Tag Archives: அனுபவம்

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 4

8 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3 தொடர்ச்சி…

சாதாரண ஜலதோஷம் தும்மல்தானே என்று கவனிக்காமல் விட்டது இது போல ஒரு கால்வலியில் அவதிப்படக் காரணமாகி விட்டதே என்று நினைத்துக் கொண்டேன். அப்போது என் நண்பர் பிரகாஷ் ஒரு தகவல் சொன்னார். நியூரோதெரபி என்று ஒரு சிகிச்சை முறை இருக்கிறது என்றும்  அதை முயற்சி செய்து பாருங்களேன் என்றும் சொன்னார்.

அதற்காக அவருக்கு இப்போது நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.  பிறகு அந்த சிகிச்சையை பேற்கொள்ள ஆரம்பித்தேன். நியூரோதெரபியில் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. மாத்திரை மருந்து பத்தியம் என்று எதுவுமில்லை. அந்த சிகிச்சை அளித்த தெரபிஸ்டுகளில் குமார் என்பவரும் ஒருவர். அவர் வழக்கமான சிகிச்சை தவிர வர்ம யோகா என்று ஒரு யோகப்பயிற்சியையும் கற்றுக்கொடுத்தார்.

அதில் ஒரு விசேஷம் என்னவென்றால் அந்தப்பயிற்சி செய்யும்போது இடையிடையே தண்ணீர் அருந்த வேண்டும். வேறு யோகப்பயிற்சி முறைகளில் தண்ணீர் அருந்துவதில்லை. தனக்கு ஒரு சித்தர் வர்ம யோகாவைக்  கற்றுத்தந்ததாகச் சொன்னார். ஆனால் அந்தப் பயிற்சியின்போது தரையில் அமர்ந்து காலை நீட்டுவதே கடினமாக இருந்தது. ஆனால் வலியுடனேயே அந்தப்  பயிற்சியைத் தொடர்ந்து செய்தேன்.

அதைப் பண்ண ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே வயிறு மற்றும் இடுப்பு பகுதியிலுள்ள தேவையற்ற சதைகள் குறைய ஆரம்பித்தது. கால்வலியும் சரியாகி விட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பயிற்சியையும் குறைத்துக் கொண்டே வந்தேன்.

குமார் அவ்வப்போது விசாரிப்பார். “தினமும் வர்ம யோகா பயிற்சி செய்கிறீர்களா?” என்று.

“ஜலதோஷம் சார், அதனால் நாலு நாளாகப் பண்ணவில்லை” என்பேன்.

“ஏதாவது காரணம் கண்டுபிடித்து விடுகிறீர்கள்” என்பார்.

“ஜலதோஷம் இருப்பதால் இடையில் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அதுதான் காரணம்” என்பேன்.

“வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் கூட போதும்” என்பார். ஆனாலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய நாம் எதையும் தொடர்ந்து முயற்சிப்பதில்லையே . ஒருவிதமான சோம்பேறித்தனம் வந்து விடுகிறது அல்லவா.

கால்வலி குறைந்து விட்டாலும், உடல் எடையும் கொஞ்சம் குறைந்து விட்டாலும் தும்மலும் ஜலதோஷமும் மட்டும் விட்டபாடில்லை. ஒருநாள் ஓய்வாக இருந்தபோது வலைத்தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தேன். அப்பொது ஜலதோஷத்திற்கு இயற்கை வைத்தியம் என்று ஒரு வலைத்தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

அதாவது மஞ்சளையும் வெள்ளை சுண்ணாம்பையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தண்ணீர் விட்டுக் குழப்பினால் ஆரத்தி கலரில் ஒரு கலவை வரும். அதை மூக்கின் மீதும் நெற்றியிலும் தடவி வந்தால் சில மணி நேரத்தில் குணமாகி விடும் என்று அகத்திய முனிவர் ஒரு பாடலில் சொல்லியிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

அதில் சொன்னதுபோல் செய்து பார்த்தேன். அந்தக் கலவையை இரவு தூங்குவதற்கு முன் மூக்கிலும் நெற்றியிலும் தடவி விட்டுத் தூங்கினால் காலையில் விழிக்கும்போது நன்றாக குணமாகி இருக்கும். இந்த விஷயம் பற்றி இதே வலைப்பூவில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

அதைப்படிக்க இங்கே சொடுக்கவும்.

இப்பொழுது ஜலதோஷம் பிடிப்பதற்கான அறிகுறி தெரிந்தாலே அந்தக் கலவையை தடவி விட்டுத் தூங்கி விடுவேன். முகத்தில் வேஷம் பொட்டதுபோல் தெரியும். அதனால் இந்த முறை என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இது பழக்கமாகி விடப்போகிறது என்பாள். ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

ஒருநாள் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கவுண்டமணி செந்தில் நடித்த கரகாட்டக்காரன் படக்காமடி ஓடிக்கொண்டிருந்தது. “டேய் நாதஸ், போய் ஒரு வெத்திலை பாக்கு வாங்கிட்டு வாடா” என்று செந்திலை கடைக்கு அனுப்புவார் கவுண்டமணி. செந்தில் ஒரு வெற்றிலையும், ஒரு பாக்கும், கூடவே நிறைய சுண்ணாம்பும் கொண்டு வந்து கொடுப்பார். இப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும் நகைச்சுவைக் காட்சி.

அப்போது அங்கே வந்த என் மனைவி, “இந்த வெற்றிலை பாக்கு போட்டுப்பாருங்களேன். ஜலதோஷத்திற்கு நல்லது என்று யாரோ ‘வாட்ஸ்அப்’பில் எழுதியிருந்தார்கள் என்றாள்.

“வெற்றிலை போடுவதா, விளையாடுகிறாயா. அப்புறம் ஒரு படத்தில் தனுஷ் பெண் பார்க்கப் போகும்போது அருக்காணியாக வரும் ஆர்த்தி வெற்றிலை போட்டு யார் மேலேயோ துப்பி விடுவாரே, அது போல ஆகணும் என்று நினைக்கிறாயா? வெற்றிலை போட்டுக்கொண்டு எப்படி ஆபீஸ் போவது” என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினேன்.

“இரவு சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை போடலாமே” என்றாள்.

“பல்லெல்லாம் சிவப்பாகி விடும். வேண்டாம்” என்றேன். நாம்தான் எதையும் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்வதில்லையே. ஆனால் தொடர்ந்த வற்புறுத்தலினால் வெற்றிலை போட ஆரம்பித்தேன்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒரு சில நாட்களிலேயே ஜலதோஷத்தினால் வரும் தொல்லைகள் குறைய ஆரம்பித்தது. பிறகு இன்னொரு விஷயமும் நடந்தது. இதுவரை பயன்படுத்தி வந்த பேண்ட் எல்லாம் லூசாகி விட்டது. பெல்ட் இல்லாமல் போட முடியவில்லை. இடுப்பளவு குறைந்து உடல் மெலிய ஆரம்பி்த்து விட்டது புரிந்தது.

ஒருவேளை வெற்றிலை போட்டால் எடை குறையுமோ? வெற்றிலைக்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கூகுளில் தேடிப்பார்த்தேன். வெற்றிலை உடல் மெலிவதற்கு உதவுகிறது என்று இந்தியா டுடே வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் வைட்டமின் ‘சி’ (C)யும் வைட்டமின்கள் B1 (Thiamine), B2 (Riboflavin), B3 (Niacin), மற்றும் வைட்டமின் ‘ஏ’ (A)க்குத் தேவையான கரோட்டினும் (Carotene) இருப்பதாகவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றும் எழுதப்பட்டு இருந்தது.

அந்த வலைப்பக்கத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

மேலும் சுண்ணாம்பு தடவுவதால் உடலுக்குத் தேவையான் கால்சியமும் கிடைக்கிறது, கண் பார்வை தெளிவாகவும் உதவுகிறது. வெற்றிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவு நன்கு ஜீரணமாவதற்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. அதில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் கழிவுகள் வெளியேறவும் உதவுகிறது மேலும் இது போன்ற பலவித பயன்பாடுகளும் அது பற்றிய ஆராய்ச்சியில் தெரிந்தது.

ஒரே ஒரு பிரச்சினை. வெற்றிலை போடுவதால் நாளடைவில் பற்கள் காவி நிறமாகி விடும் என்று தோன்றுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு நான் ஒரு பற்பசையை உபயோகிக்கிறேன். பற்களை வெண்மையாக்க வேறு பல வழிகளும் இருக்கின்றன.

வேறு சிலர் வெற்றிலையுடன் ஐந்து மிளகு சேர்த்து மென்றால் உடல் எடை குறையும் என்று குறிப்பிடுகிறார்கள். நான் அதை முயற்சி செய்யவில்லை. பற்களின் வெண்மை நிறம் மாறக்கூடாது என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம்.

முக்கியமான விஷயம். வெற்றிலை இளம் பச்சையாக தளிராக இருக்க வேண்டும். வாடி வதங்கிப்போன அல்லது பழுத்து விட்ட வெற்றிலைகளைத் தவிர்த்து விட வேண்டும்.

வெற்றிலை என்பது நமது கலாச்சாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனை சுவாமி வழிபாடுகளிலும், திருமணம் போன்ற முக்கியமான சடங்குகளிலும்  அதை முன்னிலைப் படுத்துகிறோம். நமது முன்னோர்களின் கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

திருமண விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூலம் என்று சொல்லப்படுகிற வெற்றிலை பாக்கு முக்கியப் பங்கு வகிப்பதன் காரணம் இப்போது புரிகிறது.  உலகத்துக்கே நாகரீகம், கலாச்சாரம் போன்றவைகளைக் கற்றுக் கொடுத்த முன்னோடி இனமல்லவா?

நமது முன்னோர்களைப் போற்றுவோம். உடல் நலத்தைப் பாதுகாப்போம்.

முக்கியக் குறிப்பு:-  இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்னுடைய சொந்த அனுபவத்தினால் ஏற்பட்ட என்னுடைய அபிப்பிராயம் மட்டுமே. இதன் மூலம் இந்த வழிமுறை எல்லோருக்கும் பொருந்தும் என்று நான் உறுதி கூறவில்லை. இதில் உள்ள சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் பின்பற்ற நினைத்தால் அது அவரவரது சுயவிருப்பமும் பொறுப்புமாகும். ஆனால் ஒரு சிலருக்காவது இதனால் பயன் கிடைத்தால் அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வளவே!

நிறைவு பெற்றது.

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3

Advertisements

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 3

4 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2 தொடர்ச்சி…

இப்போது திரிபலா சூரணத்தை நிறுத்தி வெகுநாட்களாகி விட்டது. காரணம் மருந்து என்று நாம் கருதும் பொருட்களை குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் பயன்படு்த்தினால் போதும். தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த துணை உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

நிச்சயமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நமது மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆழ் மனதில் பதிந்து விட்டால் அந்த பிரக்ஞை எப்போதும் நமக்கு இருக்கும். எளிய வழிகள் சிலவற்றை முயற்சிக்கலாம். Monitor Your Weight போன்ற சில ‘ஆப்’(App)கள் ‘கூகுள் ப்ளே’ யில் கிடைக்கிறது. அதை மொபைலில் நிறுவி நமது எடையை பதிந்து தொடர்ந்து கண்காணித்து வரலாம்.

அது நமது தற்போதைய எடை என்ன? BMI எவ்வளவு? எத்தனை கிலோ குறைய வேண்டும் என்பது போன்ற விபரங்களைக் காட்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இவ்வளவு எடை குறைய வேண்டும் என்று கணக்கீடு செய்து, அவ்வப்போது நமது எடையை பதிவு செய்துகொண்டே வந்தால் கிடைக்கும் முன்னேற்றம் நம் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கண்களுக்கு ஊட்டம் கொடுக்க வைட்டமின் ‘ஏ’ அவசியம் அல்லவா?. அது சில காய்கறி பழங்களில் கிடைக்கிறது. உலர்ந்த கருப்பு திராட்சையில் Beta Carotene அதிக அளவில் இருக்கிறது என்று ஒரு செய்தியில் படித்தேன். அது கண்களுக்கு நல்லது என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிட்டு வந்தேன். ஒரு குறிக்கோளை முன் வைத்து அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?.

250 கிராம் அளவுள்ள தரமான உலர்ந்த கருப்பு திராட்சை 100 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. அதில் பி, சி, ஃபோலிக் ஆசிட் போன்ற வைட்டமின்களும், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இருப்பதாகவும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். எதையும் அளவோடு சாப்பிட்டால் நல்லதுதான்.

நாம் நினைப்பது அல்லது எதிர்பார்ப்பது எல்லாம் அப்படியே நடந்து விட்டால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் நம்மை அப்படியே திசைதிருப்பி விடக்கூடியவை. சில சமயங்களில் நமது வாழ்க்கையைக்கூட தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும். அதனால் விழிப்புணர்வு (Awareness) அவசியம் தேவை.

எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கோ போய்விட்டேன்.

நான் சொல்ல வந்தது, என்னுடைய முயற்சியில் ஏற்பட்ட இன்னொரு திருப்பத்தைப் பற்றி. அதாவது எனக்கு தூசு ஒவ்வாமை (Dust Alergy) உண்டு. சில சமயங்களில் திடீரென்று மூக்கில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டு அது தும்மலாக மாறி பிறகு சிறிது நேரத்தில் மூக்கில் தண்ணீராக கொட்ட ஆரம்பிக்கும். ரொம்பவும் அவஸ்தையாக இருக்கும். காலையில் ஏற்படும் பிரச்சினை சாயங்காலம்தான் ஓரளவு சரியாகும்.

இதற்கு நான் மாத்திரை அல்லது தைலம் போன்ற எதையும் உபயோகிப்பது இல்லை. தும்மல் வரும்போது அதிக சத்தத்துடன் தும்முவேன். பக்கத்தில் இருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி மூக்கடைப்போ அல்லது சுவாசப்பிரச்சினையோ எதுவும் ஏற்படாது. அப்படியே வாழப் பழகிக்கொண்டேன்.

ஆனால் ஒருநாள் அப்படித் தும்மும்போது இடுப்பில் பின்பக்கம் பிடித்துக் கொண்டது. பயங்கரமான வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வலி குறைந்து விட்டதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளாக ஆக சயாடிக் பெயின் (Sciatic pain) என்று சொல்லப்படும் கால் வலியாக மாறிவிட்டது.

முழங்காலுக்கு கீழே கெண்டைக்கால் பகுதியே மரத்துப் போய் விட்டது. அப்புறம் கொஞ்ச நாளில் நடக்கவே சிரமமாகிவிட்டது. பிறகு எப்படி நடைப்பயிற்சி செய்வது? எப்படி உடற்பயிற்சி செய்வது? உடல் எடையை எப்படிக் குறைப்பது?

ஆரம்பத்தில் டாக்டரிடம் சென்று பல டெஸ்டுகளையும் சிகிச்சைகளையும் செய்தும் பயனில்லை. பிறகு மாத்திரை மருந்து எதுவுமில்லாமல் அதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியது. அது பெரிய கதை போன்று இருக்கும். அந்த அனுபவத்தை தனியாக எழுத வேண்டும் என்ற உத்தேசம் இருக்கிறது.

இப்பொழுது இந்த விஷயத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அந்த வலியில் நான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடியாமல், நிற்க முடியாமல் இரண்டு நாட்கள் அவதிப்பட்டபோதும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்ன போதும் பயந்து விடவில்லை. இது சீக்கிரம் குணமாக வேண்டும், அதற்கு என்ன வழி என்றுதான் யோசித்தேன். ஸ்கேன் செய்யவோ ஆஸ்பத்திரிக்கோ போகவில்லை.

திருவள்ளுவப் பெருந்தகை அறிவுடைமை அதிகாரத்தில் 429 ஆவது திருக்குறளில் சொல்லி இருக்கிறாரல்லவா?

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

அதற்கு

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

என்று பொருள் சொல்லுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.

இதற்கு நான் புரிந்து கொண்ட விளக்கம் என்னவென்றால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனால் விளையப்போவதை உணர்ந்து கொண்டு அதைப் போக்கத் தகுந்த உபாயத்தைக் கண்டு பிடிக்க முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் என்று எதுவும் கிடையாது.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்…

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

3 ஜன

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1 தொடர்ச்சி…

எப்படி சாப்பிடுவது, எப்படி தண்ணீர் குடிப்பது என்று தெரிந்து கொண்டு அதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்று சொன்னேனல்லவா?.

அதாவது, பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்; சாப்பிடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வாயை மூடிக்கொண்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்; அதனால் உணவு வாயிலேயே நன்றாக அரைபட்டு பின்பு வயிற்றுக்குப் போகும். அது அங்கு எளிதாக ஜீரணிக்கப்படும்.

சாப்பிடும் போதோ, அதற்கு அரை மணி முன்போ அல்லது பின்போ தண்ணீர் குடிக்கக் கூடாது; குளித்த பிறகு குறைந்தது அரை மணி நேரம் கழித்தே உணவருந்த வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அது போன்ற விஷயங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.

மேலும் உணவு நன்றாகச் செரிமானம் ஆகி தேவையற்ற கழிவுகள் வெளியேறினாலே நன்றாக பசியெடுக்கும், உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியம் ஏற்படும் என்றும் ஹீலர் பாஸ்கர் அதில் சொல்லியிருந்தார். அத்தோடு பத்தியம் எதுவுமில்லை என்றும் எதை வேண்டுமானாலும் அளவோடு சாப்பிடலாம் என்றும் சொல்லியிருந்தார்.

எனக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. அதாவது மேஜிக் போல திடீரென்று உடல் எடை குறையக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைய வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது என்று.

முக்கியமாக உடல் எடை குறைய முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நினைப்பை நம் மனதின் அடித்தளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தேவை இல்லாத நேரங்களில் எதையாவது சாப்பிடுவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க முடியும். குறிப்பாக நொறுக்குத்தீனியை அறவே ஒதுக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் திரிபலா சூரணத்தில் நிறைய நன்மைகள் உள்ளதாக சொல்லியிருந்தார். மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது என்றார் (அது மிகவும் முக்கியமான விஷயமாயிற்றே). நாட்டு மருந்துக் கடையில் திரிபலா சூரணம் என்று கேட்டால் கிடைக்கும் என்றார். அதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.

இரவு படுக்கப் போகும்போது ஒரு ஸ்பூன் அந்தப் பொடியை வெந்நீரில் கலந்து அத்தோடு கொஞ்சம் தேனையும் கலந்து குடித்து வந்தேன். சிலர் அதை காலையிலும் குடிக்கலாம் என்கிறார்கள். அதில் கடுக்காய்பொடி, நெல்லிக்காய்பொடி மற்றும் தான்றிக்காய்பொடி கலந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல வகைகளில் உதவுகிறது என்று தெரிந்தது. கண் பார்வை தெளிவாகவும் அது உதவும் என்று கேள்விப்பட்டேன்.

ஏனென்றால் நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே கண்களின் பார்க்கும் திறன் குறைகிறது. எழுத்துக்களைப் படிப்பது சிரமாக இருக்கிறது. அதற்கு கண்ணாடி அணிகிறார்கள். கண்ணாடி அணிந்தாலும் பார்வைக் குறைபாடு சரியாவதில்லை. சில வருடங்களில் கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் கண்ணாடி அணியாமல் பார்வைக் குறைபாட்டை சரி செய்ய முடியாதா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திரிபலா சூரணம் அதற்கு உதவும் என்றால் மகிழ்ச்சிதானே.

ஆனால் எதிர்பார்த்தபடி உடனடியாக பலன் எதுவும் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஊருக்குப் போன போது சதுரகிரி மலை அடிவாரத்தில் ஒரு சித்த மருத்துவமனை இருக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன். கண்பார்வை தெளிவாக வேண்டும்.

அங்கும் முதலில் எடை பார்த்து குறித்துக் கொண்டார்கள். அசைவம் சாப்பிடக்கூடாது என்றார்கள். நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்றேன். உங்கள் எடை அதிகம். அதனால் முதலில் எடையைக் குறைக்க வேண்டும் என்றார்கள். பிறகு நாடி பார்த்தார்கள். அவர்கள் விசாரித்தபோது ஒன்றரை மாதமாக திரிபலா சூரணம் சாப்பிடுவதைச் சொன்னேன். எங்களது மருந்துகளில் ஒன்றாக நாங்களும் அதைக் கொடுக்கிறோம் என்றார்கள்.

ஆனால் சிகிச்சையைத் தொடங்குமுன் நான்கு நாட்களுக்கு அவர்கள் சொல்வது போல மூலிகை மருந்துகளை கஷாயம் வைத்துக் குடிக்க வேண்டும் என்றும், கஞ்சியும் பழங்களையும் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். ஐந்தாவது நாள் காலையில் பேதி மருந்து சாப்பிட வேண்டும் என்றும் அதன் முடிவில் மோர் குடித்து முடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதற்கு அடுத்த நாள் திரும்ப இங்கு வந்தால் நாடி பார்த்து பிறகு மருந்து தருவோம் என்றார்கள்.

நான்கு நாட்களுக்கு கஷாயம், கஞ்சி, பழங்கள் மட்டுமே சாப்பாடு. மிகவும் கஷ்டமாக இருந்தது. ஐந்தாவது நாள் பேதி மருந்து சாப்பிட்டேன். ஐந்து நாட்களில் மூன்றரை கிலோ உடல் எடை குறைந்து விட்டது. நான் சென்னையில் இருப்பதால் மறுபடி சதுரகிரி போக முடியவில்லை. பழ உணவுகளை மேலும் சில நாட்கள் தொடர்ந்தேன். பிறகு வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலும் எடை கூடவில்லை. விட்டமின் ‘ஏ’ உள்ள கீரை, காரட் போன்றவைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் கண் பார்வையும் ஓரளவு தெளிவானது.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 1

2 ஜன

“ரொம்ப வெயிட் குறைஞ்சிட்டீங்களே, உடம்புக்கு எதும் பிரச்சினையா?“ என்றார் அனந்தன். எங்கள் அடுக்ககத்தின் முதல் மாடியில் குடி இருப்பவர்.

“இல்லையே, அப்படியேதான் இருக்கிறேன்” என்றேன். ஒரே கட்டிடத்தில் இருந்தாலும் இப்படி எப்போதாவது பார்க்கும்போது பேசிக் கொள்வதுதான்.

“இல்ல, முன்னாடி இருந்ததைவிட இப்போது மெலிஞ்சிருக்கீங்க” என்றார். மனைவியுடன் வாக்கிங் போய்விட்டு திரும்பி வருகிறார் போலிருக்கிறது.

“ஆமா சார், முன்னாடி இருந்ததைவிட இப்ப கொஞ்சம் மெலிஞ்சிருக்கேன்” என்றேன் என் வீட்டின் காலிங் பெல்லை அடித்தபடி. எங்கள் வீட்டுக்கு முன்னாடிதான் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் மாடிப்படி இருக்கிறது.

“கோயிலுக்குப் போயிருந்தீங்களா?” என்றபடி மாடி ஏற ஆரம்பித்தவர் நின்று விட்டார். அவர் மனைவியும் அவருக்கு முன்னால் அடுத்த படியில் நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு பேருமே ரெட்டைநாடி சரீரம் உள்ளவர்கள். அதனால் அவ்வப்போது நடைப்பயிற்சி செய்வார்கள்.

“ஆமாம்” என்றேன்.

“உடம்பு இளைக்க எதும் மருந்து சாப்பிடுறீங்களா?” என்றார் மாமி (அவர் மனைவி).

“அதெல்லாம் இல்லை” என்றேன்.

“கொஞ்சநாள் முன்னாடி ஏதோ பொடி சாப்பிட்டீங்களே” என்றார் அனந்தன்.

“ஆமாம், ஆனால் இப்ப இல்லை” என்றேன்.

“அப்படின்னா டயட்டில இருக்கீங்களா” என்றார். அவரும் எளிதாக விடுவதாயில்லை. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். யாருடனாவது பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அதில் ஒரு திருப்தி.

சட்டென்று எனக்கு பதில் சொல்லத் தோணவில்லை. பிறகு,யோசித்தபடி

“கலோரி அளவைத் தெரிஞ்சுகிட்டு சாப்பிடுறேன். அதனால், உடல் இளைக்குதுன்னு நினைக்கிறேன்” என்றேன் கொஞ்சம் சமாளிப்பாக.

“கலோரி எவ்வளவுன்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?” என்றார் அனந்தன்.

போச்சுடா! இப்ப என்ன பதில் சொல்வது.

“அது… ஏற்கெனவே தெரிஞ்சதுதான். அதுக்கு ஒரு புத்தகம் இருக்கு” என்றேன். அது எங்கே என்று தேட வேண்டும். ஒருவேளை அதை படித்துப் பார்த்து விட்டுக் கொடுக்கிறேன் என்று அவர் கேட்டு விட்டால் என்ன சொல்வது. நல்லவேளை, வேறேதுவும் பேசாமல் அவர் படியேறினார்.

“ஒரு வேளை உங்க மனைவி சாப்பாட்டை குறைச்சிட்டாளோன்னு நினைச்சேன்” மாமி சிரித்துக் கொண்டே சொல்லி விட்டுப் போனார்.

யோசித்துப் பார்த்தேன். வெயிட் கொஞ்சம் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் எதனால் குறைந்தது?. ஒன்று மட்டும் நிச்சயம். திடீரென்று அது குறைந்து விடவில்லை. இது ஒரு தொடர்ச்சியான முயற்சி. இதுதான் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. ஆனால் ஒன்று புரிந்தது. சுற்றி இருப்பவர்கள் நம்மை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் மிக அதிகமான எடைதான் இருந்தது. தொப்பை தனியாகத் தெரியும். நானும் எடை குறைப்பிற்கு என்னென்னவோ செய்து பார்த்தேன். தினமும் பார்க்கில் அல்லது மொட்டை மாடியில் நடைப் பயிற்சி செய்வேன். காலையில் எளிய உடற்பயிற்சி செய்வேன். ஆனால் உடல் எடை மட்டும் சிறிதும் குறையவில்லை.

பிறகு நண்பர் ஒருவர் சிபாரிசின் பேரில் ஒரு பிரபல கம்பெனி தயாரிக்கும் பவுடரை சாப்பிட்டு எடை குறைய முயற்சி செய்தேன். அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறை என்று சொன்னார். மூன்று மாத காலம் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட முறையில் சாப்பிட வேண்டும் என்றும் சொன்னார். செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும் எடை குறைந்தால் போதும் என்று நினைத்தேன். அதில் ஐந்து கிலோ வரை எடை குறைந்தது. ஆனால் அந்த கால அளவு முடிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக மறுபடி உடம்பு பழைய நிலைக்கு வந்து விட்டது.

இருந்தும் விடாமுயற்சியாக உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து பலவிதமாகவும் முயற்சி செய்து வந்தேன். இன்னொரு நண்பர் மூலமாக ஹீலர் பாஸ்கர் என்பவர் பேசிய ஒரு ஒளித் தகடைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. (அவர் இப்போது மெகா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் வருகிறார்). அதில் நாம் எப்படி சாப்பிட வேண்டும், எப்போது தண்ணிர் குடிக்க வேண்டும் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லி இருந்தார். அதன்படி செய்து பழகி அதையே வழக்கமாக ஆக்கிக் கொண்டேன்.

அடுத்த பதிவில் தொடர்கிறேன்…

உடல் எடை குறைந்தது எதனால்? – பகுதி 2

ஜலதோஷத்திற்கு ஒரு எளிய வைத்திய முறை

4 பிப்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த இடுகை வருகிறது. இடையில் எழுத்து உட்பட பல விதமான வேலைகள். இந்த இடுகை ஒரு எளிய பாட்டி வைத்தியம் போன்ற  விஷயம் பற்றியது. எங்கோ படித்தது… இயற்கை உணவு உலகம் என்று ஞாபகம்… அது எனக்கு நல்ல பலனைக் கொடுத்ததால் மற்றவர்களுக்கும் (நம்புபவர்களுக்கு மட்டும்) அறியத் தரலாமே என்பது இதன் காரணம்.

ஏற்கெனவே ஒரு இடுகையில் சொன்னதுபோல் மனிதனுக்கு தொந்திரவு தரும் ஒரு வியாதி(?) ஜலதோஷம். அதிலும் குளிர்காலம் வந்து விட்டால்,. ரஜினி சொல்வது போல் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் திடீரென்று வரும், வந்தால் ஒரு நான்கு நாட்களுக்காவது படுத்தி எடுத்து விடும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் ஆரம்பிக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் ஆஸ்த்துமா, வீசிங் பிரச்சினை இருப்பவர்கள் கதை வேறு. ஆனால் பொதுவாக சாதாரண ஜலதோஷம் திடீரென்று ஏதோ ஒரு ஒவ்வாமையினால் தோன்றலாம். கல்யாணத்திற்குப் போய் சாப்பிட்டு முடித்தவுடன் தாராளமாக கிடைக்கும் ஐஸ்கிரீமை ஒரு கை பார்த்து விட்டு அடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு தும்முவது போல.

எனக்கு அப்படித்தான் ஆரம்பிக்கும். ஆரம்ப கட்டத்தில் மூக்கில் லேசான குறுகுறுப்பு ஒருவித எரிச்சலைக் கொடுக்கும். பேசுவதில் சிரமம் தெரியும். அந்த அவஸ்தையை கடந்து விட்டால் அடுத்து லேசான தலைவலி, மூக்கடைப்பு. அதன் பிறகு மற்ற வழக்கமான அவஸ்தைகள்.

இந்த ஆரம்ப கட்டம்தான் நாம் கவனிக்க வேண்டியது. மூக்கில் லேசான குறுகுறுப்பு அல்லது ஜலதோஷத்திற்கு முந்தைய லேசான தலைவலி ஆரம்பித்த உடனே நாம் இந்த வைத்தியத்தை முயற்சிக்கலாம். செலவு அதிகமில்லாத எளிய மருத்துவம்.

பெண்கள் வீட்டில் முகத்தில் பூச மஞ்சள் வைத்திருப்பார்கள். (மஞ்சள் பூசும் பழக்கம் இப்போது இருக்கிறதா?) இல்லையென்றால் கடையில் வாங்கிக் கொள்ளலாம். அப்புறம் சிறிது வெள்ளை சுண்ணாம்பு. அவ்வளவுதான்.

இரவு படுக்கப் போகுமுன், சிறிது மஞ்சள் (கால் டீ ஸ்பூனுக்கும் குறைவாக) எடுத்து ஒரு சிறிய பிளாஸ்டிக் மூடியில் போட்டு ஒரு மிளகு அளவுக்கு வெள்ளை சுண்ணாம்பை அதனுடன் கலந்து நாலைந்து சொட்டு நீர் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் திக் பேஸ்ட் ஆகவோ, தண்ணீராகவோ ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை எடுத்து மூக்கைச் சுற்றி பூசிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நெற்றியிலும் தடவிக் கொள்ளலாம். அவ்வளவுதான். நேரமாக ஆக அது கொஞ்சம் கொஞ்சமாக உலரும். இரவில் நன்றாக உறங்கி காலையில் விழித்தால் ஜலதோஷம் போயே போச்சு.

உலர்ந்த தூள் கண்களில் படாமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். லேசாக கண்களில் விழுந்து உறுத்தினால் உடனே தண்ணீர் விட்டு கண்களை கழுவி விடலாம். சுண்ணாம்பு அதிகமானால் சிறிது எரிச்சல் இருக்கும். கவனம் தேவை.

இந்த முறையில் உட்கொள்ள எதுவுமில்லை. அதனால் பக்க விளைவுகள் கிடையாது. அதிக செலவுமில்லை. சில நாட்களாக உபயோகிக்கிறேன். ஒரே ஒரு பிரச்சினை மட்டும் உள்ளது. முகத்தில் கிரிக்கெட் வீர்ர்கள் தடவிக் கொள்வது போல ஒருவித வேஷம் போலத் தோன்றலாம். அதனால் மற்றவர்கள் பார்க்காத வேளைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இந்த வழிமுறையை இணையத்தில் தந்தவர்களுக்கு (அகத்திய முனிவர் சொன்ன வைத்திய முறை என்று எழுதி இருந்ததாக ஞாபகம்) நமது நன்றி!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா?

15 அக்

இன்றைய அன்றாட வாழ்க்கையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எங்கும் அவசரம், எதிலும் அவசரம். யாருக்கும் பொறுமையில்லை. விடிந்ததிலிருந்து அடைந்தது வரைக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள், அது போல காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை ஒரே பரபரப்புதான். நிற்பதற்கு கூட நேரமில்லை, எப்போதும் அவசர கோலம்தான். இந்த அவசரமான காலகட்டத்தில் எல்லோருக்கும் நிம்மதியான தூக்கம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இரவு டிவியில் எல்லா சீரியல்களையும் பார்த்து விட்டு படுக்கப் போகும் போது அநேகமாக இரவு பதினொன்றைத் தாண்டியிருக்கும். அதற்குப் பிறகு படுத்தால் உடனே தூக்கம் வருமா? சீரியல்களில் வந்த கதாநாயகியை அந்த வில்லிகள் படுத்தும்பாடு மனதில் வந்து போகும். வில்லிகள் மேல் கோபம் கோபமாக வரும். வீட்டிலுள்ள மாமியாரையோ, மருமகளையோ, நாத்தனாரையோ பார்த்தால் அந்த வில்லிகள் போலவே தோன்றும்.

எப்படியோ தானாக சிறிது நேரத்தில் தூக்கம் வந்து தூங்கி விட்டால், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதன் பிறகு விடிய விடிய சிவராத்திரிதான். தூக்கம் வருவதற்கான வழிமுறையாக ஒன்னு ரெண்டு என்று எண்ண ஆரம்பித்தால் விடியும்போது ஆறாயிரத்து ஐநூத்தி முப்பத்து மூன்றைத் தாண்டி இருக்கும். ஆனால் தூக்கம் மட்டும் வராது.

கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும். அதன் பிறகு படுக்கையில் இருக்க முடியுமா? கண்களில் தூக்கத்தை மிச்சம் வைத்துக் கொண்டு காலையில் வழக்கமாகச் செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கும். பெண்களென்றால் கணவனுக்கு சாப்பாடு தயார் செய்து, குழந்தைகளை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

சரி! பத்தரை மணியாகி விட்டது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்து படுக்கையில் படுத்து, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம் என்று ஆன் பண்ணினால், டிவியில் மத்தியான சீரியல்கள் ஆரம்பித்திருக்கும். அப்புறம் எங்கே தூங்குவது?

ஆனால் இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு தினமும் தூங்கவில்லை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலத்தைப் பாதிக்கும். மன நிம்மதியைக் கெடுக்கும். அதனால் சிலர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறான பழக்கம். நாளடைவில் தூக்க மாத்திரை போடாமல் தூக்கம் வராது என்ற நிலையில் கொண்டு போய் விட்டு விடும்.

பிறகு என்னதான் செய்வது?

முதலில் இரவு பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பத்து மணியிலிருந்து அதிகாலை நான்கு மணி வரை தூக்குவதுதான் ஆரோக்கியமானது. தூங்குவதற்கு முன் சிறிது நேரம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் தூக்கம் வர உதவியாக இருக்கும்.

இடையில் விழிப்பு ஏற்பட்டு அதன் பிறகு தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு மொபைல் போனில் சினிமா பாட்டு பதிந்து வைத்துக் கேட்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால் எளிதான ஒரு வழி இருக்கிறது. சினிமா பாட்டுகளுக்குப் பதிலாக, ஆன்மீகம் அல்லது சுய முன்னேற்றம் சம்பந்தமான சிலரது பேச்சுக்கள், சொற்பொழிவு அல்லது பிரசங்கம் போன்றவற்றைப் உங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இரவில் எப்போது உங்கள் உறக்கம் கலைகிறதோ அல்லது உறக்கம் வராமல் தவிக்கிறீர்களோ அப்போது இந்த பேச்சுக்களை கேட்க ஆரம்பியுங்கள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் உங்களை அறியாமலே உறங்கிப் போய் விடுவீர்கள். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் விழித்திருந்தாலும் பரவாயில்லை. காரணம் நீங்கள் கேட்பது உங்களுக்குப் பயனுள்ள விஷயங்கள்தான். அதனால் நன்மைதான்.

கையில் பெருவிரலுக்கு பக்கத்தில் ஒரு புள்ளியை சிறிது நேரம் லேசாக அழுத்திக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும் என்றும் சொல்வார்கள். அல்லது யோகா மற்றும் தியானம் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டு அதை தினமும் பயிற்சி செய்து கொண்டிருந்தால் தூக்கம் வராமல் தவிக்கும் பிரச்சினை இருக்காது.

இன்னொரு விஷயம். இரவில் உங்கள் போன் மூலமாக நீங்கள் கேட்கும் பேச்சுக்கள் தனித்தனி Audio File களாக இருக்கட்டும். Playist ல் போட்டு கேட்க வேண்டாம். காரணம் நீங்கள் தூங்கி விட்டாலும் ஒரு 40 அல்லது 50 நிமிடங்களில் அது தானாக நின்று விடும். இல்லாவிடில் Playist ல் உள்ள அத்தனை Audio File களூம் ஒன்றன் பின் ஒன்றாக போய்க்கொண்டே இருக்கும். அது பேட்டரிக்கு கேடு.

கடைசியாக ஒரு விஷயம். நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் தூக்கம் வரவில்லையா. கவலைப் பட வேண்டாம். அடுத்த நாள் முதல் நாள் விடுபட்ட தூக்கத்தையும் சேர்த்து தூங்கி விடுவீர்கள். உங்கள் உடம்பு தானாகவே அதைச் சரி செய்து கொள்ளும்.

தூக்க மாத்திரை போட்டு தூங்கும் பழக்கதை கண்டிப்பாக தவிர்த்து விடவும்.

சென்னை புத்தகக் காட்சி 2014

21 ஜன

book-fair 2014புத்தகங்கள், புத்தகங்கள், எங்கு நோக்கினும் புத்தகங்கள். விதவிதமான தலைப்புகளில், விதவிதமான அளவுகளில், விதவிதமான நிறங்களில் அதற்கேற்றாற் போல் விதவிதமான விலைகளில் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன. அந்தப் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்க பரவசம், படிக்கத் துடிக்கும் அவசரம் என்று அலைமோதும் மக்கள் கூட்டம். இதுதான் இந்த வருடம் சென்னை புத்தகக் காட்சியில் நான் கண்ட காட்சி!

காதலியைக் காணும்போது காதலன் மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் என்று கவிதை நயத்தோடு சிலர் எழுதுவார்களே, அதுபோன்ற ஒரு அனுபவம் புத்தகத்தைக் காதலிப்பவர்களுக்கும் இதுபோன்ற புத்தகக் காட்சியைக் காணப் போகிறபோது ஏற்படும் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு வருடமும் புத்தகக் காட்சி திருவிழா நடக்கும்போது ஒரிரு முறை சென்று வருவது நமது வழக்கம்தான். இந்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் முதன் முறையாக சென்றேன். கிட்டத்தட்ட உலகையே மறந்து புத்தகக் கடலில் மூழ்கி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்போது நான் வாங்கிய புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்தது, பழம்பெரும் எழுத்தாளரான திரு. சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ என்ற புத்தகத்தைச் சொல்ல வேண்டும். அந்தப் புத்தகத்தை நான் வாங்க காரணமான விஷயங்களே ஒரு கதை போன்று சுவாரசியமானது. அதை அடுத்து வரும் இடுகைகளில் எழுத உத்தேசம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக புத்தகக் காட்சியைப் பார்க்க நேற்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நுழைவு வாயிலில் இருந்து காட்சி அரங்கம் வரை செல்ல இலவச சிறிய பேருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்தது. அங்கே நாம் சென்றபோது நமது நண்பர் எழுத்தாளர் திரு. ‘க்ளிக்’ ரவியும் நம்மோடு சேர்ந்து கொண்டார். அவருடன் அந்த அரங்கத்தைச் சுற்றி வந்தது ஒரு இனிமையான அனுபவம்.

அவர் தற்போது நிறைய வார இதழ்களுக்காகவும் எழுதிக் கொண்டிருப்பதால், புத்தகப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என்று பலருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். ஆங்காங்கே நின்று ஒரு சிலர் அவருடன் உரையாடும் போதும், இவராகச் சென்று சிலரிடம் பேசும்போதும் நம்மையும் சிலரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாக புத்தகக் கடலில் நீந்தி ஒருவழியாக வெளியே வரும் போது, கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, காபி அல்லது தேநீர் அருந்தவோ அல்லது பசியைப் போக்கிக் கொள்ளவோ விரும்பினால் அருகிலேயே ஒரு சிற்றுண்டி உணவகம் ஏற்பாடாகி இருக்கிறது.

நாளையோடு இந்தப் புத்தகக் காட்சி நிறைவடைவது மனதுக்கு கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும், அடுத்த வருடம் இது போன்ற ஒரு புத்தகக் காட்சியை எதிர்பார்த்து காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 4

26 டிசம்பர்

சென்ற சில இடுகைகளாக தான் சோதிடரானது எப்படி என்று கவிஞர் கடிவேலு சொல்லி வருகிறாரல்லவா? இதோ அவரே தொடர்கிறார். முந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 2

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 3

ஆவலோடு நான் எதிபார்த்துக் காத்திருந்த அந்த சனிக்கிழமையும் வந்தது. அன்று பிரதோஷ நாள் அல்லவா? அந்தப் பெரியவரைச் சந்திக்கும் நாள் என்பதால் காலை சீக்கிரமே குளித்து ரெடியாகி விட்டேன். நண்பருக்கு போன் போட்டு காலை பத்து மணிக்கு வருவதாக தகவல் சொல்லி விட்டேன்.

நான் அங்கு சென்றபோது நண்பர் நம்மை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

“அப்பா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன்.

“ஹாலில்தான் இருக்கிறார். இன்று முழுவதும் உபவாசம் இருப்பார். புத்தகங்களைப் படித்துக் கொண்டு சிவ சிந்தனையிலேயே இருப்பார்” என்றார்.

உள்ளே சென்ற போது, அந்தப் பெரியவர் ஹாலில் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்கள் மூடி இருந்தது. நான் மெதுவாக அருகில் சென்று, “ஐயா, வணக்கம்” என்றேன். அதைக் கேட்டு அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.

“என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்.

“நல்லா இருப்பா” என்று சொன்னவர், “நீ, அன்னிக்கு வந்தவன்தானே? விசாக நட்சத்திரம்” என்றார்.

“ஆமாம் ஐயா, அது நான்தான்” என்றேன். உடனே பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டி, “இப்படி உட்கார்” என்றார். அவர் காட்டிய இடத்தில் உட்கார்ந்தேன். என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார்.

“என்னிடம் ஏதோ கேட்க வந்திருக்கிறாய் போலத் தெரிகிறது. சரிதானே?” என்றார்.

“ஆமாம் ஐயா, அதற்குத்தான் வந்திருக்கிறேன்” என்றேன்.

“சொல்லு, என்ன விஷயம்?” என்றார்.

“நான் விசாரித்த வரையில், ஒருவருடைய ராசி, நட்சத்திரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் பிறந்த நேரம், இடம் இவற்றை வைத்து கணித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டேன்” என்றேன்.

“அது சரிதான். அது தெரிந்தால்தான் ஒரு சில கணக்குகளைப் போட்டு கண்டு பிடிக்கலாம். இப்போதெல்லாம் அதெற்கென்று நிறைய சாஃப்ட்வேர்கள் வந்து விட்டதால் அது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை” என்றார்.

“ஆனால், என்னுடைய பிறந்த நேரமோ, ஊரோ உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்புறம் எப்படி என்னுடைய ராசி, லக்னமெல்லாம் உங்களால் சொல்ல முடிந்தது?” என்றேன். அவர் கண்களை மூடி கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவர், “என்ன கேட்டே?” என்றார். என்ன இது! இப்படிக் கேட்கிறார். ஒருவேளை இதுவரை நடந்ததை எல்லாம் மறந்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றியது. சரி! வயதாகி விட்டாலே மறதி வருவது சகஜம்தானே என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

ஆனால் நான் அப்படி நினைத்தது தவறு என்று கொஞ்ச நேரத்தில் எனக்குப் புரிந்தது.

“நான் சென்ற முறை வந்திருந்த போது, என்னைப் பார்த்தவுடன் நான் துலா ராசி என்றும், மிதுன லக்னம் என்றும் சொன்னீர்களே, அது எப்படி என்று…”என்றவனை இடைமறித்து,

“அது மட்டுமா சொன்னேன். நீ விசாக நட்சத்திரம் 1ம் பாதம் என்றுகூடச் சொன்னேனே” என்றார். அதைக் கேட்ட எனக்கு அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. இவ்வளவு ஞாபக சக்தி உள்ளவர் எதற்காக நம்மிடம் ‘என்ன கேட்டாய்’ என்று மறுபடி சொல்லச் சொன்னார்? புரியவில்லை.

“நீங்கள் சொல்வது சரிதான், அதுதான் எப்படி என்று கேட்டேன்” என்றேன்.

“உன்னைப் பார்த்து தானே சொன்னேன்?” என்றார் என்னை நேராகப் பார்த்து.

“ஆமாம். என்னைப் பார்த்து தான் சொன்னீர்கள்” என்றேன்.

எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று புரியவில்லை. தொடர்ந்து அவரே,

“பிறகு என்ன சந்தேகம்?” என்றார்.

ஏன் இப்படிப் போட்டு குழப்புகிறார். எப்படி சொன்னீர்கள் என்று விளக்கம் கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் மழுப்புகிறாரே!

“ஐயா, அதில்தான் சந்தேகம். என்னைப் பார்த்தே எப்படி அதையெல்லாம் சொன்னீர்கள்?” என்றேன் பவ்யமாக.

“ஒரு விரல் நகத்தை வைத்துக் கொண்டு, அந்த நகத்துக்குரிய நபரையே சிலையாக வடித்த சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? ஒரு தலை முடியை வைத்து அதற்குச் சொந்தமான பெண்ணை மச்சம் முதற்கொண்டு மிகச் சரியாக ஓவியமாகத் தீட்டிய ஓவியனைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?” என்றார்.

“ஆம் ஐயா, நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சாமுத்திரிகா லட்சணத்தை வைத்து அப்படிச் செய்ய முடியும் என்று என்னுடைய சிறு வயதில் கேட்ட கதைகளில் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் தந்தையார் கூட இது போன்ற கதைகள் நிறையச் சொல்லி இருக்கிறார்” என்றேன்.

“ஏம்ப்பா, ஒரு நகத்தையோ, ஒரு தலைமுடியையோ வைத்து முழு உருவத்தையும் சிலையாகவோ, ஓவியமாகவோ வடிக்க முடியும் போது, உன்னை நேருக்கு நேர் பார்த்து உன்னைப் பற்றிய விபரங்களை என்னால் சொல்ல முடியாதா?” என்றார்.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் உறைத்தது. அப்படியானால் இவர் சாதாரணமான மனிதர் அல்ல. சாமுத்திரிகா லட்சணம் அறிந்த அறிஞர்.

அப்படியே அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன்.

“ஐயா, தவறாக நான் எதுவும் கேட்டு இருந்தால் மன்னிக்கவும்” என்றேன்.

“எழுந்திருப்பா, உன்மேல் தவறில்லை. இப்போது கலிகாலம், எதற்கெடுத்தாலும் சந்தேகம். நீ என்ன செய்வாய்?” என்றார்.

“ஐயா, ஒரு வேண்டுகோள். அருள்கூர்ந்து என்னை தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றேன்.

“சிஷ்யனா? எதற்கு?” என்றார் எதற்கும் பிடி கொடுக்காமல்.

“இந்த சாமுத்திரிகா லட்சணத்தை எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்” என்றேன்.

“அப்பா, எனக்கோ வயதாகி விட்டது. என்னால் அது முடியுமா என்று தோன்றவில்லை. அந்தக் கலையை நன்றாக அறிந்தவர்களும் மிக மிக சொற்பம். அதனால் உன்னுடைய எண்னம் நிறைவேறுவது மிகவும் கடினம்” என்றார்.

“ஐயா, நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. உங்களுக்கு எப்பொழுது வசதிப்படுமோ அப்போதெல்லாம் நான் வருகிறேன். வந்து கற்றுக் கொள்கிறேன்” என்றேன்.

“அப்படியெல்லாம் திடீரென ஆரம்பித்து விட முடியாது. நீ முதலில் ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற வேண்டும். அதன் பிறகுதான் இதற்கு வர வேண்டும்” என்றார்.

“அப்படியானால் ஜோதிட சாஸ்திரத்தை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டுகிறேன். அருள்கூர்ந்து என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்தார். அவர் முன்னால் கைகட்டி நின்று காத்துக் கொண்டிருந்தேன்.

“என்னுடைய சிஷ்யன் சேகரைப் போய் பார். அவன் உனக்கு உதவுவான்” என்றார். ஒரு போன் நம்பரையும், அட்ரஸையும் குறித்துக் கொடுத்தார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்” என்றேன்.

“முதலில் ஜோதிட சாஸ்திரத்தைக் கற்று தெளிவு பெறு. பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். ஒருவேளை என்னுடைய காலம் முடிந்து விட்டாலும் உனக்குத் தகுந்த குருநாதர் உன்னைத் தேடி வருவார்” என்று சொல்லி என்னை ஆசீர்வதித்தார்.

அவரை வணங்கி விடை பெற்று அங்கிருந்து கிளம்பினேன்.

இவ்வாறு தன்னுடைய கதையை முடித்தார் ஜோதிடர் கடிவேலு.

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 3

18 டிசம்பர்

சென்ற இடுகையில் தான் சோதிடரானது எப்படி என்ற கவிஞர் கடிவேலு சொல்லி வந்தாரல்லவா? இதோ அவரே தொடர்ந்து அந்தக் கதையைச் சொல்கிறார். கேட்போம். முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யாரிடமாவது கேட்டு ஏதாவது விளக்கம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது பக்கத்து வீட்டில் இருப்பவர் ஜோதிடத்தில் ஓரளவு பரிச்சயமுள்ளவர் என்று தெரிந்தது. இவ்வளவு நாள் பக்கத்து வீட்டில் இருந்தாலும் நமக்குத் தேவை என்று வரும் போதுதான் அவரிடம் என்ன தனித்துவம் இருக்கிறது என்று நமது கவனத்துக்கு வருகிறது.

மாலை நேரத்தில் மொட்டை மாடியில் காலாற சிறிது நேரம் நடப்பது அவர் வழக்கம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் அன்று மாலை நானும் மொட்டை மாடிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த அவர் ஆச்சரியமடைந்து, “என்ன வாக்கிங்கா?” என்று பேச்சை ஆரம்பித்தார். சிறிது நேரம் பரஸ்பரம் குசலம் விசாரிப்புகள். அதற்குப் பின் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

“நீங்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ராசியையும், லக்னத்தையும் எப்படி கண்டு பிடிப்பது என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டேன்.

“என்ன திடீரென்று ஜோதிடத்தைப் பற்றி விசாரிக்கிறீர்கள்?” என்றார்.

“சும்மா தெரிந்து கொள்ளலாம் என்றுதான்” என்றேன்.

“ஒருவர் பிறந்த பிறந்த நேரத்தையும், பிறந்த இடத்தையும் வைத்து, அந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த அமைப்பில் இருக்கிறது என்று பஞ்சாங்கம் மூலமாகத் தெரிந்து, அவற்றைக் கருத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு சில கணக்குகளைப் போட்டு, ஒரு முடிவுக்கு வருவதுதான் ஜாதகம் கணித்தல் எனப்படுகிறது. அதில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுதான் அந்த ஜாதகரின் நட்சத்திரம். அது இடம் பெற்ற வீடுதான் அவரின் ராசி என்று சொல்லப்படும்” என்று சொல்லி சிறிது நிறுத்தினார்.

“சரிதான். புரிகிறது. லக்னம் என்றால் என்ன?”

“குழந்தை பிறந்த நேரத்தில் எந்த ராசி உதயமாகிறதோ, அதுதான் அந்தக் குழந்தையின் லக்னம் ஆகும்”

“அப்படியானால் ஒரே நேரத்தில் இருவர் வேறு வேறு இடங்களில் பிறந்தால் அவர்கள் ஜாதகம் மாறுபடும், சரிதானே” என்றேன்.

“ஆமாம், ஒரு சில நிமிட வித்தியாசம் கூட மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தும்” என்றார் உறுதியாக.

“சரி, ஒருவரைப் பார்த்தவுடன் அவர் என்ன ராசி, என்ன லக்னம் என்று சொல்ல முடியுமா?” என்று அடுத்த கேள்வியைக் வீசினேன். எனக்குத் தெரிய வேண்டியது அதுதானே.

“அது எப்படி முடியும்? அது சாத்தியமில்லையே” என்றார், என்னை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே.

“ஆனால் ஒருவர் என்னைப் பார்த்தவுடனே என்னுடைய ராசி, லக்னம் எல்லாவற்றையும் சொன்னாரே” என்றேன்.

“அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே” இப்போது அவருக்கு ஓரளவுக்கு என்னுடைய நோக்கம் புரிந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

“அது மட்டுமல்ல, அவர் என்னுடைய நட்சத்திரம் விசாகம் என்றும் அதிலும் 1ம் பாதம் என்றும் கூட சொன்னார்” என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “இதை என்னால் நம்ப முடியவில்லையே” என்றார். அவர் முகத்தில் ஆச்சரியக்குறி!

“ஆனால் அதுதான் உண்மை. அவர் சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை” என்றேன்.

“அப்படியானால் அவர் ஒரு அதிசய மனிதர்தான். ஒரு சிலர் இப்படிப்பட்ட சக்தி உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். கொஞ்ச நேரம் அமைதியாகக் கழிந்தது. பிறகு,

“ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த புத்தகத்தைப் படிக்கலாம்?” என்று கேட்டேன்.

“குடும்ப ஜோதிடம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதைப் படித்தால் ஓரளவு ஜோதிடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அவரிடம் பேசிய பிறகு, அந்த அதிசய மனிதரை உடனே சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. ஆனால் அடுத்த பிரதோஷம் வரை காத்திருக்க வேண்டுமே. அன்று தானே அவரை சந்திக்க முடியும்.

அன்று மாலை புத்தக கடைக்குப் போய் பக்கத்து வீட்டு நண்பர் சொன்ன குடும்ப ஜோதிடம் புத்தகத்தை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அதில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் நமது ராசி, லக்கினம் இவற்றுக்கு என்ன பலன் என்று முதலில் தெரிந்து கொள்ளலாம் என்று அதை மட்டும் படித்தேன்.

பின்பு நட்சத்திரங்களுக்கு உரிய பலன் என்ன என்பதைப் பார்த்தேன். விசாக நட்சத்திரம் 1, 2, 3, 4 என்று நான்கு பாதங்களுக்கும் பலன் அதில் சொல்லப் பட்டிருந்தது. எனக்கு விசாகம் முதல் பாதம் என்பதால் அதற்குரிய பலனைப் படித்தேன். படித்தவுடன் திகைத்து விட்டேன்.

அதில் இப்படி சொல்லப்பட்டிருந்தது.

visakham 

நன்றி: குடும்ப ஜோதிடம்

அதில் சொன்னபடி கல்வியில் ஆர்வம், சங்கீதத்தில் பிரியம் உள்ளவர் போன்ற விஷயங்கள் உண்மையென்றாலும், மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் நடக்காத காரியங்களை சாதிக்க முயல்பவர்க்ளாக இருப்பார்கள் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜோதிட சாஸ்திரம் கூறுபவர்களாக இருப்பார்கள் என்பதைப் படித்த போது, அந்தப் பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது. அவரைச் சந்திக்கும் போது நமக்குப் பொருந்தாத விஷயங்கள் சொல்லப் பட்டிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பிரதோஷம் நாளை மறுநாள் சனிக்கிழமை வருகிறது. என்னுடைய ஆவல் மிகவும் அதிகமானது.

அடுத்த இடுகையில் தொடரும்.

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 2

4 டிசம்பர்

சென்ற இடுகையில் தான் சோதிடரானது எப்படி என்று கவிஞர் கடிவேலு சொல்ல ஆரம்பித்தாரல்லவா? நாம் மிகவும் ஆவலுடன் அந்தக் கதையைக் கேட்கத் தயாரானோம்.இதோ கவிஞரின் வார்த்தைகளிலேயே அந்தக் கதையைக் கேட்போம். அதற்கு முன்பு வெளியான கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்.

இதோ கவிஞர் கடிவேலு தொடர்கிறார்….

“ஒருமுறை என்னுடைய வியாபார விஷயமாக ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன்.. அவருடைய வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். அவருக்கு சுமார் எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். வந்தவர் கொஞ்ச நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென என்னைப் பார்த்து, “ஏம்ப்பா, உனக்குத் துலா ராசி தானே?” என்று கேட்டார். முன்பின் தெரியாத ஒருவர் திடீரென்று இப்படிக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உடனடியாக வார்த்தைகள் வரவில்லை. அதற்கு முன்னால் அவரை நான் பார்த்ததே இல்லை. என்னைப் பற்றி எந்த விபரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பார்த்ததுமே, ‘உனக்கு துலா ராசியா என்று கேட்கிறாரே’ அது எப்படி? என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, சரி அவரிடமே கேட்கலாம் என்று, அவரைப் பார்த்து, “ஐயா, எப்படி…” என்று கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் “விசாகம் 1ம் பாதமா?, 2ம் பாதமா?” என்று அடுத்த கேள்வியை வீசினார். எனக்கு மேலும் அதிச்சி! ராசியைச் சொன்னார். அதற்காவது ஏதோ காரண காரியம் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக ஒரு நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு அதிலும் 1ம் பாதமா, 2ம் பாதமா என்று கேட்கிறாரே? என்று அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு என்னுடைய நட்சத்திரம் மட்டுமே தெரியும். அதில் உள்ள பாதமெல்லாம் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கும் அப்படித்தானே, கோயிலில் அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சகர் கேட்டால் மட்டுமே ராசி நட்சத்திரம் சொல்கிறோம். மற்றபடி வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை அல்லவா? அதனால், ‘ஐயா நான் துலா ராசிதான், விசாக நட்சத்திரம்தான். ஆனால் பாதம் பற்றி எல்லாம் தெரியாது’ என்றேன். அப்படியா என்று கேட்டு விட்டு, என்னை சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். “உனக்கு விசாகம் 1ம் பாதம்தான். லக்கினம் மிதுனம்” என்றார். அவர் குரலில் ஒரு உறுதி இருந்தது.

“ஐயா, எதை வைத்து இதையெல்லாம் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே ஏதோ ஜோக்கைக் கேட்டது போல் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்லி விட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று குழம்பியபடி என்னுடைய நண்பரைப் பார்த்தேன்.

“அப்பா, அவருக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை என்று சொல்கிறாரே, எப்படி என்று சொல்லேன்’ என்றார். அப்போதுதான் அவர் நண்பருடைய தந்தை என்று தெரிந்தது. அதைக் கேட்டதும் அந்தப் பெரியவர், “அடப் போடா, அவரே பெரிய ஜோதிடர்தானே” என்றார். எனக்கு திக்கென்றது. ‘நான் ஜோதிடனா?’ என்ன சொல்கிறார் இந்த மனிதர்? யார் இவர்? என்னென்னவோ சொல்கிறார் ஒன்றும் புரியவில்லையே’ என்று குழம்பிப் போனேன்.

அந்த மனிதர் வேறு எதுவும் சொல்லாமல் மறுபடி, வீட்டுக்குள் போய் விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருடைய மகனான என் நண்பரிடம் கேட்டேன். “என்ன இது? ஏதேதோ சொல்கிறாரே, கொஞ்சம் அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றேன்.

“அவர் சாதாரணமாக யாரிடமும் பேச மாட்டார். இப்போது உள்ளே போய் கேட்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றார்.

“யாரிடமும் பேச மாட்டாரா? அப்படியானால் இப்போது எப்படி பேசினார்?” என்று கேட்டேன். “அதுதான் எனக்கும் புரியவில்லை. ரொம்பவும் அவசியமானால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவார். மற்றபடி வேறு யாரிடமும் பேச மாட்டார்” என்றார்.

தொடர்ந்து அவரே, “ஆனால் ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் விரதம் இருப்பார். அன்று முழுக்க யார் என்ன கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்லுவார்” என்றார்.

எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இதற்குக் காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும்போல் இருந்தது. என்னைப் பார்த்த நண்பர், “ஒன்றும் கவலைப் படாதீர்கள்.  வரும் பிரதோஷத்தன்று காலையில் வாருங்கள். அப்போது உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்’ என்று சொல்லி என்னை வழியனுப்பி வைத்தார்.

நான் வீட்டிற்குத் திரும்பிய பிறகும் எனக்கு அதே நினைவாகவே இருந்தது. எல்லாமே ஒரு அதிசயம் போல் நடந்து முடிந்து விட்டது. நான் பெரிய ஜோதிடனாமே! இதுவரையில் ஜோதிடத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே! அதுபற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லையே! நம்மைப் பார்த்தவுடன் துலா ராசியா என்று எப்படிக் கேட்டார். விசாக நட்சத்திரம் அதிலும் 1ம் பாதம் என்று சொன்னாரே, அது உண்மைதானா?

உடனே, அதைத் தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஜென்ம நட்சத்திரம் விசாகம் ஆதியந்த பரம நாழிகை 64 வினாடி 26

கெர்ப்ப செல் நாழிகை 7 வினாடி 34 சுபம்

செல் நீக்கி நின்றது நாழிகை 56 வினாடி 52

புனர்பூசம்

விசாகம்

பூரட்டாதி

இம்மூன்று நட்சத்திரம் கொண்ட வியாழ மாகாதிசை வருஷம் 16

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஒன்றுமே புரியவில்லை. இதிலிருந்து பாதம் எப்படி தெரிந்து கொள்வது? அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். ஒவ்வொரு கிரகத்தின் நட்சத்திரமும் எந்த கிரகத்தின் சாரத்தில் என்று எழுதப்பட்டிருந்தது.

…………………………………………………………………………………………..

ராகுவின் சாரத்தில் லக்னம் திருவாதிரை 1ம் பாதம்

…………………………………………………………………………………………..

குருவின் சாரத்தில் சந்திரன் விசாகம் 1ம் பாதம்

………………………………………………………………………………………..

………………………………………………………………………………………..

………………………………………………………………………………………..

லக்னம் மிதுனம்

ராசி துலாம்

இதில் தான் விசாகம் 1ம் பாதம் என்று வருகிறது. அப்படியானால் இதுவாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தேன். மிதுன லக்னம் என்றும் இருக்கிறது. 

அப்படியானால் அந்தப் பெரியவர் சொன்னது சரிதான்! நமக்கே இதைப் புரட்டிப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எதையுமே பார்க்காமல் அவர் எப்படி இதையெல்லாம் சொன்னார்? யோசிக்க யோசிக்க குழப்பம்தான் அதிகமானது.

என்ன செய்யலாம், யாரிடமாவது கேட்கலாமா? என்று யோசனை வந்தது.

அடுத்த இடுகையில் தொடரும்