நிம்மதியான தூக்கம் வேண்டுமா?

15 அக்

இன்றைய அன்றாட வாழ்க்கையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எங்கும் அவசரம், எதிலும் அவசரம். யாருக்கும் பொறுமையில்லை. விடிந்ததிலிருந்து அடைந்தது வரைக்கும் என்று கிராமங்களில் சொல்வார்கள், அது போல காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை ஒரே பரபரப்புதான். நிற்பதற்கு கூட நேரமில்லை, எப்போதும் அவசர கோலம்தான். இந்த அவசரமான காலகட்டத்தில் எல்லோருக்கும் நிம்மதியான தூக்கம் இருக்கிறதா என்றால், பெரும்பாலான மனிதர்களுக்கு அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இரவு டிவியில் எல்லா சீரியல்களையும் பார்த்து விட்டு படுக்கப் போகும் போது அநேகமாக இரவு பதினொன்றைத் தாண்டியிருக்கும். அதற்குப் பிறகு படுத்தால் உடனே தூக்கம் வருமா? சீரியல்களில் வந்த கதாநாயகியை அந்த வில்லிகள் படுத்தும்பாடு மனதில் வந்து போகும். வில்லிகள் மேல் கோபம் கோபமாக வரும். வீட்டிலுள்ள மாமியாரையோ, மருமகளையோ, நாத்தனாரையோ பார்த்தால் அந்த வில்லிகள் போலவே தோன்றும்.

எப்படியோ தானாக சிறிது நேரத்தில் தூக்கம் வந்து தூங்கி விட்டால், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதன் பிறகு விடிய விடிய சிவராத்திரிதான். தூக்கம் வருவதற்கான வழிமுறையாக ஒன்னு ரெண்டு என்று எண்ண ஆரம்பித்தால் விடியும்போது ஆறாயிரத்து ஐநூத்தி முப்பத்து மூன்றைத் தாண்டி இருக்கும். ஆனால் தூக்கம் மட்டும் வராது.

கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும். அதன் பிறகு படுக்கையில் இருக்க முடியுமா? கண்களில் தூக்கத்தை மிச்சம் வைத்துக் கொண்டு காலையில் வழக்கமாகச் செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருக்கும். பெண்களென்றால் கணவனுக்கு சாப்பாடு தயார் செய்து, குழந்தைகளை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

சரி! பத்தரை மணியாகி விட்டது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்து படுக்கையில் படுத்து, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம் என்று ஆன் பண்ணினால், டிவியில் மத்தியான சீரியல்கள் ஆரம்பித்திருக்கும். அப்புறம் எங்கே தூங்குவது?

ஆனால் இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு தினமும் தூங்கவில்லை என்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலத்தைப் பாதிக்கும். மன நிம்மதியைக் கெடுக்கும். அதனால் சிலர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறான பழக்கம். நாளடைவில் தூக்க மாத்திரை போடாமல் தூக்கம் வராது என்ற நிலையில் கொண்டு போய் விட்டு விடும்.

பிறகு என்னதான் செய்வது?

முதலில் இரவு பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். பத்து மணியிலிருந்து அதிகாலை நான்கு மணி வரை தூக்குவதுதான் ஆரோக்கியமானது. தூங்குவதற்கு முன் சிறிது நேரம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் தூக்கம் வர உதவியாக இருக்கும்.

இடையில் விழிப்பு ஏற்பட்டு அதன் பிறகு தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு மொபைல் போனில் சினிமா பாட்டு பதிந்து வைத்துக் கேட்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால் எளிதான ஒரு வழி இருக்கிறது. சினிமா பாட்டுகளுக்குப் பதிலாக, ஆன்மீகம் அல்லது சுய முன்னேற்றம் சம்பந்தமான சிலரது பேச்சுக்கள், சொற்பொழிவு அல்லது பிரசங்கம் போன்றவற்றைப் உங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இரவில் எப்போது உங்கள் உறக்கம் கலைகிறதோ அல்லது உறக்கம் வராமல் தவிக்கிறீர்களோ அப்போது இந்த பேச்சுக்களை கேட்க ஆரம்பியுங்கள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் உங்களை அறியாமலே உறங்கிப் போய் விடுவீர்கள். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் விழித்திருந்தாலும் பரவாயில்லை. காரணம் நீங்கள் கேட்பது உங்களுக்குப் பயனுள்ள விஷயங்கள்தான். அதனால் நன்மைதான்.

கையில் பெருவிரலுக்கு பக்கத்தில் ஒரு புள்ளியை சிறிது நேரம் லேசாக அழுத்திக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும் என்றும் சொல்வார்கள். அல்லது யோகா மற்றும் தியானம் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டு அதை தினமும் பயிற்சி செய்து கொண்டிருந்தால் தூக்கம் வராமல் தவிக்கும் பிரச்சினை இருக்காது.

இன்னொரு விஷயம். இரவில் உங்கள் போன் மூலமாக நீங்கள் கேட்கும் பேச்சுக்கள் தனித்தனி Audio File களாக இருக்கட்டும். Playist ல் போட்டு கேட்க வேண்டாம். காரணம் நீங்கள் தூங்கி விட்டாலும் ஒரு 40 அல்லது 50 நிமிடங்களில் அது தானாக நின்று விடும். இல்லாவிடில் Playist ல் உள்ள அத்தனை Audio File களூம் ஒன்றன் பின் ஒன்றாக போய்க்கொண்டே இருக்கும். அது பேட்டரிக்கு கேடு.

கடைசியாக ஒரு விஷயம். நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் தூக்கம் வரவில்லையா. கவலைப் பட வேண்டாம். அடுத்த நாள் முதல் நாள் விடுபட்ட தூக்கத்தையும் சேர்த்து தூங்கி விடுவீர்கள். உங்கள் உடம்பு தானாகவே அதைச் சரி செய்து கொள்ளும்.

தூக்க மாத்திரை போட்டு தூங்கும் பழக்கதை கண்டிப்பாக தவிர்த்து விடவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: