சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 18

20 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  8-11-14  மற்றும் 10.11.14 அன்று வெளியான அத்தியாயம் 18 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 17 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

8-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

17. பந்துலுவின் கடைசி நாட்கள்

பந்துலுவின் இறுதிச் சடங்குக்கு வந்த விசாலாட்சி, சில நாட்கள் சென்னையில் தங்கி இருந்தாள். முத்தம்மாளும் மீனாட்சியும் தன்னிடம் பேசிய ஆறுதலான வார்த்தைகள் அவளுக்கு பந்துலு இறந்ததனால் ஏற்பட்ட துக்கத்தை சிறிது போக்கியது.

 சந்திரிகை வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதுவரை தான் விசுவநாத சர்மாவுக்கு துணையாக இருப்பேன் என்று அவர்களிடம் விடைபெற்று ராஜமஹேந்திரபுரம் சென்றாள்.

 18.சந்திரிகையின் துணிவு

 சரோஜினி நாயுடு கொடுத்த கடிதத்துடன் லண்டனில் இருந்து புறப்பட்டு சந்திரிகை இந்தியா வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட மீனாட்சியும், கோபாலய்யங்காரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது 18 வயது நிரம்பிய பருவ மங்கையாக சந்திரிகை விளங்கினாள்.

 முத்தம்மாளும் சோமநாதய்யரும் அவளைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டார்கள். பந்துலு இறந்தது பற்றியும், இறுதி வரை அவள் நினைவாகவே இருந்தது பற்றியும் மீனாட்சி விவரித்தாள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க பந்துலு ஆசைப்பட்ட விஷயத்தையும் மீனாட்சி சொன்னாள். எனவே விரைவில் திருமண ஏற்பாடுகளைச் செய்ய இருப்பதாகச் சொன்னாள்.

 ஆனால் சந்திரிகையோ ஆங்கிலேயர் ஆட்சியை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே தன்னுடைய முதல் லட்சியம் என்றாள். அப்போது நாடு இருந்த சூழ்நிலையைக் கண்டு அவள் மனம் கொதித்தது. எப்பாடு பட்டாவது உடனே நாடு விடுதலை பெறுவதற்குத் தேவையான காரியங்களில் ஈடுபட வேண்டும்;ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஆவேசப்பட்டாள். அவளது பேச்சு மீனாட்சிக்கு கவலையளித்தது.

 பிறகு அன்னி பெசன்ட் அவர்களைச் சென்று பார்த்தாள் சந்திரிகை. சரோஜினியின் கடிதத்தைப் படித்த அன்னி பெசன்ட், அவளை வெகுவாகப் பாராட்டி, தன்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் நடத்தி வந்த பத்திரிகையிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினாள். அதில் தன்னுடைய கருத்துக்களை ஆவேசமாக எழுத ஆரம்பித்தாள் சந்திரிகை. அது ஆங்கிலேய அரசின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியது. அதைப் படித்த மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியும் போராட்ட குணமும் பரவியது .

அதனால் சந்திரிகை மீது ஆங்கிலேய அரசின் கவனம் திரும்பியது. லண்டனில் படித்து சட்ட அறிவு மிகுந்த சந்திரிகையை எப்படியாவது தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அவளுக்கு அரசின் சார்பில் பலப்பல சலுகைகளும் அளிக்க முன் வந்தார்கள். வசதியான வாழ்க்கையும் அரசாங்கத்தில் பதவியும் கிடைக்குமென ஆசை வார்த்தை கூறினார்கள்.

 ஆனால் எதையும் சந்திரிகை ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தாய் நாட்டுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்று அவர்களது கோரிக்கையை புறக்கணித்தாள். புரட்சிகரமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தாள்.

 பாரதியின் கவிதைகளை மேற்கோள் காட்டி பத்திரிக்கைகளில் எழுதினாள்.

 தேடிச் சோறுநிதந் தின்று -பல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

   வாடப் பல செயல்கள் செய்து – நரை

 கூடிப் கிழப்பருவம் எய்தி –  கொடுங்

     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

     வீழ்வே னென்று நினைத்தாயோ?

 என்றும்

 தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்

     கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?

என்றும் அவள் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் மக்களின் சுதந்திர தாகத்தை தூண்டியது.. சந்திரிகையின் புகழ் பரவியது. மக்கள் அவளின் ஒவ்வொரு சொல்லையும் செயல்படுத்த துடிதுடித்துக் கிளம்பினார்கள். எனவே ஆட்சியாளர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகத் விளங்கினாள். ஆங்கிலேய அரசாங்கம் அவள் மீது வன்மம் கொண்டு அவளை அழித்து விட நேரம் பார்த்துக் காத்திருந்தது.

 அவளது சட்டநுணுக்கங்கள் பொதிந்த வாதங்களை எதிர் கொள்ள முடியாமல் வெள்ளையர் அரசு திணறியது. அதனால் அவளை எந்த வகையிலாவது அடக்குவதற்கு அரசாங்கத்தின் சார்பில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் 1921ம் ஆண்டு ஆரம்பத்தில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வர இருப்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினாள் சந்திரிகை. அதனால் இளவரசர் வருகைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

 1921 வருடம். சந்திரிகை இந்தியா வந்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டது.

இப்போது அவளுக்கு வயது இருபது. அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தாள். சுதந்திர இந்தியாவில் தன்னுடைய குடும்பமும்,குழந்தைகளும் வாழ வேண்டும் என்கிற உறுதியான எண்ணம் காரணம்.

 ஒரு நாள் மாலை வீடு திரும்பிய கோபாலய்யங்கார், சந்திரிகையை கைது செய்து யாரும் அறியாமல் தனியிடத்துக்கு கொண்டு சென்று, பிறகு அவளை சுட்டு கொல்ல அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகச் சொன்னார். அதைக் கேட்ட மீனாட்சி அரற்றினாள்; அழுது புலம்பினாள்.

10-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

18.சந்திரிகையின் துணிவு

ஆனால் சந்திரிகை எதற்கும் அஞ்சவில்லை. மீனாட்சிக்கும், மற்றவர்களுக்கும் ஆறுதல் சொன்னாள், அன்றே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தாள். கூந்தலை அள்ளி முடித்து சிங்கின் தலைப்பாகை போல மாற்றி ஆண்வேடம் தரித்து, இரவு ரயிலில் கிளம்பி, ராஜமஹேந்திரபுரம் சென்றாள். சில நாட்கள் அங்கே தங்கி இருந்தாள். விஜயவாடாவில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் நடக்க இருப்பதை அறிந்து, அங்கே சென்றாள். அங்குதான் அவள் உத்தம் சிங்கை சந்தித்தாள்.

 முதலில் சந்திரிகையை ஒரு ஆண் என்று நினைத்த உத்தம் சிங், சிங் வேடத்தில் இருந்த சந்திரிகையைப் பற்றி விசாரித்தான். ஆங்கிலேயே அரசாங்கம் தன்னை ஒழித்துக் கட்டத் தீர்மானித்திருக்கும் விஷயத்தையும், அதனால் தான் மாறு வேடம் புனைய வேண்டிய அவசியத்தையும் சொன்னாள் சந்திரிகை. இருவரும் நண்பர்களாயினர்.

 பிறகு உத்தம் சிங் பற்றி விசாரித்தாள். தான் பஞ்சாபில் ஒரு ஆசிரமத்தில் இருந்ததாகவும், ஜாலியன் வாலாபாக் படுகொலையை தான் நேரில் பார்த்ததாகவும், அந்த நிகழ்ச்சி தன் மனதை மிகவும் பாதித்து விட்டதாகவும்,அந்தப் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரையும், அவனுடைய செயலை நியாயப் படுத்திய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரையும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றான் உத்தம் சிங். பிறகு அந்த சம்பவத்தை விவரித்தான்.

1919ம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பெருவாரியான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் உள்ள பெரிய மைதானத்தில் குழுமினார்கள். அன்று பைசாகி பண்டிகை வேறு. அந்த கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதற்காக அங்கு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும் பெருமளவில் திரண்டிருந்தனர். மொத்தம் இருபதாயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள்.

 மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. நானும் என்னுடைய ஆசிர நண்பர்களும், அவர்களுக்குத் தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். மக்கள் அமைதியான முறையில் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.

 திடீரென கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்ப்பட்டது. ஜெனரல் டயர் என்பவன் இரண்டு பீரங்கி மற்றும் துப்பாக்கி ஏந்திய 90 ஜவான்களுடன் அங்கு வந்திருப்பதாக பேச்சு பரவியது. அந்த இடத்திற்கு வரும் வழி மிகவும் குறுகியது என்பதால் பீரங்கியை வெளியே நிறுத்தி விட்டு 50 ஜவான்களுடன் உள்ளே நுழைந்தான் ஜெனரல் டயர்.

 மக்களிடம் ஒரு பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்தவில்லை. சிறிது நேரத்தில் ஜவான்கள் பாதி பாதியாக டயருக்கு இருபுறமும் பிரிந்து நின்றார்கள். எந்தவித எச்சரிக்கையும் இன்றி சுடுவதற்கு கட்டளையிட்டான் அந்த மனிதாபிமானமற்ற மிருகம். துப்பாக்கியினால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலம். அப்பாவி பெண்கள், குழந்தைகள் எல்லாம் அந்த இடத்திலேயே மடிந்தனர்.

 சுமார் பத்து நிமிடம் வரை துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கு இருப்பவர் எவரும் தப்பிக்க முடியாது என்று தோன்றியது. அதனால் மக்கள் தப்பிக்க வழி தேடி எங்கெங்கோ ஓடினார்கள். அங்கே இருந்த ஒரு பாழுங்கிணற்றில் பலர் குதித்தார்கள். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. எங்கெங்கும் அவல ஓலம் கேட்டது. குண்டுகள் முழுவதும் தீர்ந்த பிறகே நிறுத்தினார்கள். அதற்குள் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்து விட்டிருந்தார்கள். இன்னும் பலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார்கள். சுமார் 3000 பேர்களுக்கும் மேலாக காயமடைந்திருந்தார்கள்.

 உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்திருந்தால் அவர்களில் பலர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான உதவியும் கிடைத்து விடக்கூடாது என்று வாசலில் வழிமறித்து நின்றான் அந்தக் கொடியவன். நான் அப்போது ஒரு மூலையில் தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்தில் இருந்ததால் குண்டடியிலிருந்து தப்பினேன். வெளியேற முடியாததால் இரவு முழுவதும் அங்கேயே கழித்தேன்.

 அது ஒரு கொடுமையான இரவு. இரவு முழுவதும் தூங்காமலும் பசியுடனும் பொழுதைக் கழித்தேன். என் நண்பர்கள் பலரும் இறந்து கிடந்தார்கள். என் மனம் மிகவும் சோர்வுற்றது. எழுந்து நடமாடக்கூட சக்தி இல்லை. அப்படியும் அங்கே தண்ணீர் கேட்டு தவித்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தேன். நடுநிசி என்பதை எங்கோ தூரத்தில் கேட்ட மணிச் சத்தம் உணர்த்தியது. நாய்கள் குரைக்கும் சத்தம் இரவு முழுதும் கேட்டுக் கொண்டே இருந்தது. கோடைகாலம் வேறு. கடைசி வாய்த் தண்ணீருக்காக ஏங்கிய குரல்கள் நாலாபக்கமும் ஒலித்தன.

 அந்த இரவில் தங்களது குழந்தைகளைத் தேடி சில பெண்கள் பரிதவித்து இங்குமங்கும் தேடியது என் மனதைப் பிசைந்தது. அவ்வப்போது சில சிறுவர் சிறுமிகளின் லேசான விசும்பல் சத்தமும் கேட்டது. எனக்கு மட்டும் ஒரு துப்பாக்கி கிடைத்திருந்தால், நடக்கச் சக்தியற்ற அந்த நிலையிலும் ஊர்ந்து சென்றாவது அந்தக் கொடியவனைக் கொன்று பழி வாங்கி இருப்பேன். அன்று எத்தனை குழந்தைகள் தாய் தந்தையரை இழந்திருக்கும். என்னுடைய சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன் நான். அதனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும், அவமானங்களையும் உணர்ந்தவன். அதே துன்பங்களையும் அவமானங்களையும் அன்று பெற்றோரை இழந்த எல்லா குழந்தைகளும் அடைவார்களல்லவா? அன்றுதான் நான் ஒரு சபதத்தை மேற்கொண்டேன். எப்பாடு பட்டாவது அந்த ஜெனரல் டயரையும், கவர்னர் மைக்கேல் டயரையும் கொன்று தீர்ப்பேன் என்று கொதிப்போடு பேசினான் உத்தம் சிங்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: