சனிப் பெயர்ச்சி 2014 – ஒரு அலசல்

11 அக்

அனுபவமிக்க ஜோதிட ஆசிரியரின் அலசல் பார்வை

வருகின்ற நவம்பர் மாதம் (2014) 2 ம் நாள் திருக்கணித பஞ்சாங்கப் படியும், டிசம்பர் 16 ம் நாள் வாக்கியப் பஞ்சங்கப்படியும் சனி துலா ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த இடப் பெயற்சியை அனைவரும் மிகவும் ஆவலுடனும் சிலர்  கலக்கத்துடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜோதிடப் பத்திரிகைகளில் இது பற்றி எழுத ஆரம்பித்து விட்டனர். நாமும் இதுபற்றி ஆராய்ந்தால் என்ன?

சனி துன்பத்தையும் துக்கத்தையும் ஆள்பவர். நமது முந்தைய கர்மாவை ஆள்பவர். தடைகளுக்கு காரணமானவர். நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைப்பது, பணி புரிவது, அடுத்தவருக்கு சேவை செய்வது, வேலைக்காரர்கள், ஜனநாயகம், ஏழ்மை, வியாதி, குற்றம், மேற்கு திசை, கற்கள், எண்ணை, இருட்டு, சோஹம், ஏமாற்றம் போன்ற நமக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவர் ஆள்கிறார். நமது அஹங்காரத்தை ஆள்பவர். நமது மனோகாரகனான சந்திரனுடன் இந்த ராசிப் பெயர்ச்சியினால் அவருக்கு ஏற்படும் உறவு நமது மனதைப் பாதித்து அதன் மூலம் சில விளைவுகளுக்கு காரணமாக அமைகின்றது. சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ள சனி மிகவும் மெதுவாக நகருவதால் இவருக்கு மந்தன் என்றும் ஒரு பெயர் உண்டு. சூரியனைச் சுற்ற இவர் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதனால் ஒரு ராசியில் இவர் 2½  ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

சென்ற 2½ ஆண்டுகலாக இவர், தான் உச்சம் பெறும் ராசியான துலாத்தில் இருந்து சாதாரண மனிதர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும் நல்லது செய்து வந்தார். ராகுவும் அவரோடு சேர்ந்ததால் சாதாரண மனிதர்களின் கட்சியான ஆம் ஆத்மி கட்சி எழுச்சி கண்டது. ராகு அரசியலையும் எதிராளியை மிரட்டுபவரையும் குறிக்கிறார். நாட்டில் குற்றம் புரிபவர்கள், வக்கிர குணத்தினால் மஹாபாதகத் தவறுகளைச் செய்பவர்களுக்கு தூண்டுகோலாக இந்த ராகு சனி செவ்வாய் தொடர்பு துணையாக இருந்தது. நல்ல வேளை ராகு துலாத்திலிருந்து கன்னிக்கு நகர்ந்தார்.

சனியின் உச்ச நிலை மக்கள் உரிமைக்கு போராடி அதில் வெற்றி காணும் நிலையைத் தந்தது. அதே சமயம் சில மோசமான நிகழ்வுகளும் இயற்கை கொந்தளிப்பின் மூலமாகவும், மனித தவறுகளின் மூலமாகவும் இந்த கால கட்டத்தில் நடந்தன. சனி, ராகு, செவ்வாய் சேர்க்கை கோர நடனம் ஆடும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் அவரவரது ஜாதகத்தில் ஏதோ ஒரு ராசியில் சனி அமர்ந்துள்ளார். சிலருக்கு அவர் யோககாரகராக அமர்ந்து நல்ல பலன்களையும் அளிக்கத்தவறவில்லை. அவர் உச்ச நிலையில் சந்தோஷமாக அமர்ந்ததால் சிலர் நன்மை அடைந்துள்ளனர். உதாரணமாக துலா லக்னம் அல்லது ரிஷப லக்னம் உள்ள ஜாதகருக்கு சந்திரன் தனுசு, ரிஷபம் அல்லது சிம்மத்தில் ( அதாவது சந்திரனுக்கு சனி 3, 6, 11 ல்) இருந்திருந்தால் சென்ற 2½ வருடங்களில் சனி அவர்க்கு நிறைய நல்லது செய்திருப்பார்.

இப்பொழுது சனி தன் உச்ச வீட்டிலிருந்து தன் பரம எதிரியான செவ்வாயின் வீடான விருச்சிகத்துக்கு நகர்கிறார். சனி முதுமை, மந்தம், நீண்ட நாட்கள் ஓரிடத்தில் தங்குவது போன்ற குணங்களை உடையவர். இவர் போய் அமரும் வீடான விருச்சிகத்தின் அதிபர் செவ்வாய் இளமை, சக்தியின் வடிவம், வேகம், போராடும் குணம், சுறுசுறுப்பு போன்ற குணங்களை உடையவர். விருச்சிகத்தை செவ்வாயுடன் சேர்ந்து ஆளும் கேதுவும் சனியோடு போராடுபவர். சனி நான் என்கிற நிலையை ஆள்பவர். கேது நான் என்கிற நிலையை அழிப்பவர். ஞானகாரகன். அதனால் அவரும் சனியின் விரோதிதான்.

துலாம் கால புருஷனின் 7 ம் பாவம். சனி அங்கிருந்து ரகசியத்தையும், மாற்றத்தையும் அடையாளம் காட்டும் 8 ம் பாவத்துக்கு நகர்கிறார். அந்த ராசியின் அடையாளம் கொடிய தேள். விஷத்தன்மை வாய்ந்தது. சனியின் ஆளுமைக்கு உட்பட்ட ஜாதகர்கள் இந்த விஷத்தன்மையை நன்கு உணரவேண்டிவரும். தங்களுக்கு இப்பிறவியில் [ இறைவனால் ] கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன் படுத்தியவர்கள் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும் என்பதை உணருவார்கள்.

நீண்ட நாட்கள் வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இன்னும் அதிகளவு துன்பப்படும் நிலை நீங்கவில்லை. உழைப்பாளிகள் போராடவேண்டிய கால கட்டம் இது. சனி விரோதியின் வீட்டில் அதுவும் கால புருஷனின் 8 ம் வீட்டில்; இழப்பு, கெட்ட பெயர், அவமானம், மாற்றம் ஆகிய அனைத்தையும் கொண்டு வருவார்.

சனியும் கர்மாவோடு தொடர்புள்ளவர். அவர் சென்று அமரும் விருச்சிகமும் கால புருஷனின் 8 ம் வீடு என்பதால் கர்மாவோடு தொடர்புள்ளது. ஒவ்வொருவருக்கும் இந்த சனிப் பெய்ற்சியினால் கிடைக்கும் நல்ல அல்லது கெட்ட பலங்கள் அனைத்தும் கர்ம பலன்களாகவே அமையும் என்று எனக்குத் தோன்றுகிறது.

சந்திரன் நமது மனோகாரகன். ஒவ்வொருவரது மனதையும் ஆள்பவன். நமது அம்மாவைக் குறிப்பவன், வீட்டை ஆள்வது அம்மாதானே. ஒவ்வொருவரின் சமுதாய அச்சு சந்திரன். ஒவ்வொருவருக்கும் மனம் என்பது புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒரு புரியாத பகுதி. அது தர்ப்பையா கோரைப்புல்லா என்று எலோராலும் புரிந்து கொள்ளமுடியாது. உள்ளே விஷ ஜந்துக்களும் இருக்கலாம், வாசமுள்ள தாழம்பூவும் இருக்கலாம். சூரியன் அரசன் என்றால் சந்திரன் அரசி. ஒவ்வொரு கிரகமும் வலுவுடனோ அல்லது வலுவிழந்தோ நிற்கும் காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது சந்திரன்தான். நீண்ட நேரம் ஒரு வேலை செய்து பாருங்கள். உடல் சோர்வைவிட மனச் சோர்வுதான் அதிகம் உணரப்படும். வேலையே செய்யாமல் நீண்ட நேரம் ஓய்வு எடுத்துப் பாருங்கள். அப்பொழுதும் மனம்தான் சோர்வடையும்.

மேலே சொன்ன விஷயங்கள் ஏன் கிரக இடப் பெயற்சியை சந்திரனுடன் ஒப்பிடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே.

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை அடையாளம் காட்டும் கர்மாவைக் குறிக்கும் கிரகம் சனி. இவருடைய நிலையினால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படப்போகும் பலன் தான் என்ன?

விருச்சிகம்

இங்கு சந்திரன் பலமிழந்து நிற்கிறான். இது ரகசியமான ராசி. சந்திரனும் சனியும் சேரும்போது அது புனர்பு தோஷத்தை அடையாளம் காட்டுகிறது. சனி தனது பகை வீட்டில். சந்திரன் நீச நிலையில். ஏழரைச் சனியின் நர்த்தனம் நடு வீட்டில். 21/2வருஷம் கடந்து விட்டது. 2½ வருஷம் பாக்கி. அதனால் நடு வீடு. மனதை, மனதில் ஏற்படும் உணர்வுகளை பாதிக்கும் நிலை. கர்மஸ்தானத்தில். பழைய கர்மா தன் வினைப் பயனை தயங்காமல் தரும் நிலை. இது சற்றே கடினமான நிலைதான். மன அழுத்தம், துக்கம், சோகம், தவறான முடிவுகள் எடுப்பது போன்ற பிரச்சனைகளால் இந்த ராசியில் பிறந்தவர்கள் துன்பப்படுவர். முடிவெடுப்பதில் யார் முன்னிலை? வலுவிழந்த சந்திரன். சனியோ பகை வீட்டில். இங்கு அவரையும் அறியாமலே அவரது முன்வினை செயல் படும். அது நிச்சயம் மனதைப் பாதிக்கும். அது [ ஒருவரது தவறான முடிவு ]அவரை மட்டுமின்றி அவர் சார்ந்த சமுதாயத்தையும் பாதிக்கும். ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகளில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பெயர் கெடும். விபத்துகள் ஏற்படலாம்.

என்னடா இந்த மனிதர்? இவருக்கு விருச்சிகத்தின் மீது என்ன கோபம்? நல்லதாகவே ஒன்னும் இல்லையா? என்றெல்லாம் ஆராயத் தோன்றுகிறதா? கவலை வேண்டாம். ராகு உதவிக்கு வருவார். அவர் விருச்சிகத்திலிருந்து 3 ம் வீட்டில் இருக்கிறார். சுமார் 1 ¼ வருஷம் அவர் உதவுவார் (3, 6, 11 ல்). ஆனால் கேது தொல்லை கொடுப்பார். அவர் 9* ம் வீட்டில். போச்சுடா ! குரு அடுத்த ஜூலை வரை உதவுவார். ஒரேயடியாக பயப்பட வேண்டாம். குருவின் கிரக த்ரிஷ்டி மற்றும் ராசி த்ரிஷ்டி இருக்கிறது. எப்படி? குரு ஒருங்கிணைக்கும் கிரகம். அறிவைக் கொடுப்பவன். அவனது பார்வை எது சரி, எது தவறு என்பதை பிரித்துப் பார்க்க உதவும். எந்த முடிவையும் எடுக்கும் முன் உங்களது நலம் நாடும் உங்கள் குரு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஆகியவர்களின் ஆலோசனைக் கேட்டுப் பெறுங்கள். கேட்க வேண்டும் என்கிற எண்னம் எப்படி ஏற்படும். மந்திர சக்தியின் அருளினால்.

விருச்சிகம் லக்னம் என்றால், நீர் தத்துவ ராசியில், நீர் கிரகமான சந்திரனும், வாயு கிரகமான சனியும் இருப்பது பஞ்சபூத தத்துவங்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. இது ரகசிய ராசி என்பதால் அங்கு லக்னம் அமைந்துள்ளதால் ( ஆருத லக்னமும் இருக்கலாம் ) உடல் நலம் பாதிபடையும். உங்களது வாழ்க்கை முறையை அது சரியாக இருக்கிரதா என்று ஒருமுறை ஆராய்ந்து பார்த்து விடுங்கள். அது ரகசிய ராசி. நீரும் காற்றும் சேரும்போது தடம் மாறலாம், புயல் வீசலாம், மரம் செடி கொடிகள் அழியலாம். குரு பார்க்கிறார். பகுத்தறியும் நிலையை ஏற்படுத்துவார். பயப்பட வேண்டாம். ஆனாலும் நாம் எங்கிருக்கிறோம் என்பது நமக்கு தெரிய வேண்டும் அல்லவா?

 

என்ன செய்ய வேண்டும்?

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய :” இந்த மந்திரத்தை தினமும் 108 தடவை சொல்லுங்கள். ஹனுமான் சாலிஸா தினதோரும் படியுங்கள். இறைவனை மனதால் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். ஏழைகளுக்கு தவறாமல் உதவுங்கள். காக்கைக்கு அன்னம் வைத்துப் பழகுங்கள்.

கீழே கொடுத்துள்ள சனியின் பீஜ மந்திரத்தை ஜபம் செய்யுங்கள்.

शम् शनिस्चराय नम: ஸம் ஸனைஸ்சராய நம:

சிலருக்கு விருச்சிகமே லக்னமாகவும், அதுவே ராசியாகவும் அமையலாம். அவர்கள் கீழே கொடுத்துள்ள அஷ்ட பைரவ மந்திரங்களையும் தினமும் பாராயணம் செய்யுங்கள்.

ஓம் அஸிதங்க பைரவாய நம:

ஓம் ரூரூ பைரவாய நம:

ஓம் சண்ட பைரவாய நம:

ஓம் க்ரோத பைரவாய நம:

ஓம் உன்மத்த பைரவாய நம:

ஓம் கால பைரவாய நம:

ஓம் பீஷண பைரவாய நம:

ஓம் ஸம்ஹார பைரவாய நம:

பைரவர் லக்னத்தைக் காப்பவர். தேய்பிறை அஷ்டமியும் புதன்கிழமையும் சேரும் காலத்தில் பைரவரை தேங்காய் தீபம் ஏற்றி [ பசு நெய்யினால் ] வழிபடுங்கள்.

 

இந்த வழிபாடுகள் நிச்சயம் உங்களைக் காப்பாற்றும். தயவு செய்து எள் முடிச்சு விளக்கு மட்டும் ஏற்றாதீர்கள். நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.

நன்றி: திரு. S. நாராயணன், சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்

குறிப்பு: நமது ஜோதிடர் கடிவேலுவிடமிருந்து நமக்கு வந்த தகவலை இங்கே கொடுத்திருக்கிறேன். இது சம்பந்தமாக மற்ற ராசிகளுக்கும் தகவல் கிடைத்தால் இங்கே பகிர்ந்து கொள்வேன்.
* 8 என்று இருந்தது 9 என்று திருத்தப்பட்டுள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: