சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 11

12 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

இதற்கு முந்தைய அத்தியாயம் 10 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

20-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

11.  மீனாட்சியின் தத்து எண்ணம்

சமையல் மட்டும்தான் மீனாட்சி செய்வாள். மற்றபடி பாத்திரங்கள் தேய்ப்பதற்கும் துணி துவைப்பதற்கும் வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்து கொண்டார்கள். தான் நன்றாக சமையல் கற்றுக் கொள்ளும் வரை ஒரு சமையல்காரியை ஏற்பாடு செய்யலாம் என்று மீனாட்சி யோசனை சொன்னாள்.

 ஆனால் அவள் செய்யும் சமையலே போதும் என்றும், அதுவுமில்லாமல் சமையல் வேலையும் இல்லையென்றால் அவளுக்கு பொழுது போவது சிரமம் என்றும் கோபாலய்யங்கார் காரணங்களைச் சொல்லி அந்த யோசனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். மீதியுள்ள நேரத்தில் அவள் கல்வி கற்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

மீனாட்சி ஏற்கெனவே கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படித்து நன்றாகத் தமிழ் எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டு இருந்ததால், ஆங்கிலமும் ஹிந்தியும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். அவளும் அதில் ஓரளவு தேர்ச்சி பெற்றாள். ஆனால் அவளது நடை உடை பாவனைகளை மாற்றுவதுதான் அவருக்கு மிகவும் சிரமமான வேலையாகத் தெரிந்தது.

தினமும் மாலை வேளைகளில் இருவரும் ஒன்றாக இருக்கும்போது, மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவார். விருந்துகளில் கலந்து கொள்ளும்போது எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுப்பார். அவளும் அவர் சொல்வதை புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.

 ஆனாலும் கோபாலய்யங்காருடன் உத்தியோகம் பார்ப்பவர்களும், மற்றவர்களும் அவர் ஒரு இடைச்சிப் பெண்ணை விவாகம் செய்திருப்பதை கிண்டலாக பேசுவது அவர் காதில் அரசல் புரசலாக விழுந்தது. என்றாலும் அவர் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. தவிரவும் அவருக்கு முன்னால் நேரடியாக அப்படிப் பேச யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.

 இப்படியே மூன்று வருடங்கள் ஓடி விட்டது. ஆனால் மீனாட்சி இன்னும் கருத்தரிக்கவில்லை. அது மீனாட்சிக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது. அது போன்ற நேரங்களில் கோபாலய்யங்கார் அவளைச் சமாதானப் படுத்துவார். சிலருக்கு தாமதமாக குழந்தை பிறப்பது உலக நடைமுறைதான். இன்னும் சில காலம் கழித்து குழந்தை பிறக்கலாம், அதனால் கவலைப்படாதேஎன்பார்.

 ஆனால் மீனாட்சிக்கு ஒரு குற்ற உணர்ச்சி மனதை அரித்துக் கொண்டிருந்தது. வேறு யாரையாவது விவாகம் செய்திருந்தால் இதற்குள் கோபாலய்யங்கார் ஒரு குழந்தைக்கு தந்தை ஆகி இருப்பார். நம்மால் அவருக்கு அந்த சந்தோஷத்தைக் கொடுக்க முடியவில்லையே என்று ஏங்க ஆரம்பித்தாள். எத்தனையோ எதிர்ப்புகளை மீறி நமக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தவருக்கு நம்மால் சந்தோஷம் கிடைக்கவில்லையே என்ற கழிவிறக்கம் அவளை வாட்டியது.

 அதனால் கோபாலய்யங்காரை வேறு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் இப்படிப் பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் காரணமாக கோபாலய்யங்காருக்கு மனதில் கவலை அதிகமாயிற்று. அதனால் இப்பொழுது அவர் அதிகமாக் குடிக்க ஆரம்பித்தார்.

 தினமும் குடித்துவிட்டு வரும் கணவனை எப்படி சரி செய்வது என்று மீனாட்சிக்குத் தெரியவில்லை. என்னதான் கோபமாக இருந்தாலும் அவர் நம் மீது அதிகமான அன்பு செலுத்தத்தான் செய்கிறார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மீனாட்சி பல விதமான யோசனைகளுக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தாள்.

 நமக்கு குழந்தை இல்லையென்றால் என்ன? ஏதாவது ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தால் என்ன என்ற யோசனை தோன்றியது. குழந்தை என்றவுடன் மூன்று வருடங்களுக்கு முன்பு பந்துலு வீட்டில் பார்த்த சந்திரிகையின் முகம் ஞாபகம் வந்தது. அவளது அறிவும், முக வசீகரமும், அவள் பாட்டுப் பாடும் அழகும் அவள் நினைவுக்கு வந்தது.

21-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

என்ன ஒரு அற்புதமான குழந்தை அவள். இப்போது ஆறு வயது இருக்கும். அவள் நம்முடன் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்க நினைக்க அவளுக்கு மனதில் சந்தோஷம் பீறிட்டது. அதுதான் சரி. இன்று அவர் வந்தவுடன் அவரிடம் இதைப் பற்றி பேசி விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து கணவன் வரவுக்காக காத்திருந்தாள்..

 அவருக்கும் சந்திரிகையை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த யோசனைக்கு உடனே சரியென்று சொல்லி விடுவார் என்று நினைத்து நிம்மதி அடைந்தாள். அன்று முழுவதும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியான பொழுதாகவே கழிந்தது. எப்போது கோபாலய்யங்கார் வீட்டிற்கு வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.

 அன்றும் வீட்டுக்கு வரும்போது கோபாலய்யங்கார் மது அருந்தி இருந்தார். வீட்டிற்குள் நுழைந்ததும், “ஏய்,மீனாட்சிஎன்று கூப்பிட்டார்.

மீனாட்சி ஓடி வந்து, “என்னங்கஎன்றாள். நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கோ, எனக்கு சாப்பாடு வேண்டாம்என்றவர் படுக்கையறையில் போய் கட்டிலில் சாய்ந்து விட்டார். தன்னுடைய் ஆசையை அவரிடம் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மீனாட்சிக்கு அழுகையாக வந்தது.

 அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. கோபாலய்யங்காரின் குறட்டை சத்தம் இரவு முழுக்க கேட்டுக் கொண்டே இருந்தது. பலவிதமான யோசனைகள் அவள் மனதில் ஓடின. தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் கணவரின் மனவருத்தத்தைப் போக்க நம்மால் என்ன முடியுமோ அதை உடனே செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

 காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, கோபாலய்யங்காருக்கு காபி கலந்து கொடுத்தாள். மீனாட்சி,தவறாக எடுத்துக் கொள்ளாதே. என்னால் மனபாரம் தாங்க முடியவில்லை. .அதனால்தான் அதிகமாகக் குடித்து விடுகிறேன்என்றார்.

உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்கள் கவலை விரைவில் தீரும்என்றாள் மீனாட்சி.

கோபாலய்யங்காருக்கு ஒன்றும் புரியவில்லை. நீ என்ன சொல்றே மீனாட்சி. எனக்குப் புரியவில்லையேஎன்றார். என்னங்க, நாம் ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள கூடாதுஎன்றாள். தத்து எடுப்பதா?யாரைத் தத்து எடுக்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். உங்களுக்கு சந்திரிகையை ஞாபகம் இருக்கிறதா. அவளுக்கு என்ன ஒரு அறிவு, எப்படிப்பட்ட அருமையான குழந்தை அவள்என்றாள்.

உடனே கோபாலய்யங்காருக்கு, சந்திரிகையை பந்துலு வீட்டில் பார்த்ததும் அவள் பாடியதும் ஞாபகம் வந்தது. அவ்வளவு ஏன், இந்த மீனாட்சி அவளோடு  விளையாடிக் கொண்டு இருந்தபோதுதானே இவளைக் கண்டு காதல் கொண்டோம். நமக்கு மீனாட்சி மனைவியாக அமைய அந்த சந்தர்ப்பம் தானே காரணம். ஆஹா,மீனாட்சி சொல்வது போல் அவள் மட்டும் நமது குழந்தையாக இந்த வீட்டில் வளர்ந்தால், இந்த வீடே சொர்க்கம் ஆகி விடுமே!

அற்புதமான யோசனையை அல்லவா மீனாட்சி சொல்லி இருக்கிறாள்.

கண்ணே, மீனாட்சி, நீ சொல்வதை நினைத்துப் பார்க்கவே இன்பமாய் இருக்கிறது. ஆனால் அந்த விசாலாட்சி அதற்கு சம்மதிப்பாளா? அவளுக்கு அந்தக் குழந்தை மீது இருக்கும் பிரியத்தை நாம் நேரடியாக கண்டோமேஎன்றார்.

உண்மைதான். ஆனால் அவள் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்து விட்டால் போகிறதுஎன்றாள் மீனாட்சி.

அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வதா? அவள் எப்படி அடிக்கடி தஞ்சாவூருக்கு வரமுடியும்என்று கேட்டார் கோபாலய்யங்கார்.

இங்கே வர வேண்டாம். நாம் அங்கே போய் விடுவோம். உங்கள் உத்தியோகத்தை சென்னைக்கு மாற்றச் சொல்லி கேட்டால் மாற்றல் கிடைக்காதா?” என்றாள்.

22-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

இதுவும் நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது என்று யோசித்த அவருக்கு இப்போது மீனாட்சி மீது அன்பு பெருக்கெடுத்தது. சந்திரிகை மட்டும் நமக்கு மகளாக வந்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானதாக மாறி விடும் என்று நினைத்துப் பார்த்தார். ஆஹா! இதெல்லாம் நடக்குமா? விசாலாட்சி இதற்கு சம்மதிப்பாளா?

 மீனாட்சி நீ சொல்வது அற்புதமான யோசனையாகத்தான் படுகிறது. ஆனால் இதெல்லாம் நடக்குமா என்ற சந்தேகமும் எழுகிறதுஎன்றார்.

 ஏன் அப்படிச் சொல்கிறீர்கள். விசுவநாத சர்மாவுக்கு புத்தி பேதலித்து விட்டதாகவும் முன்னைப் போல் எழுதவில்லை என்பதால் வருமானமும் இல்லை என்று நீங்கள் சொன்னீர்களே. விசாலாட்சியும் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக சொன்னீர்களே. இந்த நிலையில் கணவரைப் பார்த்துக் கொள்வதே விசாலாட்சிக்கு முழுநேர வேலையாக இருக்கும். சந்திரிகையை பார்த்துக் கொள்வதற்கும் இந்த ஏற்பாடு ஒரு நல்ல தீர்வாக இருக்குமல்லவாஎன்றாள்.

 கோபாலய்யங்கார் மீனாட்சியின் வாதங்களைக் கேட்டு பெருமைப் பட்டார். ஆனால் ஒரு முக்கிய விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்என்று ஆரம்பித்தாள் மீனாட்சி.

 என்ன மீனாட்சி, எதுவானாலும் சொல்

 நீங்கள் குடிப்பதை இத்தோடு விட்டுவிட வேண்டும். அப்படியென்றால்தான் இந்த ஏற்பாடு நடக்கும். இல்லையென்றால் நானே இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்என்றாள் அவரை நேராகப் பார்த்துக் கொண்டு.

 கோபாலய்யங்கார் இதை எதிர்பார்க்கவில்லை. யோசித்தார். இந்தக்குடிப் பழக்கத்தால் மீனாட்சியுடனான தாம்பத்யமும் மகிழ்ச்சியாக இல்லை. நமக்கும் கெட்ட பெயர். உடலுக்கும் தீங்கு. இப்படிப்பட்ட குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும் என்றால், அதைச் செய்வதுதானே உசிதம். அதுவும் சந்திரிகை போன்ற ஒரு தெய்வக் குழந்தை மகளாக கிடைக்க இதுதான் தடை என்றால் இதைச் செய்துதான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

 மீணாட்சி, இப்போதே சத்தியம் செய்து கொடுக்கிறேன். இனிமேல் நிச்சயமாக மதுவையோ, மாமிசத்தையோ தொடமாட்டேன். இது சத்தியம்என்றார்.

மீனாட்சிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எவ்வளவு அற்புதமான தருணம் இது. நமது வாழ்வில் வசந்த காலம் ஆரம்பித்து விட்டது என்று நம்பினாள். சந்திரிகையைப் பற்றி பேசினாலே இப்படிப்பட்ட அற்புதமெல்லாம் நடக்கிறதே. அவள் நமக்கு மகளாக வந்து விட்டால்… எவ்வளவு அற்புதமாக இருக்கும். உண்மையில் அவள் ஒரு தெய்வக் குழந்தைதான் என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்தாள் மீனாட்சி.

 ஆனால் இந்த எண்ணத்தை எப்படி செயல்படுத்துவது? நேரடியாக விசாலாட்சியிடம் கேட்கலாமா? அப்படிக் கேட்டு அதற்கு அவள் சம்மதிக்கவில்லை என்றால்… அய்யோ நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதே. வேறு என்ன வழி! இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த மீனாட்சிக்கு திடீரென பந்துலுவும் அவர் மனைவியும் ஞாபகத்துக்கு வந்தார்கள். ஆமாம்! அவர்கள்தான் இதற்கு சரியான ஆட்கள். அவர்கள் சொன்னால் விசாலாட்சியும் கேட்பாள். இவருக்கும் பந்துலு நல்ல நண்பர்தானே! நேரே அவரிடம் போய் விஷயத்தைச் சொன்னால் என்ன?

 ஒரு முடிவுக்கு வந்தவளாக கணவனிடம் சொல்லி பந்துலுவை போய் பார்ப்பதற்கு ஒத்துக்கொள்ள வைத்தாள். அடுத்த வாரத்தில் கிளம்பி ராஜமஹேந்திரபுரத்துக்குப் போகலாம் என்று முடிவானது.. ஆனால் அலுவலக வேலை காரணமாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர்கள் கிளம்ப ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: