மகாகவி பாரதியின் ‘சந்திரிகையின் கதை’ தொடர்ச்சி

10 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, அவர்களுடைய செய்தி மடலில் வெளியானது.

அக்டோபர் 13ம் தேதி அறிமுகமும், 14ந் தேதி முதல் சிறு சிறு பகுதிகளாக தினமும் அந்தக் கதை வெளியானது. நவம்பர் 16ந் தேதி வரை அந்தக் கதை தொடர்ச்சியாக வெளியிடப் பட்டது.

அந்தக் கதையைப் படிக்க கீழே உள்ள கூகுள் குரூப்ஸ் லிங்கை சொடுக்கவும்.

14-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

9.பெண்டாட்டிக்கு ஜயம்

மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார்.

தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின்,அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்யதெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே,இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்….

(குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், சந்திரிகையின் கதை முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.)

 பாரதியை வணங்கி இனி நாம் கதையைத் தொடருவோம்…..

அழைத்துக் கொண்டு விசாலாட்சியின் வீட்டுக்குப் போய் வரலாம்என்றாள். சோமநாதய்யருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனைவி சொல்வதை மறுத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது. தெய்வம் பக்தனை சோதிக்கும் என்று தான் நினைத்தது சரிதான் என்று தோன்றியது. அதற்குச் சான்றாக இப்படி ஒரு சோதனை உடனடியாகவே ஏற்பட்டு விட்டதே. என்ன செய்வது?

இப்போது விசாலாட்சி வீட்டுக்குப் போவது உசிதமா? அவளே தன் கணவனுக்கு எற்பட்ட சித்தப் பிரமையினால் மனம் கலங்கி இருக்கிறாள். வருமானம் வேறு குறைந்து விட்டதாக கேள்விப் படுகிறோம். இப்போது அங்கு போய் அவளைப் பார்த்தால் அவளது கஷ்டத்தை அதிகப்படுத்துவதாக ஆகாதா? அவள் நம்மை எப்படி எதிர் கொள்வாள். அவளிடம் அன்றொரு நாள் தான் நடந்து கொண்ட விதத்தினால் இன்னும் கோபம் தணியாமல் இருப்பாளா? முத்தம்மாளிடம் சொல்லி விடுவாளா?

அய்யோ! அப்படி முத்தம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன ஆகும்? இப்போதே இவள் நம்மிடம் கொடுங்கோன்மை செலுத்துகிறாள். அந்த விஷயமும் தெரிந்து விட்டால், நம் பாடு திண்டாட்டமாக போய்விடுமே! அங்கு போகாமல் முத்தம்மாளை எப்படித் தடுப்பது? நாம் என்ன சொன்னாலும் அவளிடம் இப்போது எடுபடுவதில்லை. அவள் வைத்த்தே சட்டம் என்று ஆகி விட்டது.

என்ன, நான் சொல்வது சரிதானே?” என்று ஒரு அதட்டல் முத்தம்மாளிடம் இருந்து வெளிப்பட்டது.

ம்… சரிதான். ஆனால்….

என்ன ஆனால்என்ற முத்தம்மாளின் பார்வையில் உக்கிரம் இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சோமநாதய்யர் மெதுவாக கெஞ்சும் குரலில் பேசலானார்.

முத்தம்மா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உன் தோழியைப் பார்க்கப் போகலாம் என்கிறாய். சரிதான். ஆனால், இப்போது அவள் இருக்கும் நிலையில் நாம் அங்கு போவது உசிதமா? அவளே மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாள். இந்த நேரத்தில் அங்கு போய் தொந்திரவு செய்ய வேண்டுமா?”

முத்தம்மா நிமிர்ந்து சோமநாதய்யரைப் பார்த்தாள். இந்த மனிதர் ஏன் இப்படித் தயங்குகிறார். அற்பமான ஒரு காரணத்தை வேறு சொல்கிறார். விசாலாட்சி மிகுந்த மன வேதனையில் இருக்கிறாளாம். அதனால் அவளைத் தொந்திரவு செய்யக்கூடாதாம். என்ன பேத்தல் இது. இந்த நேரத்தில்தானே அவளுக்கு ஆறுதல் தேவை. பிறகு சொந்தம் என்று நாம் இருந்துதான் என்ன பயன்?

இதோ பாருங்கள். நாம் அங்கு போய்த்தான் ஆக வேண்டும். என்னுடைய ஆறுதல் இப்போது அவளுக்கு அவசியம் தேவை. வீண் பேச்சு வேண்டாம். நாளைக்கு கட்டாயம் கிளம்ப வேண்டும். போய் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்கள். எனக்கு சமையலறையில் வேலை இருக்கிறதுஎன்று கண்டிப்பாக சொல்லி விட்டு அங்கிருந்து போய் விட்டாள்.

சோமநாதய்யர் செய்வதறியாது நின்று விட்டார். வர வர இந்த முத்தம்மாள் அடாவடி பண்ண ஆரம்பித்து விட்டாள். நாம் சொல்வதை கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறாள். அவள் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. முன்போல் என்றால் நன்றாகத் திட்டியிருப்பார். முத்தம்மாளும் அழுது கொண்டே அந்தப் பேச்சைக் கை விட்டிருப்பாள்.

தன்னுடைய அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தார். அன்று நடந்த சம்பவம் அவர் கண் முன் தோன்றியது. சே! என்ன ஒரு மடத்தனம் செய்து விட்டோம். நம் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவளிடம் போய் அப்படி ஒரு காரியம் செய்ய முயற்சித்தோமே. ஏன் நமக்கு அப்படித் தோன்றியது. இத்தனைக்கும் அவள் நமக்குத் தங்கை முறையல்லவா? மனம் ஏன் இப்படி அலைகிறது?

பெண் என்பவள் நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்க வந்தவள் என்பதை நமக்கு ஏற்பட்ட அறிவுத் தெளிவின் மூலம் உணர்ந்து கொண்டோமே. அது போல் நம் மனத்தில் ஆசையுணர்வைத் தூண்டி விடுவதும் அவர்கள்தானே. கடவுளின் திருவுள்ளம்தான் என்ன? நமது ஆசையைத் தூண்டி அதன் விளைவாக அவமானம் ஏற்பட்டு பின்னர் அதன் மூலம் ஆசையை அடக்க வழி காட்டுகிறானா

15-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

ஒருவனுக்கு ஏற்படும் அவமானம்தான் அவனுள் ஆசையை அழிக்கும். மனத்தைக் கட்டுப்படுத்துவது அவமானப்பட நேரிடும் என்ற எண்ணத்தினால்தான் சாத்தியப்படும். இப்படி பல வழிகளிலும் மனிதனை நல்வழிப் படுத்துவதால் உண்மையில் பெண் என்பவள் சக்தியின் வடிவம்தான்.

இப்படி பல வகையாகவும் சிந்தித்தபடி கட்டிலில் படுத்திருந்தார் சோமநாதய்யர். இப்போது முத்தம்மா வைத்ததுதான் இங்கு சட்டம் என்றாகி விட்டது. அவள்தான் இங்கு நீதிபதி. நாம் செய்த தவறை அவளிடமே சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டால் என்ன என்று தோன்றியது. குற்றவாளியே மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் தண்டனை குறையுமல்லவா?

உடனே கட்டிலை விட்டு இறங்கினார். மெதுவாக அடிமேல் அடி எடுத்து வைத்து கீழே இறங்கலானார். முத்தம்மா சமையலறையில் வேலையாக இருந்தாள். இவர் பக்கம் திரும்பவில்லை. காத்திருப்பதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தார். முடிவெடுத்த பின் இனி யோசிக்க ஒன்றுமில்லை. அதனால் சமையலறைக்குள் நுழைந்தார்.

சத்தம் கேட்டு திரும்பிய முத்தம்மா கணவனைப் பார்த்து திகைத்தாள். எதற்காக இங்கு வந்திருக்கிறார். மறுபடியும் வாக்கு வாதம் ஆரம்பிக்கப் போகிறாரா?

என்ன வேண்டும். விசாலாட்சியை சந்திக்க வேண்டாம் என்று மறுபடி சொல்ல வந்தீர்களா?” என்றாள்.

அதில்லை…. அது வந்து….சோமநாதய்யருக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

வேறு என்ன? குடிக்க காபி வேணுமாஎன்றாள் அவர் வந்ததன் காரணம் புரியாமல்.

முத்தம்மா, நான் அதற்கு வரவில்லை. உன்னிடம் மன்னிப்பு கோருவதற்காக வந்தேன் என்றார்.

மன்னிப்பா, எதற்கு? நீங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்ததற்கா? அதுதான் முடிந்து விட்டதே

இல்லை, இது வேறு விஷயம். ஒரு முறை நான் தவறாக நடந்து கொண்டு விட்டேன். அதற்குத்தான் மன்னிப்பு கேட்கிறேன்எப்படியோ ஒருவழியாக ஆரம்பித்து விட்டார் சோமநாதய்யர்..

ஒரு முறையா, நீங்கள் எத்தனையோ முறை என்னிடம் தவறாக நடந்திருக்கிறீர்கள். இது என்ன புதிதாக மன்னிப்புஎன்றாள் முத்தம்மா.

உன்னிடமில்லை முத்தம்மா, நான் வந்து விசாலாட்சியிடம்….அவர் முடிக்கும் முன்னதாகவே, “என்னது,விசாலாட்சியிடமா?” என்ற முத்தம்மாவின் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

தெரியாமல் நடந்து கொண்டு விட்டேன். அப்போது எனக்கு புத்தி கேட்டிருந்தது. ஆனால் விசாலாட்சி துணிச்சலானவள். சூலாயுதத்தைத் தாங்கிய சக்தியென கொதித்தெழுந்து விட்டாள். இப்போது நான் திருந்தி விட்டேன் என்பது உனக்கே தெரியுமல்லவா? அதனால் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என்னை மன்னித்து விடுஎன்று கை கூப்பினார்.

சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தாள் முத்தம்மா. இந்த மனிதர் உண்மையிலேயே திருந்தி விட்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் விட்டால் மனிதர் மிஞ்சி விடுவார். நம் குழந்தைகளுக்காக இவரை நல்வழிப்படுத்தி வைத்திருக்க வேண்டியது நமக்கு அவசியம்.

என்னை மன்னிக்க மாட்டாயா? முத்தம்மா தயவு செய்து என்னை மன்னித்து விடுஎன்று கெஞ்சினார்.

ஓ! அதனால்தான் விசாலாட்சியை பார்க்கப் போகலாம் என்று சொன்ன போது வேண்டாம் என்று என்னிடம் வாக்குவாதம் பண்ணினீர்களா. நீங்கள் தயங்கியதற்கு காரணம் இதுதானா?” என்றாள் ஒருவித அலட்சிய பாவனையுடன்.

சோமநாதய்யர் பேச இயலாமல் மௌனமாக நின்றிருந்தார்.

சரி போகட்டும், நாளை கிளம்ப வேண்டும். போய் ஓய்வெடுங்கள்என்றாள். அவள் சொன்ன பாணியில் முத்தம்மாள் மன்னித்து விட்டாள் என்று புரிந்தது.

இன்னும் என்ன, அதுதான் மன்னித்து விட்டேனேஎன்றாள் முத்தம்மா.

அதில்லை. நீ என் மீது கருணை காட்டி மன்னித்து விட்டாய். ஆனால் விசாலாட்சி என்ன செய்வாளோ! நீதான் எப்படியாவது அவளை சமாதானப் படுத்தி என்னை மன்னிக்கச் சொல்ல வேண்டும்என்றார். தெய்வத்தின் சந்நிதானத்தில் கோரிக்கை வைத்தாகி விட்டது. இனி எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைத்த அவர் மனத்தின் பாரம் குறைந்தது போலிருந்தது.

16-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

அவள் அன்றே உம்மை மன்னித்து விட்டாள்என்றாள் முத்தம்மா. அதைக் கேட்டதும் சோமநாதய்யருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

என்னது. அன்றே மன்னித்து விட்டாளா? உனக்கு எப்படித் தெரியும்?” என்றார் வியப்புடன்.

உமது யோக்கியதையை அன்றே என்னிடம் சொல்லி விட்டாள். எனக்கு வந்த ஆத்திரத்தில் அன்றே உம்மை ஒரு வழி பண்ணியிருப்பேன். ஆனால் அவள்தான் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும், எனக்குத் தெரிந்ததாக்கூட காட்டிக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டாள். உம்முடைய கௌரவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதியும் நானும் அப்படியே விட்டு விட்டேன்என்ற முத்தம்மா மீண்டும் வேலையைக் கவனிக்கத் தொடங்கினாள்.

அதற்கு மேல் சோமநாதய்யரால் அங்கு நிற்க முடியவில்லை. இந்த முத்தம்மா எப்படிப்பட்ட பெண். ஏற்கெனவே எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு எவ்வளவு அழுத்தமாக இவ்வளவு நாளும் இருந்திருக்கிறாள். இவளைப் போய் நான் எப்படியெல்லாம் கேவலமாக நடத்தியிருக்கிறேன். நினைக்கும்போதே அவமானமாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு பெண் தனக்கு மனைவியாக கிடைத்ததை எண்ணி பெருமிதம் அடைந்தார். இனிமேல் அவள் சொல்வதைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தார். எந்த விஷயத்திலும் தன் பெண்டாட்டிக்கே ஜெயம் உண்டாக வேண்டுமென்று மனதில் வேண்டிக் கொண்டார். மனதில் உள்ள பாரம் குறைந்து விட்டது போலிருந்தது.

நிம்மதியான மனத்தோடு கட்டிலில் சாய்ந்தார். சிறிது நேரத்தில் நித்திராதேவி அவரை ஆட்கொண்டு விட்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் அவர் ஓர் கணவு கண்டார். முத்தம்மா ராணி போன்று அரியணையில் உட்கார்ந்திருக்கிறாள். இருபுறமும் காவலர்கள் நிற்க கைகள் பிணைக்கப் பட்ட நிலையில் சோமநாதய்யர் அவள் முன்னால் நிற்கிறார்.

யார் இவர். என்ன குற்றம் செய்தார்?’ என்று ராணி முத்தம்மா வினவுகிறாள்.

இந்த மனிதன் ஒரு பெண்ணை மோசம் செய்ய முயற்சித்தான். கட்டிய மனைவியை மிகவும் கொடுமைப் படுத்தினான். பலரையும் ஏமாற்றியவன்என்றான் ஒரு காவலன்.

அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா? உடனே இவனை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள். நாளைக் காலை பொழுது புலரும்போது யானைக்காலால் இவன் தலையை இடறச் செய்து இவன் உயிரைப் போக்குங்கள்என்று கட்டளையிட்டாள்.

மஹாராணி வேண்டாம், நான் திருந்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் தவறு செய்ய மாட்டேன். தவறு செய்ய மாட்டேன். வேண்டாம் வேண்டாம்என்று கதறினார். திடீரென விழிப்பு வந்தது. எதிரே முத்தம்மா கையில் காபி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள்.

என்னது, காபி வேண்டாமா, ஏன்?” என்றாள் சோமநாதய்யரைப் பார்த்து.

ஒன்றுமில்லை ஏதோ கெட்ட கனவுஎன்று சொல்லிவிட்டு காபியை வாங்கி பருகினார் சோமநாதய்யர். செய்த தவறை நினைத்து மிகவும் வருந்துகிறார். இனிமேல் தவறு செய்ய மாட்டார் எனற நிம்மதியோடு கீழே இறங்கிச் சென்றாள் முத்தம்மா.

 10.விசாலாட்சியும் முத்தம்மாவும்

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை குதிரை வண்டியில் முத்தம்மா மற்றும் குழந்தைகளுடன் சோமநாதய்யர் தங்கசாலைக்கு புறப்பட்டார். வேலைக்காரன் முன்னால் உட்கார்ந்து கொண்டான்.

 விசாலாட்சியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி ஒன்பதாகி இருந்தது. சந்திரிகை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். முத்தம்மாளைப் பார்த்ததும்  நான் போய் வருகிறேன்என்று சொல்லி கிளம்பினாள். விசாலாட்சி, முத்தம்மாளையும் சோமநாதய்யரையும் வரவேற்று அழைத்துச் சென்றாள். முத்தம்மாவைக் கண்டதில் அவளுக்கு பரம சந்தோஷம்.

 தோழிகள் இருவருக்கும் கிட்டத்தட்ட இரண்டு வருடக் கதைகளைப் பேசித் தீர்க்க வேண்டியதிருந்தது. சந்திரிகை என்ன படிக்கிறாள்? என்று முத்தம்மா கேட்டாள். அவள் மெட்ரிக் பள்ளியில் படிப்பதாகவும், தமிழ், தெலுங்கு,ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளில் எழுதவும் பேசவும் கற்றுக் கொள்கிறாள் என்றும் விசாலாட்சி தெரிவித்தாள்.

 அவளுக்கு இப்போது ஆறு வயது ஆகி விட்டதால் வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக விசாலாட்சி கூறினாள். நாளாக ஆக சந்திரிகை கர்நாடக சங்கீதத்திலும், வாய்ப்பாட்டிலும் மிகவும் தேர்ச்சி பெற்று வருகிறாள் என்றும் பெருமையாக விவரித்தாள்.  

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: