கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கடிவேலுவும்

19 நவ்

கவிஞரின் கவிதை பாடும் திறமையைப் பற்றி சொல்லும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது என்று சென்ற இடுகையில் சொல்லி இருந்தோம். உடனே, இதற்கு முன் தன்னுடைய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதைப் பற்றி அவர் சொன்ன கவிதை நமக்கு ஞாபகம் வந்தது.

பொங்கிய பாக்கியத்தில்

       பொன்னவனும் சிரசினில்

தங்கிய குஜனுமிக்க

சுகத்திலுச்ச மாய்புதனும்

சுங்கனொடு புண்ணியத்தில்

       இந்துவும்கூட ஆட்சியில்

மந்தனும் ரவியுமானால்

       அவனும்புகழ் ஜோதிடனே

இதற்கு என்ன அர்த்தம் என்று நமக்குப் புரியவில்லை. பலவாறு அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்த போது நம்மிடம் ஆலோசனை பெறுவதற்காக ஒருவர் நமது அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் ஜோதிட சாஸ்திரத்தை நன்றாக அறிந்தவர் என்று தெரிந்தது.

சரி, அவரிடம் கேட்டால் என்ன என்று கொஞ்சம் யோசித்து விட்டு, அந்தக் கவிதையை அவரிடம் காண்பித்து விளக்கம் கேட்டோம் அவர் அந்தக் கவிதையின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொன்னார்.

பாக்கியத்தில்பாக்கியஸ்தானத்தில் அதாவது ஒன்பதாம் வீட்டில்

பொன்னவனும் குருவும்

சிரசினில் லக்கினத்தில்

குஜனுமிக்க செவ்வாயும், மிகுந்த

சுகத்திலுச்ச மாய்புதனும்சுகஸ்தானம் என்னும் நான்காம் வீட்டில் உச்சமான புதன்

சுங்கனொடு சுக்கிரனோடு

புண்ணியத்தில் பூர்வ புண்ணியஸ்தானமான ஐந்தாம் வீட்டில்

இந்துவும்கூட சந்திரனும் சேர

ஆட்சியில் மந்தனும் ரவியுமானால் சனி பகவானும் சூரிய பகவானும் ஆட்சி வீட்டில் இருந்தால்

என்று அதன் அருகிலேயே எழுதி விட்டு, “இதில் கூறியுள்ளபடி பார்த்தால், முதலில் லக்கினம் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும். புதன் கன்னியில்தான் உச்சமாகிறது. அது நான்காம் வீடு என்றால் மிதுனம்தான் லக்கினம். அதாவது உச்சமான புதனும், மிதுன லக்கினத்தில் செவ்வாயும், துலாமில் சந்திரன் சுக்கிரனும், கும்பத்தில் குருவும், சிம்மத்தில் சூரியன் மற்றும் மகரத்தில் சனி பகவானும் இருந்தால் அவன் புகழ் மிக்க ஜோதிடனாவான் என்று அர்த்தம் வருகிறது” என்று சொன்னார்.

அத்துடன், “இவர் நன்றாக கவி பாடக்கூடிய புலவர் என்றும் தெரிகிறது. ஏனென்றால் ஒரு வார்த்தைகூட அர்த்தம் இல்லாமல் இங்கு இடம் பெறவில்லை. பொங்கிய, தங்கிய போன்ற வார்த்தைகள் எதுகைக்காக போட்டது போல் தெரிந்தாலும் அதற்கும் அர்த்தம் இருக்கிறது” என்றார்.

அவர், கவிஞரின் கவிதையைப் பாராட்டியதைக் கேட்டதும் நமக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. “அப்படியா, அப்படியானால் அந்தப் பாட்டில் அவர் சொன்னதன் பொருளும் சரிதானா?” என்று கேட்டோம்.

“அந்தக் கவிதையில் ஏழு கிரகங்களின் நிலைதான் சொல்லப்பட்டிருக்கிறது. ராகு, கேது பற்றி எதுவும் இல்லை. ஆனால் இவற்றை வைத்து அதைக் கண்டு பிடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. இது போன்ற ஒரு கவிதை, அதாவது இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் அவன் ஜோதிடனாவான் என்பதாக எந்த பழைய ஜோதிட நூல்களிலும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஒருவேளை இது அவரே புனைந்த கவிதையாக இருக்கலாம்” என்றவர்,

“கருத்து என்று பார்த்தால் புதன் ஆட்சியாகவும், உச்சமாகவும், மூலத்திரிகோணமாகவும், லக்கினாதிபதியாகவும், கேந்திரத்திலும் பலமாக இருக்கிறது. ஜோதிடத்தில் வல்லமை பெறுவதற்கு புதன் மிகவும் முக்கியம். அதனால்தான் அப்படிச் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அத்துடன் நுண்ணறிவுக்குரிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் சந்திரன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பது ஒரு சிறப்பு. குருவும் திரிகோணத்தில் இருந்து சந்திரனைப் பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ஆட்சியாக இருக்கிறது. அதுவும் ஒரு சிறப்பு. இப்படி பல காரணங்களினால் அவர் சொன்ன கருத்து உண்மையாக இருக்கலாம்” என்றார்.

“எல்லாமே சிறப்பானதாக ஒரு ஜாதகம் அமைய முடியுமா?” என்றோம் சந்தேகமாக.

“அதற்கு வாய்ப்பே இல்லை. 36 பாக்கியங்களும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஒன்று நன்றாக இருந்தால் வேறொன்று சரியில்லாமல் இருக்கும். இதைத்தான் ‘அது இருந்தா இது இல்லே, இது இருந்தா அது இல்லே, அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கிங்கே இடமில்லை’ என்று ஒரு பாட்டில் சொல்லி இருப்பார்கள். ஏன் ஸ்ரீராமரின் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தும், எவ்வளவு சோதனைகளை அவர் சந்தித்தார் என்று ராமாயணத்தில் பார்க்கிறோமல்லவா?” என்றார்.

“ஒரு சிறிய கவிதையில் ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை கவிஞர் கடிவேலு விளக்கி விட்டாரே, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றோம்.

“கம்ப ராமாயணத்தில் பாலகாண்டம், திரு அவதாரப் படலத்தில் வரும் ஒரு பாடலில் ஸ்ரீராமனின் ஜாதகச் சிறப்பை, கம்பர் நான்கே வரிகளில் திறம்பட வடித்திருப்பார்.

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே.

கம்பனின் கவித்திறனுக்கு இந்தப் பாடல் ஒரு சான்று” என்றார்.

“அய்யா, கவிச்சக்கரவர்த்தி கம்பன் எங்கே, சாதாரண கவிஞர் கடிவேலு எங்கே, இருவரையும் ஒப்பிடுவது தகுமா? அது மட்டுமில்லாமல் ஸ்ரீராமரின் ஜாதகம் தெய்வாம்சம் பொருந்தியது. மானிடர்க்கு அது போல் ஐந்து கிரகங்கள் உச்சமான ஒரு அமைப்பு வரவே முடியாது என்று சொல்வார்கள். பூஜையறையில் வைத்து பலரும் பூஜிக்கும் ஜாதகம் அது. அப்படிப்பட்ட ஒரு ஜாதகச் சிறப்பை நான்கு வரிகளில் அழகான பாடலாக அமைத்த கம்பனை ஒரு பேச்சுக்குக்கூட கடிவேலுவுடன் சேர்த்துப் பேசுவது சரியாகுமா?” என்றேன்.

“உண்மைதான். நான் கடிவேலுவை கம்பனுடன் ஒப்பிடவில்லை. அவர் எழுதிய கவிதை ஒன்றும் புதிதல்ல. இது போல் ஏற்கெனவே கம்பராமாயணத்தில் கம்பன் பாடியிருக்கிறான் என்பதைத்தான் எடுத்துச் சொன்னேன் ஆனாலும் கவிஞர் கடிவேலுவையும் பாராட்டாமல் இருக்க முடியாது” என்றார்.

அவர் சொன்னது நமக்கும் சரி என்றே தோன்றியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: