சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 12

13 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

இதற்கு முந்தைய அத்தியாயம் 11 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

23-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

12.வீரேசலிங்கம் பந்துலுவின் திட்டம்

ராஜமஹேந்திரபுத்துக்கு தன் மனைவி மீனாட்சியுடன் கோபாலய்யங்கார் போய் சேர்ந்த போது, பந்துலுவின் மனைவிதான் வீட்டில் இருந்தார். பந்துலு ஒரு வேலையாக வெளியே சென்றிருப்பதாகவும், அவர் வரும் வரை உணவருந்தி விட்டு ஓய்வெடுங்கள் என்று சொல்லி ஒரு அறையையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

 அன்று மதியம் வீட்டுக்கு வந்த பந்துலு, கோபாலய்யங்காரைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இருவரும் பலவிதமான கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டபின், மீனாட்சியைப் பற்றி பேச்சு வந்தது. அவள் இப்போது கல்வி கற்ற ஒரு நாகரீக மங்கையாக மாறிவிட்டதாக பெருமை பொங்க சொன்னார் கோபாலய்யங்கார்.

 ஆனால் அவள் மனதில் ஒரு குறை இருக்கிறது. அதன் காரணமாக வீட்டில் நிம்மதி இல்லை. நானும் கொஞ்ச நாட்களாக அதிகமாக மது அருந்துகிறேன்என்றார்.

 என்ன குறை என்று என்னிடம் சொல்லலாமென்றால் சொல்லுங்கள்என்றார் பந்துலு.

 எனக்கும் மீனாட்சிக்கும் விவாகம் முடிந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் எங்களுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கவில்லை. அதுதான் நிம்மதி இல்லாமல் போனதற்கு காரணம்என்றார் கோபாலய்யங்கார்.

 கவலைப்பட வேண்டாம். இப்போது மூன்று வருடம்தானே ஆகிறது. இன்னும் ஓரிரண்டு வருடங்கள் போனால் குழந்தை பிறக்கலாம். சிலருக்கு பத்து வருடங்களுக்குப் பிறகுகூட குழந்தை பிறந்திருக்கிறதுஎன்று சமாதானம் சொன்னார் பந்துலு.

 அதற்கு மாற்றாக மீனாட்சி ஒரு யோசனை சொன்னாள். அது விஷயமாகப் பேசத்தான் உங்களிடம் வந்திருக்கிறோம்என்றார் கோபாலய்யங்கார்.

அது என்ன யோசனைஎன்று ஆவலுடன் கேட்டார் பந்துலு.

ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமென்று யோசனை

ஆஹா, அருமையான யோசனையாயிற்றேஎன்று பாராட்டினார் பந்துலு.

அது பற்றி பேசத்தான் இப்போழுது வந்திருக்கிறோம்என்ற கோபாலய்யங்காரை கேள்விக்குறியுடன் உற்று நோக்கிய பந்துலு,

இந்த ஊரில் ஏதாவது குழந்தையை தத்தெடுக்க வேண்டுமா?” என்றார்.

இல்லை, சந்திரிகையை தத்தெடுக்க ஆசைப்படுகிறோம்என்றார்.

என்னது, சந்திரிகையா

ஆம், விசாலாட்சியிடம் இருக்கிறதே, அந்தக் குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறாள் மீனாட்சிஎன்றார் கோபாலய்யங்கார்.

இதைக் கேட்டதும் பந்துலு திகைத்தார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

பந்துலுகாரு நீங்கள் மனது வைத்தால் இந்த விஷயம் நல்லபடியாக முடியும். எனக்காக நீங்கள்தான் இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்என்று கெஞ்சும் குரலில் வேண்டினார் கோபாலய்யங்கார்..

24-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

இது பற்றி பல விஷயங்களையும் ஆலோசிக்க வேண்டும். உடனடியாக என்னால் எதுவும் முடிவு செய்ய இயலாது

நீங்கள் முடிவு செய்யும் வரை நான் காத்திருக்கத் தயாராக இருக்கிறேன். இப்போது அவள்தான் எங்களது வாழ்க்கையின் நம்பிக்கையாக இருக்கிறாள். இதற்காக மீனாட்சி சொன்னபடி நான் குடிப்பழக்கத்தையும் விட்டு விட்டேன்என்ற கோபாலய்யங்காரை வினோதமாகப் பார்த்தார் பந்துலு.

 என்ன, குடிப்பழக்கதை விட்டு விட்டீரா. ஆச்சரியமாக இருக்கிறதேஎன்றார்.

 ஆமாம், அந்தப் பழக்கத்தை விட்டால்தான் சந்திரிகையை தத்து எடுக்கும் எண்ணத்துக்கு ஒத்துக் கொள்வேன் என்று சொல்லி விட்டாள் மீனாட்சி

 கொஞ்ச நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார் பந்துலு. பிறகு, “சரி, நீங்கள் இருவரும் மாலை வரை ஓய்வெடுங்கள். அதன் பிறகு நாம் ஓரிடத்துக்குப் போகலாம். அவர்களிடம் பேசலாம்என்றவர், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் மாலையில் வருகிறேன்என்று கிளம்பி விட்டார்.

 கோபாலய்யங்காருக்கு குழப்பமாக இருந்தது. யாரைப் பார்க்கலாம் என்கிறார் இவர். வேறு ஏதாவது குழந்தையை காண்பித்து தத்து எடுக்க சொல்லப் போகிறாரா? நாம் சந்திரிகையைதானே தத்து எடுக்க விரும்புகிறோம். வேறு குழந்தை என்றால் மீனாட்சியும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டாளே.

 மதியம் உணவருந்தி விட்டு சிறிது நேரம் படுக்கையில் சாய்ந்தார். அவருக்கு உறக்கம் வரவில்லை. பந்துலு சொன்ன விஷயம் குழப்பமாகவே இருந்தது. மீனாட்சியிடம் சொல்லலாமா? அவள் பந்துலுவின் மனைவிக்குத் துணையாக ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறாளே. இப்போது கூப்பிட முடியாதேஎன்று பலவிதமாக சிந்தித்தபடி இருந்தார்.

அவர் கால்மாட்டில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். படக்கென்று எழுந்து உட்கார்ந்தார்.

 என்ன மீனாட்சி, ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய். சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்கலாமேஎன்றார்.

 இல்லை, நீங்கள் தூங்கி எழுந்த்தும் காப்பி கொண்டு வரலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன்என்றாள்.

 மீனாட்சி, உன்னிடம் நான் ஒரு விஷயம் பேச வேண்டும். இப்படி வந்து உட்கார்என்றார் கோபாலய்யங்கார்.

 கொஞ்சம் இருங்கள், காப்பி கொண்டு வருகிறேன். குடித்து விட்டு பிறகு பேசலாம்என்று அவருடைய பதிலுக்கு காத்திராமல் போய் விட்டாள்.

 சற்று நேரத்தில் மீனாட்சி கொண்டு வந்த காப்பியைக் குடித்து விட்டு கோபாலய்யங்கார் அவளிடம் கேட்டார்.

 மீனாட்சி, நான் பந்துலுவிடம் பேசிக் கொண்டிருந்தேன் அல்லவா. அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார். வேறு ஏதாவது குழந்தையை நாம் தத்தெடுக்க ஏற்பாடு செய்து விடுவாரோ என்னவோஎன்றார்.

 வேறு குழந்தையா, சந்திரிகைதான் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறாள். வேறு குழந்தையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுஎன்றாள் மீனாட்சி.

 எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் மாலையில் ஓரிடத்துக்கு கூட்டிப் போகிறேன் என்றார். எங்கே என்று தெரியவில்லை. எதற்கும் நீ உடை மாற்றிக் கொண்டு கிளம்பத் தயாராக இருஎன்று சொன்னார். அவர் மனதில் ஒருவித ஏமாற்றம் குடிகொண்டு இருந்தது.

 மாலையில் பந்துலு வந்தார். கோபாலய்யங்காருடன், மீனாட்சியையும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு மோட்டார் வண்டியில் கிளம்பினார். ஒரு அரை மணி நேரம் பயணித்து, கோதாவரி நதிக்கரையை அடைந்தார்கள். அதை ஒட்டிய சாலையில் வடக்கு நோக்கி பிரயாணம் தொடர்ந்தது.

25-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

வெளியே பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோதாவரி நதியில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. கரையோரம் பச்சைப்புல் வெளிகள் மற்றும் செடி கொடிகள் படர்ந்து, அந்தக் காட்சியே மனதைக் கொள்ளை கொள்வதாக இருந்தது. நதியின் மறுகரையே தெரியவில்லை மாலை வேளை என்பதால் சில்லென்று காற்று வீசியது.. ஆனால் கோபாலய்யங்கார் மனம் அதையெல்லாம் ரசிக்கும் நிலையில் இல்லை. யாரிடனும் பேசவும் இல்லை.

 மோட்டார் வண்டி கோதாவரி கரையை ஒட்டி இருந்த ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றது. அது புதிதாக கட்டப்பட்ட ஒரு பங்களா போன்று மிகவும் நேர்த்தியாக இருந்தது.

வாருங்கள்என்று சொல்லி விட்டு முன்னாள் நடந்தார் பந்துலு. அங்கே இருந்தவர்களைப் பார்த்ததும் கோபாலய்யங்காரும் மீனாட்சியும் ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒருங்கே அடைந்தார்கள்.

 ஐயா வாருங்கள், வா மீனாட்சி, என்று எல்லோரையும் வரவேற்றாள் விசாலாட்சி. சந்திரிகையும் அவளுடன் இருந்தாள். சந்திரிகையைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளைத் தூக்கிக் கொண்டாள் மீனாட்சி.

இவர்கள் எப்படி இங்கேஎன்று இன்னும் அதிர்ச்சி விலகாத நிலையில் பந்துலுவிடம் கேட்டார் கோபாலய்யங்கார். இருபத்தைந்து நாட்களுக்கு முன்னர் அவர்கள் வந்ததாகவும், தான் புதிதாக கட்டிய இந்த வீட்டில் அவர்களைத் தங்க வைத்திருப்பதாகவும் பந்துலு சொன்னார். சந்திரிகை வந்து மூன்று நாட்களாகிறது என்றும் சொன்னார்.

கொஞ்ச நேரம் பரஸ்பரம் நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விஷயத்துக்கு வந்தார் பந்துலு. கொஞ்ச நாட்களாக விசுவநாத சர்மா புத்தி பேதலித்தது போல் இருந்ததால் அவரால் அவருடைய எழுத்து வேலைகளை சரிவர செய்ய முடியவில்லை என்றும் அதனால் மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளான நிலையில் கொஞ்ச நாள் இடமாற்றம் வேண்டும் என்று அவர்கள் கருதி இங்கு வந்திருப்பதாகவும் விளக்கினார்.

மேலும் தான் ஹிதாகாரிணி பள்ளி ஒன்றும் விதவைகள் நல இல்லம் ஒன்றும் தான் ஆரம்பிக்க இருப்பதாகவும்,தன்னுடைய சொத்து முழுவதையும் ஹிதாகாரிணி சமாஜத்துக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் அதை மேற்பார்வை செய்து நடத்துவதற்கு விசாலாட்சியையும் விசுவநாத சர்மாவையும் தான் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர்களும் அதற்கு சம்மதித்திருப்பதாகவும் விவரமாக பந்துலு சொன்னார்.

 பந்துலுவின் பரந்த உள்ளமும் சேவை மனப்பான்மையும் அங்குள்ள எல்லோரையும் திக்பிரமை பிடித்து உட்கார வைத்தது. அவர் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. கோபாலய்யங்கார் பந்துலுவின் சேவை மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டினார்.

 பிறகு மீனாட்சியிடம் அவர்கள் ராஜமஹேந்திரபுரத்துக்கு வந்த காரணமென்ன என்று விசாலாட்சி கேட்டாள். மீனாட்சி கோபாலய்யங்காரையும், பந்துலுவையும் பார்த்தாள். அவள் தயங்கியதைப் பார்த்த பந்துலு நீ வந்த காரணத்தை சொல்லம்மாஎன்று ஊக்கப்படுத்தினார்.

27-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

அக்கா, நாங்கள் விவாகம் முடித்து தஞ்சாவூர் சென்று எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம். எனக்கு கல்வி கற்கவும், நாகரீக பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளவும் இவர் ஏற்பாடு செய்தார். எங்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மூன்று வருடம் ஓடி விட்டது. ஆனால்என்று நிறுத்திய மீனாட்சியைப் பார்த்தாள் விசாலாட்சி..

 ஆனால் என்ன மீனாட்சி, என்ன பிரச்சினைஎன்று வினவினாள்.

 இதுவரை எங்களுக்கு குழந்தை இல்லை. அந்த வேதனை பாடாய் படுத்துகிறது. அதனால் இவரை இன்னொரு விவாகம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். ஆனால் என் மேல் உள்ள அன்பால் வேறு விவாகத்துக்கு அவர் எண்ணம் கொள்ளவில்லை மன வேதனையை மறக்க இவர் தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டார். எங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விட்டதுஎன்றாள் மீனாட்சி.

 அதைத் தொடர்ந்து கோபாலய்யங்கார் பேச ஆரம்பித்தார்.

மீனாட்சிதான் குழந்தையை தத்து எடுக்கலாம் என்று யோசனை சொன்னாள். எனக்கும் அது சரியென்று பட்டது. அதனால் பந்துலுவிடம் சொல்லி அதற்கு ஏற்பாடு செய்யலாம் என்று வந்தோம்என்றார்.

 நல்ல யோசனைதான்என்றாள் விசாலாட்சி. இப்போதெல்லாம் தாய் தந்தையற்ற குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள். அதுதான் பந்துலு அய்யா அவர்கள் இந்த ஹிதாகாரிணி சமாஜம் ஆரம்பிக்க முக்கிய காரணம். ஐயாவுக்கு மிகப் பெரிய மனதுஎன்றாள் விசாலாட்சி.

 நானே நான்கு வயதில் தந்தையை இழந்தவன்தானே. பிறகு என்னுடைய சித்தப்பாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். அதனால்தான் அது போன்ற குழந்தைகளின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதுஎன்றார் பந்துலு.

 அக்கா, நீங்கள்தான் மனது வைக்க வேண்டும். உங்களைத்தான் நம்பித்தான் நாங்கள் வந்திருக்கிறோம்என்று கோபாலய்யங்காரைப் பார்த்தாள் மீனாட்சி.

 நானா, நான் என்ன செய்ய வேண்டும். பந்துலு ஐயா சரி என்று சொன்னால் போதுமேஎன்றாள் விசாலாட்சி பந்துலுவைப் பார்த்துக் கொண்டே.

 சந்திரிகையை எங்கள் மகளாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அவள்தான் எங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொடுக்க முடியும்என்றார் கோபாலய்யங்கார்.

 சந்திரிகையாஎன்று திடுக்கிட்ட விசாலாட்சி கோபாலய்யங்காரையும் பந்துலுவையும் மாறிமாறிப் பார்த்தாள்.

அது எப்படி முடியும். சந்திரிகை எங்கள் செல்லக்குழந்தையல்லவா. அவளை எப்படி கொடுக்க முடியும். இது நடக்காத காரியம்என்றாள் விசாலாட்சி.

சற்று நேரம் அமைதி நிலவியது. யாருக்கும் பேசத்தோன்றவில்லை.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: