Tag Archives: கவிஞர் கடிவேலு

எதுவும் சாத்தியமே!

22 செப்

மீண்டும் கவிஞர் கடிவேலு!

சென்ற இடுகையில் நகைச்சுவைக் கவிதை என்ற தலைப்பில், எலித்தொல்லையால் அவஸ்தைப் பட்ட நம் நண்பர், அது பற்றி நாம் எழுதிய ஒரு கவிதையை பிரிண்ட் எடுத்து எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்ததாகவும், அதன் பிறகு அவருக்கு எலித்தொல்லை குறைந்து விட்டது என்று அவர் சொன்னதாகவும் எழுதி இருந்தோம்.

அதைப் படித்த இன்னொரு நண்பர் நமக்கு போன் செய்து, இதெல்லாம் சாத்தியமான விஷயமல்ல என்றும், ஒன்று உமது நண்பர் பொய் சொல்லி இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதாவது காரணங்களால் எலித்தொல்லை குறைந்திருக்க வேண்டும் என்றும் அதனால் இதெயெல்லாம் நம்ப வேண்டாம் என்றும் சொன்னார். நமக்கும் அவர் சொல்வது சரியென்றே தோன்றியது.

ஆனால் அதைப் படித்து விட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது கவிஞர் கடிவேலுவும் போன் பண்ணினார். அவருடைய குரலைக் கேட்ட நமக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

“என்ன கவிஞரே, நலமாக இருக்கிறீரா? ரொம்ப நாளாக காணவில்லையே” என்றோம்.

“இப்போது நீரே கவிதை எழுதுகிறீரே. அதனால் நான் இல்லாதது ஒன்றும் பெரிய குறையாகத் தெரியாது” என்றார்.

“ஒரு ஜோதிடராக நீர் இப்போது பிஸியாகி விட்டதால் உம்மைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நானே கவிதை எழுத முயற்சிக்கிறேன்” என்றேன்.

“நன்றாகத்தான் எழுதுகிறீர். வல்லமை மின்னிதழில்கூட உமது சிலேடைக் கவிதையை பாராட்டி இருந்தார்களே” என்றார்.

“எல்லாம் உமது சகவாசத்தால் வந்த விஷயம்தான். பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமல்லவா” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நம் மனதுக்கு பயிற்சி கொடுத்தால் அது நம்ப முடியாத பல வேலைகளையும் எளிதாக செய்து விடும். இதில் அதிசயம் ஒன்றுமில்லை” என்றார்.

“மனதுக்குப் பயிற்சியா, என்ன சொல்கிறீர்?, புரியவில்லையே” என்றேன்.

“ஆமாம், பிராணாயாமம், தியானம் போன்ற முறைகளினால் மனத்தை ஒழுங்கு படுத்தினால் சாதாரணமாகச் செய்ய முடியாத வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என்று பதஞ்சலி முனிவர் சொல்லி இருக்கிறார்” என்றார்.

“கவிஞரே, நீர் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுகிறீர் என்று புரிகிறது. அதைக் கொஞ்சம் விளக்கமாக நமக்குப் புரியும்படி சொல்லுங்களேன்” என்றேன்.

“சரி, உதாரணமாக உமது சென்ற இடுகையையே எடுத்துக் கொள்வோம். தொந்தரவு தந்த எலியை காலி செய்ய வைப்பதற்காக நீர் ஒரு கவிதையை எழுதி இருந்தீர் அல்லவா”

“ஆமாம்”

“அதன் பிரதியை உமது நண்பர் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்து, அதனால் எலித்தொல்லை குறைந்து விட்டதாகவும் சொல்லி இருந்தீரே”

“ஆமாம். அவர் அப்படித்தான சொன்னார்”

“அது நடந்திருக்க சாத்தியம் உள்ளது” என்றார். நமக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

“உண்மையாகத்தான் சொல்கிறீரா” என்றோம்

“ஆமாம், உமது நண்பர் சாத்வீகமானவர் என்றும் பிற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்று நினைப்பவர் என்றும் சொல்லி இருந்தீர். அதுதான் முதல்படி. இதைத்தான் அஹிம்சை என்கிறார் பதஞ்சலி முனிவர். மனதை ஒழுங்கு படுத்துவதில் இது ஒரு அங்கம். அதில் தேர்ச்சி பெற்று, மனம் அமைதி அடையும் போது மனம் பொருளை அசைக்கும். மனத்தில் நினைக்கும் விஷயங்கள் தானாக நடக்க ஆரம்பிக்கும்” என்றார்.

“வெளியேற வழியே இல்லாத ஒரு இரும்புக் கூண்டுக்குள் ஒரு எலியை அடைத்தால் அது தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று சுஜாதா சொல்லி இருக்கிறாரே, அது போலவா?” என்றோம்.

“இல்லை, அது வேறு. அது அணுவியல் சம்பந்தப்பட்டது. இந்த விஷயம் வேறு” என்றார்.

கவிஞர் கடிவேலு சொன்ன விஷயங்கள் நமக்கு முழுவதுமாகப் புரியவில்லை. ஆனால் ஏதோ கொஞ்சம் புரிவது போலும் தோன்றியது.

“கவிஞரே, இந்த விஷயத்தைப் பற்றியும், பதஞ்சலியின் யோகத்தைப் பற்றியும் எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்” என்று கேட்டேன்.

“பார்க்கலாம். அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. எனக்கு நேரம் கிடைக்கும்போது, பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் சிலவற்றை விளக்க முயற்சிக்கிறேன்” என்றார்.

நமக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

“கவிஞரே, உம்மைப் போன்ற ஒரு நண்பரைப் பெற்றது, எனது பாக்கியம்” என்றேன்.

“அதுபோல் யாரையும் மிகவும் உயர்வாக சொல்ல வேண்டாம். எல்லோருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது. அதை உணர்ந்து கொண்டவர்கள் அதைப் பயன் படுத்துகிறார்கள். அவ்வளவுதான்” என்றார்.

“சரி, உமக்கு நேரம் கிடைக்கும் போது என்னை அழையும்” என்று சொல்லி போனை வைத்தேன்.

கவிஞர் கடிவேலு ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது கொண்டு வருகிறார். அது நல்ல விஷயமாகவும் தேவையானதாகவும் இருக்கிறது. இப்போது நமக்கு யோகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதிகமான ஆவல் ஏற்பட்டது.

அதனால் அவருடைய அழைப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

Advertisements

கவிஞரின் கோபமும் நமது சமாதானமும்!

21 நவ்

காலையில் ஆபீசுக்குப் போய் மெயில்களை பார்த்துக் கோன்டிருந்த போது, செல்போன் ஒலித்தது. எடுத்தால் நமது கவிஞர் கடிவேலுதான்.

“ஹலோ, கவிஞரே, சௌக்கியமா?” என்றோம் உற்சாகமாக.

“சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல். சௌக்கியம், சௌக்கியம்” என்றார் உணர்ச்சியின்றி.

என்ன ஆயிற்று, இந்த கடிவேலுவுக்கு! ஏதோ வேண்டா வேறுப்பாகப் பேசுகிறாரே!

“என்ன ஆச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா?” என்றோம் அக்கறையாக.

“உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீர்தான் சரியில்லை” என்றார் சுரத்தில்லாமல்.

“என்ன சொல்கிறீர், என் மீது ஏதோ கோபம் போல் தெரிகிறதே!” என்றோம். அவர் இது போல் கோபப்பட்டு நாம் இதுவரை பார்த்த்தில்லையே.

“நீர் என்னுடைய நல்ல நண்பர் என்று நினைத்திருந்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் இதுவரை நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றவரை இடைமறித்து,

“கவிஞரே, இன்னும் பதினைந்து நிமிடத்தில் உம்முடைய இடத்துக்கு வந்து நேரில் பேசுகிறேன்” என்று சொல்லி விட்டு உடனே கிளம்பினேன்.

அங்கு போனபோது கவிஞர் நம்மை வரவேற்று ஒரு சோபாவில் அமர வைத்தார். உடனே, “நீர் என்னுடைய நல்ல நண்பர்தானே, அதிலென்ன உமக்கு சந்தேகம்” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“நானும் இதுவரை அப்படித்தான் நினைத்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றார் மீண்டும்.

“அது உண்மைதானே, என்னுடைய நண்பரின் கவிதையை ரசிப்பதில் எனக்கு எப்பவுமே மகிழ்ச்சிதான். அதற்கு என்ன வந்தது?”

“ஆனால் உம்மிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் எதிர் பார்க்கவில்லை” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை. ஆனால் நம் மீது ஏதோ மன வருத்தம் இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

“கவிஞரே, உமது மன்ம் புண்படும்படியாக அப்படி என்ன வார்த்தையை நான் சொல்லி விட்டேன். கொஞ்சம் விபரமாகச் சொல்லும்”

“நேற்று அந்த மனிதரிடம் பேசியபோது என்னைப் பற்றி என்ன சொன்னீர், ஞாபகப்படுத்திப் பாரும்” என்றார் கொஞ்சம் காட்டமாக.

“எந்த மனிதர், யாரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தேன்?” என்றேன் இன்னும் புரியாமல்.

“கம்பனைப் பற்றி பேசினீர் அல்லவா?” என்று அவர் சொன்னவுடன்தான் ஞாபகம் வந்தது.

“அட, ஆமாம், கவிஞரே, உம்மைப் போலவே கம்பனும் ஸ்ரீராமனின் ஜாதகத்தை ஒரு பாட்டில் வடித்திருக்கிறான்” என்றேன்.

“ம்..ம்.. நானும் படித்தேன். அதைத்தான் சொல்கிறேன். அப்போது என்னை சாதாரண கவிஞர் கடிவேலு என்று சொன்னீர் அல்லவா?”

நமக்கு அப்போதுதான் கவிஞருடைய கோபத்திற்கு காரணம் புரிந்தது.

“அய்யோ, நான் வேண்டுமென்று சொல்லவில்லை. கம்பனைப் பற்றிப் பேச்சு வந்தபோது, கம்பனை பெருமைப் படுத்தி சொல்வதற்காக அப்படிப் பேசும்படி ஆகிவிட்டது”

“அதற்காக நான் குறைந்து விட்டேனா, எனக்கு கவி பாடத் தகுதியில்லையா” என்று எகிற ஆரம்பித்தார்.

கவிஞர்கள் வாழ்நாளில் அவர்களுடைய பெருமை உலகிற்கு தெரிவதில்லை. அவருடைய காலத்திற்குப் பிறகுதான் ஒரு கவிஞரின் பெருமை மக்களுக்குப் புரிகிறது. பாரதியார் அதற்கு சரியான் உதாரணம் என்று பலவாறாக அவரைத் தேற்றி சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

கவிஞருடைய கோபம் குறைந்தது போல் தோன்றினாலும் இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பது புரிந்தது. இது போன்ற சமயங்களில் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்கு நாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகள் எதையாவது சொல்லி மற்றவரின் மன வருத்தத்தைப் போக்குவதுண்டு. அது போல் ஒரு முயற்சியைத் தொடங்கினோம்.

“கவிஞரே, இப்போது இணையத்தில் வரும் நிறைய விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாரும்” என்று ஒரு பேப்பரை நீட்டினேன்.

அதை வாங்கி கவிஞர் படிக்க ஆரம்பித்தார்.

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்…

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!
பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?
ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
பெண்: நீ என்னை அடிப்பாயா?
ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

படித்து முடித்து விட்டு, நம்மை நிமிர்ந்து பார்த்தார்.

“சரி, இரண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள். இதிலென்ன இருக்கிறது?” என்றார்.

“அந்தப் பேப்பரின் மடித்த பகுதியைப் பிரித்து படியும்” என்றோம். அதை பிரித்து படித்தார்.

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.

என்று இருந்தது. அதன்படி கீழிருந்து மேலே படித்து விட்டு சிரித்து விட்டார் கவிஞர். நமக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

இனிமேல் தாராளமாக அவர் ஜோதிடரான காரணத்தைப் பற்றிக் கேட்கலாம் என்று கொஞ்சம் நேரம் பொறுமையாகக் காத்திருந்தோம்.

நன்றி: இந்த நகைச்சுவைத் துணுக்கை இணையத்தில் வலையேற்றியவருக்கு நமது நன்றி!

கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கடிவேலுவும்

19 நவ்

கவிஞரின் கவிதை பாடும் திறமையைப் பற்றி சொல்லும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது என்று சென்ற இடுகையில் சொல்லி இருந்தோம். உடனே, இதற்கு முன் தன்னுடைய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதைப் பற்றி அவர் சொன்ன கவிதை நமக்கு ஞாபகம் வந்தது.

பொங்கிய பாக்கியத்தில்

       பொன்னவனும் சிரசினில்

தங்கிய குஜனுமிக்க

சுகத்திலுச்ச மாய்புதனும்

சுங்கனொடு புண்ணியத்தில்

       இந்துவும்கூட ஆட்சியில்

மந்தனும் ரவியுமானால்

       அவனும்புகழ் ஜோதிடனே

இதற்கு என்ன அர்த்தம் என்று நமக்குப் புரியவில்லை. பலவாறு அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த போது நம்மிடம் ஆலோசனை பெறுவதற்காக ஒருவர் நமது அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஜோதிட சாஸ்திரத்தை நன்றாக அறிந்தவர் என்று தெரிந்தது.

சரி, அவரிடம் கேட்டால் என்ன என்று கொஞ்சம் யோசித்து விட்டு, அந்தக் கவிதையை அவரிடம் காண்பித்து விளக்கம் கேட்டோம் அவர் அந்தக் கவிதையின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொன்னார்.

பாக்கியத்தில்பாக்கியஸ்தானத்தில் அதாவது ஒன்பதாம் வீட்டில்

பொன்னவனும் குருவும்

சிரசினில் லக்கினத்தில்

குஜனுமிக்க செவ்வாயும், மிகுந்த

சுகத்திலுச்ச மாய்புதனும்சுகஸ்தானம் என்னும் நான்காம் வீட்டில் உச்சமான புதன்

சுங்கனொடு சுக்கிரனோடு

புண்ணியத்தில் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாம் வீட்டில்

இந்துவும்கூட சந்திரனும் சேர

ஆட்சியில் மந்தனும் ரவியுமானால் சனி பகவானும் சூரிய பகவானும் ஆட்சி வீட்டில் இருந்தால்

என்று அதன் அருகிலேயே எழுதி விட்டு, “இதில் கூறியுள்ளபடி பார்த்தால், முதலில் லக்கினம் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும். புதன் கன்னியில்தான் உச்சமாகிறது. அது நான்காம் வீடு என்றால் மிதுனம்தான் லக்கினம். அதாவது உச்சமான புதனும், மிதுன லக்கினத்தில் செவ்வாயும், துலாமில் சந்திரன் சுக்கிரனும், கும்பத்தில் குருவும், சிம்மத்தில் சூரியன் மற்றும் மகரத்தில் சனி பகவானும் இருந்தால் அவன் புகழ் மிக்க ஜோதிடனாவான் என்று அர்த்தம் வருகிறது” என்று சொன்னார்.

அத்துடன், “இவர் நன்றாக கவி பாடக்கூடிய புலவர் என்றும் தெரிகிறது. ஏனென்றால் ஒரு வார்த்தைகூட அர்த்தம் இல்லாமல் இங்கு இடம் பெறவில்லை. பொங்கிய, தங்கிய போன்ற வார்த்தைகள் எதுகைக்காக போட்டது போல் தெரிந்தாலும் அதற்கும் அர்த்தம் இருக்கிறது” என்றார்.

அவர், கவிஞரின் கவிதையைப் பாராட்டியதைக் கேட்டதும் நமக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “அப்படியா, அப்படியானால் அந்தப் பாட்டில் அவர் சொன்னதன் பொருளும் சரிதானா?” என்று கேட்டோம்.

“அந்தக் கவிதையில் ஏழு கிரகங்களின் நிலைதான் சொல்லப்பட்டிருக்கிறது. ராகு, கேது பற்றி எதுவும் இல்லை. ஆனால் இவற்றை வைத்து அதைக் கண்டு பிடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. இது போன்ற ஒரு கவிதை, அதாவது இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் அவன் ஜோதிடனாவான் என்பதாக எந்த பழைய ஜோதிட நூல்களிலும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஒருவேளை இது அவரே புனைந்த கவிதையாக இருக்கலாம்” என்றவர்,

“கருத்து என்று பார்த்தால் புதன் ஆட்சியாகவும், உச்சமாகவும், மூலத்திரிகோணமாகவும், லக்கினாதிபதியாகவும், கேந்திரத்திலும் பலமாக இருக்கிறது. ஜோதிடத்தில் வல்லமை பெறுவதற்கு புதன் மிகவும் முக்கியம். அதனால்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அத்துடன் நுண்ணறிவுக்குரிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சந்திரன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பது ஒரு சிறப்பு. குருவும் திரிகோணத்தில் இருந்து சந்திரனைப் பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ஆட்சியாக இருக்கிறது. அதுவும் ஒரு சிறப்பு. இப்படி பல காரணங்களினால் அவர் சொன்ன கருத்து உண்மையாக இருக்கலாம்” என்றார்.

“எல்லாமே சிறப்பானதாக ஒரு ஜாதகம் அமைய முடியுமா?” என்றோம் சந்தேகமாக.

“அதற்கு வாய்ப்பே இல்லை. 36 பாக்கியங்களும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஒன்று நன்றாக இருந்தால் வேறொன்று சரியில்லாமல் இருக்கும். இதைத்தான் ‘அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே, அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கிங்கே இடமில்லை’ என்று ஒரு பாட்டில் சொல்லி இருப்பார்கள். ஏன் ஸ்ரீராமரின் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தும், எவ்வளவு சோதனைகளை அவர் சந்தித்தார் என்று ராமாயணத்தில் பார்க்கிறோமல்லவா?” என்றார்.

“ஒரு சிறிய கவிதையில் ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை கவிஞர் கடிவேலு விளக்கி விட்டாரே, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றோம்.

“கம்ப ராமாயணத்தில் பாலகாண்டம், திரு அவதாரப் படலத்தில் வரும் ஒரு பாடலில் ஸ்ரீராமனின் ஜாதகச் சிறப்பை, கம்பர் நான்கே வரிகளில் திறம்பட வடித்திருப்பார்.

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே.

கம்பனின் கவித்திறனுக்கு இந்தப் பாடல் ஒரு சான்று” என்றார்.

“அய்யா, கவிச்சக்கரவர்த்தி கம்பன் எங்கே, சாதாரண கவிஞர் கடிவேலு எங்கே, இருவரையும் ஒப்பிடுவது தகுமா? அது மட்டுமில்லாமல் ஸ்ரீராமரின் ஜாதகம் தெய்வாம்சம் பொருந்தியது. மானிடர்க்கு அது போல் ஐந்து கிரகங்கள் உச்சமான ஒரு அமைப்பு வரவே முடியாது என்று சொல்வார்கள். பூஜையறையில் வைத்து பலரும் பூஜிக்கும் ஜாதகம் அது. அப்படிப்பட்ட ஒரு ஜாதகச் சிறப்பை நான்கு வரிகளில் அழகான பாடலாக அமைத்த கம்பனை ஒரு பேச்சுக்குக்கூட கடிவேலுவுடன் சேர்த்துப் பேசுவது சரியாகுமா?” என்றேன்.

“உண்மைதான். நான் கடிவேலுவை கம்பனுடன் ஒப்பிடவில்லை. அவர் எழுதிய கவிதை ஒன்றும் புதிதல்ல. இது போல் ஏற்கெனவே கம்பராமாயணத்தில் கம்பன் பாடியிருக்கிறான் என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன் ஆனாலும் கவிஞர் கடிவேலுவையும் பாராட்டாமல் இருக்க முடியாது” என்றார்.

அவர் சொன்னது நமக்கும் சரி என்றே தோன்றியது.

காவலாய் வரும் கவிஞர் கடிவேலு!

15 நவ்

புகழ் பெற்ற திருவிளையாடல் என்னும் பழைய திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஏழ்மையான நிலையில் மன்னன் தரும் பொற்காசுகளை அடைய ஆசைப்படும் தருமிக்கு, இறைவன் ஒரு பாட்டை எழுதிக் கொடுப்பார். அவர் கொண்டு வந்த கொடுத்த அந்த பாட்டைக் கேட்டு, ‘ஆஹா, அற்புதமான பாட்டு! ஆழ்ந்த கருத்துக்கள். தீர்ந்தது என் சந்தேகம்’ என்று சந்தோஷப் பட்டு துள்ளிக் குதிப்பான் பாண்டிய மன்னன். அது போல் நமக்கும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் தோன்றியது.

காரணம் வேறு ஒன்றும் இல்லை; கவிஞர் கடிவேலுவிடமிருந்து வந்த ஒரு கவிதைதான், அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. ‘அற்புதமான கவிதை! தீர்ந்தது என் சந்தேகம்’ என்று துள்ளிக் குதிக்காத குறைதான்.

ஆவலால் ஏற்படும் அவதி! என்ற நமது இடுகை வெளியான அடுத்த நாள் நமக்கு மெயிலில் ஒரு கவிதை வந்திருந்தது. கவிஞர் கடிவேலுதான் அதை அனுப்பி இருந்தார். அதைப் படித்துப் பார்த்தவுடன் ஆனந்தமும் ஆச்சரியமும் ஒரே சமயத்தில் ஏற்பட்டது. மறுபடி அந்தக் கவிதையைப் படித்தேன்.

ஆவலால் வருவது

              அவதிதான் என்றாலும்

காவலாய் வருவது

             கந்தனின் வேலன்றோ?

சேவலைக் கொடியினில்

            செதுக்கியவன் அருளினால்

மாமலையும் கடுகாகும்

            மனக்கவலை பறந்தோடும்

இதுதான் அந்தக் கவிதை.

அந்தக் கவிதையிலிருந்து நமக்கு மூன்று விஷயங்கள் தெளிவானது. ஒன்று நமது இடுகையை எப்பவும் போல கவிஞர் வாசிக்கிறார். அதாவது அவர் நம்மை மறக்கவில்லை. இரண்டாவது அந்தக் கவிதையில் சொல்லி உள்ளது போல, நம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்ய அவர் தயாராக இருக்கிறார். மூன்றாவது அவருக்கு கடவுள் பக்தி அதிகமாகி இருக்கிறது.

அதாவது காவலாய் வருவது கந்தனின் வேலன்றோ? என்ற வரியில் கடிவேலுவான தன்னை, கந்தனின் வேல் என்று உவமைப் படுத்துகிறார். ஏற்கெனவே கடிவேலு என்பதற்கு அர்த்தம் என்ன? என்ற நமது இடுகையில், முருகப் பெருமானைக் குறிக்கும் இன்னொரு சொல் என்று சொன்னாரல்லவா? அந்த இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

சாதாரணமாகப் பார்த்தால் கந்தனை நம்பியவர்களுக்கு, சோதனையான காலங்களில் அவன் கைகொடுப்பான் காவலாக இருப்பான் என்றும், கவலைகளைத் தீர்ப்பான் என்ற பொருளில் அந்தக் கவிதை அமைந்திருந்தாலும், குறிப்பாக நமக்கு வேறு ஒரு அர்த்தமும் கிடைக்கிறது. அதாவது அவர் நம்முடைய சந்தேகத்தைத் தீர்க்க தயாராக இருக்கிறார் என்றும் சேவலைக் கொடியிலே தாங்கி, ‘சேவற்கொடியோன்’ என்று பெயர் பெற்ற முருகனின் அருள் இருந்தால் அது சீக்கிரமே நடக்கும் என்றும் புலப்படுத்துகிறார்.

நமது இடுகைகளை விடாமல் படிப்பதன் மூலம் அவர் நம்மைப் பின் தொடர்ந்து வந்து நமக்கு உதவிகரமாக இருக்கிறார் என்பதையும் உறுதிப் படுத்துகிறார். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நமது கேள்விக்கு அன்று ஒரு கவிதையை சொல்லி மழுப்பினாரல்லவா? அது இல்லாமல் அவர் ஜோதிடராக ஆனதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்றும் புரிகிறது.

கவிஞரின் கவிதை பாடும் திறமையை நினைத்தால் வியப்புதான் ஏற்படுகிறது. நான்கு வரிகளில் ரத்தினச் சுருக்கமாக ஒரு கருத்தைச் சொல்லி விடுகிறார்!

அந்தக் கவிதையை ரசித்த சந்தோஷத்தோடு அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

ஆவலால் ஏற்படும் அவதி!

11 நவ்

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவும், நடிகர் சிங்கமுத்துவும் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சி வரும். ‘அவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்’ என்று சொல்லி விட்டு, வடிவேலுவை அடிப்பார் சிங்கமுத்து. ‘எதுக்குடா நான் சரிப்பட்டு வர மாட்டேன். காரணத்தை சொல்லிட்டாவது அடிங்கடா’ என்று வடிவேலு புலம்புவார்.

அது என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலால், சிங்கமுத்து வீட்டுக்குப் போய் அவர் மனைவியிடம் வடிவேலு சொல்லுவார், ‘எதுக்கோ நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று என்னைப் போட்டு அடிச்சானுக, இப்போ நான் சென்னைக்குப் போறேன். போறதுக்கு முன்னாடி அது என்னன்னு தெரிஞ்சுக்கிட்டுப் போனா ஒரு ஆறுதலா இருக்கும். அதான் வந்தேன்’’ என்பார்.

அப்போது சிங்கமுத்துவும், வடிவேலுவின் அப்பாவாக நடித்த இயக்குனர் மனோபாலாவும் வந்து, ‘டேய், அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே’ என்று வடிவேலுவை விரட்டுவார்கள். நமக்கும் அதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும் கடைசி வரை அது என்ன விஷயம் என்று வடிவேலுவுக்குத் தெரியாது. அதைப் பார்க்கும் நமக்கும் புரியாது.

அது போல் ஆகிவிட்டது, நம் நிலைமையும். எப்படி கவிஞர் கடிவேலு ஜோதிடரானார் என்று தெரிந்து கொள்வதற்காக அவரிடம் பேசிய போது, அவர் ஏதோ கிரகங்களின் அமைப்பு அது இது என்று ஒரு கவிதையை வாசித்து மழுப்பி விட்டார். நாம் எதிர்பார்த்த விஷயத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும் கவிஞர் கடிவேலு ஜோதிடரான கதை!

இன்டர்நெட்டில் உலவுகிற குறும்பான கதை(!) என்று ஒன்றை நமது நண்பர் ஒருவர் பகிர்வு (Share என்பதற்கு சரியான தமிழ் வார்த்தைதானா?) செய்திருந்தார்.

வேலை விஷயமாக வெளியூருக்கு சென்று விட்டு, சாயங்கால வேளையில் தன்னுடைய வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தானாம் ஒருவன். வரும் வழியில் காட்டுக்குள் திடீரென்று டயர் பஞ்சராகி விட்டதாம். உதவிக்கு யாரையாவது கூப்பிடலாமா என்று பார்க்கும் போது, தூரத்தில் ஒரு மடம் இருந்ததைப் பார்த்திருக்கிறான். அங்கே போய்ப் பார்த்தால் அது ஒரு துறவியின் ஆசிரமம்.

தன்னுடைய வண்டி பஞ்சராகி விட்டது, ஏதாவது உதவி கிடைக்குமா என்று துறவியிடம் கேட்டிருக்கிறான். அவர், “சரி, அதை சரி பண்ணி விடலாம். ஆனால் இப்போது இருட்டி விட்டது, இனிமேல் நீ எப்படிப் போவாய். இங்கே தங்கி விட்டு காலையில் போகலாமே’ என்றாராம். சரி என்று அன்று இரவு அங்கேயே சாப்பிட்டு விட்டு, தங்கி விட்டானாம்.

நடுச்சாமத்தில் திடீரென்று அந்த மடத்தின் பின்பக்கத்திலிருந்து டமால் என்று ஒரு சத்தம் கேட்டதாம். ஆனால் ஆசிரமத்தில் இருந்தவர்கள் யாரும் அதைப் பெரிதாக எடுத்த்துக் கொள்ளவில்லையாம். அதைப் பார்த்த அவனுக்கு ஒரே ஆச்சரியம். சரி காலையில் விசாரித்துக் கொள்ளலாம் என்று தூங்கி விட்டானாம்.

அடுத்த நாள் காலையில் வண்டியைச் சரி பண்ணி விட்டு, விடை பெற்றுக் கிளம்பும் போது அந்த துறவியிடம் அந்த சத்தம் ஏன் வந்தது என்று கேட்டிருக்கிறான். ‘அதை உனக்குச் சொல்லக்கூடாது. நீ போய்ட்டு வா’ என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாரம் துறவி.

ஒரு ஆறேழு மாதங்கள் கழித்து, மறுபடி அதே போல் அதே இடத்தில் வண்டி பஞ்சராகி விட்டதாம். அதே ஆசிரமத்தில் இரவு தங்கியிருக்கிறான். அன்றும் நடு இரவில் அதே சத்தம் கேட்டிருக்கிறது. மறுநாள் கிளம்பும் போது அதைப் பற்றி துறவியிடம் கேட்டிருக்கிறான். அன்றும் ‘அதை உனக்குச் சொல்லக்கூடாது. நீ போய்ட்டு வா’ என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாரம் துறவி.

அடுத்து இன்னும் கொஞ்ச நாள் கழித்து அதே போல் ஒரு அனுபவம் அந்த ஆசிரமத்தில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதும் அது என்னவென்று சொல்ல துறவி மறுத்து விட்டாராம். அவனுக்கு கோபம் வந்து, “அப்படி என்னதான் விஷயம் அது. என் கிட்ட ஏன் சொல்ல மாட்டீங்கறீங்க’ன்னு கேட்டிருக்கிறான். ‘நீயும் என்னைப் போல் ஒரு துறவியானால்தான் உன்னால் அதைத் தெரிந்து கொள்ள முடியும்’ என்று சொல்லி விட்டாராம் அவர்.

இவனும் ஆவலை அடக்க முடியாமல், வீட்டுக்குப் போய் எல்லோரிடமும் சொல்லி விட்டு துறவியாக அந்த ஆசிரமத்தில் சேர்ந்திருக்கிறான். அவனுக்கு மந்திர உபதேசம் செய்து தவம் செய்யச் சொல்லியிருக்கிறார் துறவி. அவனும் ஆறு மாதம் கடுமையாகத் தவம் செய்திருக்கிறான். அதன் பிறகு அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டபொது, அவனிடம் ஒரு சாவியைக் கொடுத்து, “அதோ அந்தக் கதவைத் திறந்து பார். உன்னுடைய கேள்விக்கு விடை அங்கேதான் இருக்கிறது” என்றாராம் துறவி.

அவனும் ஆவலோடு அதைத் திறந்து பார்த்தானாம். அந்த அறைக்குள் ஒரு கதவு தவிர வேறு எதுவுமில்லை. அந்தக் கதவின் அருகே ஒரு சீட்டு. அதில் ஒரு கேள்வி இருந்ததாம். துறவியிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டதற்கு, அந்தக் கேள்விக்கு விடை கண்டு பிடித்தால், அந்த கதவுக்குரிய சாவியைத் தருகிறேன்’ என்றாராம்.

மூளையைக் கசக்கி அதற்கு விடையையும் கண்டு பிடித்து சொன்ன பிறகு சாவியைக் கொடுத்தாராம் துறவி. அந்தக் கதவைத் திறந்து பார்த்தால், அங்கும் ஒரு கதவு, அதன் அருகிலும் ஒரு சீட்டு.. அதற்கும் விடையைக் கண்டு பிடிச்சானாம். இன்னுமொரு சாவியைக் கொடுத்து போய் பார்க்கச் சொல்லி இருக்கிறார் துறவி. போய்ப் பார்த்தால் அங்கே இன்னொரு கதவு, இன்னொரு சீட்டு.

“ஐயா, என்னால் ஆவலை அடக்க முடியவில்லை. இன்னும் எத்தனை கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும்” என்று கேட்டானாம். இதுதான் கடைசி இந்தக் கதவைத் திறந்தால் அந்த சத்தத்துக்குரிய காரணம் உனக்குத் தெரியும்’ என்றாராம். அதன் பிறகுதான் அவனுக்கு அந்தக் காரணம் புரிந்ததாம்.

என்னது, அந்தக் காரணம் என்னவென்றா கேட்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் ஒரு துறவியாக வேண்டுமாம். இது தான் நண்பர் பகிர்வு செய்த கதை. குறும்புக்காக யாரோ எழுதி இருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு எப்படி கடுப்பாக இருக்கிறதோ, அப்படித்தான் இந்தக் கதையைப் படித்த போது எனக்கும் இருந்தது. ஆவலை ஏற்படுத்தி அதன் காரணம் தெரியாமல் அவதிப் பட வைப்பதே, சிலருக்குப் பொழுது போக்காக இருக்கிறது.

அது போலத்தான் இந்த கவிஞர் கடிவேலுவைப் பற்றிய விஷயமும். எப்படி ஜோதிடர் ஆனார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதே ஒழிய அதற்குரிய சரியான காரணம் இன்னும் புரியவில்லை.

கவிஞர் கடிவேலு ஜோதிடரான கதை!

5 நவ்

ரொம்ப நாள் கழித்து கவிஞர் கடிவேலுவை ஒரு ஜவுளிக் கடையில் பார்த்தபோது அவர் ஜோதிட மாமணி கடிவேலு என்று எழுதப்பட்ட ஒரு விசிட்டிங் கார்டை நம்மிடம் கொடுத்தார் என்று சென்ற இடுகையில் சொல்லி இருந்தோமல்லவா? அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

அன்று அந்த ஜவுளிக் கடையில் கவிஞர் கடிவேலுவைப் பார்த்தது முதல் மனம் வேறு எந்த வேலையிலும் ஒட்டவில்லை. மனிதர் திடீரென்று ஏன் இப்படி ஆகி விட்டார்? ஜோதிட மாமணியாமே! யார் கொடுத்தது அந்தப் பட்டம்? நினைக்க நினைக்க ஆச்சரியமாகவும், ஒரு வகையில் அதிசயமாகவும் இருந்தது.

இவ்வளவெல்லாம் நடந்திருக்கிறது. நமக்கு எதுவுமே தெரியாமல் போய்விட்டதே!. இந்த கடிவேலுகூட நம்மிடம் இதைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விட்டாரே. அன்றைக்கு பார்த்தபோது கொஞ்ச நேரம் நின்றுகூட பேசவில்லை. அவர் ரொம்பவும் பிகு பண்ணிக் கொண்டது போல்தான் தெரிந்தது. சரி! எங்கே போகப் போகிறார்; பார்த்துக் கொள்ளலாம். மறுபடி நம் கண்ணில் படாமலா போய் விடுவார்.

மேலும் மேலும் அதைப் பற்றிய நினைவுகளே சுற்றிச் சுற்றி வந்தது. நினைக்க நினைக்க அந்த விஷயத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது. என்ன செய்யலாம்? என்று யோசித்தேன். போன் பண்ணிப் பார்க்கலாமா? மறுபடி பிகு பண்ணிக் கொள்வாரோ?

என்ன ஆனாலும் ஆகட்டும், போன் செய்து பார்த்து விடுவது என்று முடிவு செய்து, அவருடைய நம்பருக்கு போன் செய்தேன். இரண்டு மூன்று முறை மணி அடித்த பிறகு, “ஹலோ, யார் பேசறது?” என்று ஒரு குரல் கேட்டது. என்ன இது கவிஞர் குரல் போல் தெரியவில்லையே. ஆள்தான் மாறி விட்டார் என்றால், குரலையுமா மாற்றிக் கொள்வார்?

“ஹலோ, கவிஞரே, நான்தான் பேசுகிறேன். என்ன கவிஞரே, குரலே மாறிப் போய் விட்டது?”

“கவிஞரா? அப்படி யாரும் இங்கே இல்லீங்க. இது ஜோதிட மாமணி கடிவேலுவோட ஆபீஸ்” என்றான் மறுமுனையில் பேசியவன்.

“ஆமாம், கடிவேலுதான். அவர்கூடத்தான் பேசணும்”

“ஹலோ, நீங்க யாரு?” மறுபடி கேட்டது அந்தக் குரல்.

“நான் அவரோட ஃபிரண்ட். ரசிப்புன்னு சொல்லுங்க, அவருக்குத் தெரியும்”

“ரசிப்பா? அப்படி ஒரு பேரா? புதுசா இருக்கே”

“இல்லீங்க, என் பெயர் பழனிச்சாமி. ரசிப்புன்னு ஒரு பிளாக் இருக்கு அதுல எழுதுறேன். அதில் அவரோட கவிதையெல்லாம்கூட வந்திருக்கிறது”

“அப்படியா, கொஞ்சம் இருங்க” கொஞ்ச நேரம் அமைதி.

கவிஞர் ரொம்பவும் பிசியான ஆளாகி விட்டது போல் தோன்றுகிறது. நம்மை ஞாபகம் இருக்குமா, இல்லை ஒருவேளை மறந்திருப்பாரோ? பேசாமல் போனை வைத்து விடலாமா? இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தபோது, “ஹலோ” என்று ஒரு குரல் குறுக்கிட்டது. அது கவிஞரின் குரல்தான்.

“கவிஞரே, எப்படி இருக்கிறீர்?” என்றோம் உற்சாகமாக.

“நான் நல்லா இருக்கேன். நீர் எப்படி இருக்கிறீர்?” என்றார் பதிலுக்கு.

“நான் நலமாகத்தான் இருக்கிறேன். கவிஞரே, உம்மிடம் கொஞ்சம் பேச வேண்டுமே”

“என்ன விஷயம்? சொல்லும்” அவர் சொன்ன பதிலில் இருந்து எந்தவிதமான உணர்ச்சியையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

“திடீரென்று ஜோதிடராகி விட்டீரே, எப்படி?” என்றேன் ஆவலை அடக்க முடியாமல்.

அதற்கு பதிலாக ஒரு கவிதையை சொல்ல ஆரம்பித்தார்.

பொங்கிய பாக்கியத்தில்
       பொன்னவனும் சிரசினில்
தங்கிய குஜனுமிக்க 
       சுகத்திலுச்ச மாய்புதனும்
சுங்கனொடு புண்ணியத்தில்
       இந்துவும்கூட ஆட்சியில்
மந்தனும் ரவியுமானால்
       அவனும்புகழ் ஜோதிடனே

நாம் இடையில் குறுக்கிட்டு “கவிஞரே? எப்படி ஜோதிடராக ஆனீர் என்று கேட்டால், ஏதோ கவிதையை வாசிக்கிறீரே?” என்றோம்.

“இந்தக் கவிதையில் சொல்லியுள்ளபடி ஒருவனுடைய பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் அவன் புகழ் பெற்ற ஜோதிடனாவான். அதைத்தான் சொன்னேன்” என்றார் கவிஞர்.

“அதிருக்கட்டும். நான் அதைக் கேட்கவில்லை, நீர் எப்போது ஜோதிடம் கற்றுக் கொண்டீர். எதனால் திடீரென்று ஜோதிடர் ஆகிவிட்டீர் என்றுதான் கேட்டேன்”

“கிரக நிலைகளில் அவ்வாறு இருக்கும்போது, நான் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும். எப்படியும் அதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டு விடாதா? அப்படித்தான், நான் வேறு ஏதோ தொழில் பண்ணிக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட தசாபுக்தி வரும் போது நான் ஜோதிடனாவது தவிர்க்க முடியாமல் போய்விட்டது” என்றார் கவிஞர்.

“சரிதான், ஜோதிடத்தை யாரிடம் கற்றுக் கொண்டீர்?” என்றோம்.

“புகழ் பெற்ற ஜோதிடர் திரு. சேகர் அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீரா? அவருடைய மாணவர் திரு. ராமச்சந்திரன் அவர்கள்தான் என்னுடைய குரு மற்றும் வழிகாட்டி” என்றார்.

“ரொம்ப சந்தோஷம். நீர் இதிலும் புகழோடு பிசியாக இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல வருமானமா?” என்று ஒரு கேள்வியை வீசினோம்.

“ஒரு விஷயம். வருமானத்திற்காக நான் ஜோதிடராக ஆகவில்லை. எனக்கு ஏற்கெனவே வேறு பிசினஸ் இருக்கிறதல்லவா. அதற்காக இலவசமாகவும் இதைச் செய்யவில்லை. ஆனால் இதில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவழிக்கிறேன்” என்றார்.

கவிஞருடைய வளர்ச்சியை நினைத்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. ஒருமுறை நேரில் பார்க்கலாம் என்று தோன்றியது. அவரிடம் அதைச் சொன்ன போது, “போன் செய்து விட்டு வாரும். உமக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க மாட்டேனா?” என்றார்.

அடுத்து எப்போது கவிஞர் (ஜோதிட மாமணீ) கடிவேலுவைப் பார்ப்போம் என்று ஆவலாக இருந்தது.

உடல் இளைக்க கவிஞர் தரும் டிப்ஸ்!

28 பிப்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று கவிஞர் கடிவேலு முந்தைய இடுகைகளில்  சொல்லி வந்தாரல்லவா? பிறகு இன்னொரு நாள் வருகிறேன் என்று புறப்பட்டுப் போய் விட்டார். அதன் பிறகுதான் கவிஞரிடம் நாம் கேட்க நினைத்த சில கேள்விகளை கேட்காமல் விட்டு விட்டது ஞாபகம் வந்தது. அடுத்த முறை கட்டாயம் அவற்றைக் கேட்டுவிட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.

நமது முந்தைய இடுகையான ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்? – பகுதி 2’ வெளியானதும் அதைப் படித்து விட்டு உடனே நமக்குப் போன் பண்ணினார் கவிஞர். நமக்கு ஈமெயிலில் கவிதை ஒன்று அனுப்பி இருப்பதாகவும் சொன்னார். உடனே மெயிலைத் திறந்து அந்தக் கவிதையை வாசித்தோம். இதோ அந்தக் கவிதை!

ஆரோக்கியத்தில் கவனம் வைப்போம்

ஓரறிவுள்ள உயிரினம் முதல் – ஆறில்
ஓரறிவு குறைந்த விலங்கினம் வரை
ஓராயிரம் வகையான உணவுகளை
ஒருபோதும் புசிப்பதில்லை – உடலளவும்
ஒன்றுபோலே இன்னொன்று; மாற்றமில்லை
ஆறறிவுள்ள நாம்மட்டும் ஆயிரத்தெட்டு
கூறுகளென உணவுகளை வகைசெய்து – அதில்
யார்வருவார் சமையலறைத் தாரகையென
பார்புகழ பலவகை போட்டிகள் நடத்தி
பார்ப்பவர் மனத்தில் ஆசையைப் புகுத்தி
புதுப்புது உணவுகளை ருசிபார்த்து – அதனால்
ஒருவரை யொருவர் மிஞ்சவே உடல்பெருத்து
பலவகை நோய்களை வரவழைத்து நாம்பெற்ற
அழகான உருவத்தை அவலட்சணமாகவே
ஆக்கிடவோ ஆற்றல்மிக்க ஆறறிவை நாம்பெற்றோம்
ஆக்கபூர்வ நிகழ்ச்சிகளை நாம்ரசிப்போம் – அத்துடன்
ஆரோக்கியத்தில் மிக்கவே கவனம் வைப்போம்

படித்து முடித்ததும் கவிஞரை போனில் அழைத்து கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினோம். அதற்கு அடுத்து நம்மிடம் ஒரு கேள்வி கேட்டார் கவிஞர்.

“தகுதியுள்ள ஒரு போட்டியாளர் திடீரென போட்டியிலிருந்து விலக நேர்ந்தது தானே உம்மை ‘யார் கிச்சன் சூப்பர் ஸ்டார்’ என்ற முதல் இடுகையை எழுதத் தூண்டியது?”

“ஆமாம்! உண்மைதான். அப்படியானால் நீர் நமது முந்தைய இடுகையை வாசித்தீரா? ஆனால் அதைப்பற்றி கருத்து எதுவும் நீர் ஏன் சொல்லவில்லை? நாம் அதை ரொம்பவும் எதிர்பார்த்தோம்”

“அந்த இடுகை வந்த உடனே நான் அதைப் படித்து விட்டேன். ஆனால் உடல் இளைக்கும் முயற்சியில் இருந்த எனக்கு, அந்த நிகழ்ச்சியைப் பற்றியோ, உமது இடுகையைப் பற்றியோ எதுவும் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது” என்றார்.

“அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றோம் புரியாமல்.

“நீர் ஒன்று கவனித்தீரா? அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம், ஏன் நடுவர்கள் உட்பட கொஞ்சம் ஓவர் வெயிட் உள்ளவர்களாகவே இருந்தார்கள்”

“ஆமாம், அதனால் என்ன?”

“உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களையே அடிக்கடி பார்க்க வேண்டும். அவர்களைப் பற்றியே நினைக்க வேண்டும். அவர்களைப் பற்றியே பேச வேண்டும். இது ஒரு வகையில் அவர்ளுடைய முயற்சிக்கு உதவும். அதாவது எடை குறைந்த பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று மனக்காட்சியில் காண அது உதவும். அதாவது உடல் எடை குறைப்பில் உங்கள் எண்ண ஒருங்கிணைப்பிற்கு உதவியாக இருக்கும்”

“நீர் சொல்வது சரியாகவே இருந்தாலும், நமது தினசரி வாழ்க்கையில் அதிக எடை உள்ளவர்களைப் பார்க்காமலே இருக்க முடியுமா? அது சாத்தியமான காரியமில்லையே!”

“உண்மைதான். நாம் ஏற்கெனவே அறிந்தவர்களை, நம்முடனே இருப்பவர்களை நாம் பார்க்கும்போது அவர்களுடைய உடல் எடை நம்முடைய கவனத்தைக் கவராது. அவர்களுடைய குணாதிசயம்தான் நம்முடைய கவனத்தில் இருக்கும். அதை வைத்துத்தான் அவர்களுடன் பழகுவோம். ஆனால் புதிய மனிதர்களின் விஷயத்தில் அப்படியல்ல. முதலில் அவர்களுடைய உருவமும், எடையும்தான் நமது கவனத்தில் பதியும்”

“ஓஹோ! இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?”

“அதனால்தான் அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அப்படி சொல்ல வேண்டுமென்றால் அந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதில் பங்கேற்பவர்களை உன்னிப்பாக கவனித்து ரசிக்க வேண்டும்”

“அப்படியென்றால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறீரா?”

“நான் அப்படிச் சொல்லவில்லை. நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஆனால் நம்முடைய ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதைத்தான் அந்தக் கவிதையில் சொல்லியிருக்கிறேன்” என்றார் கவிஞர்.

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்? – பகுதி 2

8 பிப்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை ஏற்படுத்திக் கொண்டு உணவில் கவனம் செலுத்தி, நேர்மறை மனோபாவத்தோடு, எளிதான உடற்பயிற்சியையும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறையும் என்றும் அதுதான் ஆரோக்கியமான முயற்சி என்றும் சொன்னார். அதை இடுகையை மறுபடியும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தொடர்ந்து கவிஞரிடம் நம்முடைய கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.

“கவிஞரே, ஒரு குறிப்பிட்ட கால அளவை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னீர். அந்த கால அளவு எவ்வளவு?”

“நாம் ஏற்கெனவே சொன்னபடி நம்முடைய BMI யைத் தெரிந்து கொண்டபிறகு, எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்று நமக்குத் தெரிந்து விடும். ஆனால் அந்த எடையை ஒரேயடியாக குறைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கக் கூடாது”

“நீர் சொல்வது புரியவில்லையே!”

“அதாவது உமது இப்போதைய எடையிலிருந்து முப்பது கிலோ குறைக்க வேண்டும் என்றால், அந்த முப்பது கிலோவையும் ஒரே மூச்சில் குறைத்து விடலாம் என்று நினைத்து முயற்சிக்கக்கூடாது”

“அதாவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டுமாக்கும்”

“ஆமாம், முதலில் ஐந்திலிருந்து எட்டு அல்லது பத்து கிலோ வரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கே மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு சுமார் ஒரு மாதம் இடைவெளி விட வேண்டும்”

“என்ன, ஒரு மாதம் இடைவெளி விட வேண்டுமா? சரிவிகித உணவு முறையைப் பின்பற்றவோ, உடற்பயிற்சி செய்யவோ தேவையில்லையா?”

“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. உடற்பயிற்சியை கண்டிப்பாகத் தொடர வேண்டும். ஆனால் உணவு வகைகளில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை சிறிது கவனத்துடன் அளவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் கலோரி பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும்”

“அப்படியானால் அந்த மூன்று மாதத்தில் வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாதா? வேறு எவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர் சொல்வதைப் பார்த்தால் பத்தியம் இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே?”

“இல்லை, பத்தியமெல்லாம் தேவை இல்லை. கலோரி குறைந்த சரிவிகித உணவு பாக்கெட்டில் விலைக்கு கிடைக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது நான் சொல்ல வருவது குறிப்பிட்ட அந்த மூன்று மாத காலத்தில் கலோரி குறைந்த சரிவிகித உணவை ஒரு வேளையும் மீதி இரண்டு வேளை வழக்கமான உணவையும் எடுத்துக் கொள்ளலாம்”

“அதற்குப் பிறகு ஒரு மாத காலம் இடைவெளி விட வேண்டுமாக்கும்”

“ஆமாம், இந்த ஒரு மாத கால இடைவெளியில் நமது எடையில் கவனம் வைப்பது அவசியம். அனேகமாக எடை கூடாது. ஆனாலும் ஒரு கிலோ அல்லது ஒண்ணரை கிலோ கூடியிருப்பதாகத் தோன்றினாலும் கவலைப் பட வேண்டியதில்லை”

“இப்போது புரிகிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு கலோரி என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்கிறீர், இல்லையா?”

“ஆமாம், ஆனால் ஒரு சில நாட்கள் கவனித்தாலே, பிறகு அது நமக்கு மனப்பாடமாகி விடும்”

“சரி, எளிதான உடற்பயிற்சி என்று சொன்னீரே, என்ன மாதிரியான உடற்பயிற்சி? அதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?”

ஒன்பது அல்லது பத்து வகை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் இரண்டு நிமிடங்கள் செய்தால் போதும். அதாவது, கழுத்துக்கு, தோள்களுக்கு, மார்புக்கு, வயிற்றுக்கு, இடுப்புக்கு, கைகளுக்கு, கால்களுக்கு என்று அதில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கிடைப்பது போல் இருத்தல் வேண்டும். இதயம் நன்றாக துடித்து சீரான வேகத்தில் இரத்தத்தை உடல் முழுக்க பம்ப் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும். வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது மூச்சைக் கவனிப்பதும் அவசியம்”

“மூச்சைக் கவனிப்பதா? யோகப்பயிற்சியின் போதுதானே மூச்சைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வார்கள்?”

“மிகச் சரியாகச் சொன்னீர். ஆனால் யோகாவில் செய்வது போன்று அல்லாமல் எப்போது மூச்சு வெளியேறுகிறது, எப்போது உள்ளே இழுக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். மூச்சைக் கவனிக்கும் போது மனம் நம் கட்டுப் பாட்டுக்குள் வரும். அது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். உமக்கு இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டார் கவிஞர்.

“ரகசியமா? சொல்லும், சொல்லும்! கேட்பதற்கு ஆவலாக இருக்கிறோம்”

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் கவனித்து, மெதுவாக, மிகவும் ரசித்து சாப்பிட்டோம் என்றால் நாம் அதிகமான அளவு உண்ணமாட்டோம்

“அது எப்படி? சுவையான உணவு என்றால் அதிகமாகத்தானே சாப்பிடுவோம். அதுதானே இயற்கை”

தவறு, எந்த ஒரு செயலையும் மிகவும் ரசித்து, உணர்ந்து செய்யும் போது நமக்கு மனதில் திருப்தி ஏற்படுவது இயற்கை. அது சாப்பிடுவதற்கும் பொருந்தும். அப்படி திருப்தி ஏற்பட்டு விட்டால் நாம் அதிகமாக உண்ண மாட்டோம். அப்படியில்லாமல் டிவி பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ அல்லது கவனமில்லாமலோ சாப்பிடும்போது நம்மை அறியாமலே அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது

“மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது! ஆனால் நீர் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இனிமேல் நானும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவது என்று முடிவெடுத்து விட்டேன்”

இதுபற்றி மேலும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்?

5 பிப்

உடல் இளைத்து சின்னப் பையன் போல் வந்த கவிஞர் கடிவேலுவைப் பார்த்து நாம் பிரமித்து நின்றோம் அல்லவா? காரணம் கேட்டதற்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டி உடல் எடையைக் குறைத்ததாகச் சொன்னார். சரியான உடல் எடையைக் கணிப்பதற்கு ஒரு ஃபார்முலாவையும் சொன்னார். எப்படி அவருடைய உடல் எடையைக் குறைத்தார்? என்று ஆவலோடு கேட்டோம். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

“உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நீர் முடிவெடுத்து விட்டால், அதன் பிறகு நீர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சில இருக்கிறன. அவற்றைத் தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும்” என்றார்.

“என்னென்ன நடைமுறைகள்?”

“சரிவிகித உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நேர்மறை மனோபாவம், சரியான தூக்கம் ஆகியவை. சீரான ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இவைதான் தேவை”

“சரிவிகித உணவுப் பழக்கம் என்றால் என்ன?”

“நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்துக்களும், புரதச்சத்துக்களும், விட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களும், மற்றும் நார்ச்சத்தும், கொழுப்புச் சத்தும் தேவையான விகித்த்தில் இருக்க வேண்டும். உடல் இளைக்க முயற்சி மேற்கொள்ளும் சமயங்களில் இந்த விகிதத்தோடு நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

“கலோரிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதென்றால் எப்படி?”

“அதாவது ஒருநாளைக்கு நாம் உண்ணும் உணவில் சராசரியாக 2500 இலிருந்து 3000 கலோரி வரை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் 2000 இலிருந்து 2500 கலோரி அளவே நமது தினசரி செயல்பாட்டுக்குப் போதுமானது. சிலருக்கு 1800 கலோரி அளவே போதுமானது. அந்த அளவு மட்டும் எடுத்து கொள்ளும் போது நமது எடை கூடவோ, குறையவோ செய்யாது அப்படியே இருக்கும்”

“அப்படியானால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 2000 கலோரியை விடவும் மிகக்குறைவாக உள்ள உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். சரிதானே?”

“மிகவும் சரி. அப்படி குறைவான கலோரிகள் உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, தினசரி செயல்பாட்டுக்குத் தேவையான கலோரிகளை, நமது உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப் பட்டுள்ள கொழுப்பிலிருந்து உடல் எடுத்துக் கொள்ளும்”

“அப்படி எடுத்துக் கொள்வதால் உடலில் பாதிப்பு ஏற்படாதா?”

“சரிவிகித உணவு முறையைப் பின்பற்றும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு கரைக்கப் படுமே ஒழிய பாதிப்பு எதுவும் ஏற்படாது”

“சரி, நீர் சொல்வது போல கலோரி குறைவான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் போதுமா? வேறு எதுவும் செய்ய வேண்டாமா?”

“அப்படியில்லை. தவறாமல் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்”

“அப்படி உடற்பயிற்சியும் வேண்டும் என்றால், அதை அதிக நேரம் செய்யும் போது இன்னும் அதிக கலோரிகள் செலவாகி உடல் எடை அதிகம் குறையும் அல்லவா?”

“நீர் நினைப்பது போல்தான் நிறையப் பேர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து குறைய வேண்டுமானால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் எடையைக் குறைக்கிறேன் என்று தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எடை குறையாது”

“தீவிர உடற்பயிற்சி செய்யும் போது அதிக கலோரி செலவாகும் அல்லவா? அப்படி அதிக கலோரி செலவானால் எடை குறையாதா?”

தீவிர உடற்பயிற்சியின் போது அதிக கலோரி செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் அதிகப்படியான மாவுச்சத்துதானே கொழுப்பாக நம் உடலில் சேர்த்து வைக்கப் படுகிறது. அப்படி ஏற்கெனவே சேமிக்கப்பட்ட கொழுப்பிலிருந்துதான் தீவிர உடற்பயிற்சியின் போது தேவைப்படும் கலோரியை உடல் எடுத்துக் கொள்கிறது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்காக நாம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். நாம்தான் உடற்பயிற்சி செய்கிறோமே அதனால் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையில் சாப்பிடுவோம். அப்போது உடற்பயிற்சியினால் செலவான கலோரி மறுபடி உடலில் சேர்ந்து விடும். இப்போது அது ஈடுகட்டப்பட்டு விடுவதால் எடை குறையும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால் தீவிர உடற்பயிற்சியை விட எளிமையான உடற்பயிற்சியே சிறந்தது. ஆனால் அதை தவறாமல் செய்ய வேண்டும்

“இது மிகவும் உபயோகமான தகவல்தான்” என்றோம்.

“அதுமட்டுமல்ல. நேர்மறை மனோபாவமும் அவசியம். அதாவது நம்மால் எடை குறைக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை வேண்டும்”

“நம்பிக்கை இல்லாமலா, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள்?”

“நம்பிக்கையுடன்தான் ஆரம்பிக்கிறார்கள். சிறிது காலம் முயற்சிப்பார்கள். ஆவலோடு, எடை குறைகிறதா என்று எடை மெஷினில் ஏறிப் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் நினைத்தது போல் எடையில் வித்தியாசம் இல்லையென்றால் நம்பிக்கை குறைந்து விடும். உடனே வேறு வழியில் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்”

“அவர்களுடைய எதிர்பார்ப்பு பொய்க்கும்போது வேறு என்ன செய்ய முடியும்?”

“அதற்குத்தான் நேர்மறை மனோபாவம் அவசியம். எடை குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என்பதைப் புரிந்து கொண்டு அது வரை பொறுத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது”

“சரிதான்! ‘நானும் எவ்வளவோ முறைகளை முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆனால் உடல் எடை குறையவில்லை’ என்று சொல்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்”

ஆமாம், உடல் எடையைக் குறைக்க ஒரு குறிப்பிட்ட கால அளவு கெடுவை குறிக்கோளாக வைத்துக் கொண்டு, அதற்காக முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், குறைவான கலோரி உள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு, தவறாமல் உடற்பயிற்சியும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்

உடல் எடையைக் குறைக்கும் முறைகளைப் பற்றியும், சரி விகித உணவைப் பற்றியும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்.

கவிஞர் கடிவேலுவின் புதிய தோற்றம்!

2 பிப்

இன்று காலையில் கண்விழித்தவுடன் நமக்கு ஒரு இன்ப அதிச்சி காத்திருந்தது. கவிஞர் கடிவேலுவிடமிருந்து ஒரு SMS வந்திருந்தது. அதில் அவர், நம்மை ஆபீஸில் வந்து சந்திக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் சீக்கிரமே ரெடியாகி ஆபீசுக்குக் கிளம்பினோம். நாம் ஆபீசுக்கு சென்று அமர்ந்த பத்தாவது நிமிடத்தில் கவிஞர் அங்கே ஆஜரானார்.

கவிஞரை நேரில் பார்த்தவுடன் நாம் கொஞ்ச நேரம் அசைவற்று அப்படியே பிரமை பிடித்தாற்போல் நின்றுவிட்டோம். காரணம் கவிஞரின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம்தான். கவியரசு கண்ணதாசன் போல் இரட்டை நாடி சரீரத்துடன் கம்பீரமாக இருந்த நம் கவிஞர் கடிவேலு இப்போது மிகவும் உடல் இளைத்து முகமெல்லாம் சப்பையாகி ஒரு சின்னப் பையனைப் போல் காணப்பட்டார். நம்முடைய திகைப்பைக் கண்டு கவிஞர் புன்முறுவல் செய்தார்..

என்ன கவிஞரே, என்ன இது கோலம்? உமது உடம்புக்கு என்ன ஆயிற்று?” என்றோம் பதட்டமாக. அதைக் கேட்டு கவிஞர் சிரித்தார்.

என் உடம்புக்கு ஒன்றுமில்லை. நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்றார்.

பிறகு உமது உருவத்தில் ஏன் இத்தகைய மாற்றம்? மிகவும் இளைத்து விட்டீரே!” என்றோம் ஆச்சரியமாக.

ஆமாம். என்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் உடல் எடையைக் குறைத்திருக்கிறேன்” என்றார் கவிஞர்.

“உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உடல் எடையைக் குறைத்தீரா? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்” என்றோம் ஆவலாக.

எந்த ஒரு மனிதனுக்கும் அவனுடைய ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கும், அதனால் நோய்கள் உருவாவதற்கும் அவனுடைய உடலின் அதிக எடை முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது ஒருநாளைக்கு அவனுக்கு எவ்வளவு கலோரி தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் நாம் ருசிக்காகவோ, விழிப்புணர்வு இல்லாமலோ அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும்போது, அந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து விடுகிறது. அதனால் உடல் எடை அதிகமாகிறது” என்றார்.

நம்முடைய உடல் எடை சரியான் அளவில் இருக்கிறதா அல்லது அதிகப்படியாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டோம்.

அதற்கு ஒரு கணக்கியல் அளவீடு முறை இருக்கிறது. அதை BMI என்றூ சொல்வார்கள். அதாவது உங்கள் எடையை உங்கள் உயரத்தால் வகுக்கும் முறை” என்றார்.

அதை எப்படி கணக்கிடுவது? ஒரு உதாரணத்துடன் விளக்கவும்” என்றோம்.

உமது எடை எவ்வளவு?

85 கிலோ

“உமது உயரம் எவ்வளவு?”

ஐந்தடி ஐந்தங்குலம்

ஐந்தடி ஐந்தங்குலம் என்பது மீட்டரில் கணக்கிட்டால் 1.65 ஆகும்.

இதோ அந்த ஃபார்முலா

 BMI = உங்கள் எடை (கிலோ) / உங்கள் உயரம் x உயரம் (மீட்டர்)

இந்த ஃபார்முலாவின்படி

உம்முடைய BMI    =   8 5 / (1.65*1.65)    =        31.22

அதாவது நீர் மிக அதிகமான உடல் எடையுடன் இருக்கிறீர்” என்றார்.

நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. “எப்படி சொல்கிறீர்?” என்றோம்.

BMI என்பது 20 க்கு கீழே இருந்தால் உடல் எடை மிகவும் குறைவு

       20 இலிருந்து 25 வரை இருந்தால் சரியான அளவு

       25 இலிருந்து 30 வரை இருந்தால் அதிக எடை

       30 க்கு மேலிருந்தால் மிக அதிக எடை என்று சொல்லலாம்” என்றார்.

அப்படியானால் நான் எவ்வளவு எடை குறைக்க வேண்டும்?

குறைந்தபட்சம் உமது BMI எண் 25 ஆக இருக்க வேண்டும் என்றால் உமது எடை 68 கிலோவாக இருக்க வேண்டும். அதாவது இன்னும் 17 கிலோ நீர் எடை குறைய வேண்டும்” என்றார் கவிஞர்.

பதினேழு கிலோ குறைக்க வேண்டுமா? ஒரு வேளை சாப்பாட்டைக் குறைத்தால் அந்த எடை குறைந்து விடுமா?” என்று கேட்டோம்.

நீர் ஒரு வேளை சாப்பாட்டைக் குறைத்தால் அது உமது ஆரோக்கியத்துக்கே கேடாக முடியும். சாப்பாட்டைக் குறைத்தால் உமக்கு நிறையப் பிரச்சினைகள்தான் ஏற்படும்” என்றார்.

பிறகு எப்படித்தான் எடையைக் குறைப்பது? நீர் எப்படி உமது எடையைக் குறைத்தீர்?” என்றோம் ஆவலாக.

கவிஞர் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தாலும், மிகவும் நீளமாக இருப்பதால் அதனை அடுத்த இடுகையில் தொடர்கிறோம்.