கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 2

4 டிசம்பர்

சென்ற இடுகையில் தான் சோதிடரானது எப்படி என்று கவிஞர் கடிவேலு சொல்ல ஆரம்பித்தாரல்லவா? நாம் மிகவும் ஆவலுடன் அந்தக் கதையைக் கேட்கத் தயாரானோம்.இதோ கவிஞரின் வார்த்தைகளிலேயே அந்தக் கதையைக் கேட்போம். அதற்கு முன்பு வெளியான கவிஞர் கடிவேலு சோதிடரான கதை – பகுதி 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்.

இதோ கவிஞர் கடிவேலு தொடர்கிறார்….

“ஒருமுறை என்னுடைய வியாபார விஷயமாக ஒரு நண்பரைப் பார்க்கப் போயிருந்தேன்.. அவருடைய வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். அவருக்கு சுமார் எழுபத்தி ஐந்து வயது இருக்கலாம். வந்தவர் கொஞ்ச நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென என்னைப் பார்த்து, “ஏம்ப்பா, உனக்குத் துலா ராசி தானே?” என்று கேட்டார். முன்பின் தெரியாத ஒருவர் திடீரென்று இப்படிக் கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உடனடியாக வார்த்தைகள் வரவில்லை. அதற்கு முன்னால் அவரை நான் பார்த்ததே இல்லை. என்னைப் பற்றி எந்த விபரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பார்த்ததுமே, ‘உனக்கு துலா ராசியா என்று கேட்கிறாரே’ அது எப்படி? என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு, சரி அவரிடமே கேட்கலாம் என்று, அவரைப் பார்த்து, “ஐயா, எப்படி…” என்று கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் “விசாகம் 1ம் பாதமா?, 2ம் பாதமா?” என்று அடுத்த கேள்வியை வீசினார். எனக்கு மேலும் அதிச்சி! ராசியைச் சொன்னார். அதற்காவது ஏதோ காரண காரியம் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக ஒரு நட்சத்திரத்தைக் குறிப்பிட்டு அதிலும் 1ம் பாதமா, 2ம் பாதமா என்று கேட்கிறாரே? என்று அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு என்னுடைய நட்சத்திரம் மட்டுமே தெரியும். அதில் உள்ள பாதமெல்லாம் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கும் அப்படித்தானே, கோயிலில் அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சகர் கேட்டால் மட்டுமே ராசி நட்சத்திரம் சொல்கிறோம். மற்றபடி வேறு எதற்கும் பயன்படுத்துவதில்லை அல்லவா? அதனால், ‘ஐயா நான் துலா ராசிதான், விசாக நட்சத்திரம்தான். ஆனால் பாதம் பற்றி எல்லாம் தெரியாது’ என்றேன். அப்படியா என்று கேட்டு விட்டு, என்னை சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். “உனக்கு விசாகம் 1ம் பாதம்தான். லக்கினம் மிதுனம்” என்றார். அவர் குரலில் ஒரு உறுதி இருந்தது.

“ஐயா, எதை வைத்து இதையெல்லாம் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். உடனே ஏதோ ஜோக்கைக் கேட்டது போல் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்லி விட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று குழம்பியபடி என்னுடைய நண்பரைப் பார்த்தேன்.

“அப்பா, அவருக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை என்று சொல்கிறாரே, எப்படி என்று சொல்லேன்’ என்றார். அப்போதுதான் அவர் நண்பருடைய தந்தை என்று தெரிந்தது. அதைக் கேட்டதும் அந்தப் பெரியவர், “அடப் போடா, அவரே பெரிய ஜோதிடர்தானே” என்றார். எனக்கு திக்கென்றது. ‘நான் ஜோதிடனா?’ என்ன சொல்கிறார் இந்த மனிதர்? யார் இவர்? என்னென்னவோ சொல்கிறார் ஒன்றும் புரியவில்லையே’ என்று குழம்பிப் போனேன்.

அந்த மனிதர் வேறு எதுவும் சொல்லாமல் மறுபடி, வீட்டுக்குள் போய் விட்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருடைய மகனான என் நண்பரிடம் கேட்டேன். “என்ன இது? ஏதேதோ சொல்கிறாரே, கொஞ்சம் அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றேன்.

“அவர் சாதாரணமாக யாரிடமும் பேச மாட்டார். இப்போது உள்ளே போய் கேட்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றார்.

“யாரிடமும் பேச மாட்டாரா? அப்படியானால் இப்போது எப்படி பேசினார்?” என்று கேட்டேன். “அதுதான் எனக்கும் புரியவில்லை. ரொம்பவும் அவசியமானால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவார். மற்றபடி வேறு யாரிடமும் பேச மாட்டார்” என்றார்.

தொடர்ந்து அவரே, “ஆனால் ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் விரதம் இருப்பார். அன்று முழுக்க யார் என்ன கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்லுவார்” என்றார்.

எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. இதற்குக் காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும்போல் இருந்தது. என்னைப் பார்த்த நண்பர், “ஒன்றும் கவலைப் படாதீர்கள்.  வரும் பிரதோஷத்தன்று காலையில் வாருங்கள். அப்போது உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்’ என்று சொல்லி என்னை வழியனுப்பி வைத்தார்.

நான் வீட்டிற்குத் திரும்பிய பிறகும் எனக்கு அதே நினைவாகவே இருந்தது. எல்லாமே ஒரு அதிசயம் போல் நடந்து முடிந்து விட்டது. நான் பெரிய ஜோதிடனாமே! இதுவரையில் ஜோதிடத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே! அதுபற்றி நினைத்துக் கூடப் பார்த்ததில்லையே! நம்மைப் பார்த்தவுடன் துலா ராசியா என்று எப்படிக் கேட்டார். விசாக நட்சத்திரம் அதிலும் 1ம் பாதம் என்று சொன்னாரே, அது உண்மைதானா?

உடனே, அதைத் தெரிந்து கொள்ளலாம் என்று என்னுடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன்.

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஜென்ம நட்சத்திரம் விசாகம் ஆதியந்த பரம நாழிகை 64 வினாடி 26

கெர்ப்ப செல் நாழிகை 7 வினாடி 34 சுபம்

செல் நீக்கி நின்றது நாழிகை 56 வினாடி 52

புனர்பூசம்

விசாகம்

பூரட்டாதி

இம்மூன்று நட்சத்திரம் கொண்ட வியாழ மாகாதிசை வருஷம் 16

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

ஒன்றுமே புரியவில்லை. இதிலிருந்து பாதம் எப்படி தெரிந்து கொள்வது? அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். ஒவ்வொரு கிரகத்தின் நட்சத்திரமும் எந்த கிரகத்தின் சாரத்தில் என்று எழுதப்பட்டிருந்தது.

…………………………………………………………………………………………..

ராகுவின் சாரத்தில் லக்னம் திருவாதிரை 1ம் பாதம்

…………………………………………………………………………………………..

குருவின் சாரத்தில் சந்திரன் விசாகம் 1ம் பாதம்

………………………………………………………………………………………..

………………………………………………………………………………………..

………………………………………………………………………………………..

லக்னம் மிதுனம்

ராசி துலாம்

இதில் தான் விசாகம் 1ம் பாதம் என்று வருகிறது. அப்படியானால் இதுவாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தேன். மிதுன லக்னம் என்றும் இருக்கிறது. 

அப்படியானால் அந்தப் பெரியவர் சொன்னது சரிதான்! நமக்கே இதைப் புரட்டிப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எதையுமே பார்க்காமல் அவர் எப்படி இதையெல்லாம் சொன்னார்? யோசிக்க யோசிக்க குழப்பம்தான் அதிகமானது.

என்ன செய்யலாம், யாரிடமாவது கேட்கலாமா? என்று யோசனை வந்தது.

அடுத்த இடுகையில் தொடரும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: