பொன் பொருளால் துன்பம் தீருமா?

25 ஜூலை

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

இந்த வார வெண்பா – 23

பொருள்தேடிப் போகின்ற பொல்லாத பேர்கள்

அருள்தேடிப் போவோர்க்கு இம்சை – தருகிறார்

பொன்னும் பொருளும் புரியாமல் தம்முடைய

துன்பம் அகற்றிட வேண்டி

பொருள்:

அருளைத் தேடி போகின்ற ஞானவான்கள் இவ்வுலக வாழ்க்கையில் இன்ப துன்பங்களைத் துறந்தவர்கள். ஆனால் பொருளைத் தேடி இந்த பூமியில் அலையும் பாமர மனிதர்கள் ஆசை, கோபம், காமம், குரோதம் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். அதனால் இன்பத்திலும் துன்பத்திலும் உழல்பவர்கள். இன்பம் வரும் கொண்டாடி மகிழ்பவர்கள், துன்பம் வரும் போது துடித்துப் போகிறார்கள். அத்துன்பத்தைத் தீர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள்.

அப்போது இன்ப துன்பத்தைக் கடந்த ஞானவான்களைக் கண்டால் உடனே அவர்களிடம் அப்படியே சரணடைந்து விடுகிறார்கள். தங்களது துன்பங்களைப் போக்குமாறு வேண்டுகிறார்கள். அதற்காக தாங்கள் இதுவரை ஆசையாகச் சேர்த்த பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். உண்மையான ஞானிகள் பொன்னையும் பொருளையும் விரும்ப மாட்டார்கள். ஆனால் தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவுவார்கள். ஆனால் போலி ஞானிகள் இதை ஒரு வியாபார வாய்ப்பாக கருதி விடுகிறார்கள்.

Advertisements

பறவைகள் காணும் அதிசயம்!

17 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 21

படக்கவிதைப் போட்டி – 21

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-21 க்கு நாம் அனுப்பிய கவிதை.

குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு

சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை

காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்

கூட்டமாய் வந்தது பார்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

யோக சூத்திரத்தின் பொருளை உணர்தல்

15 ஜூலை

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

இந்த வார வெண்பா – 22

கருத்தை உணர்தல் முயற்சி பயிற்சி

குருவிடம் தீட்சையால் கூடும் – தருவேன்

அறிமுகம்; ஆழ்ந்ததோர் சிந்தனையில் தோன்றும்

பிறிதொரு நல்ல பொருள்

பொருள்:

யோக சூத்திரத்தின் கருத்துக்களை சரியாக உணர்ந்து கொள்வதற்கு தகுந்த குருவிடம் தீட்சை பெற்று, விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதன் சரியான பொருளை உணர முடியும். இங்கு நான் தர இருப்பது வெறும் அறிமுகம் மட்டுமே. அதே கருத்தை தங்களது அனுபவத்துடன் சேர்த்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் வேறு வேறு அர்த்தங்களும் தோன்றக்கூடும். அது அவரவர் சிந்தனையையும் அனுபவத்தையும் பொருத்தது.

அரசனுக்கு இது முறைதானோ?

10 ஜூலை
படக்கவிதைப் போட்டி-20

படக்கவிதைப் போட்டி-20

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-20 க்கு நாம் அனுப்பிய கவிதை.

அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
       அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
       உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
       இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க 
சிறுமுயலை கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
       செயல்தான் முறையாமோ சொல்லேன்?

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

கர்மவினை தீர்ப்பாள் அன்னை

8 ஜூலை

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

இந்த வார வெண்பா – 21

வாள்கொண்டு புல்லறுக்கும் தன்மையாய் அன்னையின்

தாள்வணங்கி வேண்டினால் தான்அறுப்பாள் – நீள்பிறப்பில்

தான்சேர்ந்த எல்லா வினைகளையும் அவ்வுயிர்

தான்புகாது மீண்டும்ஓர் கரு

 பொருள்:

பிறவி என்பது கணக்கிலடங்காத எண்ணிக்கையில் ஆனது. ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கர்மவினைகள் நம் கணக்கில் சேர்ந்து கொண்டே வரும். அதற்குத் தகுந்தபடி அடுத்த பிறவி அமையும். அதில் முந்தைய கர்மவினைகளுக்குத் தகுந்த பலனை அனுபவிக்கும் போது, அந்தப் பிறவியில் செய்யும் வினைகளுக்கு ஏற்ப மீண்டும் பாவபுண்ணியங்கள் சேரும். இப்படி இது முடிவில்லாத சுழற்சியாக நடந்து கொண்டே இருக்கும்.

இதையே திருவள்ளுவரும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் அன்னையின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு இந்தப் பிறவித் துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு வணங்கிக் கேட்டால், தன்னுடைய கருணையால் நம் கர்மவினைகளை அரிவாள் கொண்டு புல்லை அறுப்பது போல அறுத்து வீசி விடுவாள். அதன் பிறகு இனி ஒரு கருவில் சேர்ந்து மற்றொரு உயிரினமாக பிறக்கும் நிலைமை ஒழிந்து போகும்.

அணியாத முகமூடி கவிதைக்குப் பாராட்டு

6 ஜூலை

சென்ற வாரம் வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டி – 19 க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அதில் நாம் அனுப்பி இருந்த அணியாத முகமூடி ஜாக்கிரதை என்ற தலைப்பிலான கவிதை, இரண்டாவது இடத்துக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப் பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நாம் அனுப்பிய கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி ஜாக்கிரதை!

3 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 19

படக்கவிதைப் போட்டி – 19

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-19 க்கு நாம் அனுப்பிய கவிதை.

விதவிதமாய் மனிதர்தாம் நம்மிடையே இருக்கின்றார்;

     விசித்திரமாய் நாய்புலிமான் சிங்கம் நரியாக

நிதமொரு விதமான விலங்காக வலம்வந்தே

     நடமாடித் திரிகின்றார்; மனிதமுக(மே) முகமூடி!

முதலையாய் கடித்துயானை சாய்த்திடுவார்; விழுங்கும்

     மலைப்பாம்பாய் மாறிடுவார்; நன்மைதான் செய்து

உதவுகின்ற சாக்கில் உறவாடித் திரிந்திடுவார்;

     உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!

 

பழகும் விதத்தில் பார்க்கும் திறத்தில்

     பக்குவம் அறிந்து உணர்ந்து கொள்வீர்

அழகான முகத்தில் அணியாத முகமூடி

     அரவமா கொக்கா ஆளையே விழுங்கும்

கழுகா சிங்கமா நரியாஎன் றேஅறிந்து

     கணித்து அதற்கேற்ப முகமூடி அணிந்திடுவீர்

வழுவாது இக்கருத்து; அதுவிடுத்து புலியின்முன்

     வந்தமான் படும்பாடு யாவரும் அறிவரே!

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அன்னை அருளால் துன்பம் தீரும்

1 ஜூலை

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

இந்த வார வெண்பா – 20

தீருமுந்தன் கர்மவினை அன்னைஸ்ரீ தேவியின்

காருண்யம் மிக்க கடாட்சத்தால் – ஆறுதலாய்

யாருமின்றி ஏங்கிடும் வேளையில் தாய்வந்தே

பேருதவி செய்திடு வாள்

 பொருள்:

கருணைமிக்க அன்னை ஸ்ரீதேவியின் அருளால் நம்முடைய கர்மவினைகள் எல்லாம் தீரும். இன்று நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கு எல்லாம் காரணம் நம்முடைய முன்வினைப் பயனாகிய கர்மவினைதான். அறியாமல் குழந்தை செய்யும் தவறினால் அதற்கு ஏற்படும் துன்பத்தை போக்குவதற்கு பெற்ற அன்னை எப்படி அந்தக் குழந்தையின் மீது கருணை காட்டி அன்பைப் பொழிவாளோ, அது போன்றே அன்னையை நம்பியவர்களுக்கும் அவளின் கடாட்சத்தால் கர்மவினை தீரும்.

தன்னுடைய பக்தன் துன்பத்தில் தவித்து, காப்பாற்ற யாருமில்லையே என்று பரிதவிக்கும் போது, சர்வ வல்லமை பொருந்திய அன்னையே நேரில் வந்து அவனுடைய துன்பத்தைப் போக்குவாள். சூரியனைக் கண்ட பனி போல் அன்னையைக் கண்ட ஒரு நொடியில் அனைத்து துன்பங்களும் பறந்து போகும்.

மாபெரும் கவிதைப் போட்டியில் (2015) ஆறுதல் பரிசு பெற்ற என்னுடைய கவிதை…

30 ஜூன்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு இணையத் தமிழே இனி! என்ற தலைப்பில்

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய 

மாபெரும் கவிதைப் போட்டியில்  ஆறுதல் பரிசு பெற்றவர்கள்

வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய கவிதை…

 

இணையத் தமிழே இனி
அற்புதமாய் ஓர்உலகம் நாம்படைப்போம் அங்கு
       அனைத்துவகை மக்களுமே தானிருப்பர்
சிற்பியவன் தான்செதுக்கும் சிற்பம்போல் மக்கள்
       சிறப்புடனே வாழ்ந்திடவே செய்திடுவோம்
உற்சாகம் பொங்குகின்ற உன்னதவாழ்க் கையை
       உலகத்தோர் பெற்றிடவே ஒத்துழைப்போம்
பொற்காலம் என்றதனை பிற்கால சரிதம்
       போற்றிடவே ஏற்பாடுநாம் செய்திடுவோம்

 

தற்பெருமை பேசிடஓர் ஆளுமில்லை எங்கும்
       தவறான பேர்வழியாய் யாருமில்லை
தற்குறிதான் ஊரிலில்லை லஞ்சமில்லை எங்கும்
       தர்மமிகு வாழ்க்கைதான் எங்கெங்கும்
பிற்காலச் சந்ததிகள் யாவருக்கும் அங்கே
       பிறந்தாலே பெருமைதான் என்றிருக்கும்
உற்பாதம் ஏற்படுத்த யாருமில்லை என்ற
       உண்மையே எங்கேயும் நின்றிருக்கும்

 

கற்பதற்கு மூலமாகத் தீந்தமிழ்தான் கணினி
       கையாள தேவையும் அம்மொழிதான்
பற்பலவாய் எத்தனையோ மொழியிருந்தும் பலரும்
       படித்திடவே ஏங்குவது தமிழாகும்
அற்புதமாய் விஞ்ஞானக் கருத்தெல்லாம் நல்ல
      அழகான தமிழிலேதான் அமைந்திருக்கும்
நற்காலம் வருகுதென்று நாமுரைப்போம் இனிமேல்
      நாமிணையச் செய்யும்இன் பத்தமிழே

 

 

புதிய சிந்தனைக்குப் பாராட்டு

29 ஜூன்

படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

வல்லமை மின்னிதழ் நடத்தும் இந்தப் போட்டிக்கு நாம் அனுப்பி வைத்த கவிதை பாராட்டுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இதோ போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

…………………

…………………

அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
       மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
       இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
       தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
       தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

 

வல்லமைக்கும், போட்டியின் நடுவர் திருமிகு மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும் நன்றி!