Tag Archives: கடவுள் அணு

ஐன்ஸ்டின் சொன்ன நகைச்சுவை!

20 ஜூலை

அறிவியலில் முன்னேறிச் செல்கின்ற மனிதன்

       ஆண்டவனின் ரகசியத்தைக் காண விழைந்து

அறிந்துகொண்ட கடவுளணு கண்டுபிடிப்பு – யாவரும்

       வாய்பிளந்து அதிசயிக்கும் மாபெரும் சாதனையே!

ஒன்றின் மேலொன்றாக தத்துவங்கள் பலபேசி

       உரைக்கின்ற பொருளாதார நிபுணர்குழு – வானுயர்ந்த

குன்றின் மேலேறிச் செல்கின்ற விலைவாசி(யை)

       குறைக்கின்ற வழிகாண முடியாதது வேதனையே!

கவிஞர் கடிவேலு ஈமெயில் மூலம் அனுப்பிய கவிதையைப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். நமது சென்ற இடுகைகள் ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு மற்றும் விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும் ஆகிய இரண்டையும் படித்த பின் இந்த கவிதையை எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது.

அவற்றை படிக்க இங்கே சொடுக்கவும்

ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு

விலைவாசி உயர்வும் வாழ்க்கையில் அதன் தாக்கமும்

இந்த இரண்டு இடுகைகளையும் நான்கு நான்கு வரிகளில் அடக்கிவிட்ட அவருடைய திறமையை நினைத்து வியந்து கொண்டிருக்கும் போது, போன் ஒலித்தது. கவிஞர் கடிவேலுதான் பேசினார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவதாக தெரிவித்தார். நமக்குள் மெலிதான ஒரு பயம் ஏற்பட்டது.

இந்த மனிதர் வந்தால் ஏடாகூடமாக ஏதாவது கேள்வி கேட்பார். பதிலுக்கு நாம் ஏதாவது கேட்டால் புரியாத வகையில் ஏதாவது சொல்லிவிட்டுச் செல்வார். ‘இன்னிக்கி பொழுது இவங்கூடத்தானா? என்ற நடிகர் வடிவேலுவின் ஒரு காமெடி வசனம் ஞாபகத்துக்கு வந்தது. சரி வரட்டும் பார்க்கலாம் என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவருக்காக காத்திருந்தோம்.

சரியாக தேநீர் இடைவேளையின் போது வந்தார் கவிஞர் கடிவேலு. உமது கவிதை நன்றாக இருந்தது என்று பாராட்டினோம். உமது கேள்வியும் சிறப்பாக இருந்தது என்றார் பதிலுக்கு. எதைப் பற்றி பேசுகிறார் என்று சட்டென்று புரியாததால் “எதைச் சொல்கிறீர்?” என்று கேட்டேன்.

‘நீயா நானா விவாதத்தில் நடந்த விஷயங்களை மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளில் ஒன்றாக ஒவ்வொருவரும் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்; அதற்குரிய வாய்ப்புக்கள் நம் நாட்டில் நிறைய இருக்கின்றன என்றும் ஏன் எல்லோரும் தங்களால் முடிந்த அளவில் பகுதி நேரமாக ஏதாவது ஒரு வியாபாரம் செய்யக்கூடாது? என்றும் எழுதியிருந்தீரே, அதைத்தான் சொல்கிறேன்’ என்றார்.

“ஓ! அதுவா? மிக்க நன்றி” என்றேன். அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று மனதிற்குள் திக் திக் என்று அடித்துக் கொண்டது.

ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு இடுகையில் உமக்குப் பிடித்த விஞ்ஞானி ஐன்ஸ்டினைப் பற்றி எழுதியிருந்தீர் அல்லவா? அவர் சொன்னதாக நான் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது’ என்றார்.

அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தோம். மீண்டும் அவரே தொடர்ந்தார்.

‘உதாரணமாக வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதுவே சிறந்த வழிகாட்டுதல் ஆகும். இது ஐன்ஸ்டின் சொன்னது. அது போல நீர் எழுதியுள்ள விஷயத்தை நீரே முதலில் செய்து வெற்றி பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டும்’ என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நகைச்சுவையாகச் சொன்ன இன்னொரு விஷயம் நம் ஞாபகத்துக்கு வந்தது.

சூடேறியுள்ள ஒரு அடுப்பில் ஒரு நிமிடமே கை வைத்தாலும் ஒரு மணி நேரமானது போலத் தோன்றும். ஆனால் ஒரு அழகான பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு நிமிடம் போலத் தோன்றும். அதுதான் ரிலேடிவிட்டி.

சூடேறியுள்ள அடுப்பில் கை வைக்க வேண்டாம். கவிஞர் கடிவேலுவிடம் ஒரு நிமிடம் பேசினாலே நமக்கு ஒரு மணி நேரமானது போலத்தான் தோன்றுகிறது.

Advertisements

ஹிக்ஸ் போஸான் என்னும் கடவுள் அணு

14 ஜூலை

கவிஞர் கடிவேலுவின் இலட்சியம் இடுகையில் அவர் எழுதிய கவிதையும் புரியவில்லை, அவரையும் புரியவில்லை என்று சொன்னோமல்லவா? சாதாரண மனிதனையும் அவனுடைய கவிதையுமே புரியவில்லை என்றால், கடவுளையும் அவனுடைய செயல்களையும் புரிந்து கொள்வது மனிதனுக்கு எளிதான விஷயமா?

ஆனால் மனிதன் இயற்கையையும், இந்த பிரபஞ்சத்தையும், அதில் உயிர்கள் எப்படித் தோன்றின என்பது போன்ற அடிப்படைக் காரணத்தையும் கண்டுபிடிக்க கால காலமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அப்படிக் கண்டுபிடித்த விஷயங்களில் முக்கியமானது Big Bang எனப்படும் ஒரு கோட்பாடு. ஒரு பெரு வெடிப்பிலிருந்துதான் இந்த பேரண்டம் தோன்றியது என்ற கொள்கை அதிலிருந்து உருவானதுதான். இந்த பேரண்டத்தில் உள்ள எல்லாமே அணுக்களால், அணுக்கூட்டங்களால் ஆனது என்ற உண்மையையும் மனிதன் கண்டு பிடித்தான்.

ஆனால் இந்த அணுக்களை இயக்குவதற்கு மூலகாரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அது என்ன? அதுதான் கடவுளா?

கடவுள் அணு என்றால் என்ன?

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அணுக்களால் ஆனது என்று நாம் பள்ளியில் பௌதிக பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா? அந்த அணுக்கள் எதனால் ஆனது என்று பார்த்தால் அதில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருப்பது தெரியும். அவை எதனால் ஆனது என்று பார்த்தால் க்வார்க்குகள் மற்றும் லெப்டான்கள் போன்ற பல உப அணுக்களால் உருவானது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அணுக்களுக்கு நிறை எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியாமல்தான் இதுவரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். (நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போக வரும் எடை.)

ஏனென்றால் நிறையில்லாமல் அவை ஒன்றையொன்று பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. அதாவது அப்படி பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அங்கு பொருளே அதாவது மூலக்கூறுகளோ, அணுவோ, மற்ற எதுவுமோ இருக்காது. இந்த நிலையில்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி ஒரு கோட்பாட்டை 1960 இல் முன்மொழிந்தார். அதாவது ஏதோ ஒரு உப அணு இருக்க வேண்டும். அதுதான் மற்ற எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கில் இயக்குகிறது என்பது அவருடைய தத்துவம்.

ஆனால் அதற்கும் முன்னதாக 1924 ஆம் ஆண்டே இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், நம் இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர போஸ். அப்போது அவர் இதைப்பற்றி, அணுவையும், அணுசக்தியையும் கண்டறிந்த சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு ஆய்வறிக்கையை அனுப்பினார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த `ஐன்ஸ்டீன்-போஸ் கண்டென்ஸேட்’ என்ற கண்டுபிடிப்புதான், இப்போது கடவுள் அணுவைக் கண்டுபிடிக்க முனைந்த விஞ்ஞானிகளுக்கு அடிப்படை.

அதனால் அதற்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் பெயரில் வரும் ஹிக்ஸ் மற்றும் சத்யேந்திர போஸ் என்ற இந்திய விஞ்ஞானியின் பெயரில் வரும் போஸும் சேர்ந்ததுதான்.

ஆனால் அணுவையே நாம் கண்களால் காணவோ, தொட்டு உணரவோ முடியாது. அதிலும் சிறிதான கண்களுக்குப் புலப்படாத உப அணுவை எப்படிக் கண்டுபிடிப்பது? இதுவரை இதை நிருபிக்க முடியவில்லை. அதை மட்டும் நிருபித்து விட்டால் இந்த பிரபஞ்ச இரகசியத்தையே முழுமையாக அறிய அது வழி வகுக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினார்கள்.

அதைக் கண்டு பிடிப்பதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக் கூடத்தில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகலாக வேலை செய்து இதை சாதித்திருக்கிறார்கள். இதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

உதாரணமாக ஒரு வினாடியில் 100000000000000000000000 (அம்மாடி, எத்தனை சைபர்!) இல் ஒரு பங்கு நேரத்தில் அதாவது 0.00000000000000000000001 வினாடி நேரமே நிலைத்திருக்கும் ஒரு விளைவை அளவிட்டு, கோடிக்கணக்கான தகவல்களாக மாற்றி, அவற்றை ஆராய்ந்து, அதாவது……வேண்டாம். தலை சுற்றுகிறது. விட்டுவிடலாம்.

ஆனால் ஒன்று புரிகிறது. கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டோம் என்று ஜூலை 4ந் தேதி நமது விஞ்ஞானிகள் பிரகடனம் செய்திருக்கிறார்கள். அதாவது 99.999 சதவீதம். இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள கடவுள் அணு என்று செல்லமாக அழைக்கப் படும் ஹிக்ஸ் போஸான் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்.