உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்? – பகுதி 2

8 பிப்

உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சென்ற இடுகையில் கவிஞர் கடிவேலு சொன்னாரல்லவா? ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை ஏற்படுத்திக் கொண்டு உணவில் கவனம் செலுத்தி, நேர்மறை மனோபாவத்தோடு, எளிதான உடற்பயிற்சியையும் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறையும் என்றும் அதுதான் ஆரோக்கியமான முயற்சி என்றும் சொன்னார். அதை இடுகையை மறுபடியும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

தொடர்ந்து கவிஞரிடம் நம்முடைய கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தோம்.

“கவிஞரே, ஒரு குறிப்பிட்ட கால அளவை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னீர். அந்த கால அளவு எவ்வளவு?”

“நாம் ஏற்கெனவே சொன்னபடி நம்முடைய BMI யைத் தெரிந்து கொண்டபிறகு, எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்று நமக்குத் தெரிந்து விடும். ஆனால் அந்த எடையை ஒரேயடியாக குறைத்து விட வேண்டும் என்று முயற்சிக்கக் கூடாது”

“நீர் சொல்வது புரியவில்லையே!”

“அதாவது உமது இப்போதைய எடையிலிருந்து முப்பது கிலோ குறைக்க வேண்டும் என்றால், அந்த முப்பது கிலோவையும் ஒரே மூச்சில் குறைத்து விடலாம் என்று நினைத்து முயற்சிக்கக்கூடாது”

“அதாவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டுமாக்கும்”

“ஆமாம், முதலில் ஐந்திலிருந்து எட்டு அல்லது பத்து கிலோ வரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கே மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு சுமார் ஒரு மாதம் இடைவெளி விட வேண்டும்”

“என்ன, ஒரு மாதம் இடைவெளி விட வேண்டுமா? சரிவிகித உணவு முறையைப் பின்பற்றவோ, உடற்பயிற்சி செய்யவோ தேவையில்லையா?”

“இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. உடற்பயிற்சியை கண்டிப்பாகத் தொடர வேண்டும். ஆனால் உணவு வகைகளில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளை சிறிது கவனத்துடன் அளவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் கலோரி பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும்”

“அப்படியானால் அந்த மூன்று மாதத்தில் வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாதா? வேறு எவற்றை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்? நீர் சொல்வதைப் பார்த்தால் பத்தியம் இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே?”

“இல்லை, பத்தியமெல்லாம் தேவை இல்லை. கலோரி குறைந்த சரிவிகித உணவு பாக்கெட்டில் விலைக்கு கிடைக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது நான் சொல்ல வருவது குறிப்பிட்ட அந்த மூன்று மாத காலத்தில் கலோரி குறைந்த சரிவிகித உணவை ஒரு வேளையும் மீதி இரண்டு வேளை வழக்கமான உணவையும் எடுத்துக் கொள்ளலாம்”

“அதற்குப் பிறகு ஒரு மாத காலம் இடைவெளி விட வேண்டுமாக்கும்”

“ஆமாம், இந்த ஒரு மாத கால இடைவெளியில் நமது எடையில் கவனம் வைப்பது அவசியம். அனேகமாக எடை கூடாது. ஆனாலும் ஒரு கிலோ அல்லது ஒண்ணரை கிலோ கூடியிருப்பதாகத் தோன்றினாலும் கவலைப் பட வேண்டியதில்லை”

“இப்போது புரிகிறது. நாம் சாப்பிடும் உணவு வகைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு கலோரி என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் என்று சொல்கிறீர், இல்லையா?”

“ஆமாம், ஆனால் ஒரு சில நாட்கள் கவனித்தாலே, பிறகு அது நமக்கு மனப்பாடமாகி விடும்”

“சரி, எளிதான உடற்பயிற்சி என்று சொன்னீரே, என்ன மாதிரியான உடற்பயிற்சி? அதை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?”

ஒன்பது அல்லது பத்து வகை உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ஒவ்வொன்றும் சுமார் இரண்டு நிமிடங்கள் செய்தால் போதும். அதாவது, கழுத்துக்கு, தோள்களுக்கு, மார்புக்கு, வயிற்றுக்கு, இடுப்புக்கு, கைகளுக்கு, கால்களுக்கு என்று அதில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கிடைப்பது போல் இருத்தல் வேண்டும். இதயம் நன்றாக துடித்து சீரான வேகத்தில் இரத்தத்தை உடல் முழுக்க பம்ப் செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும். வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது மூச்சைக் கவனிப்பதும் அவசியம்”

“மூச்சைக் கவனிப்பதா? யோகப்பயிற்சியின் போதுதானே மூச்சைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வார்கள்?”

“மிகச் சரியாகச் சொன்னீர். ஆனால் யோகாவில் செய்வது போன்று அல்லாமல் எப்போது மூச்சு வெளியேறுகிறது, எப்போது உள்ளே இழுக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். மூச்சைக் கவனிக்கும் போது மனம் நம் கட்டுப் பாட்டுக்குள் வரும். அது நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். உமக்கு இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா?” என்று கேட்டார் கவிஞர்.

“ரகசியமா? சொல்லும், சொல்லும்! கேட்பதற்கு ஆவலாக இருக்கிறோம்”

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் கவனித்து, மெதுவாக, மிகவும் ரசித்து சாப்பிட்டோம் என்றால் நாம் அதிகமான அளவு உண்ணமாட்டோம்

“அது எப்படி? சுவையான உணவு என்றால் அதிகமாகத்தானே சாப்பிடுவோம். அதுதானே இயற்கை”

தவறு, எந்த ஒரு செயலையும் மிகவும் ரசித்து, உணர்ந்து செய்யும் போது நமக்கு மனதில் திருப்தி ஏற்படுவது இயற்கை. அது சாப்பிடுவதற்கும் பொருந்தும். அப்படி திருப்தி ஏற்பட்டு விட்டால் நாம் அதிகமாக உண்ண மாட்டோம். அப்படியில்லாமல் டிவி பார்த்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ அல்லது கவனமில்லாமலோ சாப்பிடும்போது நம்மை அறியாமலே அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது

“மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது! ஆனால் நீர் சொல்வதை உண்மை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இனிமேல் நானும் உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுவது என்று முடிவெடுத்து விட்டேன்”

இதுபற்றி மேலும் கவிஞர் சொன்ன விஷயங்கள் அடுத்த இடுகையில் தொடரும்

Advertisements

2 பதில்கள் to “உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும்? – பகுதி 2”

  1. DiaryAtoZ.com பிப்ரவரி 8, 2013 இல் 9:46 முப #

    நல்ல தகவல் முயற்சிசெய்து பார்க்கவேண்டும். நன்றி.

    • rasippu பிப்ரவரி 8, 2013 இல் 10:31 முப #

      உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: