தொகுப்பு | வெண்பா RSS feed for this section

வெண்பாவின் சுவை – 2

2 மார்ச்

தமிழில் உள்ள கவிதைகளை நாம் படித்து உணரும்போது அதில் உள்ள சில சொற்கள் பல வகையான அர்த்தத்தைக் கொடுப்பதைக் காணலாம். இதை சிலேடை என்று சொல்வார்கள். அதன் அர்த்தம் புரிந்து அதன் சுவையை பருகும்போது தமிழின் பெருமையை நம் முன்னோர்கள் சிறப்பித்துக் கூறுவதற்கான காரணம் தெரியும்.

கீழே தரப்பட்டுள்ள இந்த நேரிசை வெண்பா அதுபோல் பல பொருள்களைத் தருவதை இங்கு பார்ப்போம்.

 கண்ணில்பொய் சேர்த்து கவர்ந்திடும் தன்மையால்

மண்ணில்நாம் ஏற்றகட மையென்று – எண்ணியே

மைகொண்ட பேர்களைக் கண்டால் அனிச்சையாய்

கைநீண்டு போகிறது பார்

இந்தப் பாடலை நேரடியான பொருளில் அர்த்தம் கொண்டால் கண்களில் கள்ளத்தனத்துடன் மற்றவர் பொருட்களைக் களவாடும் மனிதரைக் கண்டவுடன் அவரைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு அனிச்சையாகவே கை நீண்டு செல்கிறது என்று பொருள் தரும்.

அதாவது திருடர்கள் ஒருவகையான திருட்டு முழியுடன் நடமாடுவதால் அவர்கள் களவாடும்போது அவர்களைப் பிடிக்க காவலரோ அல்லது பொதுமக்களோ அது தமது கடமை என்று எண்ணி கை நீட்டுவார்கள் என்று அர்த்தம். மை என்ற கொல்லுக்கு குற்றம் என்றும் ஒரு பொருள் உண்டு.

வேறு பொருள்:

இதையே வேறு வகையிலும் பொருள் கொள்ளலாம். அதாவது விலையுயர்ந்த பொருளை வைத்திருப்போர் கண்களில் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அதை மறைக்க பொய்மையுடன் நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை திருடர்கள் எளிதாக அறிந்து கொண்டு அவர்கள்தான் தம்முடைய இலக்கு என்று உணர்ந்து சம்யம் பார்த்து திருடுவதற்கு கை நீட்டுவார்கள் என்றும் அர்த்தம் கொல்ளலாம்.

மற்றொரு பொருள்:

இதையே ஒரு ஆசிரியர் தவறு செய்த மாணவனைக் கண்டு பிடிப்பதற்கும் ஏற்ற பொருளாகக் கொள்ளலாம்.

இன்னொரு பொருள்:

இந்த வெண்பாவின் முதல் இரண்டு சீர்களை எடுத்துக் கொள்வோம்.  கண்ணில்பொய் சேர்த்து: சேர்த்து என்பது முடிவு பெறாத ஒரு சொல்லாகும். அத்துடன் கொண்டது அல்லது கொள்வது என்று இன்னொரு சொல் சேரும்போது அது முழுமை பெறும். அதாவது சேர்த்துக் கொண்ட அல்லது சேர்த்துக் கொள்ள என்பது போல்/ இந்த வெண்பாவில் அப்படி ஒரு சொல் மூன்றாவது அடியில் முதல் சீர் மைகொண்ட என்று வருகிறது. எனவே கண்ணில்பொய் சேர்த்து என்பதை கண்+இல்+பொய் என்று பிரித்து. அந்த சொற்களுடன் மை சேர்த்தால்

கண்மை கொண்ட பேர்களை என்றும்

இல்மை அதாவது இன்மை கொண்ட பேர்களை என்றும்\

பொய்மை கொண்ட பேர்களை என்றும் அர்த்தம் தரும்.

இதற்குரிய பொருள் என்ன என்று பார்ப்போம்:

அப்படிப்பட்டவர்கள் (கண்மை, இன்மை, பொய்மை கொண்டவர்கள்) எளிதில் நமது கவனத்தைக் கவர்கிறார்கள். அப்படிக் கவர்பவர்களைக் கண்டவுடன் அது நம் கடமை என்று எண்ணி அவர்களை நோக்கி நம்மை அறியாமலே கை நீட்டுகிறோம் என்பது (காரணம் வேறு வேறு என்றாலும்) இதன் பொருள்.

கண்மை – கண்களில் மை தீட்டிய பேர்களைக் (அது குழந்தையாகவோ அல்லது குமரியாகவோ இருக்கலாம்) காணும் போது அவர்களைக் கட்டி அணைத்துக் கொஞ்சுவதற்கு கை நீள்கிறது என்று பொருள்படும். குழந்தை என்றால் பிரச்சினை இல்லை, குமரி என்று சொல்லும்போது அது மனைவி அல்லது காதலி என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அப்படிச் செய்பவரைத் தண்டிப்பதற்காக தானாக கை நீண்டுவிடும் என்று அர்த்தம் மாறிவிடும்.

இன்மை – தன்னிடம் இல்லை என்பதால் இன்னல் பட்டு அதை தீர்க்குமாறு கேட்பவர்களுக்கு தானமாகவோ அல்லது உதவியாகவோ பொருள் கொடுப்பதற்கு கை நீள்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.

பொய்மை – பொய் சொல்பவரை அவருடைய கண்கள் காட்டிக்கொடுத்து விடும். அப்படிப்பட்டவரைக் கண்டால் அவரைப் பிடிக்க தானாகவே கை நீண்டு விடும் என்று பொருள்படும். (அலுவலகத்தில் உயர் அதிகாரி நம் அருகில் வரும்போது அவருடன் கை கொடுப்பது அப்படித்தான் தோன்றுகிறது என்று சிலர் இதன் பொருளாக எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

பின் குறிப்பு:

சரி…. எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் இந்தப் பாடல் எந்த இலக்கியத்தில் அல்லது சங்ககாலப் பாடலில் வருகிறது என்று கேட்பவர்களுக்கு….

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க… சும்மா நான்தான் எழுதிப் பார்த்தேன்.

Advertisements

கடவுள் வாழ்த்து-2

15 பிப்
மனம்கலங்கி நொந்து இனிஎன்தான் செய்வோம்
எனஇருந்த காலத்தில் தன்னை – மனம்உருகி
வேண்டிடும் பேர்களுக்கு இன்னலை நீக்கியே
ஆண்டவன் நல்அருள்புரி வான்

பொருள்:

வாழ்க்கையின் ஓட்டத்தில் மனிதன் பல இன்னல்களை சந்திக்கிறான். தன்னால் முடிந்த அளவு அவற்றோடு போராடுகிறான். ஒரு கட்டத்தில் இனிமேல் தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வருகிறது. அதனால் கலங்கி நிற்கிறான். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒரே வழி இறைவனிடம் சரணடைவதுதான். அப்படி தன்னை நாடி மனம் உருகி வேண்டும் போது அவனுடைய துன்பத்தை தீர்ப்பதற்கு இறைவன் அருள் புரிகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஓர் அற்புத அனுபவம் ஆகும்.

 

சொல்லும் வார்த்தைகளில் கவனம் தேவை

17 அக்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25 26 27 28

இந்த வார வெண்பா – 29

சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்

நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்

வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்

எல்லாமாய் இருந்திடும் நம்பு

பொருள்:

மனிதன் மனதில் உருவாகும் எண்ணத்தை செயலாக மாற்ற உதவுவது சொல்தான். எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையில் ஒரு கதவு போல் அது செயல்படுகிறது.

ஆனால் வார்த்தைகள் மிகவும் சக்தி உள்ளவை. எனவே அதைக் கவனமாகக் கையாள வேண்டும். கவனமில்லாது சொல்லப் படும் கோபமான வார்த்தைகள் அழிவைக்கூட ஏற்ப்டுத்தி விடும்.

இதையே தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு

என்ற குறளில் விளக்குகிறார்.

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்று சொல்வார்கள். மனிதர்களிடையே சண்டையை உண்டாக்குவதும் சொல்தான். சமாதானம் பேசி அதை நிறுத்துவதும் சொல்தான். எனவே

அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள்; தன்னம்பிக்கையை கொடுக்கும்.

ஆறுதல் வார்த்தைகளைப் பேசுங்கள்; தற்கொலையைக்கூடத் தடுக்கும்.

இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள்; நட்பை வளர்க்கும்.

ஊக்கமான வார்த்தைகளைப் பேசுங்கள்; முயற்சியைத் தூண்டும்..

கருணையான வார்த்தைகளைப் பேசுங்கள்; சோகத்தை விரட்டும்.

நன்றிமிக்க வார்த்தைகளைப் பேசுங்கள்; உதவிடத் தூண்டும்.

பொறுமையான வார்த்தைகளைப் பேசுங்கள்; கோபத்தைக் குறைக்கும்

இறைவன் யாரைத் தேடுவான்?

21 செப்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25 26 27

இந்த வார வெண்பா – 28

சேருகின்ற செல்வமெல்லாம் தானதர்மம் செய்திடுவேன்

தாருமென்று கேட்பவர்க்குத் தந்திடுவேன் – ஊருலகின்

துன்பமும் நீக்கிடுவேன் என்பவர்முன் ஆண்டவனும்

அன்புருவாய் தோன்றானோ சொல்

பொருள்:

தான் பெற்ற செல்வமனைத்தையும் தான தர்மம் செய்வதற்குச்  செலவிட்டு, அப்படித் தம்மிடம் உதவி வேண்டுமென்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது ஈந்து, உலகத்து மாந்தர்களின் துன்பங்களைத் துடைப்பேன் என்று உறுதி கொண்டு வாழ்பவர்களுக்கு அன்பு மயமான எல்லாம் வல்ல இறைவனே தேடி வந்து காட்சி தர மாட்டானோ?

சுயநலமின்றி வாழ்ந்தால் புண்ணியம்

7 செப்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25 26

இந்த வார வெண்பா – 27

பயனைப் பெரிதாய் கருதாமல் என்றும்

சுயநலம் இன்றியே வாழு – தயவினை

நாடியே வந்தவர்தம் துன்பமது நீக்கினால்

தேடியே புண்ணியம் சேரும்

பொருள்:

யோகத்தால் வரும் பயனை மட்டுமே கருதி சுயநலத்துக்காக அதைப் பழகாமல், பிறருக்கு உதவ அதை ஒரு வாய்ப்பாகக் கருதி வாழ வேண்டும். துன்பத்தால் தவித்து அதிலிருந்து விடுபட வேண்டி தம்மை நாடி வருபவர்களின் துயரத்தை துடைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால், எல்லாப் புண்ணியங்களும் தேடி வந்து சேரும்.

யோகத்தால் பயன் உண்டு

21 ஆக

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25

இந்த வார வெண்பா – 26

தெறித்தே பலதிசையும் ஓடும் மனம்ஓர்

நெறியை அறியா நிலையில் – அறிந்தே

முறையாக யோகம் பயின்றால் அதன்பின்

குறையாது வந்திடும்நற் பயன்

பொருள்:

மனதைக் கட்டுப் படுத்தும் வழிமுறை அறியாத நிலையில், அது ஒரு நிலையில் நில்லாது கண்டபடி ஓடும். ஆனால் தகுந்த குருவிடம் தீட்சை பெற்று முறையாக யோகப் பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். அதன் காரணமாக சிறந்த பயன் நம்மை வந்தடையும் என்று நிச்சயமாக நம்பலாம்.

பிறர்க்கு உதவுவதே தர்மம்!

7 ஆக

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24

இந்த வார வெண்பா – 25

வருகின்ற தெல்லாம் பிறர்க்கு நிறைவாய்

தருகின்ற வாழ்க்கையே தர்மம் – கருமய்யம்

கொண்ட வினைப்பதி வெல்லாம் இதனாலே

கண்டபடி ஓடும் தெறித்து

பொருள்:

அன்னையில் அருளால் நாம் பெற்ற செல்வம் அனைத்தையும் தேவை உள்ளவருக்கு கொடுத்து நிறைவாக வாழ்வதே தர்மம் மிகுந்த வாழ்க்கையாகும். அப்படி வாழும் புண்ணியம் மிக்க வாழ்வின் பயனாய் இதுவரை நமது கருமய்யத்தில் பதிந்திருக்கும் வினைப் பதிவுகள் எல்லாம் முழுவதுமாக நீங்கி விடும். அதன் பின்பு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல்படும் நிலைமை நமக்கு வராது.

வீணையும் பெண்ணும் – சிலேடை

5 ஆக
படக்கவிதைப் போட்டி - 24

படக்கவிதைப் போட்டி – 24

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-24 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்

வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்

வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்

நல்லதோர் வீணையாம் பெண்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

செல்வம் தரும் அன்னையின் கருணை

1 ஆக

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

இந்த வார வெண்பா – 24

வேண்டிய எல்லாம் தருவாள் மனமதைத்

தூண்டியே காட்சி தருவாள் – ஆண்டியே

என்றாலும் அன்றாடம் காய்ச்சியே ஆனாலும்

குன்றாத செல்வம் வரும்

பொருள்:

இகலோக வாழ்வுக்குத் தேவையான அனைத்து செல்வங்களையும் தாராளமாகத் தருவதில் அன்னை பராசக்திக்கு ஈடு இணை இல்லை. அவளது கருணை அளவிட முடியாதது. அன்னையிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு, அவர்கள் வேண்டியபடி எல்லாம் தருவாள். தன்னிடம் வேண்டுவது அரசனா, ஆண்டியா அல்லது அன்றாடம் காய்ச்சியா என்றெல்லாம் பார்க்காமல் தன்னுடைய கருணையை அள்ளி வழங்குவாள். வேண்டி நிற்கும் பக்தனுக்கு அன்னை மனது வைத்தால் அள்ள அல்ளக் குறையாத அனைத்து வகை செல்வங்களும் உண்டாகும்.

பொன் பொருளால் துன்பம் தீருமா?

25 ஜூலை

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

இந்த வார வெண்பா – 23

பொருள்தேடிப் போகின்ற பொல்லாத பேர்கள்

அருள்தேடிப் போவோர்க்கு இம்சை – தருகிறார்

பொன்னும் பொருளும் புரியாமல் தம்முடைய

துன்பம் அகற்றிட வேண்டி

பொருள்:

அருளைத் தேடி போகின்ற ஞானவான்கள் இவ்வுலக வாழ்க்கையில் இன்ப துன்பங்களைத் துறந்தவர்கள். ஆனால் பொருளைத் தேடி இந்த பூமியில் அலையும் பாமர மனிதர்கள் ஆசை, கோபம், காமம், குரோதம் போன்ற லௌகீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள். அதனால் இன்பத்திலும் துன்பத்திலும் உழல்பவர்கள். இன்பம் வரும் கொண்டாடி மகிழ்பவர்கள், துன்பம் வரும் போது துடித்துப் போகிறார்கள். அத்துன்பத்தைத் தீர்க்க பல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள்.

அப்போது இன்ப துன்பத்தைக் கடந்த ஞானவான்களைக் கண்டால் உடனே அவர்களிடம் அப்படியே சரணடைந்து விடுகிறார்கள். தங்களது துன்பங்களைப் போக்குமாறு வேண்டுகிறார்கள். அதற்காக தாங்கள் இதுவரை ஆசையாகச் சேர்த்த பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். உண்மையான ஞானிகள் பொன்னையும் பொருளையும் விரும்ப மாட்டார்கள். ஆனால் தன்னால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவுவார்கள். ஆனால் போலி ஞானிகள் இதை ஒரு வியாபார வாய்ப்பாக கருதி விடுகிறார்கள்.