யார் வெற்றி பெறுவார்கள்?

8 மே

தலைப்பைப் பார்த்த உடனே,இப்போது நடைபெற்ற தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதைப் பற்றியோ அல்லது இப்போது நடக்கும் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பற்றியோ ஏதோ சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும்; இது அதைப்பற்றிய விஷயமல்ல.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஓரளவுக்கு எல்லோராலும் யூகிக்க முடிந்த விஷயம்தான். அப்படி யூகிக்க முடியவில்லை என்றால், இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்தால் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தெளிவாகத் தெரிந்து விடும். நல்ல முடிவாக இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம் எல்லோருடைய வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அது அமையும் என்று நம்பலாம்.

இன்னொரு பக்கம் கிரிக்கெட் விளையாட்டு நம் இளைஞர்களைப் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அதில் அதீதமான ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி என்பது அதை வைத்து பந்தயம் நடத்துபவர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என்று செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் பலவகையான செய்திகள் அடிபட்டன. இருந்தும் கிரிக்கெட் மீதான மோகம் குறையவில்லை.

இங்கு ஒரு உண்மையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாலோ தோல்வி அடைந்தாலோ, ஒரு சில நாட்களுக்கு நாம் அதைப்பற்றி பேசுவதற்கு அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவ்வளவுதான்! மற்றபடி நமது அன்றாட பிரச்சினைகளை சரி செய்யவோ அல்லது நமது வாழ்க்கையை வளப்படுத்துவதற்கோ அதில் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் யாராவது தெரியப் படுத்தலாம். எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

சரிதான், வேறு எதைப் பற்றி சொல்ல வருகிறேன் என்று நீங்கள் அவசரப் படுவது புரிகிறது. இங்கு ஒரு தனி மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதைப் பற்றி பேசப் போகிறேன். தனி மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்போது? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

முதலில் வெற்றி என்பது என்ன?

வெற்றி என்பது விபத்து அல்ல. ஒரு வகையில் அது சாதனை.

இல்லை… இல்லை…

அப்படிக்கூட சொல்லி விட முடியாது. அது ஒரு பயணம். இன்னும் சரியாகச் சொன்னால் ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லும் பயணத்தில் ஒரு மைல் கல். சரியான பாதையில், சரியான திசையில், ஒரு குறிக்கோளுடன் செல்கின்ற பயணத்தில் அடையும் ஒரு நிலை. அதை அடைந்ததும், அடுத்த குறிக்கோளை நோக்கி பயணிக்க உந்துதலை ஏற்படுத்தும் ஒரு சாதனை. பல தடைகளையும் கடந்து, அடுத்தடுத்த வெற்றிகளை அடையத் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நிலை.

அதற்கான அளவுகோல் என்ன?

ஒரு குறிக்கோளை அடையும்போதுதான் அதை அளவிட முடியும். பிறகு அடுத்த குறிக்கோளை நோக்கி மீண்டும் வெற்றிப் பயணம் தொடரும்.

உதாரணமாக, ஒரு போட்டியில் ஒரு குறிக்கோள் நிர்ணயிக்கப் படுகிறது என்றூ வைத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் அந்த குறிக்கோளை அடையும் போது அது வெற்றியாக கருதப் படுகிறது. வேறு வேறு அணிகளாக போட்டியிடும் போது, குறிக்கோளை அடையும் அணி வெற்றி பெற்றதாக கருதப் படுகிறது.

விளையாட்டில் வெற்றி என்பது ஒரு போட்டியில் பெறும் வெற்றி. அடுத்த போட்டி வரை அந்த வெற்றி பேசப்படும்.

சினிமாவில் வெற்றி என்பது ஒரு படம் குறிப்பிட்ட வசூலை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் எட்டும்பொது அது வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வெற்றி இன்னொரு படத்தின் வெற்றி வரை பேசப்படும்.

அரசியலில் வெற்றி என்பது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் போது கொண்டாடப்படும். அடுத்த தேர்தல் வரை.

அப்படியெனில் வெற்றி என்பது முடிவல்ல. குறிக்கோளை நோக்கிய பயணத்தில் அது ஒரு மைல் கல், அவ்வளவே!

அப்படியென்றால் ஒரு தனி மனிதனின் வெற்றியை எவ்வாறு முடிவு செய்வது? அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதனா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்குத்தான் குறிக்கோள் தேவைப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும். அதை அடையத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த குறிக்கோளை அடைந்தால் வெற்றி. பின்பு அடுத்த குறிக்கோள். இப்படி பல வெற்றிகளைப் பெற்ற மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக கருதப் படுகிறான்.

ஆனால் கிட்டத்தட்ட 80 விழுக்காடு மக்கள் எந்த குறிக்கோளும் இல்லாதவர்களாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி முடிவின் மூலம் தெரிய வருகிறது. ஒருவித இயந்திரத் தனமான வாழ்க்கை, ஒரே மாதிரியான தினசரி வாழ்க்கை வாழும் மனிதனுக்கு அது விரைவில் அலுத்துப் போய் விரக்தியே மிஞ்சுகிறது. இதில் வெற்றி எங்கிருக்கிறது?

இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமில்லை. குறிக்கோள் உள்ளவர்கள், குறிக்கோள் இல்லாதவர்கள், இதுதான் வித்தியாசம். சிறிது நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது எது? நீங்கள் விரும்புவது எது? உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பது எது? அதை அடைய நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? என்று ஒவ்வொன்றையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்குப் புரியும்.

உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன என்பதை நீங்கள் மட்டுமே கண்டறிய முடியும்.

வரும் இடுகையில் இன்னும் கொஞ்சம் விரிவாக அலசலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: