சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 15

17 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  1-11-14 மற்றும் 3-11-14 அன்று வெளியான அத்தியாயம் 15 பதினைந்து இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 14 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

1-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

15.பந்தலு மனைவியின் மறைவு

 பந்துலுவின் மனைவி ராஜலட்சுமி அந்த வீட்டின் நடுவில் உள்ள பெரிய முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தார். அவர்களது முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. தான் வாழ்ந்த காலத்தில் கணவனுக்கு எல்லாவிதத்திலும் துணையாகவும் ஆறுதலாகவும் இருந்து வாழ்ந்து முடித்து விட்டோம் என்று ஒரு திருப்தி இருந்ததாக தோன்றியது. பெயருக்கு ஏற்றாற்போல் லட்சுமிகரமான முகம்.

 அவருக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் பந்துலு அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் அப்படியொரு சோகம். இதுவரை அப்படிப்பட்ட சோகமான முகபாவனையோடு அவரை யாரும் பார்த்ததில்லை. தன்னுடைய முற்போக்கான சிந்தனைக்கும் செயலுக்கும் பக்கபலமாக துணை நின்றதோடு தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் கொடுத்த மனைவி இன்று உயிருடன் இல்லை என்று நினைத்த போது ஏற்பட்ட விசும்பலை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 தன்னுடைய சித்தப்பா தன்னை அழைத்துக் கொண்டு போய் இதுதான் உன் மனைவி என்று சொன்ன போது,ராஜலட்சுமியை பார்த்த பந்துலுவுக்கு அவருக்கும் தனக்கும் ஏழு பிறவிக்கு பந்தம் இருந்தது போல் அப்படி ஒரு அன்னியோன்யம் தோன்றியது.

 அவர் நினைத்தது போலவே அன்பும், அடக்கமுமாக வாழ்ந்து இதுவரை தனக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்ட மனைவி இன்று உயிருடன் இல்லை. இனி எப்படி நமது மீதி வாழ்நாளைக் கழிக்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது. பீறிட்டுக் கொண்டு வந்த அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

 தனக்கு நல்ல உறுதுணையாகவும் ஆறுதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்ததை நினைத்துப் பார்த்தார். தனக்கு ஒரு நல்ல தோழியாகவும், பாதுகாவலாகவும் இருந்தவளாயிற்றே. இவளில்லாமல் எப்படி நான் இனி இருக்கப் போகிறேன். சட்டென அவருக்கு முன்னொரு சமயம் நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

 ஒருமுறை சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பிரம்ம சமாஜத்தில் ஒரு விதவையின் விவாகம் நடைபெற இருந்தது. கிளம்பி ரயில் நிலையத்தை அடைந்த போது அங்கு இருந்த சூழ்நிலை பயத்தை ஏற்படுத்தியது. ஆளரவமே இல்லை. ரயில் வர இன்னும் அரைமணி நேரம் இருந்தது. அதுவரை காத்திருக்கலாம் என்று அங்கே இருந்த ஒரு சிமென்ட் பலகையில் அமர்ந்தார்கள்.

 அப்போது எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாமல் திடுதிப்பென்று ஏழெட்டுப் பேர் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அப்போது அவர்களிடையே நடைபெற்ற பேச்சுக்களை இங்கு தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்கிறேன்.

 என்ன வீரேசலிங்கம்காரு, சொல்வதைக் கேட்க மாட்டீராஎன்றான் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன்.என்ன கேட்க வேண்டும்என்றார் பந்துலு.

 இதோ பார்ரா, ஒன்னுமே தெரியாதது போல பேசுராரு. தாலியறுத்தவளுக்கெல்லாம் விவாகம் செய்து வைக்கிறீரே. அதைச் செய்ய நீர் யாருவே. உமக்கென்ன அவ்வளவு அக்கறைஎன்றான் கோபத்துடன்.கணவனை இளம் வயதில் பறிகொடுத்து விட்டால், பின் அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையே இல்லையா. காலம் முழுவதும் எல்லோருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியது தானாஎன்று கேட்டார் பந்துலு.

 அப்படியெல்லாம் யாருவே இருக்கச் சொன்னது. கோயிலில் போய் சேவகம் செய்ய வேண்டியதுதானே. அதற்கு இஷ்டமில்லை என்றால் புருஷன் இறந்ததுமே, கூடவே உடன்கட்டை ஏறவேண்டியது தானே, அதுதானே முறைஎன்றான் இன்னொருவன்.

 இது கொஞ்சமும் மனிதாபமற்ற செயல். மனித உயிருக்கு கொஞ்சமும் மதிப்பில்லையா. இதெல்லாம் மூடப் பழக்க வழக்கங்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டியது அவசியம். அதை நான் செய்தே தீருவேன்என்றார் பந்துலு.

 இப்படியெல்லாம் சொன்னால் உமக்குப் புரியாது. இதோ உன்னுடைய உயிரைப் பறித்து உன் மனைவியை விதவையாக்குகிறேன். எவன் அவளுக்கு விவாகம் செய்து வைக்கிறான் என்று பார்க்கிறேன்என்று கையில் கத்தியுடன்  பாய்ந்தான் மற்றொருவன்.

 ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அவன் பந்துலுவின் மீது கத்தியைப் பாய்ச்சி இருப்பான். ஆனால் அந்த நேரத்தில் குறுக்கே பாய்ந்து மறித்த பந்துலு மனைவியின் தோளில் அந்தக் கத்தி இறங்கியது. அவர் அப்படியே கீழே சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த அந்தக் கூட்டத்தினர் தப்பி ஓடி விட்டனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ரயில் நிலைய அதிகாரி அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

3-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

அன்று மட்டும் ராஜலட்சுமி குறுக்கே புகுந்து என்னைக் காப்பாற்றி இருக்காவிட்டால் நான் அன்றே உயிர் துறந்திருப்பேனே. ஒருவேளை அந்தக் கத்தி அவளது நெஞ்சில் பாய்ந்திருந்தால். எனக்காக எவ்வளவு பெரிய தியாகத்தை செய்யத் துணிந்தாள். இப்படி எல்லாம் நினைத்துப் பார்த்த பந்துலுவுக்கு மனைவியை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது. கால்கள் தரையிலிருந்து நழுவுவது போலிருந்தது.

 விசுவநாத சர்மா ஆறுதலாக பந்துலுவின் தோளைத் தாங்கிக் கொண்டார். அவரை அப்படியே அணைத்தவாறு நடத்திக் கொண்டு போய் ஒரு நாற்காலியில் அமர வைத்தார். அந்த ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் பந்துலுவுக்கு ஆறுதல் கூற வந்திருந்தார்கள். பந்துலுவுக்கு சோகத்துடன் சேர்ந்து சோர்வும் ஏற்பட்டது. தன்னுடைய உயிரில் ஒரு பாதி தன்னை விட்டுப் பிரிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

 பந்துலு மனைவியின் இறுதிச் சடங்கு முடிந்து ஒரு மாத காலம் ஓடி விட்டது. இந்த ஒரு மாத காலத்தில் பந்துலு ரொம்பவும் சோர்ந்து விட்டார். அவர் சரியாக சாப்பிடுவதில்லை. வெளியில் அதிகமாகச் செல்வதில்லை. எப்போதும் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்து இருப்பார்.

 எவ்வளவு முற்போக்கான மனிதர். எத்தனை எத்தனை எதிர்ப்புகளை மீறி பெண் முன்னேற்றத்துக்காக எத்தனை தியாகங்களை செய்தவர். விதவை மறுமணத்திற்கும், பெண் கல்விக்கும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து பாடுபட்டவர் இப்படி சோர்ந்து கிடப்பதைப் பார்த்த விசாலாட்சி, அவருக்கு கொஞ்சம் இடமாறுதல் தேவை என்று உணர்த்தி, சென்னையில் சந்திரிகையுடன் சில நாட்கள் இருங்கள் என்று அனுப்பி வைத்தாள்.

 பந்துலு மேற்கொண்ட சீர்திருத்தப் பணிகளை விசாலாட்சியும் விசுவநாத சர்மாவும் சிறப்பாக கவனித்து வரலானார்கள். பந்துலு சென்னைக்கு வந்து தன்னுடைய நண்பர் வேங்கடாசலநாயுடுவுக்குச் சொந்தமான எக்மோர் வீட்டில் தங்கினார். யாருக்கும் தொந்திரவு கொடுக்க வேண்டாம் என்று ஹோட்டலில் சாப்பாடு ஏற்பாடு செய்து கொண்டார்.

 ஆனால் கோபாலய்யங்காரும், மீனாட்சியும் அவரைத் தங்களுடன் வந்து விடுமாறு கேட்டுக் கொண்டார்கள். தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்றும். ஹோட்டல் சாப்பாடும் உடலைக் கெடுத்து விடும் என்றும் சந்திரிகையுடன் இருப்பது மனத்துக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்றும் பலவாறாக வற்புறுத்தினார்கள். அதற்கு அவரும் சம்மதித்தார்.

சந்திரிகை அவருடைய மனத்துக்கு கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தினாள். தினமும் சந்திரிகையை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். சாயந்திரம் அவளை திரும்ப அழைத்து வருவார். அவளுக்கு பாடங்களைச் சொல்லித் தருவார். அதனால் எல்லா கவலைகளையும் மறந்து சென்னையில் வாழ்நாளைக் கடத்தி வந்தார். கொஞ்ச நாள் கழித்து மீனாட்சி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

 நாளாக ஆக அவர் மனம் தேர்ச்சி அடைந்தது. மறுபடி தன்னுடைய பணிகளிலும் கவனம் செலுத்தினார். அவ்வப்போது ராஜமஹேந்திரபுரம் சென்று வந்தார்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: