நமக்கு ஏற்படும் சோதனைகளுக்கு காரணம் என்ன?

30 நவ்

சாதாரண கவிஞர் கடிவேலு என்று சொன்னதால் கோபித்துக் கொண்ட கவிஞர் கடிவேலுவை சமாதானப் படுத்த பலவிதங்களிலும் முயன்று இறுதியாக இணையத்தில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கை படிக்கத் தந்தவுடன், அதைப் படித்து விட்டு கவிஞர் சிரித்தார் அல்லவா? அதை மீன்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

சரி, இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்திருப்போம், கவிஞர் சகஜ நிலைக்கு வந்ததும், அவர் ஜோதிடராக ஆனது ஏன், அதற்கு என்ன காரணம் என்று கேட்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன். அப்போது நமது அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ‘முக்கியமான கஸ்டமர் ஒருவர் வந்திருப்பதாகவும், உடனே வரும்படியும்’ கேட்டுக் கொண்டார்கள். உடனே கவிஞரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

அன்றிலிருந்து வேலைப்பளு மிகவும் அதிகமாகி விட்டதால் அந்த விஷயமே நமக்கு மறந்து விட்டது. இடையில் ஒருநாள் பைக்கில் போய்க் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நிற்கவே, பின்னால் வந்த நான் எவ்வளவோ முயன்றும் மோதலைத் தவிர்க்க முடியவில்லை. காரின் பின்னால் போய் மோதி விட்டேன்.

நல்ல வேளையாக அந்தக் காருக்கோ, பைக்குக்கோ சேதம் எதுவுமில்லை. நான் வலது கையை காரின் பின்னால் டிக்கியின் மேல் பகுதியில் ஊன்றி பேலன்ஸ் பண்ணிதான் சமாளிக்க முடிந்தது. அப்போது ஒன்றும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டு நாள் கழித்து அந்தக் கையில் வலி ஏற்பட்டது. பிறகு தாங்க முடியாத அளவிற்கு வலி அதிகமாகி விட்டது.

அதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு வலி கொஞ்சம் குறைந்தது. பட்ட காலிலேயே படும் என்று சொல்வார்களே, அதுபோல, அடுத்தடுத்து நமக்கு இதுபோல பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறதே என்று நினைத்த போது நமக்கு அந்த ஜோதிடர் சொன்னது ஞாபகம் வந்தது. புலிப்பாணிச் சித்தர் சொல்லி இருக்கிறார் என்று ஒரு பாட்டை வேறு வாசித்துக் காண்பித்தாரே!

ஆங்! ஞாபகம் வந்து விட்டது,

பாரப்பா புதன் திசையில் சனியின் புத்தி
பாழான மாதமது முப்பத்திரெண்டு
சேரப்பா நாளதுவும் ஒன்பதாகும்
செலுத்துகிற பலனதுவை செப்பக்கேளு
வீரப்பா சத்துருவால் சூனியமுண்டாம்
விதமில்லா நோய்போலே விதங்கேடு பண்ணும்
மாரப்பா மனைவியரும் புத்திரரும்தானும்
மரணமாம் உன்னுடலும் மரணமாமே!

அந்தப் பாட்டின் அர்த்தத்தை உணர்ந்த போது மெலிதானதொரு பயம் ஏற்பட்டது.

மறுபடி அந்த ஜோதிடரிடம் போய் ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்று கேட்கலாமா என்று ஒரு யோசனை வந்தது. ஆனாலும் இதெல்லாம் மூடநம்பிக்கையோ, நாம் கூட இதை எல்லாம் நம்ப ஆரம்பித்து விட்டோமோ! என்றும் மனதின் ஒரு மூலையில் ஒரு சிந்தனை தோண்றியது. நினைக்க நினைக்க ஒரே குழப்பமாக இருந்தது.

திடீரென கவிஞர் கடிவேலுவின் நினைவும் வந்தது, அட! இப்போது அவரும் ஜோதிடர்தானே, அவரிடமே இதைப் பற்றிக் கேட்டால் என்ன என்று தோன்றியது. உடனே அவருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி எப்போது வரலாம் என்று கேட்டேன். இரண்டு நாள் கழித்து புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு வரச்சொன்னார்.

புதன்கிழமையும் வந்தது. ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கவிஞரைப் பார்க்கக் கிளம்பினேன். நாம் போய்ச் சேர்ந்த போது, வெளியில் அமர்ந்திருந்த உதவியாளன், “நீங்கள் வருவதாக அய்யா சொல்லி இருக்கிறார். உள்ளே ஒருவர் இருக்கிறார். அவர் மட்டும்தான். இனிமேல் யாருக்கும் அப்பாயின்மென்ட் கிடையாது. அவர் வெளியில் வந்ததும் நீங்கள் உள்ளே போகலாம்” என்றான்.

அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தேன். நமக்காகத்தான் அவர் வேறு யாருக்கும் நேரம் தரவில்லை என்பது புரிந்தது. நமக்கு அவர் தந்த முக்கியத்துவம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பத்து நிமிடம் போனதே தெரியவில்லை. உள்ளே இருந்த மனிதர் வெளியே வந்தவுடன், நம்மை அழைத்தான் உதவியாளன்.

நாம் உள்ளே சென்றவுடன், “வணக்கம் கவிஞரே” என்றோம்.

“வாரும், வாரும். என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.

நாம் காலில் வலி ஏற்பட்டது, அதற்கு பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொண்டது, பிறகு நடந்த சிறு விபத்து, அதனால் ஏற்பட்ட வலி, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டது பிறகு ஒரு ஜோதிடரைப் பார்த்தது என்றெல்லாம் விவரித்தோம். இடைமறித்த கவிஞர், “அதைப் பற்றி நீர் எழுதி இருந்த விஷயங்களை நானும் படித்தேன்” என்றார்.

பிறகு இப்போது நடந்த ஒரு வாகன மோதலில் கையில் ஏற்பட்ட வலி என்று எல்லாவற்றையும் விவரித்தேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கவிஞர், நம்முடைய ஜாதகத்தை வாங்கிப் பரிசீலித்தார்.

“உண்மைதான். உமக்கு ஏழரைச் சனி நடக்கிறது. இன்னும் ஒரு வருடத்துக்குப் பிறகுதான் அடுத்த ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அத்தோடு புதன் தசையில் சனி புக்தியின் கடைசி கட்டம் வேறு . அதனால் இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் பிறகு புதன் தசை முடிந்து கேது தசை கேது புக்தி ஆரம்பம். இது ஒரு சோதனையான கால கட்டம்தான்” என்றார்.

“அப்படி என்றால் இது போன்ற பிரச்சினைகள் வரத்தான் செய்யுமா? இதைத் தவிர்க்க வேறு வழி இல்லையா?” என்றோம் பரிதாபமாக.

“அவரவருக்கு விதித்ததை அவரவர் அனுபவித்துத்தான் தீர வேண்டும். ஆனாலும் அதற்கும் கால அளவு உண்டு. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படும்போது நம்முடைய முந்தைய பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ செய்த பாவங்கள் கழிகிறது என்ற எண்ணம் வந்தால் இந்த சோதனைகள் பெரிதாகத் தெரியாது. அந்த சோதனைகள் நம்மை மேம்படுத்தவே என்ற எண்ணம் வந்தால் மகிழ்ச்சி ஏற்படும். இதைத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்

என்று இயம்புகிறார்” என்றார். அந்தக் குறளுக்கு அவர் சொன்ன விளக்கம் புதுமையாக இருந்தது. தொடர்ந்து அவரே, “துன்பம் இல்லாத மனிதன் யாரும் இல்லை. வரும் துன்பங்களின் அளவில்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இருக்கிறது. அதுவும் பாவ புண்ணியம் சம்பந்தப் பட்டதுதான்” என்றார்.

கவிஞரின் இந்தப் பேச்சு நமக்கு வியப்பை அளிக்க வில்லை. ஏனென்றால் பல விஷயங்களிலும் அவருடைய ஞானம் நாம் ஏற்கெனவே அறிந்ததுதானே!

இந்த இடுகை மிகவும் நீளமாக இருப்பதால் இதன் தொடர்ச்சி அடுத்த இடுகையில் தொடரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: