ்சம் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தாலும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. நகைச்சுவையான அந்த உரையாடல் துணுக்கை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள பிளேயரில் சிவப்பு பட்டனை அழுத்தவும்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. அதாவது நமது கடினமான முயற்சியை, மனத்தின் வலிமையைக் குலைப்பதில் இந்த செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. மனத்தை ஒருமுகப் படுத்தி ஏதாவது தீவிரமான முயற்சியில் இருக்கும் போது, செல்போன் ஒலித்தால் அது நமது முயற்சியின் வீரியத்தைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், நாம் தீவிரமான கவனத்துடன் வேலை செய்ய வேண்டிய நேரங்களில் அதனை சைலண்ட் மோடில் போட்டு வைப்பது உத்தமம். விஞ்ஞான வளர்ச்சியை நாம் நம்முடைய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த நினைக்கும் அதே சமயத்தில் அது நம்முடைய வளர்ச்சியையோ அல்லது நிம்மதியையோ பாதிக்காமல் இருக்க வேண்டும். சரிதானே!

Advertisements

நம் ரசனை எங்கே போகிறது?

6 ஜன

இன்று செல்போன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறிவிடலாம். அந்தளவுக்கு செல்போனும் கையுமாகவே மக்கள் திரிகிறார்கள். பாத்ரூமில் செல்போன், சாப்பிடும்போது செல்போன், கோயிலில் செல்போன், தூங்கும் போதும் செல்போனை பக்கத்தில் வைத்துக் கொண்டேதான் தூங்குகிறார்கள்.

இதைக் கூட நாம் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ரிங் டோன் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறதே! அதுதான் கொடுமை. இந்த விஷயத்தில்தான் ஒவ்வொருவருக்கும் வித விதமான ரசனைகள். சிலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களை காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். சிலர் வித்தியாசமாக குழந்தையின் சிரிப்பையோ அல்லது அழுகையையோ காலர் ட்யூனாக வைத்துக் கொள்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை.

சிலர், `போனை எட்றா டேய்! போனை எட்றா! கஸ்மாலம் டேய்! போனை எட்றா!’ என்று கூட காலர் ட்யூன் வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலரோ, நாய் குரைப்பது போல காலர் ட்யூன் வைத்திருக்கிறார்கள். என்ன ரசனையோ! இதைத்தான் காமெடி நடிகர் விவேக், “ஏதேது, போகிற போக்கைப் பார்த்தால் எருமை மாடு சாணி போடுவதைக் கூட ரிங் டோனாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறதே!” என்று ஒரு படத்தில் கிண்டலடித்திருப்பார்.

சற்றுப் பொறுங்கள். யாரோ வருவது போல் தெரிகிறது…

ஓ! நம்ம கவிஞர் கடிவேலுதான். உங்களுக்கு கவிஞர் கடிவேலுவைத் தெரியாதா?

அப்பு வணக்கம்ப்பு…..

கவனஈர்ப்பு ஏற்படுத்தவே காலர்-ட்யூன் – அதிலே

    கதறித் துடிக்கும் நாய்குட்டியின் பதிவுஏன்?

கவனக்குறைவு ஏற்பட்டாலே காலன்தான் – ரோட்டிலே

    அலறித் துடித்தும் பயனில்லை எச்சரித்தேன்!

நாம் எழுதும் கருத்தை ஒட்டியே அவரும் கவிதை சொன்னதால் என்னவென்று விசாரித்தேன். ஆஸ்பத்திரியிலிருந்து நன்றாகக் குணமாகி வீடு திரும்பி விட்டாராம். ஆஸ்பத்திரியில் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொன்னார்களாம். அதனால் ஒரு நண்பர் அழைத்ததன் பேரில் இன்சூரன்ஸ் சம்பந்தமான ஒரு கூட்டத்துக்குப் போனாராம்.

அங்கு நல்ல கூட்டம். காரணம் அன்று அந்தக் கம்பெனி புதிதாக ஒரு பாலிசி அறிமுகப் படுத்தியிருந்தார்கள். எல்லோரும் மிக மிக ஆர்வமாக உரையைக் கவனித்துக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று கூட்டத்தில் ஒரு நாய்குட்டியை யாரோ மிதித்தது போல் நாய்குட்டியின் கதறல் சத்தம். இந்தக் கூட்டத்தில் நாய்க் குட்டி எப்படி வந்தது? என்று எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தால்…

அது யாரோ ஒருவருடைய காலர்-ட்யூனாம். எங்கும் சிரிப்பலை பரவியதாம். இந்த சத்தம் ரோட்டில் வாகனத்தில் செல்லும்போது யாருடைய போனிலிருந்தாவது கேட்டால், என்ன நடக்கும்? என்று சிந்தித்தாராம். அதன் பாதிப்பினால் நம் கவிஞர் கடிவேலுவுக்கு உதித்த கவிதையாம் அது.