கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 3

18 டிசம்பர்

சென்ற இடுகையில் தான் சோதிடரானது எப்படி என்ற கவிஞர் கடிவேலு சொல்லி வந்தாரல்லவா? இதோ அவரே தொடர்ந்து அந்தக் கதையைச் சொல்கிறார். கேட்போம். முந்தைய இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

யாரிடமாவது கேட்டு ஏதாவது விளக்கம் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது பக்கத்து வீட்டில் இருப்பவர் ஜோதிடத்தில் ஓரளவு பரிச்சயமுள்ளவர் என்று தெரிந்தது. இவ்வளவு நாள் பக்கத்து வீட்டில் இருந்தாலும் நமக்குத் தேவை என்று வரும் போதுதான் அவரிடம் என்ன தனித்துவம் இருக்கிறது என்று நமது கவனத்துக்கு வருகிறது.

மாலை நேரத்தில் மொட்டை மாடியில் காலாற சிறிது நேரம் நடப்பது அவர் வழக்கம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் அன்று மாலை நானும் மொட்டை மாடிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த அவர் ஆச்சரியமடைந்து, “என்ன வாக்கிங்கா?” என்று பேச்சை ஆரம்பித்தார். சிறிது நேரம் பரஸ்பரம் குசலம் விசாரிப்புகள். அதற்குப் பின் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

“நீங்கள் ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ராசியையும், லக்னத்தையும் எப்படி கண்டு பிடிப்பது என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டேன்.

“என்ன திடீரென்று ஜோதிடத்தைப் பற்றி விசாரிக்கிறீர்கள்?” என்றார்.

“சும்மா தெரிந்து கொள்ளலாம் என்றுதான்” என்றேன்.

“ஒருவர் பிறந்த பிறந்த நேரத்தையும், பிறந்த இடத்தையும் வைத்து, அந்த நேரத்தில் கிரகங்கள் எந்தெந்த அமைப்பில் இருக்கிறது என்று பஞ்சாங்கம் மூலமாகத் தெரிந்து, அவற்றைக் கருத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு சில கணக்குகளைப் போட்டு, ஒரு முடிவுக்கு வருவதுதான் ஜாதகம் கணித்தல் எனப்படுகிறது. அதில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுதான் அந்த ஜாதகரின் நட்சத்திரம். அது இடம் பெற்ற வீடுதான் அவரின் ராசி என்று சொல்லப்படும்” என்று சொல்லி சிறிது நிறுத்தினார்.

“சரிதான். புரிகிறது. லக்னம் என்றால் என்ன?”

“குழந்தை பிறந்த நேரத்தில் எந்த ராசி உதயமாகிறதோ, அதுதான் அந்தக் குழந்தையின் லக்னம் ஆகும்”

“அப்படியானால் ஒரே நேரத்தில் இருவர் வேறு வேறு இடங்களில் பிறந்தால் அவர்கள் ஜாதகம் மாறுபடும், சரிதானே” என்றேன்.

“ஆமாம், ஒரு சில நிமிட வித்தியாசம் கூட மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தும்” என்றார் உறுதியாக.

“சரி, ஒருவரைப் பார்த்தவுடன் அவர் என்ன ராசி, என்ன லக்னம் என்று சொல்ல முடியுமா?” என்று அடுத்த கேள்வியைக் வீசினேன். எனக்குத் தெரிய வேண்டியது அதுதானே.

“அது எப்படி முடியும்? அது சாத்தியமில்லையே” என்றார், என்னை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே.

“ஆனால் ஒருவர் என்னைப் பார்த்தவுடனே என்னுடைய ராசி, லக்னம் எல்லாவற்றையும் சொன்னாரே” என்றேன்.

“அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறதே” இப்போது அவருக்கு ஓரளவுக்கு என்னுடைய நோக்கம் புரிந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

“அது மட்டுமல்ல, அவர் என்னுடைய நட்சத்திரம் விசாகம் என்றும் அதிலும் 1ம் பாதம் என்றும் கூட சொன்னார்” என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, “இதை என்னால் நம்ப முடியவில்லையே” என்றார். அவர் முகத்தில் ஆச்சரியக்குறி!

“ஆனால் அதுதான் உண்மை. அவர் சொன்ன போது என்னால் நம்பவே முடியவில்லை” என்றேன்.

“அப்படியானால் அவர் ஒரு அதிசய மனிதர்தான். ஒரு சிலர் இப்படிப்பட்ட சக்தி உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். கொஞ்ச நேரம் அமைதியாகக் கழிந்தது. பிறகு,

“ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த புத்தகத்தைப் படிக்கலாம்?” என்று கேட்டேன்.

“குடும்ப ஜோதிடம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதைப் படித்தால் ஓரளவு ஜோதிடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்” என்றார்.

அவரிடம் பேசிய பிறகு, அந்த அதிசய மனிதரை உடனே சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. ஆனால் அடுத்த பிரதோஷம் வரை காத்திருக்க வேண்டுமே. அன்று தானே அவரை சந்திக்க முடியும்.

அன்று மாலை புத்தக கடைக்குப் போய் பக்கத்து வீட்டு நண்பர் சொன்ன குடும்ப ஜோதிடம் புத்தகத்தை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அதில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் நமது ராசி, லக்கினம் இவற்றுக்கு என்ன பலன் என்று முதலில் தெரிந்து கொள்ளலாம் என்று அதை மட்டும் படித்தேன்.

பின்பு நட்சத்திரங்களுக்கு உரிய பலன் என்ன என்பதைப் பார்த்தேன். விசாக நட்சத்திரம் 1, 2, 3, 4 என்று நான்கு பாதங்களுக்கும் பலன் அதில் சொல்லப் பட்டிருந்தது. எனக்கு விசாகம் முதல் பாதம் என்பதால் அதற்குரிய பலனைப் படித்தேன். படித்தவுடன் திகைத்து விட்டேன்.

அதில் இப்படி சொல்லப்பட்டிருந்தது.

visakham 

நன்றி: குடும்ப ஜோதிடம்

அதில் சொன்னபடி கல்வியில் ஆர்வம், சங்கீதத்தில் பிரியம் உள்ளவர் போன்ற விஷயங்கள் உண்மையென்றாலும், மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதையும் நடக்காத காரியங்களை சாதிக்க முயல்பவர்க்ளாக இருப்பார்கள் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஜோதிட சாஸ்திரம் கூறுபவர்களாக இருப்பார்கள் என்பதைப் படித்த போது, அந்தப் பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது. அவரைச் சந்திக்கும் போது நமக்குப் பொருந்தாத விஷயங்கள் சொல்லப் பட்டிருப்பதைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பிரதோஷம் நாளை மறுநாள் சனிக்கிழமை வருகிறது. என்னுடைய ஆவல் மிகவும் அதிகமானது.

அடுத்த இடுகையில் தொடரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: