தொகுப்பு | வல்லமை RSS feed for this section

வீணையும் பெண்ணும் – சிலேடை

5 ஆக
படக்கவிதைப் போட்டி - 24

படக்கவிதைப் போட்டி – 24

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-24 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்

வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்

வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்

நல்லதோர் வீணையாம் பெண்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

Advertisements

பறவைகள் காணும் அதிசயம்!

17 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 21

படக்கவிதைப் போட்டி – 21

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-21 க்கு நாம் அனுப்பிய கவிதை.

குற்றம் சுமத்தும்தன் மாமியாரை அன்போடு

சுற்றமாய் பார்த்து கடற்கரையில் – ஒற்றுமை

காட்டும் மருமகளைக் காணவே புள்ளினங்கள்

கூட்டமாய் வந்தது பார்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அரசனுக்கு இது முறைதானோ?

10 ஜூலை
படக்கவிதைப் போட்டி-20

படக்கவிதைப் போட்டி-20

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-20 க்கு நாம் அனுப்பிய கவிதை.

அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
       அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
       உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
       இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க 
சிறுமுயலை கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
       செயல்தான் முறையாமோ சொல்லேன்?

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி கவிதைக்குப் பாராட்டு

6 ஜூலை

சென்ற வாரம் வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டி – 19 க்கான முடிவுகள் இன்று அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அதில் நாம் அனுப்பி இருந்த அணியாத முகமூடி ஜாக்கிரதை என்ற தலைப்பிலான கவிதை, இரண்டாவது இடத்துக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப் பட்டு பாராட்டுப் பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கு நடுவராக இருந்து கவிதைகளைத் தேர்வு செய்த கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 19 இன் முடிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நாம் அனுப்பிய கவிதை வாசிக்க இங்கே சொடுக்கவும்

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

அணியாத முகமூடி ஜாக்கிரதை!

3 ஜூலை
படக்கவிதைப் போட்டி - 19

படக்கவிதைப் போட்டி – 19

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-19 க்கு நாம் அனுப்பிய கவிதை.

விதவிதமாய் மனிதர்தாம் நம்மிடையே இருக்கின்றார்;

     விசித்திரமாய் நாய்புலிமான் சிங்கம் நரியாக

நிதமொரு விதமான விலங்காக வலம்வந்தே

     நடமாடித் திரிகின்றார்; மனிதமுக(மே) முகமூடி!

முதலையாய் கடித்துயானை சாய்த்திடுவார்; விழுங்கும்

     மலைப்பாம்பாய் மாறிடுவார்; நன்மைதான் செய்து

உதவுகின்ற சாக்கில் உறவாடித் திரிந்திடுவார்;

     உலகினில் உய்யவே உண்மையைக் கண்டுணர்வீர்!

 

பழகும் விதத்தில் பார்க்கும் திறத்தில்

     பக்குவம் அறிந்து உணர்ந்து கொள்வீர்

அழகான முகத்தில் அணியாத முகமூடி

     அரவமா கொக்கா ஆளையே விழுங்கும்

கழுகா சிங்கமா நரியாஎன் றேஅறிந்து

     கணித்து அதற்கேற்ப முகமூடி அணிந்திடுவீர்

வழுவாது இக்கருத்து; அதுவிடுத்து புலியின்முன்

     வந்தமான் படும்பாடு யாவரும் அறிவரே!

வல்லமை மின்னிதழுக்கு நமது நன்றி!

கைகாட்டியாய் தடுக்கும் மரக்கிளை

26 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 18

படக்கவிதைப் போட்டி – 18

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-18 க்கு நாம் அனுப்பிய கவிதை.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை

     மனத்தால் மதமும் மதத்தால் இனமும்

இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்

     இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்

தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே

     தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ

தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட

     தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

நன்றி: வல்லமை மின்னிதழ்

உதயமும் அஸ்தமனமும்

19 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 17

படக்கவிதைப் போட்டி – 17

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-17 க்கு நாம் அனுப்பிய கவிதை.

தங்க நிறத்தில் வானம்

தகதகக்கும் இளஞ் சூரியன்

துள்ளி வரும் வெள்ளலைகள்

கொள்ளை கொள்ளும் மணல்வெளி

இதமான காற்றின் தழுவல்

இன்பமான காலைப் பொழுது

பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து

பரவசப்படுத்தும் அற்புத அழகு

இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்

இன்பமான வாழ்வில் மகிழ்வோம்

எல்லாம் சரிதான் – ஆனால்….

எச்சரிக்கை செய்கிறது மனது

அழகின் பின்னே மறைவாய்

ஆபத்தும் இருக்கலாம்  ஜாக்கிரதை!

இன்று போல்தான் உலகம்

அன்றும் விடிந்தது நமக்கு

அமைதியாய் தோன்றும் கடலும்

ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது

சுனாமி பேரலையாய் புகுந்து

சுருட்டிக் கொண்டு போனது

மனித உயிர்கள் எல்லாம்

மரணத்தின் பிடியில் சிக்கியது

கொத்துக் கொத்தாய் உயிரற்று

குடிசைகள் எங்கும் பிணங்கள்

வருஷம்பல கடந்தும் மனது

வலிக்கின்ற ஆறாத ரணங்கள்

ஒரே நாளில் வாழ்வு

உருக்குலைந்து போனது

அழகான உதயம் அன்று

அஸ்தமனமாய் ஆனது

நன்றி: வல்லமை மின்னிதழ்

குரங்கு சொல்லும் சேதி!

12 ஜூன்
படக்கவிதைப் போட்டி - 16

படக்கவிதைப் போட்டி – 16

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-16 க்கு நாம் அனுப்பிய கவிதை.

வலது பக்க உடலைக்கூட

வலது கையால் சொறியும்

வனத்துக் குள்ளே மரத்திலேறி

தாவித் தாவித் திரியும்

தாவுகின்ற கிளைகள் எல்லாம்

பூமி நோக்கிச் சரியும்

பூவைப் பிய்த்து போடும்போது

குரங்கின் சேட்டை புரியும்

 

குதித்து வந்து வாழைப்பழத்தை

பறித்துக் கொண்டு விரையும்

பல்லைக் காட்டி சீறும்வாயும்

காதை நோக்கி விரியும்

காசுக்காக ஆடச் சொல்வான்

மனிதன் என்று அறியும்

மனமுமொரு குரங்கு என்று

மனிதருக் கெல்லாம் தெரியும்

 

மரத்தை வெட்டி காடழித்தால்

மழையும் அங்கே பொய்க்கும்

நீண்ட தூரம் நீருக்காக

நடக்கும் நிலை வாய்க்கும்

வழியும் துளியாம் குடிநீரை

வாயை வைத்து உறியும்

நிலமை வந்து சேருமென்று

நமக்கும் கூடத் தெரியும்

 

இயற்கை பறவை விலங்குகளின்

இயல்பில் மனிதன் கற்பான்

அறிவு ஆற்றல் சிந்தனையால்

அரிய செயல்கள் புரிவான்

குரங்கு தரும் எச்சரிக்கை

புரிந்தால் வாழ்வு சிறக்கும்

பூமியெங்கும் பசுமையானால்

புதிய வாழ்வு பிறக்கும்

நன்றி: வல்லமை மின்னிதழ்

திரைகடலோடும் கொக்கு!

4 ஜூன்
படக்கவிதைப்போட்டி - 15

படக்கவிதைப்போட்டி – 15

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-15 க்கு நாம் அனுப்பிய கவிதை. இந்தக் கவிதை கலிவெண்பா வகையைச் சேர்ந்தது.

ஆற்றில் வரும்தண்ணீ ரைஅணைகள் கட்டியே

வேற்றுமை காட்டித் தடுக்கின்றார் – சோற்றுக்குப்

பஞ்சமில்லா சோழநாட்டில் நெல்விளைய நீருமில்லை

அஞ்சித் தவிக்கும் விவசாயி – வஞ்சகம்

பண்ணாத வான்மழை வேண்டித் தொழுகின்றான்

வெண்கொக்கு ஒன்று இரைவேண்டி – தண்ணீரைத்

தேடியே வானத்தில் ஆங்கே அலைகிறது

நாடியநீர் எங்குமே காணவில்லை – வாடித்

தவித்து வறண்டபூமி யில்வீழ்ந்த போது

புவிதனில் வெப்பக்காற் றோடு – செவியினில்

கேட்டது நொந்த விவசாயி சொன்னவுரை

மாட்டுக்கும் புல்லுஇல்லை புள்ளினங்கள் – வேட்டைக்கு

மீன்களும் இங்கில்லை; முன்னொரு காலத்தில்  

வான்மழை பொய்த்தாலும் வற்றாத – பொன்னிநதி

ஆற்றினில் வெள்ளம் வரும்அதில் துள்ளியே

வேற்றிடத்து மீன்கள் வரும் – காற்றென

ஓடிடும்மீன் ஓட உறுமீன் வரும்வரை

வாடியே காத்திருந்து தன்னிடத்து – நாடியே

வந்தமீனைக் கொத்தியே தின்றிருக் கும்கொக்கு

அந்தக்கா லம்திரும்பா தோஇன்று – நொந்தநம்

வாழ்வில் இனிவசந்தம் தான்வீசா தோ;ஒருநாள்

தாழ்ந்தநம் வாழ்வும் தலைநிமிரும் – வீழ்ந்ததை

எண்ணியே வருந்தாதே வெண்கொக்கே நீமுயன்றால்

மண்ணிலே வேறிடத்தில் வாழ்விருக்கும் – விண்ணில்

பறந்தேதான் சென்றுவிடு; இச்சொல்லால் அவ்விடமே

துறந்து செழிப்பான வாழ்வுதேடும் – திறத்தால்

திரைகடல் மேலே விரைவாய் பறந்து

இரைதனைத் தேடுகின்ற கொக்கு

 

நன்றி: வல்லமை மின்னிதழ்

‘படைப்பாளி’ கவிதைக்குப் பாராட்டு!

1 ஜூன்

வல்லமை இணைய இதழ் நடத்தும் படக்கவிதைப் போட்டியில் படைப்பாளி என்ற தலைப்பில் நாம் எழுதிய கவிதையை இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிதையாகத் தேர்ந்தெடுத்ததற்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

படக்கவிதைப் போட்டி – 14 இன் முடிவுகளைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

வல்லமைக்கு நமது நன்றி!