உடுக்கை இழந்தவன்

5 ஜூலை
சிறுகதை

என் பெயர் மோகன். மனநலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்காக என்னைத்தேடி வருபவர்களுக்கு ஆலோசனை தருவது என் தொழில். அப்படி வருபவர்களில் சிலர் நண்பர்களாகி விடுவதுண்டு. சில சமயம் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பு விடுப்பதுமுண்டு.

ஒருநாள் நண்பர் கணேசன் என்னுடைய கிளினிக்கிற்கு வந்தார். இவரும் அடிக்கடி இங்கே வந்ததால் நெருங்கிய நண்பராகி விட்டவர். அன்று மிகவும் உற்சாகமாக இருந்தார்..

“வாங்ககணேசன்,உட்காருங்க” என்றுஎதிரேஇருக்கையைக்காட்டினேன்.

“சார்! இப்ப பிசியா இருக்கீங்களா?”

“என்ன விஷயம், கணேசன்”

“ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியுமா?”

“நிச்சயமாக, என்னன்னு சொல்லுங்க”.

“என் கூட வாங்க, புது கார் வாங்கியிருக்கிறேன். ரோட்டில் நிற்கிறது, நீங்கள் வந்து பார்க்க வேண்டும்” என்றார். அவர் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. அவர் சொன்னதைக் கேட்டதும், முன்பு ஏற்பட்ட ஒரு பழைய அனுபவம் எனக்குஞாபகத்துக்கு வந்தது.

சில வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இன்னொரு நண்பர் குமார், தான் ஒரு பென்ஸ் கார் வாங்க இருப்பதாகவும், அதை வந்து பார்க்க வேண்டும் என்றும் அழைத்தார். மாமனார் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை அவர். அதனால் அவருடன் சென்றால் மரியாதை இருக்காது என்ற தயக்கம் எனக்கு உண்டு என்பதால் அவருடைய வீட்டுக்குச் செல்வதை தவிர்த்து விடுவேன்..

ஆனால் பென்ஸ் கார் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. என்னதான் சில வருடங்களுக்கு முந்தைய மாடல் என்றாலும் ஐந்து லட்ச ரூபாயில் பென்ஸ் கார் என்றதால் ஏற்பட்ட ஆவல். அவருடைய அழைப்பைத் தட்ட முடியாமல் அவருடன் புறப்பட்டு சென்றேன். போகும் வழியெல்லாம் தான் அந்தக் காரை வாங்க முடிவெடுத்தது எப்படி என்பதை பெருமையுடன் சொல்லிக் கொண்டே வந்தார்.

ஒரு பெரிய பங்களா வாசலில் போய் கார் நின்றது. வாசலில் நின்ற வாட்சுமேன் கேட்டைத் திறந்து விட்டு காரை உள்ளே அனுப்பினான். அப்போது அவன் என்னைப் பார்த்த பார்வையே வயிற்றில் புளியைக் கரைத்தது. வண்டியை நிறுத்தி விட்டு, வாசலில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார்.

திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ‘ஒரு நிமிஷம் இருங்கள். இதோ வந்து விடுகிறேன்’ என்று அங்கிருந்து போய் விட்டார். இப்போது வாசலில் நான் மட்டும் நிற்கிறேன். கதவு திறந்தது. ஒரு வயதான அம்மாள் வெளியே வந்து, “யார் நீங்கள்?” என்றார். குமாரின் மாமியாராக இருக்க வேண்டும்.

“நான்…. வந்து…. நான்…குமாருடைய ஃபிரண்டு” என்றேன். அப்போது அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே. யாரோ ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போல ஒரு பார்வை. அவமானத்தில் கூனிக்குறுகி விட்டேன்.

“ஏன் நிற்கிறீர்கள். உள்ளே வாருங்கள்” என்று சொல்லியபடி குமார் அங்கே வந்து விட்டார்.

உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர வைத்து அவரும் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பிறகு, “வனிதா” என்று மனைவியை அழைத்தார். ஒரு பெண்மணி, வரும்போதே சந்தேகத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே வந்தார்.

“இவர் மோகன். மனநல ஆலோசகர்” என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் அந்தப் பெண் ஏதோ ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார். பிறகு,

“இருங்கள், குடிக்க ஏதாவது குளிர்பானம் கொண்டு வருகிறேன்” என்று போய் விட்டார்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இங்கு நிலைமை சரியாக இல்லை. இவர் ஏதோ பென்ஸ் காரைப் பார்க்கலாம் என்று கூட்டி வந்தார். ஆனால் அதைப் பற்றிய பேச்சையே காணோம்.

“நீங்க சொன்ன பென்ஸ் கார் எங்கே? முதல்ல அதைப் பார்க்கலாம்” என்றேன்.

“கொஞ்சம் இருங்க, அது பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் இருக்கு. உங்களைப் போன்ற நம்பிக்கையானவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று என் மாமியாருக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் உங்களை இங்கே கூட்டி வந்தேன்” என்றார்.

அதைக் கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

“என்னைப் போன்ற நம்பிக்கையான நண்பர்கள் உங்களுக்கு இருப்பதை எதற்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்?” என்றேன் புரியாமல்.

“அப்பத்தான் என் மாமியார், என்னை நம்பி ஐந்து லட்ச ரூபாய் கொடுப்பார்கள். அந்த பணத்தை வைத்து நானும் பென்ஸ் காரை வாங்க முடியும்” என்றார்.

இப்போது எனக்கே நான் பைத்தியக்காரன் போல் தெரிந்தேன். அவரை நம்பி வந்தது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது.

“சரி, அப்ப நான் கிளம்பறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தேன்.

“இருங்க, கூல் டிரிங்ஸ் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றார்.

“இல்லை, எனக்கு அவசர வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு விடுவிடுவென அங்கிருந்து வெளியேறி விட்டேன்.. அதன் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை.

“என்ன சார் கிளம்பலாமா?” என்ற குரலைக் கேட்டதும்தான் இப்போதைய நினைவுக்கு வந்தேன். ‘இவரும் அது போல ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தப் போகிறாரோ, என்னவோ?’ என்று யோசித்துக் கொண்டே அவருடன் சென்றேன்.

மெட்டாலிக் சில்வர் கலரில் புத்தம்புது டயோட்டா கார் ரோட்டின் ஓரத்தில் நின்றிருந்தது. டிரைவர் சீட்டில் ஒருவர் இருந்தார். பின் சீட்டில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவருடன் ஸ்கூல் படிக்கும் ஒரு சிறுமியும் இருந்தாள். கணேசன் பின்பக்க கதவைத் திறந்து அந்தப் பெண்மணிக்கு என்னை அறிமுகப் படுத்தினார்.

“விமலா, சார் டாக்டர் மோகன். ஆரம்பத்திலிருந்து நமக்கு கன்சல்டன்ட்”

அந்தப் பெண்மணி, “அப்படியா, வணக்கம்” என்று கைகூப்பினார்.

அது அவருடைய மனைவியாக இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டேன். பக்கத்தில் இருந்த சிறுமி அவருடைய பெண்ணாக இருக்க வேண்டும்.

“அருமையான கார். இந்தக் காரில் போகும்போது தான் மதிப்பாய் இருக்கும்” என்றேன். அதைக் கேட்டு அவருக்கு ஏற்பட்ட சந்தோஷம் முகத்தில் தெரிந்தது

இரண்டு நாள் கழித்து கணேசனிடம் பேச வேண்டியிருந்தது. அவருடைய மொபைல் நம்பரை தட்டினேன். தொடர்பு கிடைக்கவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சித்தும் கிடைக்காததால் அவருடைய வீட்டு போனுக்கு முயற்சி செய்தேன்.

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

“ஹலோ, கணேசன் இருக்காரா?”

“அவர் வெளியே போயிருக்கார். நீங்க யார் பேசறது?”

“நான் மோகன் பேசறேன். முந்தாநாள் கூட நீங்க வாங்கிய புதுக்காரை என்னிடம் காண்பித்தாரே, என்னையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினாரே”

“எனக்கு உங்களை அறிமுகப்படுத்தினாரா? என்ன சொல்றீங்க”

“அய்யோ, ஸாரி நீங்க அவரோட மனைவின்னு நினைச்சுட்டேன”

“ஏங்க, நான் அவரோட மனைவிதாங்க பேசறேன்”

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நேற்று அவருடன் வந்த பெண்தானே அவருடைய மனைவி. இந்தப் பெண் தான்தான் அவருடைய மனைவி என்கிறார்; ஆனால் என்னைத் தெரியாது என்கிறார். ஒன்றும் புரியவில்லையே!

“அய்யய்யோ எதோ தப்பு நடந்திருச்சு, இது கணேசன் வீடுதானே?”

“ஆமா, கணேசன் வீடுதான். என்ன தப்பு நடந்திருச்சு?

“சாரிங்க, அது வந்து நேத்து சார் வாங்கிய புதுக்காரை என்னிடம் காண்பித்தார்.. அதில் ஒரு பெண் இருந்தார். அவங்கதான் மனைவி என்று நினைத்து விட்டேன்”

“ஓஹோ, அந்தச் சிறுக்கி அவர்கூட வந்திருந்தாளா?”

எனக்கு மனதில் ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டது. சரிதான்! இது வேறு ஏதோ விவகாரம். அது தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டோம், எப்படி சமாளிப்பது?

“சாரிங்க, அவர் வந்தா நான் போன் பண்ணினேன்னு சொல்லுங்க”

“ஏங்க, எவளோ ஒருத்தி அவர்கூட வந்தா, அவதான் அவரோட பொண்டாட்டின்னு நினைச்சிருவீங்களா?” என்று எகிறினார்.

“இல்லீங்க, நான் ஏதோ தெரியாமல் பேசி விட்டேன். மன்னிச்சுருங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன்.

இன்று கணேசன் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது. அதற்கு நான் காரணமாகி விட்டேனோ என்று ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது!

கணேசனுக்குப் போன் போட்டு விஷயத்தை அவரிடமே சொல்லி விடுவோம் என்று அவருடைய மொபைல் நம்பரைத் தட்டினேன். போனை எடுத்தார். அவரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் விளக்கினேன். ஆனால் அவர் நான் நினைத்தது போல் ஒன்றும் அதிர்ச்சியடையவில்லை. அப்படியா, சரி பரவாயில்லை! என்று ரொம்பவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு அந்தக் குழப்பத்துக்கு விடை கிடைத்தது.

முன்பு கணேசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார். அப்போது அங்கே வேலை செய்த ஒரு நர்ஸ் இவருடன் நட்பாக பழகி இருக்கிறார். அதைத் தவறாகப் புரிந்து கொண்ட அவருடைய மனைவி சண்டை பிடிக்க, மனைவியை சமாதானப்படுத்த முடியாமல், அதே சமயம் நட்பையும் விட முடியாமல் தவித்திருக்கிறார் கணேசன்.

அந்த சமயத்தில்தான் நான் போனில் பேசிய விஷயம் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பிறகு எப்படியோ அவருடைய மனைவி உண்மையைப் புரிந்து கொண்டு சமாதானமாகி விட்டாராம்.

அதற்குப் பிறகு, யாராவது காரைப் பார்க்கலாம் வாருங்கள் என்று கூப்பிட்டாலே தலை தெறிக்க ஓட்டம் பிடித்து விடுகிறேன்.. நமக்கு எதற்கு வம்பு?

Advertisements

2 பதில்கள் to “உடுக்கை இழந்தவன்”

  1. yarlpavanan ஜூலை 5, 2014 இல் 2:09 பிப #

    சிறந்த கதைக் கரு ஒன்றைப் பகிர்ந்துள்ளீர்கள்!
    கதை நகர்வு நன்று.

    • rasippu ஜூலை 7, 2014 இல் 3:51 முப #

      கதையை ரசித்தமைக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: