Tag Archives: கடிதம்

வல்லமையில் கடித இலக்கியப் போட்டி!

13 மார்ச்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த இடுகை வெளிவருகிறது. தினசரி வாழ்க்கையின் வேலைப்பளு கூடும்போது எழுதுவதற்கு உரிய நேரம் குறுகி விடுகிறது. இடையில் மறுவாசிப்பில் கல்கி என்றும் மறுவாசிப்பில் ஆர். சூடாமணி என்றும் இரண்டு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவத்தை எழுதவும் முடியாமல் போய் விட்டது.

சென்ற வாரத்தில் நமது நண்பர் எழுத்தாளர் பாண்டியன்ஜி அவர்கள், வல்லமை மின் இதழில் கடித இலக்கிய கட்டுரைப் போட்டி ஒன்று அறிவித்திருக்கிறார்கள் என்றும் அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒரு தந்தை மகளுக்கு எழுதுவது போல் ஒரு கடிதத்தை எழுதி அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வார வல்லமை இதழில் அது வெளியாகி இருக்கிறது.

வல்லமைக்கு நமது நன்றி!

அந்தக் கடிதத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும் அன்புள்ள மணிமொழிக்கு.

அந்தக் கடிதம் பிரசுரமான பிறகு,  ஹாங்காங் தொலைக்காட்சித் தொடர் ஒலிபரப்பாளர் மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஒருவர் தன் மகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றை, ஒரு வலைத்தளத்தில் படிக்க நேர்ந்தது. அதைப் படித்தபோது நமக்கு ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது. அதில் அவர் தன் மகனுக்குச் சொன்ன அறிவுரைகளுக்கும், நம்முடைய கடிதத்திற்கும் கருத்தளவில் நிறைய ஒற்றுமைகள் இருந்தது புலப்பட்டது.

உதாரணமாக

இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ / ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தைப் பொருத்தும் ஒருவரின் மனநிலையைப் பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாக / பொக்கிஷமாக கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.

போன்ற கருத்துக்களில் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வியப்பாக இருந்தது.

அந்த முழுக்கடிதத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஏதேனும் ஒரு தகவலையோ அல்லது தன்னுடைய அன்பையோ வெளிப்படுத்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒருவரால் எழுதி அனுப்பப் படுவதே கடித்த்தின் இயல்பு. அது கற்பனை நயத்துடனும், பொருட் செறிவுடனும் எழுதப்படும்போது அதுவே கடித இலக்கியமாக வடிவம் பெறுகிறது.

இந்தக் கடித இலக்கிய வடிவம் காலங்காலமாக பலராலும் எழுதப் பட்டு வருகிறது. அதில் தன் மகனுடைய ஆசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய கடிதம், மகாத்மா காந்தியின் கடிதங்கள், டாக்டர் மு. வரதராசனார், அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு மற்றும் நண்பர்க்கு எழுதிய கடிதங்கள், அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் போன்றவை புகழ் பெற்றவை.

அந்தக் கடித இலக்கியத்துக்குப் புத்துணர்வு கொடுக்கும் முயற்சியாக எழுத்தாளர் திருமதி தேமொழி அவர்களும், வல்லமை ஆசிரியர் பவள சங்கரி அவர்களும் ஒரு போட்டியை அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தகுந்த ஒன்றாகும். அவர்களது முயற்சி வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.

Advertisements