கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 4

26 டிசம்பர்

சென்ற சில இடுகைகளாக தான் சோதிடரானது எப்படி என்று கவிஞர் கடிவேலு சொல்லி வருகிறாரல்லவா? இதோ அவரே தொடர்கிறார். முந்தைய இடுகைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 2

கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 3

ஆவலோடு நான் எதிபார்த்துக் காத்திருந்த அந்த சனிக்கிழமையும் வந்தது. அன்று பிரதோஷ நாள் அல்லவா? அந்தப் பெரியவரைச் சந்திக்கும் நாள் என்பதால் காலை சீக்கிரமே குளித்து ரெடியாகி விட்டேன். நண்பருக்கு போன் போட்டு காலை பத்து மணிக்கு வருவதாக தகவல் சொல்லி விட்டேன்.

நான் அங்கு சென்றபோது நண்பர் நம்மை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

“அப்பா எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன்.

“ஹாலில்தான் இருக்கிறார். இன்று முழுவதும் உபவாசம் இருப்பார். புத்தகங்களைப் படித்துக் கொண்டு சிவ சிந்தனையிலேயே இருப்பார்” என்றார்.

உள்ளே சென்ற போது, அந்தப் பெரியவர் ஹாலில் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்கள் மூடி இருந்தது. நான் மெதுவாக அருகில் சென்று, “ஐயா, வணக்கம்” என்றேன். அதைக் கேட்டு அவர் கண்களைத் திறந்து பார்த்தார்.

“என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்.

“நல்லா இருப்பா” என்று சொன்னவர், “நீ, அன்னிக்கு வந்தவன்தானே? விசாக நட்சத்திரம்” என்றார்.

“ஆமாம் ஐயா, அது நான்தான்” என்றேன். உடனே பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டி, “இப்படி உட்கார்” என்றார். அவர் காட்டிய இடத்தில் உட்கார்ந்தேன். என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார்.

“என்னிடம் ஏதோ கேட்க வந்திருக்கிறாய் போலத் தெரிகிறது. சரிதானே?” என்றார்.

“ஆமாம் ஐயா, அதற்குத்தான் வந்திருக்கிறேன்” என்றேன்.

“சொல்லு, என்ன விஷயம்?” என்றார்.

“நான் விசாரித்த வரையில், ஒருவருடைய ராசி, நட்சத்திரம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் பிறந்த நேரம், இடம் இவற்றை வைத்து கணித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டேன்” என்றேன்.

“அது சரிதான். அது தெரிந்தால்தான் ஒரு சில கணக்குகளைப் போட்டு கண்டு பிடிக்கலாம். இப்போதெல்லாம் அதெற்கென்று நிறைய சாஃப்ட்வேர்கள் வந்து விட்டதால் அது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை” என்றார்.

“ஆனால், என்னுடைய பிறந்த நேரமோ, ஊரோ உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்புறம் எப்படி என்னுடைய ராசி, லக்னமெல்லாம் உங்களால் சொல்ல முடிந்தது?” என்றேன். அவர் கண்களை மூடி கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவர், “என்ன கேட்டே?” என்றார். என்ன இது! இப்படிக் கேட்கிறார். ஒருவேளை இதுவரை நடந்ததை எல்லாம் மறந்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றியது. சரி! வயதாகி விட்டாலே மறதி வருவது சகஜம்தானே என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

ஆனால் நான் அப்படி நினைத்தது தவறு என்று கொஞ்ச நேரத்தில் எனக்குப் புரிந்தது.

“நான் சென்ற முறை வந்திருந்த போது, என்னைப் பார்த்தவுடன் நான் துலா ராசி என்றும், மிதுன லக்னம் என்றும் சொன்னீர்களே, அது எப்படி என்று…”என்றவனை இடைமறித்து,

“அது மட்டுமா சொன்னேன். நீ விசாக நட்சத்திரம் 1ம் பாதம் என்றுகூடச் சொன்னேனே” என்றார். அதைக் கேட்ட எனக்கு அதிர்ச்சியே ஏற்பட்டு விட்டது. இவ்வளவு ஞாபக சக்தி உள்ளவர் எதற்காக நம்மிடம் ‘என்ன கேட்டாய்’ என்று மறுபடி சொல்லச் சொன்னார்? புரியவில்லை.

“நீங்கள் சொல்வது சரிதான், அதுதான் எப்படி என்று கேட்டேன்” என்றேன்.

“உன்னைப் பார்த்து தானே சொன்னேன்?” என்றார் என்னை நேராகப் பார்த்து.

“ஆமாம். என்னைப் பார்த்து தான் சொன்னீர்கள்” என்றேன்.

எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று புரியவில்லை. தொடர்ந்து அவரே,

“பிறகு என்ன சந்தேகம்?” என்றார்.

ஏன் இப்படிப் போட்டு குழப்புகிறார். எப்படி சொன்னீர்கள் என்று விளக்கம் கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் மழுப்புகிறாரே!

“ஐயா, அதில்தான் சந்தேகம். என்னைப் பார்த்தே எப்படி அதையெல்லாம் சொன்னீர்கள்?” என்றேன் பவ்யமாக.

“ஒரு விரல் நகத்தை வைத்துக் கொண்டு, அந்த நகத்துக்குரிய நபரையே சிலையாக வடித்த சிற்பியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? ஒரு தலை முடியை வைத்து அதற்குச் சொந்தமான பெண்ணை மச்சம் முதற்கொண்டு மிகச் சரியாக ஓவியமாகத் தீட்டிய ஓவியனைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?” என்றார்.

“ஆம் ஐயா, நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சாமுத்திரிகா லட்சணத்தை வைத்து அப்படிச் செய்ய முடியும் என்று என்னுடைய சிறு வயதில் கேட்ட கதைகளில் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். என் தந்தையார் கூட இது போன்ற கதைகள் நிறையச் சொல்லி இருக்கிறார்” என்றேன்.

“ஏம்ப்பா, ஒரு நகத்தையோ, ஒரு தலைமுடியையோ வைத்து முழு உருவத்தையும் சிலையாகவோ, ஓவியமாகவோ வடிக்க முடியும் போது, உன்னை நேருக்கு நேர் பார்த்து உன்னைப் பற்றிய விபரங்களை என்னால் சொல்ல முடியாதா?” என்றார்.

எனக்கு நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் உறைத்தது. அப்படியானால் இவர் சாதாரணமான மனிதர் அல்ல. சாமுத்திரிகா லட்சணம் அறிந்த அறிஞர்.

அப்படியே அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன்.

“ஐயா, தவறாக நான் எதுவும் கேட்டு இருந்தால் மன்னிக்கவும்” என்றேன்.

“எழுந்திருப்பா, உன்மேல் தவறில்லை. இப்போது கலிகாலம், எதற்கெடுத்தாலும் சந்தேகம். நீ என்ன செய்வாய்?” என்றார்.

“ஐயா, ஒரு வேண்டுகோள். அருள்கூர்ந்து என்னை தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றேன்.

“சிஷ்யனா? எதற்கு?” என்றார் எதற்கும் பிடி கொடுக்காமல்.

“இந்த சாமுத்திரிகா லட்சணத்தை எனக்கு தாங்கள் உபதேசிக்க வேண்டும்” என்றேன்.

“அப்பா, எனக்கோ வயதாகி விட்டது. என்னால் அது முடியுமா என்று தோன்றவில்லை. அந்தக் கலையை நன்றாக அறிந்தவர்களும் மிக மிக சொற்பம். அதனால் உன்னுடைய எண்னம் நிறைவேறுவது மிகவும் கடினம்” என்றார்.

“ஐயா, நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது. உங்களுக்கு எப்பொழுது வசதிப்படுமோ அப்போதெல்லாம் நான் வருகிறேன். வந்து கற்றுக் கொள்கிறேன்” என்றேன்.

“அப்படியெல்லாம் திடீரென ஆரம்பித்து விட முடியாது. நீ முதலில் ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற வேண்டும். அதன் பிறகுதான் இதற்கு வர வேண்டும்” என்றார்.

“அப்படியானால் ஜோதிட சாஸ்திரத்தை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டுகிறேன். அருள்கூர்ந்து என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்தார். அவர் முன்னால் கைகட்டி நின்று காத்துக் கொண்டிருந்தேன்.

“என்னுடைய சிஷ்யன் சேகரைப் போய் பார். அவன் உனக்கு உதவுவான்” என்றார். ஒரு போன் நம்பரையும், அட்ரஸையும் குறித்துக் கொடுத்தார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்” என்றேன்.

“முதலில் ஜோதிட சாஸ்திரத்தைக் கற்று தெளிவு பெறு. பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். ஒருவேளை என்னுடைய காலம் முடிந்து விட்டாலும் உனக்குத் தகுந்த குருநாதர் உன்னைத் தேடி வருவார்” என்று சொல்லி என்னை ஆசீர்வதித்தார்.

அவரை வணங்கி விடை பெற்று அங்கிருந்து கிளம்பினேன்.

இவ்வாறு தன்னுடைய கதையை முடித்தார் ஜோதிடர் கடிவேலு.

Advertisements

2 பதில்கள் to “கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 4”

 1. ஜெயக்குமார் ஏப்ரல் 9, 2015 இல் 7:18 முப #

  எனது நண்பருடைய பிறந்த நாள், கிழமை, வருடம் எதுவும் தெரியாத நிலையில் அவருடைய ஜாதகத்தை பற்றி எவ்வாறு தெரிந்துகொள்வது?

  • rasippu ஏப்ரல் 9, 2015 இல் 9:30 முப #

   திரு. ஜெயக்குமார் அவர்களே,
   தங்களுடைய நண்பரின் பிறந்த நாள், கிழமை, வருடம் எதுவும் தெரியாதென்று சொல்லியிருக்கிறீர்கள். சாதாரணமாக ஒருவருக்கு ஜாதகம் கணிக்க இவையெல்லாம் தேவை. பிறந்த இடமும் அவசியம். பிறந்த நேரம் சில விநாடிகள் வித்தியாசம் இருந்தாலும் ஜாதகம் மாறுபடும். அப்ப்டி இருக்கும்போது எந்தக் குறிப்பும் இல்லாத நிலையில் ஜாதகம் கணிப்பது கடினம்தான். ஆனால் சாமுத்திரிகா லட்சணம் பற்றி நன்றாக அறிந்தவர்கள், ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி எல்லா விபரங்களையும் சொல்வதாக சிலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் அத்தகைய மனிதர்களைப் பார்ப்பது மிக மிக அபூர்வம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: